Sunday, October 11, 2015

மனோரமா : சில ஞாபகங்கள்

ஞாபகம் 1

எங்கள் குடும்பம் அந்த ஆண்டில்தான் மெட்ராசுக்குப் குடிபெயர்ந்திருந்தது. 1969 என நினைக்கிறேன். அப்பொழுது எனக்கு 7 வயது. நாங்கள் குடியிருந்தது தண்டையார்பேட்டை பஸ் டெப்போவின் எதிரே இருந்த ஒரு பருப்புக் குடோன்.அங்கிருந்த குடியிருப்பில் சில தொழிலாளர்களின் குடும்பம் குடி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் குடியிருப்பின் பின்பக்கத்திலிருந்த ( இன்றும் இருக்கும் )  அம்மணி அம்மாள் தோட்டம் நிறைய குடிசைகள் நெருக்கி இருந்தக் குடியிருப்பு. கீரைத்தோட்டம்,வாழைதோட்டம் இருந்த பகுதி.( இன்று அப்படி இல்லை ) அந்த தோட்டக் குடியிருப்பின்  லவுட் ஸ்பீக்கரிலிருந்து வந்தது ஜாம்பேட்டை ஜக்கு... இது சைதாப்பேட்டை கொக்கு என்ற பாடல்.அந்தக் காலத்தில் ஓகோவென்று கேட்கப்பட்ட மனோரமா பாடிய டப்பாங்குத்துப் பாடல்.  அதுதான் மனோரமா என்கிற பெயர் குறித்த என் முதல் ஞாபகம்.

ஞாபகம் 2

அதன்பின் எத்தனையோ படங்களில் அவரின் நடிப்பைக் கண்டு ரசித்திருக்கிறேன். தில்லானா மோகனம்பாளில் அவர் நடித்த ஜில் ஜில் ரமாமணி  என்றும் மறக்க முடியாத ஒரு பாத்திரம். காதல் நோயால் பாதிக்கப்பட்ட   சிவாஜி சண்முகசுந்தரம் ஜில் ஜில்  முகாமில் தங்கி இருப்பார். அவருக்கு சண்முகசுந்தரம் தன் நாதசுரத்தின் வழியாக நாதத்தை இசைத்துக் காட்டுவார் . அப்பொழுது ஜில் ஜில் கேட்பாள்: உங்க நாயனத்திலதான் இப்படிசத்தம்  வருதா?இல்ல எல்லா நாயனத்திலும் இப்படி வருமா? என்று  இசை மீதான பித்து கொண்டு கேட்கும் ஜில் ஜில் மனோரமாவின் வெள்ளந்தி மனம் என்றும் மறக்க முடியாதது.

ஞாபகம் 3
 சில ஆண்டுகளுக்கு முன்பு ,சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஜனநேசன் முன் முயற்சியில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலை இரவிற்கு மனோரமாவை அழைக்க என்னோடு ஜனநேசன் வந்திருந்தார். தியாகராய ந்கரில் இருந்த மனோரமாவின் வீட்டிற்கு ஒரு ஞாயிற்றுக் கிழமை சென்றோம். விவரத்தை சொன்னதும் எங்களைச் சந்திக்க மனோரமா முன்னறைக்கு வந்தார். நான் மனோரமா போல பல துறைஆளுமைகளை  சந்தித்திருக்கிறேன்.பழகியிருக்கிறேன். ஆனால் யாரிடமும் நான் காட்டாத ஒரு செயலை மனோரமாவிடம்  காட்டியது எனக்கே வியப்பாக இருந்தது .அவரின் காலைத் தொட்டு வணங்கினேன். இது என்னில் இல்லாத ஒரு பழக்கம். ஆனால் மனோரமாவைப் பார்த்ததும் அனிச்சையாக  நிகழ்ந்து விட்டது. விவரத்தைச் சொன்னேன். சரி காரைக்குடியா? அவசியம் வருகிறேன் என தேதியைக் குறித்துக் கொண்டார்.  எப்படி சுவரொட்டி அடிப்பது?எப்படி அவரை காரைக்குடிக்கு அழைத்துச் செல்வது என்றெல்லாம் மனோரமாவிடம் பேசினோம். மிகுந்த மரியாதையுடன் எங்களை நடத்தினார் மனோரமா. அவரிடம் அடுத்து தொலைபேசியில் பேசுவது என்று பேசி விடைப் பெற்றோம்.

ஞாபகம் 4
குறிப்பிட்ட் நாளில் மனோரமாவிடம் பேசினேன்.தம்பி நேரில் வா என்றார். சென்றேன். தேதியை பூபதி மாத்திட்டான்பா.என்ன செய்ய என்றார்? பூபதியிடம் பேசவா என்றேன்.வேண்டாம்பா.அவன் கேட்க மாட்டான் என்றார்.நான் உணர்ந்து கொண்டு அம்மா பூபதியிடம் நீங்க பேசுங்க,பொன் வைக்கும் இடத்தில் நாங்கள் பூ வைப்போம்.அவசியக் காரைக்குடிக்கு நீங்கள் வரவேண்டும் என்றேன்.எனக்கும் வர ஆசை.பூபதி வேறு எங்கோ தேதி கொடுத்திட்டான் என்று வருத்தப்பட்டார். சில நாட்கள் சென்று மனோரமா வீட்டிற்கு போன் செய்தேன்.அவரின் மகன் பூபதி போன் எடுத்தார்.விவரம் சொன்னேன்.அம்மா வர வாய்ப்பில்லை;விட்டுடுங்க என்றார்.எவ்வளவு பேசியும் பூபதி கேட்கவில்லை.

