Saturday, September 28, 2013

தமிழ் ஒளி பரவுக`கவித்துவம் கம்பீரம்
பொதுமை நோக்கோடு இயங்கிய
தனித்த அடையாளம்
எளிய மக்கள் ஏற்றம் பெற
எழுதுகோல் தரித்த சூறாவளி’

என்ற பிம்பத்தை விட்டுச் சென்றிருக்கும் சி.விஜயரங்கம் என்ற தமிழ்ஒளி (1924-1965) பாரதி,பாரதிதாசன் என்ற ஆளுமைகளின் வழித்தடத்தில் பயணப்பட்டவர்.பாரதிதாசன் மீது மிகுந்த நேசம் கொண்டு அவரின் அன்பைப் பெற்றவர்.1940 ஆம் ஆண்டு முதல் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீதான ஈடுபாட்டால் தன்னை பாட்டாளிகளின் பாவலனாக மாற்றிக் கொண்டவர்.

அமரர் ஜீவாவிற்கு அடுத்து `ஊரை எழுப்பிடவே-துயர்
ஒன்றை நொறுக்கிடவே
தாரை முழக்கிடுவேன்’என்று பாடவந்தவர்.யாப்பு முறையில் அற்புதமான சந்தத்தோடும் எதுகை மோனையோடும் பாவேந்தரிடம் கவிதை எழுதக் கற்றுக் கொண்டவர்,வாழும் சூழலையும் மக்களின் வாழ்க்கைப் பாடுகளையும் அடிமைப்பட்டுக் கிடந்த தேசச் சூழலையும் கவனித்து வந்த தமிழ்ஒளி பாவேந்தரின் அரசியற் கொள்கையிலிருந்து விலகி`இந்தத் தத்துவம்(மார்க்கியம்),உலகில் எவராலும் வெல்ல முடியாத தத்துவமும் உண்மையென்று நீரூபிக்கப் பெற்ற தத்துவமும் ஆகும். பழைய வேதாந்த சித்தாந்தங்கள் எல்லாம் இதன் முன்னே தலைகுப்புற விழுந்து தவிடு பொடி ஆகி விட்டன.இதை உணர்ந்தே நான் என்னுடைய கொள்கையை வகுத்துக் கொண்டேன்” என்று உணர்ந்து இடதுசாரி அரசியல் சார்ந்த கலை இலக்கியத்தை தன் வாழ்வாகவும் பாதையாகவும் வகுத்துக் கொண்டவர்.

கவிதைகள்,காவியங்கள்,கதைகள்,கட்டுரைகள்,நாடகங்கள் என தொடர்ந்த இருபதாண்டு காலத்தின் பெரும் பகுதி இந்தப் பாதையில் பயணித்தார்.அரசியல் கொந்தளிப்புகளும் போராட்டங்களும் எழுச்சிகளும் நிறைந்த காலத்தில் வாழ்ந்த தமிழ்ஒளி இவைகளை தம் படைப்பில் பதிந்தார்;ஆளும் வர்க்கங்களை ஆவேசங் கொண்டு தாக்கினார்;தொழிலாளர்களின் போராட்டங்களை வாழ்த்தி எழுச்சி ஊட்டினார்;போர் வெறி பிடித்து அலைந்த அரசுகளைச் சாடினார்.


சீனப்புரட்சியின் முன்னேற்றத்தை வெற்றியை 
`ஓ ஓ என்றார்ப் பரித்தே எழுந்தது பார் ஊழிப்போர்
உலகமெங்கும் ஆஆ என்றதிசயிக்க ஆசியத்தாய் மனங்குளிர” இப்படி முறசரைந்து மகிழ்ந்தார். பாரதி ரஷ்யப் புரட்சியை முதலில் தமிழில் பாடிய கவிஞன் என்றால் தமிழ்ஒளி சீனப்புரட்சியை தமிழில் பாடிய கவிஞன் எனலாம்.

