Sunday, October 28, 2012

அழகூட்டப்பட்ட வெற்றுச் சொற்களின் மீது முளைக்கும் குறுவாள்கள்
அம்மி நகர அடி
உலை கொதிக்க
மூட்டுக நெருப்பு
தடம் பதிய நட
மிதிப்போரை மிதி
மறுப்போரை மறு
விலையில்லா பொருட்களுக்கோ
அழகூட்டப்பட்ட வெற்றுச் சொற்களுக்கோ
சலனப்படுவதில்லை நாம்
வேண்டுதலை மன்றாட்டு
கோரிக்கை மனு மீது 
சிலந்திகள் படரட்டும்
நமது மொழியில்
எழுத்தில் சொல்லாடலில்
ஒளிரட்டும் தீ
காண்பதை நாம் செய்தோம்
உண்பதை நாம் செய்தோம்
அட மண்பதையே நாம் செய்தோம்
நம் உழைப்பில் விளைந்த பொருளுக்கு
கூலி அளப்பவர் எவர்?
பொது நிலத்தில் வேலி வைத்து
வேளான்மை செய்பவர் எவர்?
மண்ணின் புதல்வர்கள் நம்மை
ஊர்விலக்கம் செய்து விட்டு
நாம் பெருக்கிய சொத்துகளுக்கு
காப்புரிமை கோருபவர் எவர்?
நாம் பச்சை மண்
எதனையும் துளிர்க்கச் செய்தே
பழக்கப்பட்டிருக்கிறோம்
நாம் பசும்மூங்கில்
எந்த காற்றையும் இசையாக்கி
காட்டியிருக்கிறோம்
நாம் நெருப்பின் துளி
எதனையும் பக்குவம் செய்து
பரிசளித்திருக்கிறோம்
தேவை பரிதாபம் அல்ல
பிச்சை அல்ல பூதானம் அல்ல
திருப்பி வீசும் காற்றை
கற்றுக் கொண்டால் நல்லது
குறுவாளென நிமிரும் புற்களின்
கூர்மை அறிந்தால் நல்லது
புதைகுழியென மாறும மண்ணின்
பாடம் புரிந்தால் நல்லது
எமக்கான தேவை
மண் விடுதலை
உழைப்பின் விடுதலை
சாதிய விடுதலை

Tuesday, October 23, 2012

புல்லாங்குழல்களும் பூக்குடையும்நான் வடசென்னையில் குடியேறி முப்பதாண்டுகள் ஆகி விட்டன. பல ஆண்டுகள் பட்டாளம்,ஓட்டேரி பகுதிகளில் திருப்பதிக் குடை பெரும் மக்கள் சூழ பயணிப்பதைப் பார்த்திருக்கிறேன்.வடசென்னையின் உழைப்பாளி மக்கள் பெறும் உற்சாகத்தோடு கலந்து கொள்ளும்  திருவிழா.விட்டல்ராவின் ஒரு நாவலில் இந்த குடை நிகழ்வு காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.

 புரட்டாசி மாதம் ஒன்றாம் தேதி மண்ணடி சென்ன கேசவப் பெருமாள் கோவிலிலிருந்து மாலை புறப்படும் குடைகள் நான்கு நாள் நடைபயணத்தில் திருமலையின்  கருடசேவை உற்சவ  நிகழ்வில் போய் முடியும்.வெண்ணிற சிகப்பு நாமம் இடப்பட்டு மஞ்சள் ஆடை அணிந்த பக்தர்கள் ஆயிரக் கணக்கில் உடன் செல்வார்கள்.

திருக்குடைகள் ஒவ்வொன்றும் இரண்டு ஆள் உயரம் கொண்டது.அதன் மேல்பகுதி விட்டம் ஒரு மீட்டர் இருக்கும்.இதை சரியாமல் தாங்கிக் கொள்வதற்கு குறைந்தது ஐந்து ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.புரட்டாசி ஒன்றாம் தேதி என்றால் சுற்று வட்டார பேட்டைகளிலிருந்து பெண்கள்,குழந்தைகள்,ஆண்கள்,பெரியோர்கள் என சாலை எங்கும் இயல்பாகக் கூடி .,கைகளில் வழிபாட்டு தட்டு ஏந்தி வரப்போகும் பெருமாளின் குடைக்காக மணிக்கணக்கில் காத்து கிடக்கிறார்கள்.

லட்சோப லட்ச மக்கள் திரளும் குடைப்பயணம் இயல்பாகவே சந்தைக்கான இடத்தையும் கூடலிற்கான மகிழ்வையும் கொண்டிருக்கிறது.ஒவ்வொரு பகுதியிலும் சிறு மேடைகள் அமைத்து ,அழகுப்படுத்தி ,அதன் மேல் பெருமாளின் பல வகையான திருமேனிகள் அமைத்து, பூக்களால் கூடுதல் அழகுப்படுத்தலும் ,மேடை தோறும் திருமால் பெருமை பேசும் பாடல்கள் இசைப்பதும் ,நாதசுரம்,கிளாரிநெட்,புல்லாங்குழல்,மிருதங்கம்,தபேலாவின் சுரங்கள் வழிதலும்  , ஒலி,ஒளி அமைப்புகள் என்று ஆயிரக்கணக்கான கலைஞர்களுக்கு இந்த நான்கு நாட்களும் பணி கிடைத்து விடுகிறது.

