Showing posts with label பண்பாடு. Show all posts
Showing posts with label பண்பாடு. Show all posts

Wednesday, October 18, 2017

பண்டிகைகளும் கொண்டாட்ட மனநிலையும்

 


தீபாவளியின் கொண்டாட்ட மனநிலைக்கு  , பொருள் உற்பத்தி சார்ந்த சந்தை மனோபாவம் காரணம். சமுகத்தின் வாழ்வாதார இயங்குதலிற்கு, அரசுகளின் நிலைத்தன்மைக்கு சந்தை அவசியமானது.

தீபாவளி சார்ந்த  காலத்தில், உற்பத்திப் பொருட்களின் வணிக விநியோகச்சந்தை சார்ந்த பணப்புழக்கம் , தொழிலாளர்கள் தொட்டு முதலீட்டாளர்கள் வரை அவசியமானது.

ஆண்டுதோறும் வரும் , இருபதிற்கும் மேற்பட்ட மதங்கள் சார்ந்த சாராத பண்டிகைகள், மாதம் தோறுமான திருமணங்கள் , இதனை ஒட்டிய உற்பத்திகள், பணப்புழக்கம், பொருள் உற்பத்திக்கும் அதன் விற்பனைக்கும், அதை ஒட்டி வாழ்வு நடத்துவோருக்கான , வாழ்வாதார தேவைகளுக்கு அவசியமானது.அதற்கு கொண்டாட்ட மனநிலை உருவாக்கம் அவசியம்.

கொண்டாட்டமும் சந்தையுமாக பண்டிகைகள் மக்கள் முன் வருகிற பொழுது, அன்றாடங்களிலிருந்து விடுபட்டு மனம் மகிழ,  மக்களுக்கும்  பண்டிகைகள் அவசியம். இந்த புள்ளிகளிலிருந்துதான் கொண்டாட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

இதனை முறைபடுத்துவதும் உதவி செய்வதும் அரசுகளின் பொறுப்பாக இருக்க வேண்டும். சமயம் சார்ந்த பண்டிகை எனில், அதில் சமயத்தின் இடம் , அரசியல் சாசனத்திற்குட்பட்ட முறைகளில் இருந்து இயங்கிட சட்ட சமுகம் மற்றும் அறிவு சமுகம் வழி காட்ட வேண்டும்.

கொண்டாட்டமே கூடாது என்பதும், யாவுமே மதம் சார்ந்தது என, அறிவு சமுகம் கொண்டாட்டங்களிலிருந்து தள்ளி நிற்பதும் , கொண்டாட்டங்களை சனநாயகப்படுத்த உதவாது.

Monday, March 6, 2017

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத...








தந்தை பெரியார் திடலின்( தமிழ்நாடு-சென்னை) பிரம்மாண்ட எம்.ஆர்.ராதா அரங்கினுள் நுழைந்த பொழுதே பூக்களால் ஆன மணமேடை மனதை வசீகரித்தது.அருகில் போய் பூக்களைத் தொட்டுப் பார்த்து அதன் அழகில் வண்ணத்தில் பூரித்தேன்.மணமேடையின் வலதுப்பக்கத்தில் இருந்த மஞ்சள் பூசப்பட்ட மண்பானை அடுக்குகள் பார்த்து, சரேலென நினைவு ஈராயிரம் ஆண்டுகளுக்கு பின் போனது.தமிழ்க்குலம் தழைத்து நடந்து வந்த பண்பாட்டுப் பாதையை நினைவுகளில் ஓட்டி கண்ணீர் கசிய நின்று கொண்டிருந்தேன்.