இந்தியா பெற்ற சுதந்திரம் யாருக்கானது எப்படிப் பட்டது என்பதை
`வந்த விடுதலை யாருக்கென்றே அதை வாங்கிய வீரரைக் கேட்டிடுவோம்
நொந்து கிடப்பவர் வாழவில்லை எனில் நொள்ளை விடுதலை யாருக்கடா?’ என கேட்டு 47 லேயே கேள்வி தொடுத்தார்.

`கண்ணின் கருமணியே காசினிக்கு மாமணியே
கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக’
என்று மேதினத்தை முதலில் தமிழில் நெடுங்கவிதையாகப் பாடியவரும் தமிழ்ஒளிதான்.

`காதெலாம் கிழியும் வணம் பறையடித்து விட்டான்
கவுண்டருக்கும் பறைச்சிக்கும் கலியாணம் என்று’ 1947ல் எழுதிய வீராயி காவியத்தில் இப்படி ஓர் இடம் வருகிறது.இந்த காவியம் தலித் மக்களைப் பற்றி தமிழில் பதிந்த முதல் காவியம்.பஞ்சம் பிழைக்க கிழக்காசிய நாடுகள்,ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தலித் மக்கள் படும் வாதைகளை பாடும் காவியம் ஆகும்.

 ஒன்றாய் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடான ஜனசக்தி தடை செய்யப்பட்ட காலத்தில் கட்சியின் கருத்தை ,போராட்டச் செய்திகளை கொண்டு செல்ல தொடங்கப்பட்ட `முன்னணி’ வார இதழின் துணை ஆசிரியராக இருந்து ,இதுவும் தடை செய்யப்படும் வரை சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.முன்னணியில் அரசியல் கட்டுரைகள்,கவிதைகள்,இலக்கிய விமர்சனம்,நாடகம் என வாரந்தோறும் எழுதி இருப்பதையும் காண முடிகிறது.

1949ல் வெளிவந்த தொ.மு.சி.ரகுநாதனின் இலக்கிய விமர்சனம் என்கிற நூலுக்கு முன்னணியில் விமர்சனம் ஒன்றை தமிழ்ஒளி எழுதி இருந்தார்.அதில் தொ.மு.சி கவின்கலை,பயன்படுகலை பற்றி எழுதி இருந்தார்.கவின்கலை மனம் சார்ந்த ரசனை உணர்ச்சி என்றும் பொதுமக்களுக்கான பயன்படும் முறையில் உள்ளவைகள் பயன்படுகலை என்றும் சொல்லி, இரு உணர்ச்சி சார்ந்த கலைகளும் எக்காலமும் இருந்தே தீரும்,இருக்க வேண்டும்  என்று எழுதி இருப்பார்.இதற்கு தீவிரமான எதிர் விவாதம் ஒன்றை சிலவாரம் எழுதினார் தமிழ்.ஒளி.இந்தப் போக்கு வர்க்க சமரசம் என்றும் மார்க்சிய அழகியல் இதுவல்ல என்றும் எழுதி இலக்கியத்தில் முற்போக்கு கண்ணோட்டத்துடன் ரகுநாதன் செயல்பட முயற்சிக்க வேண்டும் என்று முடித்து இருப்பார்.

அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளையாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1949 களில் அமைப்புக் குழுவாக இருந்த பொழுதும்,1952 களில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பொழுதும் ஒரு நிர்வாகியாக துணைச் செயலாளராக இருந்து செயல்பட்டவர் தமிழ்ஒளி.அன்று இடதுசாரிகள் மீது அடக்குமுறைகள் ஏவப்பட்டக் காலத்தில்,இப்படி ஓர் இலக்கிய அமைப்பு இயங்கியது பற்றியும்  மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக அது குரல் கொடுத்ததையும் இதன் வரலாற்றை நாம் திரட்டியாக வேண்டிய தேவையிலும் இருக்கிறோம் என்பது தனி.இது போல் முன்னணியில் வெளிவந்த படைப்புகளை பதிப்பித்து தமிழ்மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டிய பொறுப்பும் முற்போக்கு அரசியல் அமைப்பிற்கும் ,இலக்கிய அமைப்பிற்கும் உள்ளது.