ஒரு மகத்தான கலைஞரான தன் தாயை கலைக்கு மரியாதை அளிக்கும் ஓர் இலக்கிய அமைப்பு அழைத்து மரியாதை செய்ய ஆசைப்படுகிறது.அனுப்பி வைப்போம் என்ற பண்பு பூபதியிடம் இல்லாது போயிற்று. மனோரமாவிடம் இப்படி அருமை அறியாத மகனின் சொல்லை தவிர்த்து விட்டு,வருகிறேன் என்று சொல்லும் உறுதியையும் காண இயலாது போயிற்று.

இன்று அந்த மெய்யான  கலைஞரின் பிரிவு(
2015 அக்டோபர் 10 இரவு )  துக்கத்தின் அடர்த்தியைப் பெருக்குகிறது.   மழையும் துக்கத்தைப் போலவே பொழிந்து கொண்டிருக்கிறது.
படம்: கருப்பு கருணா



Thursday, July 30, 2015

வாழ்வை அளந்து பார்க்கும் ஆன்மச்சொற்கள்








இன்று ஒரு பாடல் கேட்டேன். ஓ..ஓ..வென்று கூவி ஊருக்கு செய்தியைச் சொல்லும் பாடல். மேல் கீழ் இறங்காமல் நின்று சஞ்சாரிக்கும் குரல் வழியிலான பாடல்.

தப்பும்  பேடும் கிடாரும் வழி நடத்த,வாழ்வின் உண்மையைச் சொல்லும் பாடல் இது. நடைபாதையில் வாழ்வின் உண்மைகளை சித்தாந்தமாக சொல்லி வலம் வரும்  சித்தன் அல்லது சூஃபி ரீதியிலான சுண்டியிழுக்கும் பாடலை கேட்டேன்

.4.15 நிமிடம் ஓடும் பாடல்

.சின்னச் சின்ன சொற்கள் எடுத்து வாழ்வை அளந்து பார்க்கும் ஆன்மப்  பாடல். கவிதையை விழுங்கி விடாத கவனத்தோடு சொற்களுக்கும் , அதன் உணர்விற்கும் ஏற்ற மெட்டை கேட்டு , அதன் வழி நம் காதுகளைக் கோரும் பாடலாக இருக்கிறது.

இது தூர்தர்சனின் இசைத்திரட்டில்(ஆல்பம்) வந்திருக்கும் புதிய பாடல்.ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளர் ப்ரேம்குமார் இசையமைத்துப் பாடி இருக்கிறார். பாடலின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் இசையுமாகும்.

நானோர் நாடோடி
என் பயணம் எனைத் தேடி
பாதைகள் பல கோடி
அதன் திருப்பமோ உயிர்நாடி

உலகில் உண்மை எது பொய் எது என்று தேடுவதும் ,  நல்லதை தீயதை தேர முயல்வதும் , நெடும் வாழ்க்கைப் பயணத்தில் சஞ்சலமுறும் மனம் ,  தான் யாரென்று உரசிப் பார்த்து , சித்தாந்தம் பேசுவதும் ,வாழ்வை ஒரு புதிராக்கி மனதின் முன் நிறுத்தி மிரட்சியுறுகிறது மானுடம்

 இந்தத் தொனியிலான பாடலாகத் தொடங்கி  தொடர்ந்து வாழ்வின் மனிதரின் சிக்கல்களை பேசும் தான் யாரென தன்னை விசாரிக்கும் ஆன்மப் பாடலாக விரிந்து போகிறது.

மவுனம் எழுவதும்
வலியைத் தொடுவதும்
என்க்கொரு வேடிக்கையே

என வலியைத் தாண்டுவதாக சொல்லும் மனம் , அடுத்து வாழ்வின் தீராத வலிகளால்,

என் பெயர் உடன் பெயரா
என் பெயர் உயிர்பெயரா

என நின்று மருகி கேள்வி கேட்கிறது
முடிகிற புள்ளியை
தொடங்கும் புள்ளியாய்
புரிதல் தேடுகிறேன்

ஆயிரம் ஓட்டைகள் வாழ்வில் இருந்தாலும் வாழ்வின் மீதான நேசம் , மேல் கண்டவாறு வாழ்வை முடிகிற முற்றுப் புள்ளியாக இல்லாமல்,தொடரும் தொடர் புள்ளியாக பாவித்து தொடர்ந்து பாடிப் போகிற ப்ரேம்குமாரின் குரலிற்கான வரியைத் தந்து,  தனக்கான ஓரு வலுவான தடத்தை துலக்கப் படுத்தி,திரையிசையில் தனியிசையில் பயணிக்கும் கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினியை வாழ்த்துகிறேன். 