திருமண நாளன்று ( 2017 மார்ச் 02 ) காலை எட்டரை மணி நெருங்க உற்றாரும் சுற்றமும் வரத் தொடங்கி இருந்தார்கள்.மணமக்களின் பெற்றோர் இவர் இவர் எனக் காட்ட கவிஞர் ச.விசயலட்சுமி-சு.பழனிக்குமார் / அனந்தநாயகி-மனோகரன் கழுத்தில் அழகிய மாலைகள் சூட்டி அருகருகில் நின்று கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளை கோபிநாத் அழகிய பட்டு வேட்டிக் கட்டி தோளில் துண்டு அணிந்து கொண்டு மணமேடை வந்து அமர்ந்தார். அன்பின் தேவதை சு.ப .நிவேதிதா கட்டம் போட்ட கூரைப்புடவைக் கட்டி மேடைக்கு வந்தார். மணமக்களைச் சுற்றி வித விதங்களில் பட்டுப் புடவைகள் கட்டிக் கொண்ட பெண்கள் மகிழ்ந்தும் பேசிக் கொண்டும் மணமக்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அரங்கினுள் இருந்து ரசிக்கத் தக்க அளவில் நாயனம் தவிலின் லயத்தோடு கூடிய இசையை தூவிக் கொண்டிருந்தன. மங்கலநாண் வைக்கப்பட்ட பூக்கள் தேங்காய் வாழ்த்தரிசித் தட்டு வாழ்த்துப் பெற சுற்றுக்குத் தரப்பட்டன.அவரவர்கள் வாழ்த்த வாழ்த்தரிசி, பூக்களை எடுத்துக் கொண்டு மங்கல்நாண் தட்டை வாழ்த்தி மேடைக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். தட்டு மண மேடைக்கு வந்தது. நாயனத்திலிருந்து "பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி " என்று அமரத்துவம் கொண்ட கவியரசு கண்ணதாசனின் பாடல் உதிர்ந்து கொண்டு வந்தன.

கண்களில் ததும்பி நின்று, தொண்டையில் இறங்கிய கண்ணீர் , தொடர்ந்து சுரந்து மகிழ்வின் அதிர்வைத் தந்து கொண்டிருந்தது. மேடையில் நின்ற பார்த்திபனின் அம்மா நாயனத்தை நோக்கி தன் கையசைப்பில் கெட்டி மேளத்திற்கான சமிக்ஞை தந்து கொண்டிருந்தார். கெட்டிமேளம் ஒலிக்க அன்பின் தேவதை சு.ப.நிவேதிதா கழுத்தில் காலை 10.35 மணிக்கு மங்கலநாணைக் கட்டிக் கொண்டிருந்தார் கோபிநாத் . 

மனதில் வந்து நின்றது ஆண்டாளின்
இந்தப் பாடல்:
“ மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துணன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்

Monday, February 6, 2017

எம்.ஜி.ஆரின் பிடிப்பிலிருந்து விலகி...









அது 1982. நான் எம்.ஜி.ஆரின் பிடிப்பிலிருந்து விலகி, அரசியலை எதார்த்தத்துடன் உரசிப் பார்த்து இருந்த காலம். எட்டாவது படிக்கும் பொழுதே, திமுக கூட்டங்கள் கேட்கப் போவேன். திமுக என்றால் எனக்கு எம்.ஜி.ஆர் தான். பின் அவரைத் தொடர்ந்து அதிமுக போனேன்.எம்.ஜி.ஆரின் சினிமா பிம்பத்தை அரசியல் உண்மையோடும் வாழ்வொடும் உரசிப் பார்த்து, இந்தாள் வேஸ்ட் என்று முடிவுக் கட்டி, தேடலுடன் தனித்து இருந்த காலம். ஊர் குடும்பம் யாவும் வாத்தியார் பின்னாடி.நான் மட்டும் தனி. 

