Friday, July 19, 2013

அவமதிப்பிற்கு ஆளான வாலி

++வாலிக்கு இறுதி அஞ்சலி செய்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் படைப்பாளிகள்.++
படம்{கவாஸ்கர்}

வெள்ளி நிலவே விளக்காய் எரியும்
 கடல்தான் எங்கள் வீடு
-வாலி

கவிஞர் வாலி இன்றில்லை என்றாகி நம் நினைவுகளில் மட்டுமே இனி இருப்பார் என்றாகி விட்டார்.வாலியின் எழுத்துகளில் எளிமையின் வசீகரமும்   மொழின் துள்ளலும்  அடர்த்தியின் நளினமுமாக இருக்கும்.தொடர்ந்து ஐம்பதாண்டு காலமாக எழுதி வந்தவர்;புதிது புதிதாக சொற்களை எடுத்து இயங்கி வந்தவர்.1961 மேஜர் சந்திரகாந்தில் ஆரம்பித்து 2013 ன் கூத்தாடிகள் வரை திரைப்படம் வழியாக காதல்,தத்துவம்,மகிழ்ச்சி,துன்பம்,அரசியல்,எழுச்சி என தமிழ் தொட்டு தொடர்ந்து வந்தவர் வாலி.பதினைந்தாயிரம் பாடல்களில் விதவிதமான ரசரசமான வரிகளை காற்றில் உலவ விட்டவர்

 .சிக்கல் இல்லாத சிடுக்கு இல்லாத வரிகளை நெய்யும் ஆற்றல் கொண்டவர் .இவரின் வரிகளால் எம்.ஜி.ஆர் அரசியலில் தனது கருத்துகளை அழுத்தமாக அழகாக சொல்ல முடிந்தது.தொடர்ந்து திரைப்படத்தில் இயக்கி வந்ததோடு,அச்சு ஊடகத்தில் கவிதை,கட்டுரை,பத்தி எழுத்து,சொல்லோவியம் என கவனம் காட்டியவர்.மத்திய ,மாநில அரசுகளின் விருதுகள் பெற்றவர்;தமிழகத்தின் ஐந்து முதல்வர்களை அறிந்தவர்;பழகியவர்.அன்பின் முகத்தோடு யாவரிடமும் இருந்தவர் என்று வாலி உணரப்பட்டாலும் அவருக்கான அவர் தமிழுக்கான மரியாதையோடு அவரின் இறுதி அஞ்சலி நடைபெறவில்லை.

திரை உலகம் சார்ந்த சிலர் அவருக்கு அஞ்சலி செய்தாலும்,வாலியின் ரசிகர்கள்,சக படைப்பாளிகள் வாலியின் இறுதி நேரத்தில் பார்த்து  விடை கொடுக்க இயலவில்லை.வாலியின் இடம் தமிழில் என்னவாக இருக்கிறது என்று அவரின் சொந்த உறவுகளுக்கு தெரியாமல் இருக்கலாம்.ஆனால் இவரின் வரிகளால் வளர்ந்த திரைஉலகம்,படைப்பாளிகள்  வாலியின் இறுதி அஞ்சலியை ஒழுங்கு படுத்தி,அனைவரும் காண உதவ முன் வந்திருக்க வேண்டும்.குறிப்பாக அவரோடு நெருங்கிப் பழகிய கலைஞர் கருணாநிதி, வைரமுத்து,இளையராஜா,கமல்ஹாசன்,சங்கர் போன்றோர் இதை ஒழுங்கு செய்திருக்க வேண்டும்.

திரை உலகத்தின் உண்மை முகத்தை பார்த்து வந்த வாலியின் உறவுகள்,திரைஉலகத்தின் மீதான விமர்சனத்தை திரைஉலகத்தினரிடம் வெளிப்படுத்தாமல்,இறுதி அஞ்சலி செய்ய வந்த கவிஞர்கள்,பொதுமக்களிடம் வெளிப்படுத்தியது வருத்தமாக இருந்தது.மாலை ஐந்து மணிக்கு இறுதி சடங்கு என தெரியப் படுத்தி,ஒன்றறை மணிக்கு எடுத்ததோடு இல்லாமல் ,அஞ்சலி செய்ய வந்த பொது மக்களை அஞ்சலி செய்ய விடாமல் தடுத்து அனுப்பியது வாலிக்கு நிகழ்ந்த அவமதிப்பாகும் என்பதை வாலியின் குடும்பத்தாரோ அல்லது திரைஉலகமோ புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்து கொட்டும் மழையில் பெசந்து நகர் மின்மயானம் வரை சென்ற இறுதி ஊர்வலத்தில் அதிகபட்சமாக கலந்து கொண்டோர் இருநூறு என்கிறார் கவிஞர் பாரிகபிலன்.தலை சிறந்த ஒரு கவிஞரின் இறுதிப் பயணம் நிகழ்கிறது என்ற எந்த உணர்வும் இன்றி முகம் தெரியாத ஒருவரின் பயணம் போல சாலையில் போனது கொடுமை.ஒரு நீதிபதி கார் வந்தால் வழி கொடுக்கும் காவல்காரர்கள்,ஓர் அமைச்சர் கார் வந்தால் விலக்கி வழி தரும் போக்குவரத்து காவல்துறையினர் வாலியின் ஊர்வலத்தில் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தது.