திரளும் குழந்தைகளை மையப் படுத்தி  நெடுவழி எங்கும்  சைக்கிளில் ,தாங்கு கட்டைகளில் காற்றாடிகள் சுழன்றாடுகின்றன.
வண்ண வண்ண பலூன்கள் காற்றில் நெளிந்து குழைந்து வனப்பு காட்டுகின்றன.பேருந்துகளும் கனரக வாகனங்களும் நிறைந்த சாலைகளின் வழியெங்கும் புல்லாங்குழல்கள் மீட்டப்பட்டு வழிகிறது  நாதம்.சிறுகுழலில் ஊதப்படும் .சோப்பு குமிழிகள் பார்வைப் பரப்பை பரவசைபடுத்திக் கொண்டிருக்கிறது.காதெங்கும் சிறு சிறு ஒலிக் கூம்புகளின் ஓசை நிறைகிறது.

தள்ளு வண்டிகளில் கமர்கட்,தேங்காய் பர்பி,அவல் உருண்டை,பால் கடம்பு ,பனிக் குழைவுகள் என வித விதமாய்  ருசிப்படுத்தும் வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கிறன.பூவியாபாரம் மணத்து கிடக்கிறது.பூசைப் பொருட்கள் பைகளில் போட்டு விற்பனை ஆகிறது.

ஆங்காங்கு தொண்ணைகளில் கதம்ப சோறும்,தண்ணீரும் தரப்படுகிறது. பாதை எங்கும் திருக்குடையை சொல்லிக் கொண்டிருக்கும் சுவரொட்டிகள்,டிஜிட்டல் படங்கள்,செலவை ஈடுகட்டும் உபயதாரர்களின் விளம்பரங்கள் என பெரும் சந்தை இதில் புழங்கிக் கொண்டிருக்கிறது.


சாலைத் தடுப்புச் சுவரின் மீது ஒரு பையனின் கைதாங்கலில் ஏறி நின்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.கற்பூரம் எரிந்து கருமையான புகை சூழ , உதிரிப் பூக்கள் திருக்குடையின் மீது வீழ வீழ பதினோறு குடைகள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக  மெதுவாக கூட்டத்தில் நகர்ந்து வந்து கொண்டிருந்தன.குடையை ஏந்தி வந்தவர்களின் காலருகே பெண்கள் தேங்காயை உடைத்து, சூடத் தட்டை தூக்கி குடைக்கு ஆரத்திக் காட்டினர். பெரும்பாலும் எளிய பிரிவினராகவே பெண்கள் இருந்தனர்.அவர்களின் கழுத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெருவழக்காய் இருந்த  நாணக்குழா என்கிற தாலியை கோர்த்திருக்கும் சரடு பெரும்பாலும் காணப்படவில்லை.முகப்பு வைத்த ஆரம் அல்லது முருக்கு சரடு அணிந்து காணப்பட்டனர்.

குடையின் மீது விழுந்த உதிரிப் பூக்களை அப்படியே தூக்கிச் செல்லாமல் ,மென்பாரம் அழுத்தும் போதெல்லாம் குடையை  கவிழ்க்க கவிழ்க்க சிதறும் பூ வேண்டி பக்தர்கள் முண்டியடித்து எடுப்பதில்,பூக்கள் இதழ் இதழாக ஆகி மகரந்த துகள் போல காற்றில் பரவி அந்த பகுதி மணத்துக் கொண்டிருந்தது.மற்றபடி அவர்களுக்கு பிரசாதமெல்லாம் தரப்படுவதில்லை;அவ்வளவு கூட்டத்திற்கு அது சாத்தியமுமில்லை.

குடைகள் தம்மை கடக்கும் போது கோவிந்தா கோவிந்தா என மக்கள் மருவிக் கொண்டிருந்தனர்.குடைகளுக்கு பின்னால் பத்து சிறு வண்டிகளில் பெருமாளின் தசாவதார காட்சிகள் எடுத்துச் செல்லப்பட்டன.அந்த வண்டிகளில் உபயம் இந்து தர்ம ட்ரஸ்ட் என்று எழுதப்பட்டிருந்தது.இது இந்துத்வாவின் ஒரு துணை அமைப்பு.இதன் தலைவர் ,செயலாளர் வேதாந்தம் மற்றும் தினமலர் கோபால்ஜி.இருவரும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்.

