Sunday, March 25, 2012

தி.பரமேசுவரியின் ஓசை புதையும் வெளியை முன் வைத்து பெண் வெளியும் பெண் மொழியும்
எனக்கான வெளிச்சத்தைத் தொடர்ந்து தி.பரமேசுவரியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாக வந்திருக்கிறது ஓசை புதையும் வெளி.வெளிவந்து ஓராண்டு ஆகிவிட்டது.இலக்கிய வெளியில்,ஆய்வு வெளியில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற இவரின் இந்தத் தொகுப்பு இதுவரை கவனிக்கப் படாமல் இருப்பது வருத்தத்திற்குரியது என்று மட்டும் சொல்ல முடிகிறது.

ஓசை புதையும் வெளி என்கிற சொற்களின் கவித்துவமும் அது உணர்த்தி நிற்கும் வெளியும் அது சார்ந்த ஆயிரமாயிரம் புரிதலையும்,பெண்  வெளி குறித்த ஆயிரமாயிரம் கேள்விகளையும் கிளர்த்துகிறது.

மானுட சமூகத்தின் வரலாற்று ஓர்மை குறித்தப் பதிவு,பண்பாடு,அரசியல்,பொருளாதாரம் குறித்தப் பதிவு செய்யப்பட்டு ஈராயிரம் ஆண்டு கழிந்த பின்னரும் பெண்ணின் வெளியும் பெண்ணின் மொழியும் ஆண் மைய சட்டகத்தினூடாய் வனையப்படுவதும்,வனைதலின் நிர்ப்பந்தமும் நீடிப்பது தொழிற்நுட்ப ரீதியிலான வளர்ந்து வந்த மானுடத்தின் மேம்படாத அகத்தின் மறுபக்கத்தை காட்டி நிற்கிறது.

தி.பரமேசுவரியின் வெளியெங்கும்  பெண் சுயம்,பெண் விருப்பு,பெண் தேடல் புதைக்கப்படுதலும் சுயத்தை மீட்டுக் கொள்வதற்கான  ஓர்மையும் ஓசையும் காணப்படுகின்றன.பெண் சுயமும்,பெண் விருப்பும் எப்பொழுதும் வெளி சார்ந்தும்,வெளி தொடர்புடைய காலம் சார்ந்துமே காணப்படுகின்றன.

 மரபார்ந்த குடும்ப வெளி அல்லது  உறவு வெளி பெண் மனதை புறக்கணிப்பதையும்,பென் மனதின் விடுதலை கிளைப்புகளை தாண்டிச் செல்வதுமான மனதைக் கொண்டிருக்கிறது.சக பெண் மனதும் கூட உதிரத்தில் விளைந்த பெண் மனதின் அகச்சிக்கல்களையோ அல்லது மலர்ச்சிகளையோ ஏற்றுக் கொள்ளாமல் மரபார்ந்த குடும்ப வெளியில் வதைபட தருதலை தொகுப்பினூடாய் வாசிக்கிற பொழுது  அதிர்கிறது மனம்.

பெண் இருப்பின் பிரக்ஞை புரியாத ஆண் மனம் போகம் பாவிக்கும் இடமென பெண்ணுடலின் மீதான  ஊர்தலை உணர்வற்ற மரவிரல்களெனவும்,நனைவின் புதைமணற்வெளி எனவும் அவதானிக்கிற பெண் சுயம்,வெளியின் புரிதலின் போதாமையையும் உணர்ந்து  சமரசத்தோடு குடும்பச் சட்டத்தினூடாய் பயணம்  செய்ய நினைத்தாலும்  தன்  மீது தொடர்ந்து தொடுக்கப்படுகிற   கற்சலனத்தினால் வாசல் தொடுகிற மனதை மீட்டெடுத்துக் கொள்கிறது.
( வெளியாகவிருக்கும் கட்டுரையின் சிறிய பகுதி)