அடிமைப்பெண் படத்தில் வாலியின் பாடலான அம்மா என்றால் அன்பு என்ற பாடலைப் பாடிய முதல்வர் ஜெயலலிதா, தனது தலைவரான எம்.ஜி.ஆரின் செல்வாக்கிற்கு தனது பாடலால் உதவிய  கவிஞருக்கு அஞ்சலி செய்ய கொடநாட்டிலிருந்து வந்து போயிருந்தால்  மரியாதையாக இருந்திருக்கும்.அதுவும் இல்லை;ஒ.பன்னீர்செல்வம் போன்ற இரண்டாம் நிலை தலைவர்கள் வழியாக அஞ்சலி செய்திருக்கலாம் தமிழ்நாட்டு அரசு.

அண்டை மாநிலமான கேரளத்தில் ஒரு படைப்பாளி,ஒரு கலைஞர்,ஒரு கல்வியாளர்  இறந்தால் மாநில அரசு ,இறந்தவருக்கு  மரியாதை செய்து,இறுதி விடை கொடுக்கிறது.

ஆனால்  பெசந்த் நகர் மின் மயானத்தில் வாலிக்கு வணக்கம் செய்ய  வந்த வைரமுத்து,பாக்யராஜ்,மேத்தா,பா.விஜய்,கபிலன் போன்ற  சொற்ப கலைஞர்களுக்கு ஒர் அஞ்சலி உரை நிகழ்த்தி,வாலிக்கு விடை கொடுக்க வேண்டும் என்று உணர்வில்லாது போனதை  ஏதும் அறியாதவர்கள் என்று எடுத்துக் கொள்வதா?அல்லது காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகள் என்று எடுத்துக் கொள்வதா?

மனசு உடுத்தின கவலைத் துணி
அவிழ்த்து எறி எதற்கு இனி

-வாலி

8 comments:

 1. கோடானு கோடி ரசிகர்கள்
  தாங்கள் இருந்த இடத்தில் இருந்த
  படியே மனதால் நேற்று அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டு தான் இருந்தார்கள் .

  உண்மையான வாலி நேசர்களுக்கு இவை எல்லாம் ஒரு குறையாகவோ , அவமதிப்பாகவோ தெரியவே இல்லை

  ReplyDelete
 2. மிகவும் வேதனைக்குரிய உண்மையான வார்த்தைகள்

  ReplyDelete
 3. அன்புத் தோழர் இரா.தெ.முத்து அவர்களுக்கு வணக்கம். உங்களின் நியாயமான கேள்வியை எடுத்து, எனது வலைப்பக்கத்திலும் வெளியிட்டிரு்க்கிறேன் என்பதைத் தோழமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் -தங்களின் வலைப்பக்க இணைப்பும் தந்திருக்கிறேன்.
  பார்க்க -http://valarumkavithai.blogspot.in/2013/07/blog-post_20.html.
  -நா.முத்துநிலவன்,
  புதுக்கோட்டை

  ReplyDelete
  Replies
  1. அன்பும் மகிழ்வும் நிலவன்

   Delete
 4. நிகழ்வு கொடுமை...

  அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

  ReplyDelete
 5. வாலி வலிமையான ஆயுதம் '' வாலி வலிமையான ஆயுதம் வாலி வலிமையான ஆயுதம் மதியம் 12 மணிக்கு போரூரில் இருந்து ஆரம்பமான பயணம் . ''வடபழனி '' வழியாக '' பெசன்ட் நகர் '' நகர் போக சரியாக 2 மணி ஐந்து நிமிடம் . வழியில் கொட்டும் மழை. வாகன நெரிசல் . இருந்தும் மரண ஊர்வலம் ஒன்று வீதியால் போய்க் கொண்டு இருந்தது . இறுதி நிகழ்வு 3.30 மணிக்கு என்பதால் இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு என்று தான் நினைப்பு . வீடு போய்ச் சேர 2.30 மணி ஆகிவிட்டது . ஆனால் தெரு எங்கும் பூக்களால் அர்ச்சிக்கப்பட்டு இருந்தது . யாருமே அங்கு இல்லை . தந்தி tv மட்டும் தங்கள் வேலை முடித்து அலுவலகம் செல்ல தயாராக இருந்தார்கள் . இனி மீதமாக இருப்பது மின் சுடுகாடு தான் . ஆட்டோ பிடித்து , வாகன நெரிசல் முடித்து,சுடுகாடு போனதில் ஆறுதல் . அதன் பின் தான் ஊர்வலம் வந்து சேர்ந்தது . படைப்பாளர்கள் , பதிப்பாளர்கள், சமுகம் என்று பலரும் அங்கு கூடி இருந்தனர் . நடிகர் ராஜேஷ் , இசை அமைப்பாளர் ' சிவமணி', நடிகர் பாக்கியராஜா , மேத்தா , வைரமுத்து இப்படி பலரும் வந்திருந்தார்கள் . வந்திருந்தவர்கள் யாவரும் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் அல்ல . கோவை , திண்டுக்கல் , விழுப்புரம், திண்டிவனம், ஆவடி , அம்பத்தூர் .... போன்ற தூர இடங்களில் இருந்தும் வந்துள்ளனர் . '' வாலி அவரின் வலிமையான ஆயுதத்தால் ''இந்த சமுகத்தின் மத்தியில் தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கப் போகின்றார் . ஆனால் அவரின் உயிரற்ற உடலை கடைசி நிமிடமாவது பார்த்து விட்டுப் போவோம் என்று ஆசை ஆசையாக ஓடி வந்தவர்களை அவமதிப்பது எப்படி நியாயம் ?. '' வீட்டிலாவது மோகத்தைப் பாபோமுனு ஓடி வந்தேனுங்க '' அவங்க வெளியே கொண்டு போட்டானுங்கோ ....இங்காசும் பார்க்க முடியேல ...'' ஆதங்கப் பட்டாள் முத்துலட்சுமி . '' சுத்தி பார்க்கிற வரைக்கும் நடுவ வைக்கலாமுலே '' எவங்க தான் எத சரியாப் பண்ணுற னுக ...கோவையில இருந்து வந்தன். இப்படி பலரது ஆதங்கம் இது தான் . மக்கள் அஞ்சலி செய்யும் வகையில் ஒழுங்கு படுத்தப் படவில்லை . ஆளுக்கு ஆள் தலைமை தாங்கு வதாக நின்றால் யார் தலைமை தாங்குவது . ? நெருக்கடி நிலையில் முழு இடமும் ஆண்கள் தான் ஆக்கிரமித்து இருந்தார்கள். பிரபல்யமான ஒருவர் வருகின்றார் என்றதும் நிற்பவர்களையும் பார்க்காமல் தள்ளி விழுத்தி விட்டு , பிரபல்யத்தை முன் விடுபவர்களுக்கு அங்கு காத்திருந்த பெண்கள் சமுகத்தை கண் .தெரியவில்லை . மூச்சு விட முடியாத அளவுக்கு ஒன்றும் அவளவு கோடி மக்கள் அங்கு கூட வில்லை ஆயினும் எல்லாருக்கும் ஒரு வகையில் சந்தர்ப்பம் வழங்கி இருக்க வேண்டும் . '' ஸ்ரீ ரங்கத்தில் '' சுவாமி தரிசனத்துக்கு 250 ரூபா பணம் செலுத்தி விட்டு விசேட பகுதியால் சுவாமி தரிசனம் வந்தால் , சுவாமியை பார்க்க முன் துரத்தி விடுவார்கள் . அப்படி ஒரு அனுபவமும் இங்கு கிடைத்தது . இனி எப்போ , இந்த உயிர் மீண்டும் வரும் என்று யாருக்கும் தெரியாது . ஆனால் பார்க்க விரும்பும் சமுகத்தை பார்க்க விடுவது மனித .பண்பு இந்த பண்பை வாளியில் மட்டுமல்ல .............எந்த இறுதி நிகழ்வில் '' முகத்தை பார்க்க ஓடி வந்து காத்திருக்கும் '' ஒவ்வொரு மனிதத்தையும் மதியுங்கள் என்பதே இந்த பதிவின் நோக்கம் .

  ReplyDelete
 6. உங்கள் பெருவருத்தம் நியாயமானது. வாலிக்கு நெருக்கமான கலையுலக நண்பர்கள் மக்கள் அஞ்சலி செலுத்த உதவி செய்திருக்க வேண்டும்.யாவரும் வந்தார்கள்;சென்றார்கள் போல் இருந்தது வாலிக்கு செய்த மரியாதை அல்ல.இனி இது போல நிகழா வன்ணம் நமது தலையீட்டை தருவோம் அக்கின்77

  ReplyDelete
 7. கவிஞர் வாலி திரைப்படத் துறைக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல. அதைய்ம் தாண்டி கவி மனம் கொண்ட அனைத்த்து தமிழ் நெஞ்சங்களிலும் நிறைந்தவர். கொட்டும் மழையில் நனைந்து கொண்டு போனது வாலியின் இர்ததி ஊர்வலம் என்றாலும் அவரின் கவி மழையில் நனைந்த எல்லோரும் அப்பொழுது தொலைக்காட்சியில் பார்த்த்து கண்ணீர் மழை வடித்த்தார்கள் என்பதே உண்மை. எளிமையும் செறிவும் நிறைந்த அவரின் கவிதை வரிகளில் அவர் எப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருப்பார். -ஆ.மி. ஜவகர், நாகப்பட்டினம்

  ReplyDelete