அயோத்தி மசூதி தகர்ப்பிற்கு பிறகு முளைத்த அமைப்பு இது.அதன் முன்பு குடைகள் மட்டுமே பக்தர்களுக்கு காட்சி அளித்துக் கொண்டு,அவர்களின் வறவேற்பை ஏற்றுக் கொண்டு போன திருக்குடைகளின் பின்னால் இந்தக் கூட்டம் வருவது ஆபத்தானது.மெய்யான் ஆன்மீகர்களும் நல்லிணக்கம் விரும்பும் ஆளுமைகளும் இந்த கூட்டத்தை தவிர்த்து திருக்குடையின் திருப்பயணம் நடைபெற சிந்திக்க வேண்டும்.ஜனநாயக விரும்பிகள் சிந்திக்காத இடங்களின் இடைவெளிகளில் புகுந்து விடுகின்ற இந்துத்வா சக்தியை தவிர்ப்பது சகிப்பும் அன்பும் தவழும் ஆன்மீகத்திற்கு அழகு.


குடைகள் தம்மை கடந்ததும் கூட்டமும் கலைய ஆரம்பித்தது.கலைந்த கூட்டத்தின் குழந்தைகளின் தலையில் பொன்னிறத்திலான விசிறி மடிப்பு குல்லாக்கள் ஒளிர்ந்தன.புல்லாங்குழல்களை,ஒலிக் கூம்புகளை இசைத்தவாறு ராஜா முத்தையா சாலை,டிமலெஸ் சாலை வழியாக கூட்டம் வெளியேறிக் கொண்டிருந்தது
(நன்றி:தீக்கதிர் 2012 அக்டோபர் 23)

Sunday, October 21, 2012

தமிழ்த் தொலைக்காட்சிகள் மீதான எதிர்பார்ப்புகளும் ராபர்ட் முர்டோக்குகளின் வியாபாரமும்


90 களில் இருந்த தூர்தர்ஷன்,பொதிகை தொலைகாட்சிகளில் வெள்ளி ஒளியும் ஒலியும்,ஞாயிறு அன்று தமிழ் திரைப்படம் போக மீதி அனைத்து நாட்களிலும் இந்தி தொடர்கள்,ஆங்கில தொடர்கள் என்றிருந்த காட்சி ஊடகச் சூழலில் எழுந்த தமிழ்மொழி நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்புகள்,கோபங்களுக்கு தீர்வு போல் வந்த ராஜ் தொலைகாட்சி பின்னர் வந்த சன் டிவி,அடுத்து வந்த ஜெயா டிவி என்று ஆரம்பித்து அடுத்து வந்த 22 ஆண்டுகளில் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து நிற்கிறது.அடுத்து சில மாதங்களில் மேலும் சில தொலைகாட்சிகள் வர இருக்கின்றன.இப்படி பெருகி விட்ட தமிழ் தொலைகாட்சிகளால் தமிழ் சிதைக்கப்பட்டு தமிங்கிளிஷ் ஆட்டம் போடுகின்றன என்று எழுந்த ஆவலாதிகளுக்கு மக்கள் தொலைகாட்சி இடைப்பட்ட ஆண்டிகளில் பதில் சொல்ல முயன்று ,பின்னர் இதுவும் தமிழ் இசை என்றால் இந்து,சைவம் சார்ந்த ஆன்மீகப் பாடல்கள் என்று கீழிறங்கி,விளம்பரத்தின் உண்மைத் தன்மைக்கு பொறுப்பல்ல என்று அறிவிப்பு செய்து விட்டு டெலிஷாப்பிங் செய்யும் அலைவரிசையாக சுருங்கி விட்டது. 

இந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளில் இத்தனை தொலைக்காட்சிகளால் தமிழ்ச்சமுகம் பெற்ற பெறுமதி என்ன என்கிற போது  பெரு நிறுவனப் பொருட்களின் நுகர்வோர்களாக மாற்றப் பட்டதோடு  அவைகளின் தனியார்மய ,தாராளமய  பொருளாதார அரசியல் சார் நோக்கிற்கு உகந்த பண்பாட்டு  நிகழ்வுகளை வழிமொழியும் ஊடகமாக தமிழும்,தமிழர்களும் மாற்றப்பட்டு இரு பெரும் கழகங்களுக்கு இடையில் ஆடப்படும் பல்லாங்குழி காய்களாக ஆக்கப்பட்டதான சோகமே மேடிட்டு நிற்கிறது. 

தேன்கிண்ணம்,தேனும் பாலும்,அமுத கானம்,தேனருவி  காலைநேர திரைப்படப் பாடல்களோடு,சினிமா ட்ரைலர்,மேட்னி ஷோ என்கிற  நண்பகல் திரைப்படம் போக  பெரும்பாலும் பொழுதுபோக்கு அலைவரிசைகளில் நெடுந்தொடர் முக்கிய பங்கு வகிக்கிறது.இப்பொழுது திரைப்படத்திற்கென தனி அலைவரிசைகளை முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடங்கி நடத்தி வருகின்றன.செய்திக்கென தனி அலைவரிசைகளை அதே முன்னணி தொலைகாட்சி நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.  