Thursday, March 22, 2012

இலங்கைக்கு எதிரான இந்திய நிலைபாடும் கூரை மேலேறி கோழி பிடிக்க வக்கில்லாத உளுத்தம் பருப்புகளும்

சென்னையின் பல இடங்களில் தி,மு.க இளைஞர் அணி சார்பாக நீளமான சுவரொட்டிகள் ஒட்டப்படிருக்கின்றன.தாத்தாக்கள் கட்டும் கோமணத்துணி போல நீள நீளமாக அந்த சுவரொட்டிகள் ஒட்ட்ப்பட்டிருக்கின்றன.தலைவர் கலைஞர் வேண்டுகோளுக்கிணங்க ஜெனிவா கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக பேசப்போகும் இந்தியாவிற்கும்.பிரதமர் மன்மோகன்சிங்,சோனியாவிற்கும் நன்றி நன்றி என்ற ரீதியில் சுவரொட்டி வார்த்தைகள் காணப்பட்டன. அந்த சுவரொட்டி வாசகங்களை பார்த்து சிரிப்பாணி தாள முடியவில்லை 2ஜி வழக்கில் யாரை கைது செய்தாலும் .தனது குலக்கொடி,பட்டத்திளவரசி கனியை மட்டும் கைது செய்யக்கூடாது என்ற கலைஞரின் வேண்டுகோளுக்கு, செவி கொடுக்காமல் ஆறு மாதம் திகார் சிறையில் பத்துக்கு பத்து தனிமை அறையில் கனிமொழியை அடைத்து வைத்தப் பொழுது, இதே சோனியா அண்ட் மன்மோகன் கம்பெனி கலைஞரின் வேண்டுகோளுக்கு என்ன மதிப்பு கொடுத்தனர்.?கலைஞரின் குலக்கொடி கைது குறித்த வேண்டுகோள் என்னவாயிற்று? இலங்கைக்கு எதிராக தற்போது இந்தியா நிற்பதற்கு காரனங்கள் வேறு..அவைகள் அரசியல் காரணங்கள் மட்டுமில்லாமல் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2 இன் உள் குத்தும் உண்டு.சேனல் 4 ஒளிபரப்புகள் மூலம் தமிழகம் முழுவதும் காணப்பட்ட மத்திய அரசுக்கு,இலங்கைக்கு எதிரான தமிழக மக்களின் மனநிலையும் இதை ஒட்டி இந்திய நாடாளுமன்றத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் காட்டிய எதிர்ப்பும் ஆக எழுந்த புதிய சூழல்தான் இந்தியப் பிரதமர் அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்ற அறிவிப்பு. இந்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு தலைவர் கலைஞர் தான் காரணம் என சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பது தமிழக மக்களை தி.மு.க. பட்டப்பகலில் ஏமாற்றும் மோசடித்தனமாகும் இந்த மார்ச் மாத முதல் வாரத்தில் 5 மாநில சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் பலத்த அடி வாங்கி இருந்தது.சோனியாவின் மொத்த குடும்பமும் உத்திரபிரதேசத்தில் முகாமிட்டும் காங்கிரஸ் அங்கு பலத்த பின்னடைவை சந்தித்தது.அவமானத்தை எதிர் கொண்டது. சேனல் 4 ஒளிபரப்பினால் இலங்கையின் போர்குற்றத்தை உணர்ந்து மொத்த உலகமே குறிப்பாக தமிழகம் அதிர்ந்தது.மார்ச் இரண்டாம் வாரத்தில்இந்திய நாடாளுமன்றமும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களால் அதிர்ந்தது. போருக்கு பிந்தைய 3 ஆண்டுகளில் சிதைக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு ஏதும் செய்யாமல் ஏமாற்றும் இலங்கைக்கு இந்தியா முட்டு கொடுக்கக் கூடாது.இந்தியா தனது ஆழ்ந்த உளப்பூர்வமான அரசியல் நெருக்கடியை இலங்கைக்குத் தரவேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்),இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,அ.தி.மு.க, தி.மு.க ,விடுதலை சிறுத்தை,தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரே நோக்கோடு முழங்கினர். அடுத்த சில நாட்களில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் கடுமையான கண்டனத்திற்கு மக்கள் மத்தியிலும்,நாடாளுமன்றத்திலும் உள்ளானது. 25 % கும் மேலான.கடுமையான கட்டண உயர்வு. மம்தா போன்ற கூட்டணி தலைவர்களே நியாயம் செய்ய முடியாத கட்டண உயர்வு.கட்டண உயர்வுக்கு காரனமான தன் கட்சியைச் சார்ந்த ரயில்வே அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்ல அவர் மறுக்க,கூட்டணி அரசுக்கான ஆதரவை தான் திரும்பப் பெறப் போவதாக மத்திய அரசை அச்சுறுத்தினார். ,ஜெயலலிதாவும் கட்டண உயர்வைச் சாடினார்.மார்க்சிஸ்ட் கட்சி மார்ச் 27 அன்று தமிழ்நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இப்படி இந்திய அளவில் கடுமையான அரசியல் நெருக்கடிகளால் மன்மோகன்சிங்,சோனியா சுற்றி வளைக்கப்பட்டு,கூட்டணி கட்சிகளும் இதுதான் நேரம் என்று அச்சுறுத்த ,ஆசிய ,அய்ரோப்பிய அளவிலும் இந்தியாவின் முகம் மேலும் சேதமடைய,தப்புவதற்கு வேறு வழி இல்லை என்ற போதுதான்,அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க விரும்புவ்தாக மன்மோகன் சிங் அறிவித்தார். ஆனால் தன்னால்தான் வைகுந்தம் கவிழ்ந்தது என சென்னையில் சுவரொட்டிகள் ஒட்டிக் கொள்கிறார்கள். கூரை மேலேறி கோழி பிடிக்க வக்கில்லாத உளுத்தம் பருப்புகள்