Sunday, July 26, 2015

அய்யப்பமாதவன் எனும் கவிஞன் கட்டித் தழுவும் ஒரு சதுக்கப்பூதம்:





அய்யப்ப மாதவன் அழைத்ததை ஒட்டி அவரின் புத்தனின் விரல் பற்றிய நகரம் கவிதை நூல் வெளியீட்டிற்குப் போயிருந்தேன்.இரண்டு காரணம் அவர் அழைத்தார்;அடுத்தது கவிதைப் பற்றி என்ன கருதுகோளை நிலைப்பாட்டை வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள. அவருக்கு நெருக்கமான அவரின் கவிதையோடு பரிட்சயம் கொண்ட ஒரு ஐம்பது பேர் நிகழ்வில் இருந்தோம்.

பேசிய பலரும் கவிதைக்கு இங்கு இடம் என்னவாக இருக்கிறது என்றும் ,காலமும் சமுகமும் கவிஞனை கையேந்த வைத்திருக்கிறது என்று கவலையைப் பதிவு செய்தனர். மாதவன் வெளியைப் பற்றி பசியைப் பற்றி சொந்த அனுபவ மொழியில் எழுதிருப்பதையும் பேசியது மகிழ்ச்சியே. மாதவனின் ஏற்புரை எனக்குப் பிடிக்கவில்லை.

அவர் பேசிய பல விசயங்களால் கவிஞர்கள் இப்படி விசயஞானம் இல்லாமல் இருக்கக் கூடாதே என்று ஆதங்கம் கொள்ள வைத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை என்பதினால் தம்பி பூபதியின் கனிவில் நல்ல தள்ளுபடியில் 454பக்கம் கொண்ட நூலை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டேன்.

வாசித்தக் கவிதையில் சாம்பிளுக்கு இரண்டு.
அய்யப்ப மாதவனின் கவிதையில் படிமஅழகும் சமுகக் கோபமும் இருப்பதிற்கான இரண்டு அது.இருள்,மரம்,காற்று,நிலா, பனி,இலை,உதிர்தல் இப்படியாக வெளியைச் சொல்லும் பொழுது

`விடிவிளக்கென நிலா/பறவைக் கூடுகளில் படிந்திருந்தது’ என்கிறார்.

இந்த வரிகள் விவரணைக்கு அப்பாற்பட்ட புலனால் உணரத்தக்க காட்சியின் உணர் அனுபவத்தை கிளர்த்தி அடடா என பரவசம் கொள்ளச் செய்தது. அடுத்தது பாசிசம் என்கிற கவிதையில் பசியும் வறுமையும் ஒருவரை ஓர் உள்நாட்டுப் போராளியாய் மாற்றிவிடக் கூடும் என அச்சப் படுகிற கவிதையின் இடத்தில்` அரசாங்கப் பணிக்காக கையூட்டு வாங்கும்/அதிகாரிகளின் அமைச்சர்களின் தலைகளைத் துண்டாடும் சமுக சேவகனாய் மாறக்கூடும்’ என்கிற அரசியல் கவிதையின் குறிப்பிட்ட இடத்தின் கவிதாவேசம் அய்யப்பனை முதுகில் தட்டி தொடர்ந்து எழுது மாதவா என்று சொல்லத் தோன்றுகிறது.

ஆனால் இவர் , கலைஞர்களை படைப்பாளிகளை மதிக்கத் தெரியாத சினிமாவின் கரங்களுக்குள் தன்னை சிறைப்படுத்திக் கொள்ளும் குரூர முயற்சியை விவரித்துச் சொல்லி ஏற்புரையில் தன் கவிதை-இது கொண்டாடப்படும் இடம்-இதன் அழகு-இதன் கோபம் என எதுவும் பேசாமல் தேர்ந்தெடுத்த தன் 300 கவிதைகளை சினிமா உலகின் முன் விசிட்டிங் கார்டாய் விரித்து நின்ற பரிதாபத்தை சினிமாவின் வசீகரத்தை என்ன சொல்ல? (சினிமா வெறுப்பு எனக்கில்லை; அழைக்கும் சினிமாவைக் கொண்டாடலாம்)

நிகழ்வில்அய்யப்பமாதவன்,கருணாபிரசாத்,சூர்யதாஸ்,பாரதிகிருஷ்ணகுமார்,அழகியசிங்கர்,பா.கிருஷ்ணன்,ரவிசுப்ரமணியன்,விஜயபத்மா,
அப்பணசாமி, தேவேந்திரபூபதி,யவனிகாஸ்ரீராம், சீனுராமசாமி,தோழமை பூபதி,ஆதிரா முல்லை,சந்திரா, நாச்சியாள் சுகந்தி, வேல்கண்ணன்,கே.என்.சிவராமன்,மதிராஜ்,தம்பி யுவகிருஷ்ணா என தோழர்கள்-நண்பர்களின் சந்திப்பு நேற்றைய மழை பெய்த அந்திப்பொழுதை மேலும் அன்பால் ஈரப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

Friday, July 10, 2015

உள்ளூர் வரலாற்றைப் பாதுகாப்போம்







போன சனி(ஜூலை 4)  அன்று பழவேற்காடு போய் வந்தோம்.அங்கு நடைபெற்ற சென்னை திரைப்படசங்க பயிலரங்கு பற்றி தனியே வலைப்பூவில் எழுதுவேன்.