சிறுவர்களுக்கென கதை சொல்லி சுட்டி டிவி,போகோ டிவி குதூகலப்படுத்தி வருகின்றன.பள்ளிக்கு போகும் போதும்,பள்ளி விட்டு வந்த பிறகும் அவர்களை சந்தோசப்படுத்துபவைகளாக தற்போது இவைகள் இருக்கின்றன.தொடர்களின் குழந்தைகள் பேசும் மொழியை பின்பற்றி,வீடுகளில் பாவனை மொழி பேசியும்,வளர்ந்த குழந்தைகள் பொம்மை  துப்பாக்கி பிடித்து மிரட்டியும்,சுட்டும் விளையாடி வருவதை இதன் பாதிப்பாக கொள்ள வேண்டி உள்ளது. 

இப்போது தொலைக்காட்சி தொடர்களுக்கு புதிய வகை பார்வையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள்.வீட்டில் பொழுது போகாமல் இருக்கும் பெண்களின் பொழுதுபோக்கு என்று கிண்டலடிக்கப்பட்ட இத்தொடர்களுக்கு இன்று இளந்தலைமுறையினரிடம் வறவேற்பு இருக்கிறது.நீ தெருவில் நிற்க வேண்டும்.தெருத் தெருவாய் அலைய வேண்டும்.நீ சித்திரவதைப் பட்டு சாவதை நான் பார்க்க வேண்டும்.என்றெல்லாம் கண்ணை உருட்டி,பல்லைக் கடித்து கொடூரமாய் பேசும் வசனங்கள் இல்லாத தொடர்களே இல்லை.விஜய் தொலைகாட்சியின் நிகழ்ச்சிகள் சற்று மாறானவை.அதில் வரும் தொடர்கள் குடும்பவெளியைத் தாண்டிபள்ளி,கல்லூரி,அலுவலகம்,நகரவெளி என நகர்ந்து தொடர்களைத் தருகிறது.(அ.ராமசாமி;இந்தியா டுடே 2012 மார்ச் 21) 

இத்தொடர்களின் மொழி, மொழிமாற்றம் செய்யப்பட்ட தொடர் உட்பட காட்சி ஊடகத்திற்கான மொழியாக இல்லாமல் அதி உணர்ச்சிகளை காட்சிபடுத்தும் மொழியாக இருக்கிறது.பெண்கள் உக்கிரமாக அழுகிறார்கள்;சூது செய்கிறார்கள்;இவர்களின் காட்சிப்படுத்துததலே அச்சமூட்டுகிறது.மதம்,கடவுளோடு சம்மந்தப்படாத வாழ்வையோ,மனிதர்களையோ பெரும்பாலும் பார்க்க முடிவதில்லை.எளிய மக்களின் வாழ்வு இங்கே பதிவாவதில்லை  

காலையில் ராசிபலன் அனைத்து அலைவரிசைகளிலும் சொல்லப்படுகிறது.தினம் ஒரு திருத்தலம்,அருள்நேரம்,திவ்யதரிசனம்,ஆலய தரிசனம்,ஜீசஸ்கால்ஸ்,கந்தசஷ்டி கவசம் என சன்,கலைஞர் தவிர அனைத்து தொலைக்காட்சிகளும் பக்தியில் திளைத்து கல்லாவை கவனிக்கின்றன.பொதிகை,வின்,தமிழன் தொலைக்காட்சிகளில் கட்டண நேரத்தில் கிருத்துவ,இஸ்லாமிய பரப்புரை செய்யப்படுகிறது.  

உள்ளுர் செய்திகள் என்ற தன்மையில் தினத்தந்தி பாணி செய்திகள் சன்,கலைஞர்,ஜெயாவில் ஒளிபரப்பபடுவது சலிப்பைத் தருகிறது.முன்னர் விஜய்யில் பார்த்த பினராய் ராயின் என்.டி.டி.வி வழங்கிய தரமான செய்திகள் போல் இல்லாவிட்டாலும்,மற்ற தொலைகாட்சிகளோடு ஒப்பிடுகையில் பார்க்க கூடிய அளவில் இருக்கின்றன புதியதலைமுறை செய்திகள்.டெல்லி.லண்டன் என்று செய்தி நிகழும் களங்களுக்குச் சென்று செய்தியைத் தருவது பாராட்டக்கூடியது 

 சூப்பர் சிங்கர்,ஜூனியர் சிங்கர்,நீயா நானா,சரவணன் மீனாட்சி,சத்யமேவே ஜெயதே போன்ற விஜய் தொலைக்காட்சியின்  நிகழ்சிகள் ,படித்த இளைஞர்களை,குழந்தைகள்,பெண்களை  புதிய தேடல் ரசனை கொண்ட நேயர்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டது.விஜய் பன்னாட்டு ஊடக முதலாளி ராபர்ட் முர்டோக்கினுடையது என்பதை மனதில் கொள்ளவும் 