அந்த காலத்தில் செங்கொடி மீது தனி ஈர்ப்பு ஏற்பட்டது. இன்றும் அந்த ஈர்ப்பு குறையவில்லை.வாழ்வின் ஈர்ப்பாக பேருரு கொண்ட அன்பின் ஈர்ப்பாக செங்கொடி இருந்து கொண்டிருக்கிறது. ஊரின் சிபிஐ எம் கட்சியில் ஆதரவாளனாக சேர்த்துக் கொள்ளப்பட்டேன்.. அப்பொழுதுதான் ஊரில் திமுக பிரமுகரும் , பின்னாளில் திமுகவின் சட்டமன்ற மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த, திரு.சங்கரலிங்கம் அவர்களின் தலைமையில் இருந்த , அறிஞர் அண்ணா கல்லூரியில் மூட்டா தொடங்கி இருந்த நேரம். சங்கரலிங்கம் திமுக என்றாலும், கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தை ஏற்பதில் அவருக்கு பெரும் சங்கடம் இருந்தது. அதை ஒழித்துக் கட்டுவதில் குறியாக இருந்தார்.

நான் சிபிஐ எம்கட்சியின் ஆதரவாளனாக இருந்தாலும், தமுஎசவில் தீவிரமாக இயங்கிய காலம். சங்கரலிங்கத்தின் எதிர்ப்பை சமாளிக்க நான் பேராசிரியர்களுக்கு ஊர்த் துணையாக இருந்த காலம். பேராசிரியர்கள் வெளியூர்காரர்கள். 

அந்த காலத்தில் சிற்பம் என்ற கையெழுத்து ஏடு நடத்திக் கொண்டிருந்தோம். நான் அதன் ஆசிரியர். ஆசிரியர் குழுவில், அறிஞர் அண்ணா கல்லூரி சாந்த சில பேராசிரியர்கள் குறிப்பாக ஜெயராமன் சார், அனந்தகிருஷ்ணன் சார் போன்றோரெல்லாம் இருந்தனர். அன்று 1982 ஜூலை சிற்பம் ஏட்டின் ஆசிரியர் குழுக் கூட்டம். எனக்கு மேற்சொன்ன சார்களைப் பற்றி தொடக்கத்தில் ஒன்றும் தெரியாது. கூட்டத் தொடக்கத்தில் நான் அவர்களைப் பார்த்து, உங்களை எப்படி அழைக்க என்று கேட்டேன்.தோழர் என்றார் ஜெயராமன் சார்.அதுவே தோழர் என நான் கேட்ட முதல் விளியும் என்றும் பரவசம் தரும் விளியும் ஆகும்.

நன்றி தோழர் பேராசிரியர் ஜெயராமன். நன்றி தோழர்அருணாசலம்

Monday, June 18, 2012

தாலி விலையில்லாப் பொருள்களினூடாக பண்பாடு குறித்த சொல்லாடலும் மக்களின் பண்பாட்டு ஓர்மையும்





நூறாண்டு பேசும் ஓராண்டுச் சாதனை என்கிற பெயரில் செல்வி ஜெ.ஜெயலலிதா அரசு ஓராண்டை நிறைவு செய்ததை அறிவிக்கும்  அரசு விளம்பரம் கடந்த மே 16 முதல்நாளேடுகளில் வெளிவந்ததை கண்டிருப்போம்.

அதில் காணப்பட்ட முக்கிய அம்சங்களில் சிலதை இங்கு பட்டியலிடலாம். அது:
பசியாறி மகிழ விலையில்லா அரிசி,பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம்,மகளிர் மனம் குளிர விலையில்லா மிக்ஸி,கிரைண்டர்,மின்விசிறி,எளியோர் ஏற்றம் பெற விலையில்லா கரவை மாடுகள்/ஆடுகள்,மாணவ,மாணவியர் கல்வியில் சிறக்க விலையில்லா மடிக்கணினி.

இந்த அம்சங்களிலிருந்து செல்வி ஜெயலலிதா அரசின் அல்லது தமிழக அரசின் பண்பாட்டு நோக்கை பகுத்துப் பார்ப்பதினூடாக பண்பாடு குறித்து அரசின் பார்வை/பண்பாட்டை பேணுவதில் அரசிற்கான செல்நெறி /பண்பாட்டை பேணுவது யார்?/எதை முன்னிட்டு பண்பாட்டை பேணுதல் வேண்டும்?/பண்பாட்டை பேணுவதில் அரசின் பங்களிப்பு / போன்றவைகளை அவதானிப்பதே இந்த கட்டுரையின் நோக்கு.

