அப்பாஸ் க்யரோஸ்தமி- சீனுராமசாமி கவிதைப் பிரதிகளின் ஊடான வாசிப்பனுபவம்
--இரா.தெ.முத்து
அப்பாஸ் க்யரோஸ்தமி ஈரான் சார்ந்த ஆண் பெண் மன உணர்வுகளை பெண்நிலை சார்ந்து அற்புதமான காட்சிமொழியில் இயக்கும் இயக்குநர் என்பதை இவரது தி சர்டிபிகேட் காப்பி வழி 2010 முதல் அறிவேன்.அப்பாஸ் க்யரோஸ்தமியை நான் திரைக்கலைஞர் ரோகிணி வழி அறிவேன்.
நூல்வனத்தின் 'பாயக் காத்திருக்கும் ஓநாய்' எனும் அப்பாசின் கவிதைத் தொகுப்பை க.மோகனரங்கன் வழி மொழியக்கம் பெற்ற கவிதைத் தொகுப்பை கைகளில் ஏந்திய பொழுது மிரண்டு விட்டேன். என்னய்யா இது? அப்பாஸ் க்யரோஸ்தமி கவிஞரென யாரும் சொல்லவில்லையே என அதிர்ந்தேன். நூலின் முன்னுரையில் கவிஞர் சுகுமாரன் இதையே அவர் மொழியில் எழுதி இருக்கிறார்.
2023 ல் சீனுராமசாமியின் புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை கவிதைத் தொகுப்பு வெளிவந்த பின்னரே சீனுராமசாமி கவிஞர் என அறிய வருகிறோம்.
2010 ல் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் வெளிவந்ததற்கு ஓராண்டு முன்பே வெளியான சீனுராமசாமியின் காற்றால் நடந்தேன் கவிதைத் தொகுப்பு வெளிவந்ததை நம்மில் பலர் அறிந்திருக்கவில்லை. இதுதான் அப்பால் க்யரோஸ்டமிக்கும் நிகழ்ந்தது.
இருவரையும் திரைப்படம் சார்ந்து கொண்டாடினோமே அல்லாமல் இருவரையும் அவர்கள் கவிஞர்கள் கவிமுகமும் இவர்களுக்கு வாய்த்திருக்கிறது என நாம் அறிந்தோமில்லை.
அப்பாஸ் க்யரோஸ்தமியின் பாயக்காத்திருக்கும் ஓநாயையும் சந்தியா பதிப்பகம் பதிப்பித்த சீனுராமசாமியின் முதல்ருசியையும் அருகருகே வாசித்த பொழுது ஈரான் டெக்ரானின் அப்பாசும் தமிழ்நாட்டின் சீனுராமசாமியும் பல இடங்களில் ஒன்றுபடுகின்றனர்.
நிலத்தை குளத்தை மலரை பறவைகளை மூத்த உயிர்களை தனிமையை தங்களின் நிழலை காதலின் இழப்பை என இருவரும் தங்கள் படைப்பின் வழியாக ஒருபுள்ளியில் சந்தித்து நம்மை ஆச்சரியப்படுத்துகின்றனர்.அப்பாஸ் க்யரோஸ்டமி எல்லா இருளும் விடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
சீனுராமசாமி தனது முதல்ருசி தொகுப்பின் முன்னுரையில் சொன்னது போல இருவருமே காட்சி வழியாக கவிதையை விரித்துச் செல்கின்றனர்.இவர்களின் திரைப்படங்களின் காட்சிகளில் கவிதை முடிவடைகிறது; கவிதைகளில் காட்சி விரிகிறது என்பதனை இருவரின் தொகுப்புகளையும் அடுத்தடுத்து வாசிக்கையில் உணர முடிகின்றது.
'எனது இதயத்தை
தனியாகப் புதையுங்கள்
எளிதில் உடையக்கூடியது அது'
என அப்பாஸ் காதலின் இழப்பை அன்பின்மையின் வலியை சொல்கிற அதே உணர்வுப் புள்ளியில் சீனுராமசாமி இவ்விதம் ஒன்றுபடுகிறார்
'சுமையின்றி இருக்க நேர்வது
இருப்பதிலேயே பெருஞ்சுமை
மரித்தாலும்
புதைத்த இடத்தில்
கனமான கல்லை தூக்கிவைப்பீர்
அன்புக்காக பெரும்பகுதி சுமந்தலைந்த இவ்வுயிருக்கு'
இருவரின் நிழல் குறித்த பார்வை அச்சொட்டாக அப்படியே இருப்பது கவித்துவத்தின் எதிர்பாராத நிகழ்வு போலும்.
'எதற்காகவோ
என் பின்னால் வந்துகொண்டே இருக்கிறான்
அவனுக்கு என்ன தேவையென்று
எனக்குத் தெரியவில்லை
கோபத்தில் அவனுக்கு
என்னைவிட கைகள் நீளமாக இருக்கின்றன
நான் நின்றால் நிற்கிறான்
படுத்தால் படுக்கிறான்
ஓடினால் விரட்டுகிறான்
மிகவும் துயரமாக இருக்கிறது
அவனை
என் நிழல் என்கிறார்கள்
அதுதான் அச்சமாக இருக்கிறது'
-சீனுராமசாமி
'என்னைப் பின்தொடர்ந்து வருகிறது
ஒரு நிழல்
அது குழந்தைப் பருவத்தில்
எனது விளையாட்டுத் தோழனாக இருந்தது
அது என்னோடு இணைந்து வளர்ந்தது
அது என்னோடு சேர்ந்து முதிர்கிறது
அது என்னைத் தொடர்ந்து
எனது கல்லறைக்கும் வரும்'
-அப்பாஸ் க்யரக்யரோஸ்தமி

No comments:
Post a Comment