 பன்னாட்டு நிறுவனங்கள்,உள்நாட்டு பெருநிறுவனங்களின் விளம்பரங்களே நிகழ்ச்சிகளின் தன்மையை நிர்ணயிக்கிறன.தொலைகாட்சி நேயர்களின் பார்வையை தனக்கு சாதகமான முறையில்  சுயநலம் கொண்டவர்களாக,வாய்ப்புகளை சுகிக்கும் அதீத ஆர்வம் கொண்டவர்களாக  ,அதற்காக எதையும் செய்யும் மனம் கொண்டவர்களாக மாற்றி தமது சந்தை கலாச்சாரத்தை உறுதிப்படுத்தவும் விரிவுப்படுத்தவுமான முறையில் தொடர்களை தயாரிக்கவும் செய்கின்றன

.எனது தங்கம் எனது உரிமை என்று ஒரு ஜூவல்லரி விளம்பரத்திற்காக  சமுக மாற்றத்திற்கான புரட்சியை கொச்சைப் படுத்திய விளம்பரத்தையும் காண முடிந்தது. பொருட்களுக்கான அறிமுகச் சந்தை தொட்டு விற்பனை உயர்வு வரை பெண்கள் காட்சிப்படுத்தப் படுகிறார்கள்.காட்சிப்படுத்துதலில் ஆபாசமும் வக்கிரமும் தலை தூக்கி ஆடுகிறது.ஒரு நறுமணப் பொருட்களுக்கான விளம்பரத்தில் இதைப் பயன் படுத்திய ஆடவனோடு உடன் வந்தவனை விட்டு விட்டு பெண் செல்வதாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

நேர்முகம்,சந்தித்த வேளையில், போன்ற நிகழ்வுகள் அன்றி படைப்பாளர்கள் ,கலைஞர்கள் பங்கு பெறும் வேறு நிகழ்வுகள் இல்லை.கவிதை,நூல் அறிமுகம்,புதிய கலைகளின் அறிமுகம் இல்லை என்றாகி விட்டது.இலக்கிய விழாக்கள் ஒளிபரப்பபடுவதில்லை.பொதிகையில் இதற்கான வாய்ப்புகள் உண்டென்ற போதும் நிகழ்ச்சி தயாரிப்புகளில் அதனிடம் அழகியல் கவனம் இல்லாததால் அது நேயர்களை ஈர்க்க முடியாமல்  இருக்கிறது. ரியாலிட்டி ஷோ என்ற  பெயரிலான நிகழ்வுகள் அதில் பங்கேற்கும் குடும்பத்தவரின் தவறுகளை ஊரறியக் காட்டி அசிங்கப்படுத்துவதிலும் இதனால் மனமுடைந்த  சிலர் இறந்த நிகழ்வையும் காண நேர்ந்தது.அரசு,அரசு சார்பு நிறுவனங்கள் அன்றி தனியார் முதலீட்டில்  சமுக நோக்கின்றி  பெருலாப நோக்குடனே இயங்கும் அமைப்பு எதுவும் மக்களின்  வாழ்வின் மீதோ அவர்களின் நலன்கள் மீதோ அக்கறை கொள்ளாது. வாழ்க்கை,பண்பாடு குறித்து ஜனநாயக மத சார்பற்ற  கவனம் கொண்டு இயங்க வேண்டிய அச்சு,மின்னணு ,காட்சி ஊடக அமைப்புகள் தனியார் கையில் இருப்பது  பொருள் குவிப்பிற்கான  வாசலாக இருக்குமே அன்றி முன்னேற்றத்திற்கான பண்பாட்டுப் பாதைக்கு உதவாது.

Tuesday, October 16, 2012

சென்னை சென்னை அழகிய சென்னை?
கிராமப்புறங்களில் நடைபாதை இருப்பதில்லை.அதற்கான  அவசியமும்  கட்டமைப்பும் இல்லாததால் இருப்பதில்லை.தொழில்மயமாகிற  ஊர் கட்டமைப்பை தாங்கி நகரமாக விரிகிற போது எந்திர வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் பயணிகளுக்கும் பழுது இல்லாமல் சாலை ஓரமாக அமையப் பெற்ற நடைபாதை எளிய குடிமக்களின் அடையாளமாகத் தெரிகிறது.ஆள்வோர்களின் முகம் எதிரொளிக்கும் இடமாகவும் இருக்கிறது.

வெளியூர்காரர்களின்  கனவு நகரமான சென்னை,நெருங்கிப் பார்க்கையில் அதன் வசிகரம் வடிந்து தகிக்கும் சென்னையாக காட்சி தருகிறது.பல்லாங்குழி ஊராக தோற்றம் காட்டுகிறது.தாம்பரத்திலிருந்து சென்னக்குள் வர நான்கு  சாலைகள் இருக்கின்றன.கடற்கறை ஓரமாக ஒன்று;.அண்ணாசாலை வழியாக இன்னொன்று; கோயம்பேடு நூறடிச்சாலை வழியாக மற்றொன்று;மதுரவாயல் எண்பதடிச்சாலை வழியாக பிறிதொன்று என முக்கால் மணிநேரம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாம்பரத்திலிருந்து சென்னைக்குள் வந்து விடலாம்.