இங்கு நான் சொல்ல வருவது, பொன்னேரியிலிருந்து பழவேற்காடு வரை செல்லும் 19 கிமீ பயணத்தில்,வழியெங்கும் சின்ன சின்ன ஊர்கள்.அந்த ஊர்களின் பெயர்கள் அழகான தமிழ்ப்பெயராக இருக்கின்றன.அவைகள் பண்புப்பெயர்களாக,காரணப்பெயர்களாக,இடுகுறிப்பெயர்களாக இருக்கின்றன

ஊர்களின் கடையெங்கும் சொந்தப் பண்பாட்டினை ஊனப்படுத்தும் பன்னாட்டுக் கம்பெனிகளின் குளிர்பானங்கள்,  முகப்பில் கட்டிவிடப்பட்டிருக்கின்றன.கழகங்களின் நிறம் உதிர்ந்து போன கொடிக்கம்பங்கள் அங்கு என்ன அரசியல் நிலவுகிறது என்பதை உணர்த்தி நிற்கின்றன.

 எனக்கு வந்த விசனம் என்னவெனில்,


பழவேற்காடு,காஞ்சிவாயல்,நடுப்பாலை,தொட்டிமேடு,காவல்பட்டி,சின்னகாவனம்,பொன்னேரி என்று இலங்குகின்ற ஊர்களை,அந்தந்தப் பெயர்களின் ஆதிக்காரணம் அறிந்து,அந்த மக்களுக்குஅந்தந்த ஊர்களின் சிறப்பைச் சொல்லி, ஊரையும் பெயரையும் தம் சொந்த பண்பாட்டினையும் (சாதி-மத பண்பாடு அன்று) பாதுகாக்க வேண்டி அந்தந்த ஊர் பஞ்சாயத்து நிர்வாகம் ,அங்கிருக்கும் தமிழ் ஆர்வலர்கள் முன்வரவேண்டும்.

தெருவின் பெயரை புதியாய் எழுதி வைக்கிறோம் என இயங்கும் அரசு,இப்படியான ஊர்களின் பெயரையும் பண்பாட்டினையும் ஆயும் பொருட்டு நிதி ஒதுக்கி,அந்தந்த ஊர்களில் இது சார்ந்த நூலகம் ,ஆவண காப்பகம் அமைத்து சொந்த உள்ளூர் பண்பாட்டு தரவுகளை பாதுகாக்க முன் வரவேண்டும்.

Wednesday, April 15, 2015

குண்டர்கிராஸ் மறைந்தார்





குண்டர் கிராஸை நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிவேன்.அப்பொழுது கிராஸ் இந்தியாவிற்கு வந்திருந்தார்.தாய்மொழி ரீதியிலான புரிதல் மட்டுமே அறிவை கலையாற்றலை வளர்க்க இயலும்;ஆங்கிலத்தினால் அன்று என்று அவர் கொடுத்த பேட்டி வழியாக அவர் மீதான் ஆர்வம் அதிகரித்தது.

ஜெர்மனி சார்ந்த நாவலாளர்-விமர்சகர்-கலைவிமர்சகர் எனும் பன் முகம் கொண்டவர் கிராஸ்.நோபல் பரிசு வெற்றியாளரும் கூட.எனினும் இஸ்ரேல் ,  பாலஸ்தீனர்கள் மீதும் ஈரான் மீதும் கொடும் ஆயுதத் தாக்குதலை-அணு ஆயுத மோதலை உருவாக்கிய 2006 களில் கிராஸ் கேட்ட கேள்வி `நாம் என்ன சொல்ல வேண்டும்?’

இந்தத் தலைப்பின் கவிதை இஸ்ரேலை அச்சப்படுத்தியது;அமெரிக்காவை எரிச்சல் செய்தது.எனினும் கிராஸின் கவிதை உலகம் முழுவதுமுள்ள சமாதானப் பிரியர்களுக்கு பெறும் உற்சாகத்தை தந்தது.

கவிதை எனப்படுவது யாதெனின் என்று நுரைத் தள்ளப் பேசுபவர்கள் குண்டர்கிராஸ்  எழுதிய இந்தக் கவிதையை வாசிக்க வேண்டும்.

ஜெர்மனியின் லுபெக் நகர வீட்டில் தன் 87 ஆம் வயதில்   இலக்கிய பரிசோதனை எனும் நூலிற்கான பணியில் இருந்த பொழுது,  13 ஆம் திகதி மறைந்திருக்கிறார் கிராஸ்.

Sunday, April 5, 2015

ஸர்மிளாவின் சிறகுகள்







தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கவிதை இலக்கியத்திற்கான 2012 ஆம் ஆண்டின் செல்வன் கார்க்கி நினைவு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட கவிதைத் தொகுதி “சிறகு முளைத்த பெண்“.