அரசின் அறிவிப்பில் ஒன்று தாலி,அதற்கான தங்கம்-திருமண உதவி;மற்றொன்று விலையில்லா பொருட்கள் பற்றியது.
தாலியோடான திருமணம் வழியாக பெண்களுக்கு தாலி அவசியம்;அதை ஆடவன் அணிவிப்பான்;தாலியை ஏற்பது பெண்களின் கடமை.இந்த தாலிக்குத் தங்கம்;இதோடு பண உதவி என்பதன் வழியாக அரசு அமைப்பு பெண்களுக்கு தாலியை கட்டாயப்படுத்துகிறது.திருமணத்திற்கு தாலி தேவை என்கிறது .தாலியை ஏற்காதப் பெண்களின் உணர்வுகளைப் புறந்தள்ளுகிறது.
அரசாங்கம் பழைய நிலவுடமையின் எச்சமான தாலியை நிறுவுவதன் வழி , ஆளும் வர்க்கம் அதனுடனான பிரதிநிதிகளால் காக்கப்பட்டு வரும் பெண்ணை சிறுமைப்படுத்தும்பண்பாட்டுக் கருத்துருவை,இருபத்தோராம் நூற்றாண்டிலும் கெட்டிப்படுத்த இப்படியான முன்னகர்த்துதல்களை செய்கின்றனர்.

மங்கல நாண் என்கிற தாலி தமிழ் சமுகத்தில் தொன்று தொட்டு வந்த பழக்கமல்ல.இடைகாலத்தில் வந்த பழக்கம்.தமிழ் சமுகத்தில் தாலி வீரத்தின் அடையாளமாகவும்இருந்திருக்கிறது..குறிப்பிட்ட பெண்ணை மணக்க விரும்பும் ஆடவன்,புலியோடுப் போரிட்டு அதன் பற்களைக் கொண்டு வந்து, பெண்ணின் கழுத்தில் அணிவிக்க வேண்டும்.இந்த மரபு முன்னெடுக்கப்பட்டிருந்தால் வீரம் ,வீரம் சார் மரபு
என கருதி இருக்கலாம்.

மங்கல நாண் என்கிற பெயரில் பெண்களை வாட்டி வதைக்கிற இந்தத் தாலி, சொத்தை பாதுகாக்க வேண்டி ஆண் வாரிசுகளை ஈன்றெடுக்க வேண்டிய பெண்ணை அடையாளப் படுத்தும  நிலவுடமை சார் அடையாளம் அன்றி வேறல்ல. இந்தத் தாலியை பாதுகாக்க சொத்துடமை அமைப்பும்,மத நிறுவனங்களும் எடுத்துக் கொள்கிற பெறுமுயற்சிகள் அதன் மீது கட்டமைக்கப்படுகிற புனிதத்தன்மைகள் ,பரப்பப்படுகிற பரப்புரைகள்,பெண்ணின் சுயத்தை மதிக்காத ,தடுப்பு அரண் பணிகளை  நவீன காலத்தில் அரசே பொறுப்பேற்றுச் செய்வது பொறுப்பற்றச் செயல். நவீனப் பார்வையோடு செயல் படவேண்டிய அரசே ,பிற்போக்குச் சடங்குகளுக்குள் ஆற்றுப்படுவது பேரபாயம் ஆகும்
.
விலையில்லா பொருட்கள் பற்றியச் செயற்பாடுகளை கடந்த அரசும்,இந்த அரசும் தம்மை ஒரு சமுகநல அரசாக தோற்றங் காட்டிக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்கிறது.அடிப்படை உரிமைசார் வாழ்வை மேற்கொள்வதற்கான தேவைகளைப் பெறும் பொருட்டான  குறைந்த பட்ச வருவாய்,இலவசக் கல்வி,
இலவச மருத்துவம்,மனமகிழ் தேவைக்கான சூழல் போன்றவைகளை தரும் பொறுப்பிலிருந்து வழுவும் அரசு,தன் மேல்தட்டுவர்க்கச் சார்பை மக்களிடம் மறைக்கும் பொருட்டும்,எளிய மக்கள் மீது தமக்கு அக்கறை உண்டு என்று பொதுஒப்புதல் பெறும் பொருட்டும் , வெகுமக்களை இப்படியான பாப்புலிசம் சார்ந்த வசிகரிப்ப்பிற்கு உள்ளாக்கும் .( எம்.ஜி.ஆர் காலத்து பற்பசை,சோப்,தண்ணீர் வாளி கலைஞர் காலத்து வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி,எரிவாயு அடுப்புகள் )