சென்னை நகருக்குள் ஒரு இடத்திலிருந்து இன்னொறு இடத்திற்கு ஒரு பத்து கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு ஒன்று முதல் ஒன்றேகால் மணிநேரம் வரை ஆகிவிடுகிறது.அத்தனை போக்குவரத்து நெரிசல்.என்னேரமும் நெரிசல் நெரிசல் தான்.இந்த நெரிசலிற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.ஒன்று அலுவலகங்கள் சென்னையில் குவிந்திருப்பது,அடுத்தது  வாகனஙகளின் பெருக்கம்;பிறகு சாலை ஒழுங்கின்மை

அலுவலகங்களை சென்னைக்கு வெளியே மண்டல அலுவலகங்களாகவோ அல்லது துணை அலுவலகங்களாகவோ மாற்றி அமைப்பதன் வழி சென்னையில் குவியும் வெளி மாவட்ட மக்களின் நேரத்தையும்,அலைச்சலையும் மிச்சப்படுத்துவதோடு ,நகருக்குள் நெரிசலை குறைக்க இயலும்.பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநகர் பயணத்திற்கான பேருந்துகள் இல்லாத இடத்தை ஆட்டோக்களும்,பங்கு ஆட்டோக்களும் கூட நிறைவேற்ற இயலாத பின்னணியில்,வங்கிகள் ,அலுவலகங்கள் தரும் கடனால் பெருகி வரும் இரு சக்கர வாகனங்களினாலும் மகிழுந்துகளாலும் பெருகும் நெரிசல் ஒரு பக்கமிருக்க,சுயநிதி கல்லூரிகளின் பேருந்துகள்,பொதுப்பள்ளி,அருகமைப்பள்ளி குறித்த புரிதல் அரசிற்கு இல்லாததினால் நகரெங்கும் ஓடும் சுயநிதிப் பள்ளி,கல்லூரி பேருந்துகளினால் மாநகர நெரிசல் பன்மடங்காகி விட்டது.இவைகளினால் மட்டும் 45% நெரிசல் ஏற்படுகிறது.

பள்ளிநேரம்,அலுவலக நேரத்தைக்  கணக்கில் கொண்டு அரசு போதுமான பேருந்துகளை இயக்குவதும்,அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் நகரின் பல பகுதிகளுக்குச் செல்வதற்குரிய பேருந்து வசதிகள் அல்லது அருகமை நிலையம் சென்று மாறிச் செல்லும் வசதிகள் செய்தால் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களின் வழியான நெரிசலை குறைக்க இயலும்.

1200 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சாலையில்,மாநகரத்திற்குட்பட்ட சாலையின் நீளம் 700 கிலோ மீட்டர்.இதில் பெரும்பகுதி சாலைகள் பல்லாங்குழி சாலைகளாகவும் பள்ளதாக்குகளாகவும் இருக்கின்றன.சாலைகளை சீரமைக்க மாநகராட்சிக்கு அதிகாரமில்லை.இது மாநில அரசின் கீழ் வருகின்றது.ஏதேனும் ஒரு பள்ளத்தில் அல்லது திருப்பத்தில் அல்லது ஏதேனும் ஒரு வாகனம் பழுதுப் பட்டு நின்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது.

பிரதான சாலைகளோ இணைப்புச்  சாலைகளோ உட்பக்கச் சாலைகளோ  எதுவாயினும் ஒரு மழை  முடிந்த காலத்தில் போடப்படும் சாலைகள் அடுத்த மழை காலத்தில் காணாமல் போகாது இருக்க உறுதியான சாலைகள் அமைக்க வேண்டும்.தார்ச் சாலைகளோ,நெகிழியினால் உருவாக்கப்படும் சாலைகளோ பெருகி வளர்ந்து வரும் மாநகரின் தேவைகேற்ற முறையில் ஒப்பந்தக்காரர்கள் ,ஆளும் கட்சிக்காரர்கள் கையூட்டு தலையீடு இன்றி ,வெள்ளத்தில் அரித்துப் போகாத தரமான சாலைகள் காலத்தில் அமைதல் வேண்டும்.

மின்சார வாரியம்,குடிநீர் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியம்,மாநகர தொலைபேசி துறை இவர்களுக்குள்  செயற்பாட்டு ஒருமித்தல் இல்லாததால் அவ்வப்போது அவரவர் தேவைக்கேற்ப சாலைகளை உடைத்து குண்டும் குழியுமாக்கி நிரவப் படாமல் திறந்து கிடக்கும் சாலைகள் தெருக்கள் குழந்தைகளை காவு வாங்கி விடுகின்றன.