விருதுநகரில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு விருதை ஏற்க முடியாமல் போன கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் அண்மையில் சென்னை வந்தபோது எம்மைத் தொடர்பு கொண்டார்.

அவகாசம் கொடுத்து வந்தால் ஒரு சிறிய இலக்கிய சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கலாம். எனினும் குறுகிய நேரத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு , ஆசிரியர் தினத்தன்று புத்தகம் பேசுது அலுவலக மாடியில் நிகழ்ந்தது.

 சைதை ஜெ,கி.அன்பரசன், மயிலை பாலு,ஜேசுதாஸ் போன்ற தோழர்கள் பல வேலைகளில் மாட்டிக் கொள்ள, கருப்பு தேநீர் தந்து மொழிபெயர்ப்பாளர் பெரியசாமி வறவேற்க, இலக்கிய செய்திகள் பறிமாற்றத்தினூடாய் எழுத்தாளர் ஜாகிர்ராஜா புன்முறுவல் காட்ட, பிறகு கருப்பு பிரதிகள் நீலகண்டனும் குவர்னிகா யாழ்ப்பாண மலரோடு வந்து சேர்ந்து கொள்ள அறிவிக்கப்படாத ஒர் இலக்கிய சந்திப்பு அங்கே நிகழ்ந்தேறியது. 

அதற்கு முன், தமுஎகசவின் கவிதைக்கான 2012 ஆம் ஆண்டின் விருதிற்கான ரூபாய் ஐந்தாயிரத்தோடு படைப்பாளர்களின் விருதுக் குறிப்பேடை மாநில துணைப் பொதுச்செயலாளர் இரா.தெ.முத்து, மாநிலக்குழுவின் சிறப்பு அழைப்பாளர் கீரனூர் ஜாகிர்ராஜாவும் இணைந்து வழங்கினர்.


தீர்க்கமான அறிவும் கள அனுபவமும் இலங்கை குறித்த தரவுகளோடு கிண்டலும் கேலியும் கொண்ட முப்பது வயது ஸர்மிளா ஸெய்யித் ஊடகத்துறை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்திட்டமொன்றில் போரினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுடன் பணியாற்றியது, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புடன் இயங்கியது போன்ற அனுபவங்கள் தனது பல கவிதைகளின் வாசலாகவும் களமாகவும் இருந்திருக்கிறது என்றார். 

ஈழத்தில் பெண் படைப்பாளிகள் குறித்துத் தெரிவிக்கையில், இலங்கையிலிருந்து எழுதும் பெண் படைப்பாளிகளில் தமிழகத்தில் பெருதும் கவனத்தைப் பெற்ற கவிஞர்களாக அனார்,பஹிமா ஜஹான் இருவரையும் குறிப்பிடலாம். இவர்கள் தவிர்ந்த பெண்படைப்பாளிகளே ஈழத்தில் இல்லை என்று அர்த்தமில்லை. பல பெண் படைபாளர்கள் உள்ளனர். 

அவர்கள் தமது அவசங்களை மட்டுமின்றி  விவசாய, கூலிப் பெண்கள் பற்றியும் எழுதுகிறார்கள். சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் நடத்தும் ”பெண்” சஞ்சிகை, மேலும் மலையகத்தில் இருந்து வரும் சில சஞ்சிகைள், கொழும்பைத் தளமாகக் கொண்டு வரும் ”கோசம்,” ”சொல்” போன்ற சஞ்சிகைள் பெண்களுக்கு களம் தருகின்றன. மலையகத்தில் பெண்கள் குறித்த பல சஞ்சிகைகளும் வருகின்றன என்றார்.


`அங்கு இப்போது சாதி முரண்பாடுகளின் நிலவரம் எப்படி இருக்கின்றது?’என கேட்க ` இன்றைய சூழலில் எங்களுக்கு சாதி முரண்பாடுகளை விட, எம் மீதான இனப் பாரபட்சமும் பெரும்பான்மை சமூகத்தின் அழுத்தங்களுமே ஆகப் பெரிதாக இருக்கின்றது’ என்றார்.

இலங்கையிலுள்ள இசுலாமியர்களின் பிரச்சினைகள் பற்றி பிரஸ்தாபிக்கப்படுவதில்லை என்றும் அவர்களது பிரச்சினைகள் தேவைகள் ஊடகங்களால் புறக்கணிப்படுகின்றன என்றும் வருத்தம் தெரிவித்த அவர், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட இலங்கை இசுலாமியர்கள், தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டத்திற்கு அளித்த பங்களிப்புகளும் தியாகங்களும் இன்று முற்று முழுதாக மறக்கடிக்கப்பட்டுள்ளதுடன், இசுலாமியர்களுக்கு திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதிகள் வெறும் துன்பியல் நிகழ்வுகள் என்பதாக மட்டுமேயாகி புறக்கணிப்படுவது கவலையளிப்பது என்றார்.