அரசின் கீழ் வாழ்கின்ற பெரும்பகுதி எளிய,மத்தியதர மக்களுக்கு அடைப்படை குடிமைசார் வாழ்வாதார வாய்ப்புகளுக்கும் ,மனரீதியிலான ஆக்கப்பூர்வமான நுகர்வுகளுக்கும்,
வெளிப்பாட்டிற்கும் இடமளித்து,பொருள் உற்பத்தி சார்ந்தும்,கலை ஆக்கம் சார்ந்தும் அவர்களின் செயற்தன்மைக்கு மாற்றாக,அவர்களின் வாழ்வாதாரத்தின் மீது தொடர்ச்சியான புறக்கணிப்பையும்,நிந்தனையும் செய்து கொண்டு,பொறுப்பை கைகழுவுதலும், வெகுமக்களின் கவனத்தையும்,எதிர்ப்பையும் மடைமாற்றம் செய்யும் உத்தியான அய்ந்தாண்டுகளுக்கு ஒரு முறையான விலையில்லா பொருள் விநியோகச் செயல்,குடிமக்களின் சுயமரியாதை வாழ்வுரிமைப் பண்பாடு மீதான ,அரசின் பண்பாட்டு வன்மம் ஆகும்.

தாலி சார்ந்தும்,விலையில்லப் பொருள் விநியோகம் சார்ந்தும் அரசின் பண்பாடு பற்றியப் புரிதல் அதன் மொத்தச் செயல்பாடுகளை விளங்கிக் கொள்ளும் மாதிரி ஆகும்.

மரபுச் சின்னங்களை பராமரித்தல்,எழுப்புதல்,செவ்வியல் கலைப் பயிற்சி,நலிந்த கலைஞர்களுக்கு உதவி,நூல்கள் நாட்டுடைமையாக்கல், சிறந்த நூல்களுக்குப் பரிசு,கலை விழாக்கள்,கண்காட்சிகள் என அய்ம்பதாண்டு காலமாக சில பொதுவானப் பணிகளைச் செய்து வருகின்ற தமிழக அரசு ,தனது ஒவ்வோர் ஆண்டுதோறுமானத் திட்டங்களில் பண்பாடு பற்றிய ஒரு தெளிவான ,அரசுசார் கட்சிப் பார்வைகளுக்கு அப்பாற்பட்டு,மாநில மக்களின் பொதுவான மற்றும் குறிப்பான கலைப் பண்பாட்டு தேவைகளைஉள்வாங்கும் முறையில் கருத்துகள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் ஒரு செயல் வரைவுத் திட்டம் வைக்கப்பட்டு செயல் படுகிற அரசாக இருத்தல் வேண்டும்.