Monday, March 12, 2012

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் பட்டறை    
அண்மையில் பத்மசிரி விருது பெற்ற கூத்துப்பட்டறை முத்துசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்வதற்காக பிரளயன்,இரா.தெ.முத்து,ஜே.ஜேசுதாஸ்,அசோக்சிங் ஆகியோர்,அவரது சென்னை கோயம்பேடு அய்யப்பா நகர் வீட்டிற்கு சென்றிருந்தோம்.வீட்டினுள் இல்லை:அலுவலகத்தில் இல்லை.மொட்டைமாடியில் இருந்த சிறு நாடக ஸ்டுடியோவில் பிருஹன்மலை நாடகத்திற்கான பயிற்சியில் இருந்தார்.

எங்களைப் பார்த்ததும் பருமனான மீசை மேலேற சிரித்து வறவேற்றார்.பிரளயன் என்ன பயிற்சி என கேட்டதற்கு மகாபாரத வீராடபருவத்தில் அர்ச்சுனன் மூன்றாம் பாலினராக மாறுவதை ஒட்டிய பிருஹன்மலை நாடகம்என்றார்.அப்படியே சந்திப்பு சிறு உரையாடலாக மாறியது. கலைஞர்கள் விலகி அவர்களுக்கான பயிற்சியில் கவனம் காட்டத் துவங்கினர்.

நாங்கள் எங்கள் கலைஞர்களுக்கு மாதச் சம்பளம் கொடுக்கிறோம்.உணவு,தங்குமிடம் கொடுக்கிறோம் என்ற முத்துசாமி,இந்த அணுகுமுறை எங்கள் ட்ரஸ்ட் குழுவில் கேள்வியை எழுப்பியுள்ளது என்றார். பயிற்சியை கொடுத்து விட்டு,நாம் சம்பளமும் தரவேண்டுமா என கேள்வி வருகிறது என்றவர் இதை எல்லாம் சமன் செய்து கொண்டு எழுபத்தைய்ந்து வயதிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்றார் மீசையை நீவி விட்டபடி.