 பேரின சமூகத்தினால் இன்று இசுலாமியர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். பொதுப்பலசேனா என்கிற சிங்கள தீவிரவாத அமைப்பின் திட்டமிட்ட நடவடிக்கைகள் இசுலாமியர்களை அச்சமடையச் செய்வதாக உள்ளது. இசுலாமியர்களின் எதிர்கால இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. அவர்களது வணக்கஸ்தலங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் மீது பல்வேறு விதமாக தாக்குதல் கட்டவிழ்த்து விடப்படுகின்றன என்றும் கூறினார்.

போர் முடிவடைந்த பின்னரும் நிலவுகின்ற நம்பிக்கை அற்ற அரசியல் அரங்கு காரணமாக எம் படைப்புகளில் நம்பிக்கையின்மை இருக்கிறது; இது படைப்பாளிகளின் குறைபாடு கிடையாது; சூழலே காரணம் என்றார்.

உங்கள் படைப்புகள் எப்படி அறியப்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு

 தனக்கான முதல் அங்கீகாரமே தமுஎகசவின் இந்த கவிதை விருதுதான் என்றவர். ”சிறகு முளைத்த பெண்” தொகுப்பைப் பற்றி கவிஞர் சமயவேல், குட்டிரேவதி, இளைய அப்துல்லாஹ் போன்றோர் எழுதி இருக்கின்றனர்

இலங்கையில் பி.பி.சி. வானொலியில் நான் அளித்த நேர்காணல் சர்ச்சைக்குப் பின்னர் முன்பை விடவும் நான் அதிகம் அறியப்பட்டதனால் எனது கவிதைகளும் அதிகம் பேரால் படிக்கப்பட்டது, விமர்சிக்கப்பட்டது. இந்த விமர்சனம் தனிநபர்களின் திட்டமிட்ட தாக்குல்களாக என்னை நோக்கி வந்ததினால் சில பின்னடைவுளுக்கும் சமூகப் புறக்கணிப்புகளை எதிர்கொள்வதற்கும் காரணமாக அமைந்தது என்பதாகவும் ஸர்மிளா ஸெய்யித் பகிர்ந்து கொண்டார். விரைவில் தனது நாவல் ஒன்று வெளிவரவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சிறியதாகத் திட்டமிட்ட சந்திப்பு ஒரு நிறைவான இலக்கிய நிகழ்வு போன்றே 

நிறைவடைந்தது. மாலை ஆறு மணியாகிவிட ”தனியாகப் 

போய்விடுவீர்கள்தானே, என்றதற்கு `தோழர் இவ்வளவு தூரம் வந்த எனக்கு 

இருக்கிற இடத்திற்கு போகத் தெரியாதா, என்று ஒரு பஞ்ச் வைத்து

கலகலவென்று சிரித்து நேசத்தை வெளிப்படுத்திக் கொண்டார்

Tuesday, March 31, 2015

உயிரச்சம்










உங்களின் துப்பாக்கிகள் நின்று கொல்லும் வறுமையை நோக்கிக் 
குறி வைத்திருக்கின்றனவா?

உங்களின் பத்வாக்கள் பாலின்றி குழந்தைகளைச் சாகவிடும்
ஆயுதவியாபரிகள் மீது பாய்ந்தது உண்டா?

தேவாலயங்களின் மன்றாட்டல்களும் ஆராதனைப்பலிகளும் 
வெள்ளை மாளிகையை என்ன செய்து விட்டன?

மினராக்களின் பாங்குகளை பெண்கள் நடத்த வழி விட்டு நின்றீர்களா?

மனம் பிசகிய இளம்பெண் உடல்மீது ஏறிக் குதித்து 
உயிர் பறிக்க முகமதுநபி ஆணையிட்டாரா? 

ஓசோன் படலத்தைக் கிழித்து சுற்றுச்சூழலை மாசாக்கும் 
 அமெரிக்க,ஐரோப்பிய அரசுகளை  போப்பாண்டவர் 
என்ன செய்து கிழித்து விட்டார்?

சன்னி,ஷியா,குர்த்து என்று பேதம் பிரிக்கும் 
இராக் சிரியா கொலைவாதிகளே 
ஒரு தொப்புள் கொடியில் பிறந்ததை மறந்து 
உங்கள் உடலங்களையும் பேதம் கொண்டு கிழித்து எறிவீர்களா ?

நீண்டது  ஒரு  நிழற்படமெடுக்கும் கருவி என அறியாமல் 
கண்ணீர் மன்றாட்டு நடத்தும் குழந்தைகளா 
உங்கள் கொலை இலக்குகள்? 

 நீங்கள் தனி நாடு பிடித்து எதைச் சாதிக்கப் போகிறீர்கள்? 