தமிழ்ஒளியும் அவரது எழுத்தும் அறுபத்து மூன்று ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருப்பதை நாம் மேலும் பரவலாக்க வேண்டும். புதிய பொருளாதாரச் சூழல் காலத்தில் வருவதை ஏற்கும் மக்களின் மனநிலையில் மாற்றம் வர,  உண்மையை யோசிக்க வைக்க,பிரிட்டிஷ் அடக்குமுறைகள் கோலோச்சிய காலத்தில்,புதிய இந்தியா உருவாகிவிட்டது என்று மக்களிடம் இருந்த ஏற்கும் மனநிலையைப் பயன்படுத்தி நேரு அரசு அராஜகத்தை கட்டவிழ்த்த காலத்தில் ,நீ எந்தப் பக்கம் என்று அறைகூவிய படைப்புகளை மனதிற்கு எழுச்சியூட்டிய தமிழ்ஒளி படைப்புகளை இன்று பரவலாக்க வேண்டும்.

தமிழ்ஒளியை   ஒடுக்கப்பட்டவர் என்று சொல்லி அவரின் கொள்கையை அரசியல் நோக்கை பின்னுக்கு தள்ளவும் இதன் வழி இடதுசாரிகள் முற்போக்கு இலக்கிய அமைப்புகள் மீது அவச்சொல் சுமத்தவும் இன்று சிலர் கிளம்பியுள்ள காலத்தில் தமிழ்ஒளியின் அரசியலை பாதுகாக்க அவரின் படைப்புகளை பாதுகாக்க மேலும் கவனத்தோடு முற்போக்காளர்கள் இருக்க வேண்டியது தேவை என்றாகிறது.

தமிழ்ஒளி ஓர் இடதுசாரி படைப்பாளியாக முகிழ்த்த பொழுதும் அதன் பின் வந்த காலங்களும் அவர் இறக்கும் காலமும் கம்யூனிஸ்ட் அமைப்பிற்கு மிகுந்த சோதனைகளும் ஒடுக்குமுறைகளும் ஏற்பட்ட காலம்.எளிய மக்களின் அன்பும் ஆதரவும் தவிர,வேறெந்த வாய்ப்புகளும் இல்லாத காலம். அமைப்பு தலைமறைவாக இருந்து மக்கள் பணியைச் செய்திருந்த காலம்.மக்களைப் போலவே அமைப்பு சார்ந்த ஊழியர்களும் குறைந்த வருவாயில் வாழ்வை வாழ்ந்த காலத்தில் தமிழ் ஒளியும் இருந்தார்.இந்தச் சூழல் தமிழ் ஒளியையும் பாதித்தது.படைப்பாளியாக இருந்து படைப்பதற்கான சூழல் அவருக்கு வாய்க்கவில்லை.

 இந்தப் பின்னணியைப் புரிந்து கொள்ள இயலாதவர்கள் தமிழ் ஒளி நிழலடிப்பு செய்யபட்டார் என்றும் கவனிக்கப்படவில்லையென்றும் இடதுசாரிகளை ஏற்றுக் கொள்ள இயலாதவர்கள் மறைந்த தமிழ் ஒளியை பயன் படுத்தி காழ்ப்பை முன் வைக்கிறார்கள்.இதிலிருந்து தமிழ் ஒளியைப் பாதுகாப்பதும் அவர் படைப்பை முன்னெடுக்க வேண்டியதும் ஒவ்வொரு முற்போக்காளரின் கடமையாகும்.

`காற்றில் நெருப்பாய்
கடலில் அலைப் பெருக்காய்
ஆற்றில் புனலாய்
தேக்கிலை போல் காதுடைய

யானைக்கூட்டத் திரள் போன்று புறப்படுவோம்’(தமிழ்ஒளி)

நன்றி:தீக்கதிர்(2013 செப்டம்பர் 21)
கவிஞரின் 90 ஆவது பிறந்த நாள் ஒட்டி எழுதப்பட்டது