சென்னை அழகிய சென்னை
இது வங்கக் கடலின் திண்ணை
தமிழக மண்ணின் தலை நகரம்
கடல் தாலாட்டுப் பாடும் அலை நகரம்

என்று கவிஞர் வைரமுத்து  எழுதிய வரிகள் மெய்ப்பட வேண்டுமெனில் இதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதோடு,மாநகராட்சிகளுக்கு மாநில அரசை அண்டி வாழும் நிலைமையை மாற்ற போதுமான அதிகாரத்தை வழங்கி,எளிய மக்கள் பார்வையிலான திட்டமிடலும் தேவை என்பதை நாம் சொல்லி முடிக்கிறோம்

Wednesday, October 10, 2012

மெரினாவில் மீண்டும் ஒரு போர்க்களம்   


சுதந்திரத்திற்குப்  பிறகான அறுபது ஆண்டுகளில் சென்னையின் குடிசைப் புறத்தில்  ஏறிய  தீ நின்ற பாடில்லை;எரிந்து  கொண்டிருக்கிறது;முன்னிலும் குரூரமாக.;முன்னிலும் வெக்கையாக.எளிய உழைப்பாளி மக்கள் குடியிருந்த பல குடிசைப்பகுதிகள் ஓரிரவில் எரிந்து காணாது போயிருக்கின்றன.மறுநாள் அந்தப் பகுதி அவர்களுக்கு அன்னியமாக்கப்பட்டு நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர்;

 எரியும் நெருப்பிற்கு காரணம் மண்ணெண்ணெய் அடுப்பு    அல்லது மின்  கசிவு என்று சொல்லி காரணகர்தாக்களான நில வியாபாரிகளை,பெருநிறுவனங்களை அல்லது தன்னை காப்பாற்றிக் கொள்கிறது அரசாங்கம்.எளிய சனங்கள் இவர்கள் தருகிற ஐநூறை ஆயிரத்தை வாங்கிக் கொண்டு தெருக்களில் புறநகர்ப் பகுதிகளில் தங்கள் வாழ்வை தொலைத்து நிற்கின்றனர்.

இவர்கள் விரட்டி அடிக்கப்பட்ட பகுதி மாடி குடியிருப்புகளாக ,அரசு அலுவலக வளாகங்களாக ,பெருநிறுவன வளாகங்களாக மாறி முன் சொல்லப்பட்ட காரணங்கள் உதிர்ந்து அம்மணமாகி நிற்கின்றன.உட்பகுதிகளில் பற்றிய தீ இப்போது கடற்கரையை தொட்டிருக்கிறது.ஏற்கனவே எண்பதுகளில் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் மெரினாவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட காரணமும் இப்போதைய மெரினா சீனிவாசக் குப்பத்தில் பற்றிய தீயின் காரணமும் ஒன்றேதான்.அணுகுமுறையில்தான் வித்தியாசம்.அன்று நேரடியாக அரசு இறங்கியது.இன்று மறைமுகமாக இயங்குகிறது.

 ஊடகங்கள் உண்மைக்  காரணத்தை சொல்லாமல் சீனிவாசபுரத்தில் திடீர் தீ விபத்து;குடிசைகள் எரிந்தன என்று விபத்து செய்தியாக்கி வெளியிடுகின்றன.மெரினா கடற்கரையின் அயோத்திக் குப்பம்,நடுக்குப்பம்,நொச்சிக் குப்பம்,டுமீங்குப்பம்,ஆல்காட் குப்பம் அடுத்து இருப்பது இந்த சீனிவாசபுர குப்பம்.

இவர்கள் கடலின் மைந்தர்கள் ; ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ;ஒவ்வொரு நாளும் துயரம் என்ற கவிஞர் வாலியின் துயரம் தோய்ந்த வரிகளின் வலி தோய்ந்த் வாழ்வை வாழும் நெய்தல்நில மக்களை மீனவர்களை கடலை விட்டே ஓட்ட வேண்டும் என்ற மீனவநணபனின் ஆசை இன்றும் தொடர்கிறது எனினும் இம்மக்களின் உறுதியான வாழ்வின் மீதான பிடிமானத்தின் காரணமாக கடற்கரையிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தள்ளி குடிசைமாற்று வாரிய வீடுகளில் குடிவைக்கப்பட்டுள்ளனர்.இதன் அளவும்கட்டுமானமும் பராமரிப்பும் மோசமாகவே இருக்கின்றன என்பது தனியாக சொல்லப்பட வேண்டியது.