எனது ஊர் நாகை மாவட்டம் செம்பொனார்கோவில் அருகே உள்ள புஞ்சை கிராமம் என்றவர் தான் நேரடியாக நடிப்பதை விட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன என்ற முத்துசாமி கூத்துப்பட்டறையில் நாடகப் பனுவல் எழுத கற்றுக் கொடுக்கிறோம்:நடிப்பு,அரங்க நிர்வாகம்,கூத்து,பாரம்பரிய இசைக்கருவிகளை மீட்ட கற்றுக் கொடுப்பது:வீரவிளையாட்டு பயிற்சிகள் என போகிறது என்றார்.

கூத்துபட்டறையில் பயின்ற பலரும் சினிமாவிற்கு போகின்றனர்.நண்பன் படத்தில் ஜீவாவிற்கு அக்காவாக இங்கு பயின்ற தேவி நடித்துள்ளார் என்றவர் நம்மை மாதிரியான நிகழ்த்து கலைக்கு அரங்குகள் கிடைக்காத,இடவசதி இல்லாத சூழலில் இந்த மொட்டைமாடியையே அதற்கான அரங்காக மாற்றி பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

இந்த விருதிற்காக யார் உங்கள் பெயரை முன்மொழிந்தது என்று நாம் கேட்டதற்கு சங்கீத நாடக அகாடமி என்றதுடன்,இந்த விருதைப் பெறும் முதல் தமிழ் நாடகக்காரர் நீங்கள்தானா என்ற கேள்விக்கு ,இல்லை முதலாவதாக நாடக எழுத்திற்காக இந்திரா பார்த்தசாரதி பெற்றிருக்கிறார்,தான் நாடக அரங்கு செயல்பாட்டிற்காக இரண்டாவதாக இந்த விருதைப் பெற்றிருக்கிறேன் என்றார்.

தெருக்கூத்தை நவீன நாடக அரங்கோடு இணைத்து அடையாளப்படுத்தியதில் செ.ராமானுஜத்திற்கு அடுத்து.முத்துசாமி பங்கு முதன்மையானது.1969 ல் நிகழ்த்தப்பட்ட இவரின் காலம் காலமாக நாடகம் நவீன நாடகச் செயல்பாட்டிற்காக ஊன்றபட்ட முதல் விதை.தமிழின் குறிப்பிட தக்க பல கதைகளை,கவிதைகளை எழுதி ஓர் எழுத்தாளராக அடையாளம் காணப்பட்ட ந.முத்துசாமி கசடதபற,நடை போன்ற இதழ்களில் பங்கு பெற்றபடைப்பாளி.

இவரின் கதைகள் கொண்ட நீர்மை தொகுப்பு உள்ளிட்டு,கட்டுரை,நாடகம் என ஏழு தொகுப்புகள் வெளிவந்துள்ளன.75 லிருந்து ஆரம்பிக்கபட்ட கூத்துப்பட்டறை இதுவரை அறுபது நாடகங்களை அரங்கேற்றி உள்ளது..இதில் இங்கிலாந்து,காந்தியின் கடைசிச் சொற்கள்,மெக்பத்,படுகளம்,வாய்ஸ்செக்பாஞ்சாலி சபதம்,தெனாலிராமன்,நாற்காலிக்காரர்கள் முக்கியமானது.

பாரம்பரிய கூத்து மட்டுமின்றி,மேற்கத்திய நாடகப் பனுவல்களை தமிழாக்கி மேடை ஏற்றிய ஒரு பண்பாட்டு இணைப்பு பாலமாகவும் முத்துசாமி செயல்பட்டு வருகிறார்.தமிழகத்தில் நாற்பது ஆண்டுகளாக இந்தத் துறையில் தொடர்ச்சியாகச் செயல் பட்டுக் கொண்டிருப்பவர் இவர் மட்டுமே.