ஆஃப்ரிக்கா  தென் அமெரிக்கா ஆஃப்கனிஸ்தான் போல
ஓபியம்  மெப்பிட்ரோன் வயகரா கஞ்சா என நீங்களும்
உற்பத்தி செய்வீர்கள் அல்லது செய்ய வைக்கப்படுவீர்கள்


 உங்களின் மார்க்கங்களும் புனித நூல்களும்  வாழ்க்கைக்கான திறவுகோலாக நிச்சயம் இருக்கப் போவதில்லை என்றே 
வரலாறு நெடுக சாட்சியங்கள் பதிவாகி இருக்கின்றன 

ஐ. எஸ் ,அல்கொய்தா, ஆர்.எஸ்.எஸ், பெண்டகன் போன்ற  பெயர்கள் 
ஒரு சரக்கின் வெவ்வேறு வணிக முத்திரைகள் என்றே அறிவோம் 

பிஞ்சுகளின் மனதில் உயிரச்சம் விளைவிக்கும் 
உங்கள் முகம் பூசிய ஒப்பனைகள் கிழிபட 
உங்கள் வார்த்தைகள் வகுந்து பொய்தனை  நிரூபணமாக்கிட

மானுடத்தின் தூதுவர்களாய் மகரந்தங்களின் வாரிசுகளாய் 
  நாங்கள் இருக்கிறோம் ;ஆம் நாங்கள் இருக்கிறோம் 



Sunday, March 15, 2015

கிளையில் உயிர்த்திருக்கும் கவிதை




கவிஞர் ஆரிசன் ஹைக்கூ வழியாக தன் பார்வையை வண்ணத்துப்பூச்சியின் வண்ணமென வரைந்து தொடர்ந்து கவிதைகள் வழி இயங்கிக் கொண்டிருக்கும் நவீனக் கவிஞர்களுள் ஒருவர். சமுகத்தின் இயங்குதலை ,இயற்கையின் இயங்குதலை புரிந்து கொண்டவர் என்பதால் இவர் கையாளும் சொற்களில் உண்மையின் உண்மை  வந்து உட்கார்ந்து கொள்கிறது.  பூ மலர்வதைப் போல பொழுது புலர்வதைப் போல சன்னஞ்சன்னமாக அது தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது.

ஆரிசன் மொழி நமக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. ஹைக்கூ கவிஞராக முகிழ்ந்தவர் என்பதால் நீர்த்துப் போகாதபடிக்கு சொற்களை கட்டுறுதியாக காட்சிப்படுத்துகிறார்.

ஒரு சோப்பு குறித்துக் கூட சமுக உணர்வோடு எழுத முடியும் என்று ஸ்ரீஸ்ரீ ஒரு தடவை சொன்னது போல ஆரிசனின் கவிதை பாலை , மணல் ,பச்சையம் ,காற்று ,மரம் ,ஒற்றை இலை , பனி , நிலா ,கடலுயிரிகள் ,கிரானைட் ,கந்துவட்டி ,கருப்புப்பணம் , அம்மிக்குளவியில் உருகும் தாய்மை ,நெசவாளியின் கா குழி வரைக்கும் படிமத்தில் பந்தி வைத்திருக்கிறார்.

படைப்பாளி என்பவர் கிடைத்த உணர்ந்த வாழ்வின் தரவுகளை காலத்தின் முன்னும் பின்னும் சென்று தரவுகளின் நீட்சியை உண்மை போலும் புனைவாக்கி பின்னிப் பின்னி காட்டுபவர் மட்டுமல்லர். புனைவில்லாது காட்சிபுலன் வழியாகவும் ரத்தமும் சதையுமான வாழ்பனுபவத்தை நிகழ்காலம் நம்முன் வைக்கிற பொழுது அதை அப்படியே எடுத்து, அனுபவத்தின் கொதிநிலைக்கு ஏற்றது போல,மொழியில் குழைத்துத் தருபவரும் படைப்பாளிதாம்.

வெள்ளிநிலாவை பார்த்திருக்கிறோம். பால்நிலாவை பர்த்திருக்கிறோம்.அது என்ன சிவப்பு நிலா? சிவப்பு நிலா வழியாக வறட்சியின் தவிப்பை , மாசாகிப் போன சூழலின் உயிர் சுவாசத்தை காட்சிபடுத்தியிருக்கிறார்.
மழை முறித்துப் போட்டாலும் மரங்களை எடுத்து நட இயலாதபடிக்கான ம்னங்களின் நெருக்கடி இருக்கிறதே,அது செடியும் கொடியும் மரமும் தளைப்பதற்கான இடம் நிலம் என்பதை உணராமல்,நிலம் என்பது ஃப்ளாட் என்று குறுக்கிப் பார்க்கும் இரும்புக்குதிரையர்களின் பார்வையை பங்கீடு செய்கிறது கவிதை.

`மழை முறித்துப் போட்ட
மரங்களின் சோகத்தை
இன்னும் பார்த்தபடி
சாலையின் பயணம் தொடர்கிறது
இரும்புக் குதிரைகளோடு


`பாலின் நிறம்
கருப்பாகவே தெரிகிறது
உழைக்கும் தெருக்கோடி
மக்களுக்கு

என்று முடிகின்ற ஒரு கவிதை பாலில் தண்ணீர் கலந்து ஊழல் செய்யும் அரசாங்கங்களின் முகத்தை காட்டுகிறது.

கந்துவட்டிக்காரர்களுக்கு காவல்துறை கனகாபிசேகம் செய்யும் உண்மையை உரக்கச் சொல்கிறது நெல்லை கோபி குறித்து எழுதப்பட்ட கவிதை.