 சீனிவாசபுரத்தில்  போன மாதம் நள்ளிரவில்  குபீரென தீப்பிடித்து  சில குடிசைகள் எரிந்தன.அடுத்த ஒரு வாரத்தில் இது போலவே இதன் இன்னொரு பகுதியில் குபீர் தீயினால் பல குடிசைகள் எரிந்தன.இந்தக் குடிசைகள் எல்லாம் கடற்கரையைப் பார்த்தபடி நீளவாக்கில் இரண்டு தெருக்களில் உள்ளன.இப்படி 175 குடிசைகள் எரிந்து போயிருக்கின்றன.மின்கசிவு இல்லை.சமையல் தீயும் இல்லை.ஒரு பிரபல தொழிலதிபரின் ஆட்கள் வைத்த பாஸ்பரஸ் தீ  என்றே அந்த மக்கள் கருதுகிறார்கள்..இரண்டாம் முறை வைத்த தீயில் சிக்கிய கூலியாள் ஒருவன் தந்த தகவல்படி இது அவரின் வேலைதான்  என்று அம்மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

எரிந்து போன குடிசைகளை  மீளக் கட்டக்கூடாது என்று தலா ஐந்தாயிரம் ரூபாய் அரசால் திணிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் கடற்கரையில் அலைந்து திரிகின்றனர்.காமராஜர் காலத்தில் கட்டித்  தரப்பட்ட வீடுகளின் போதாமையால் இப்படி குடிசைகளில் தங்குபவர்களுக்கு மாற்று வீடுகள் கடற்கரை அருகிலேயே வேண்டும் என்று சீனிவாசபுரம் ஊர்சபை அரசை கேட்கிறது.

 இந்த சீனிவாசபுரத்திற்கு பின்பக்கம் கடலில் கலக்கிற அடையார் ஆற்று கழிமுகத்தை ஒட்டி இவரின் அரண்மனை உள்ளது.தெற்குபுறம் செட்டிநாடு விதயாஸ்ரம் பள்ளி,இடதுபுறம் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபம்,கிழக்குபுறம் கடற்புரத்தை பார்த்தபடி செட்டிநாட்டு டவர்ஸ்,சோமர்செட் கிரீன்வேஸ்,டிவிஹெச்,முரசொலி மாறன் டவர்ஸ் என  உள்நாட்டு,வெளிநாட்டு பெருமுதலாளிகளின் வணிக நிறுவனங்கள் குவிந்திருக்கின்றன.

முன்று கிலோமீட்டர்  சுற்றளவு உள்ள இந்த பகுதிக்கு  எம்.ஆர்.சி நகர் என செட்டிநாட்டரசர் பெயர் வைத்துள்ளார்.அடையார் ஆற்றின் ஒரு பகுதியை மூடிவிட்டு இந்த நகர் எழுப்பபட்டுள்ளது.இந்த நகரில் அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும் தகவல் தொழில்நுட்பம்,மென்பொருள்,தொலைத்தொடர்பு,மதுபான விடுதிகள் என சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் வருகின்றது.உள்நாட்டுச் சந்தையைச் சுரண்டி டாலரை பெருக்கம் செய்யும் இவர்களின் மேலுமான தேவைக்கு பின்புறமுள்ள சீனிவாசபுரம் தேவையாக இருக்கிறது

 அடித்து விரட்டி  விட முடியாத மீனவர்கள்  என்பதை புரிந்து கொண்ட  அரசாங்கம்,மக்கள் குறிப்பிடுகிற தொழில் அதிபரின் கைவரிசையை  மறைமுகமாக ஆமோதிக்கிறது.எரிக்கபட்ட குடிசை 175 என்றால் 900 குடிசை எரிக்கபட்டதாக கணக்குச் சொல்லி,மீதமான பணத்தை பங்கு போட்டுக் கொண்டு செட்டியாரின் செயலிற்கு துணையாக இந்தப் பகுதி அதிமுக பிரமுகர்கள் இருக்கிறார்கள்.

2004 ல்  வந்த சுனாமியைக் காரணம் காட்டி ஐநூறு மீட்டருக்குள் எந்த மீனவகுடியிருப்பும் ,சிறுகடைகளும் இருப்பது ஆபத்து என்று அலறிய அரசாங்கம் இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தை கடற்கரை ஒட்டி விரிவுப்படுத்த அனுமதிக்கும் செயலினால் உண்மை வெளியே வந்து விட்டது.இவர்களின் நோக்கம் மீனவ உயிர்களை பாதுகாப்பது  அல்ல.இந்த பெருமுதலாளிகளின் வணிக நோக்கிற்கு கடற்கரையை கபளீகரம் செய்வதாகும்.இதற்கு உடன்படாத மீனவகுடியிருப்பு மீது பாஸ்பரஸ் தாக்குதல் நடத்தப் படுகிறது.இவர்களின் இந்த தாக்குதலை எதிர்நோக்கியே சீனிவாசபுரத்தின் பதினெட்டாயிரம்  மக்களும் இருக்கிறார்கள்.

பெருமுதலாளிகள்-ஆட்சியாளர்கள்-அரசு எந்திரத்தினர் என்ற இக்கூட்டணியின்  வஞ்சக சூழ்ச்சி வேகம் கொள்ளுமேயானால் இந்தப் பகுதி மீண்டும் போர்க்களமாகும் .ஆனால் முன்பு போல் அல்லாமல் உண்மை தெரிய வந்துள்ள மற்றப் பகுதி மக்களும் இந்தப் பகுதி மக்களுக்குத் துணையாய் அணி வகுப்பார்கள்.

(தீக்கதிர் 2012 அக்டோபர் 08)