கலைவிழாக்கள்,உதவிகள்,பரிசுகள்,பயிற்சிகள் என காலத்திற்கும் பொதுவான நடவடிக்கைகள் அவசியமானதுதான். காலச்சிறப்பும், தொன்மை சிறப்பின் அடையாளங்களாய் எஞ்சி நிற்கிற,உள்ளூர் அளவிலான,வயற்வெளி சார்ந்தது மட்டுமின்றி ,மலைவெளி,கடல்வெளி இனக்குழுக்கள்சார் பண்பாட்டு அசைவுகள் பாதுகாக்கப்பட,அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்பட வேண்டும்.கால்ம் கடந்து பயணப்பட்டு வருகின்ற ,பழமைவாத மாசுகள் அண்டாத சிறப்பான வாழ்வியல் கூறுகள் பேணப்பட வேண்டும் .பெரும்பகுதி விளிம்புநிலை மக்களின்  ஜனநாயக விருப்பங்களுக்கு உட்பட்டதான பண்பாட்டு நிரல்கள் பேணப்படுகின்ற குறிப்பான அணுகுமுறைகள் வேண்டும்.

இன்றைக்கும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிற வாழ்வியல் சடங்குகள்,கலைநிகழ்வுகள்,வாய்மொழி சொல்லாடல்களை பார்க்கிற பொழுது ஒவ்வொரு சமுகக் குழுக்களின் ஒழுங்கலாறுகள் பிறிதொரு குழுக்களின் ஒழுங்கலாறுகளிலிருந்து வேறுபட்டும்,ஒன்றுபட்டும் இருப்பதைக் காணலாம். பிழைப்புத் தேடி நகர்ந்த  புலப்பெயர்வுகளிலும் . வழி வழி தாம் பற்றி வந்த தொன்மரபு ஒழுங்கலாறுகளை பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.சொந்த புலத்திலோ,பெயர்ந்த புலத்திலோ ,பழக நேர்ந்த  மக்களின் மரபுகளையும் மதித்து அதனோடு ஊடாடியும் வரும் மரபு நம் தமிழ்மக்களின் மரபு.

மழைமறைவு பகுதியாகவும்,வெயில் தின்னும் நிலனாகவும் உள்ள தமிழ் மாநிலத்தின் அரசர்,மன்னர்,வேந்தர்களின் சொத்துடைமை காப்பதற்கான பேரழிவுப் போர்களின் மத்தியிலேயே தத்தமது சடங்கு,சாங்கியம்,தொழில்நுட்பத்தினூடாக வெளிப்பட்ட பண்பாட்டு அசைவுகளை உயிர்ப்போடு வைத்திருந்ததும்,இன்றைய அறுபதாண்டு காங்கிரஸ்,கழக ஆட்சியினூடாகவும் வைத்திருப்பதும் தமிழ் மக்களின் கூட்டுப் பண்பாட்டு ஓர்மை சார்ந்த பெருநிகழ்வாகும்.அடர்த்தி மிகுந்த பண்பாட்டு ஓர்மையின் பாதை,தமிழ் இனக்குழுக்களின் செறிவான கலை,இலக்கிய ,தொழில்நுட்ப மரபின் பாதையுமாகும்.தமிழகத்தின் எந்த அரசுகளின் பேருதவியாலும் பிழைத்து வந்ததல்ல இந்த எளிய மக்களின் பண்பாட்டுப் பொக்கிசம்.

நவகாலத்திய கார்ப்பரேட்டுகளின் நிதிமூலதனப் பாய்ச்சலினூடாக வந்த உலகமயம்,தமது பிராண்டுப் பொருட்களின் சந்தைக்காடாக மொழிகளின் நிலனை மாற்ற,மொழிகளின் பண்பாட்டு ஓர்மை,செழுமை,பன்மையை குலைத்துப் போட முயல்வதினூடாக ,இவைகளைப் பாதுகாக்கவும் பரவலாக்கவும் அரசின் பங்களிப்பு அமைய வேண்டும்.இப்படி இல்லாமல் வேடிக்கை பார்க்கும் அரசை எதிர்மறையாக பதிவு செய்யும் மக்களின் பண்பாட்டு ஓர்மை.
2012 ஜூன் 17 ல் தமுஎகச தமிழகப் பண்பாட்டு மலரில் வெளிவந்தது