கறுப்புப் பணத்தை
கடலில் இருந்து எடுக்க
பூதம் ஒன்று
புறப்பட்டு வந்தது

என்று தொடங்கும் கவிதையின் பகடி வசீகரம்,  புறப்பட்டு வந்த பூதம் யார் என்பதை சொல்லாமல் சொல்லி,
“முந்தானை முடிச்சிலிருந்து
விடுபட முடியாமல் இருக்கிறது
முதலைகளின் தூவானமாக இருக்கும்
முதலாளித்துவம்
என்று ஊழல் முதலைகளுக்கு தூவானமாக இருக்கும் முதலாளித்துவம் சார்ந்து எந்த பூதம் புறப்பட்டு வந்தாலும் கதி இதுதான் என்று சொல்லி,  காவியின் பக்கத்தை காங்கிரஸின் பக்கத்தை பகடி செய்து மீட்சிக்கான தேடுதலைச் செய்கிறது இந்தக் கவிதை.

ஆறு, மலைகளை தூர்த்து எடுக்கப்பட்ட மணல் குவாரிகள், சதுக்கப்பாறைகள் பற்றிய நிகழ்காலத்தின் பாலையை வெம்மையை பதிவு செய்த ஆரிசன் நெடிதுயர்ந்து நிற்கிறார்.


காகங்களின் கரைதலில் பசியின் சுவடுகளைப் பார்த்தவர்
தாவிப் பறக்க முடியாமல்
கா குழிக்குள் அடக்கமாகிப் போகிறது
வாழ்க்கை

என்று நெசவாளிகளின் மீதான கைவினைத் தொழில்கள் மீதான நவீன தாராளமயத்தின் அழிமதியைப் பாடுகிறார் ஆரிசன்.

“ வார்த்தைகளை விட்டு
வெளியில் நின்றே சிரிக்கிறது
கவிதை
ஹைக்கூ எழுதிப் பார்த்த கவிமனசு என்பதால் சொல்லவிழ்ந்து சடை விரிக்காமல் நறுக்கென வந்து விழும் கவிதை வழி , அனுபவத்தின் படிமத்திரட்சியிலிருந்து கவிதை விலகி நிற்பதை கவிதையே கண்டுணர்ந்து சிரிப்பதாக எழுதினாலும்

குடித்த முலைப்பாலின் ஓர்மையில் உதடுசப்பி தூங்கும் தூளிக் குழந்தை போல

“ ஒரு மாலைப் பொழுதில்
மரக்கிளையில் உயிர்த்திருக்கிறது  
பறவை

என்றே பறவை பற்றிய எழுத்தானாலும் கூட , அது எமக்கு கவிதையே என்பதாகப்படுகிறது. வாழ்த்துகள் ஆரிசன்;தொடர்ந்து உயிருக்கு உரமாகட்டும் உங்களின்  சொற்றானியம்.
(படங்கள்:அய்யப்பமாதவன்)

Thursday, February 26, 2015

கணங்களின் தோற்றம்





-1-
கனவுகளில் உயர்ந்தெழும்
வீர நாச்சியாளின் நெடுவாள் முனை
உன் கண்களை பிரதிபிம்பம் செய்து கொண்டிருக்கின்றன
சில கணங்களினூடாய் தோற்றம் கொள்ளும் உன் முக இறுக்கமும்
 நாச்சியாளையே ஒர்மை செய்து கொண்டிருக்கிறது!

-2-
கன்னக்குழிச் சிரிப்பில்
சிக்குண்டு நான் கிடக்க
பெருவரம் வேண்டும் சகியே சகியே!

-3-
 ஆழப் பெருங்கடல் ஆயினும்
உன் மடிதானே அதன் புகலிடம்!

-4-
திசைப்பறவைகள்
ஒரு பொழுதும்
திக்கற்றுக் கிடப்பதில்லை!

-5-
வளர்பிறை
உன் குறுநகை!

-6-
அடர்ந்து பெய்யும் பனியும்
உன் அன்பையே ஞாபகப்படுத்துகிறது!








Tuesday, February 24, 2015

இயக்குநர் ஆர்.சி.சக்தி



மனிதரில் இத்தனை நிறங்களா? சிறை,கூட்டுப்புழுக்கள் என்று வந்த 
அவரின் படங்களைப் பார்த்து,அவர் மீது மரியாதை வந்த காலம் அது.
தர்மயுத்தம் படம் பெருவெற்றி பெற்றதோடு,அந்த தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு என்று வரும் மலேசியாவின் பாடலை எங்கு கேட்டாலும் உணர்வலை புரளும் படத்தை தந்தவர்.
அவரை 96 வாக்கில் சாய்நகர் வீட்டில் பல முறை சந்தித்து பேசியிருக்கிறேன்.
சினிமாவின் சாயலை எப்போதும் சொந்த வாழ்வில் படிய விடாத எளிய மனிதர்.
அவரின் பிள்ளைகளும் அப்படியே.என் வழியாக பல ஊர்களின் கலைஇரவிற்கு வந்து மனசில் உள்ளதை பளிச்சென்று பேசி மனங்களைக் கவர்ந்தவர்.
அவரின் மறைவிற்கு அஞ்சலியும் வணக்கமும்