Sunday, February 19, 2012

நீயும் நீ சார்ந்ததும்


நீயும் நீ சார்ந்ததும்
இரா.தெ.முத்து

ஆதி திணைநில
தொல்மாந்தர் நெறி
உறைந்த காலபடிமத்தில் உயிர்த்து
காலத்தின் காலத்தில்
சந்திரசூரியர் போல்
நம் பொலிவுறு பெருங்காதல்
நீயும் நீ சார்ந்ததும்

உன் மீதான  ஈர்ப்பு
ஒரு போராட்டக் களத்தில் நிகழ்ந்தது
படர்ந்திருந்த செம்பருத்தி பூ போன்ற
பேரழகால் ஈர்க்கபட்ட மனம் உன்னோடு
தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது
உனதன்பும் தோழமையும்  வழி நடத்துகிறது
வனாந்திரத்தை ஊடறுத்து இறங்கும் ஒளி போலவும்
கோடை இரவுகளில் உருகி வழியும் நிலா போலவும்

இடி உன் ஆர்ப்பரிப்பு
மின்னல் உன் ஒளிவிளக்கு
புயல் உனது இசைக்குறிப்பு
மழை உனது தீராத கருணை
என் ஒளி நிழல்
வண்ணம் யாவும் நீதான்

உன் முகம் பார்த்தல் என்பது
வெறும் பார்த்தல் அன்று
உயிர் பெறுதல்
மீனுக்கு நீரும் சுவாசமுமாய்
உன்னோடு நான் நிகழ்த்தும் உரையாடல்

வாழ்வின் இசை வாழ்வின் துயரை
கண் திறக்கும் உளி போல
தீட்சண்யம் காட்டி ஒளி
பொழியும் உன் உயிர்மொழி
அன்பை அடையாளப்படுத்திப் பாடும்
குயிலிசை போல் கேட்டுக் கொண்டே இருக்கிறது

நீ இருக்கும் இடம்
பேரழகு பூண்டு விடுகிறது
சுருள் சுருளாய் மலர்ந்த ரோஜா போல
உன் வாசல் அன்றி
எந்த வாசல் தட்டி
தன்னைப் பகரும் மனம்

வாங்கலும் பாய்தலுமான
அலைபடும் கடலின்
தணியா வெம்மையை
உனதன்பின் வண்ணம் சூடி
எதிர் கொள்கிறேன்

நீ மீட்டும் பாடல் கமகத்தின்
நுட்பம் தெரியா ஈசல்கள்
உன்னை பழித்தாலும்
எளிய  மக்களுக்கான உன் இசை
சிதார் மிருதங்கம் சலங்கை பறையுடன்
இணந்து ஒலிக்கும் புதிய ஆலாபனை
மனமெங்கும் பரவிக் கிடக்கின்றது பன்னீர்பூக்களாய்

வனாந்திரங்களை வளப்படுத்திக் கொண்டே
முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நதிகளை
ஒரு போதும் அண்டுவதிலை மூப்பும் நரையும்  
வலுத்த கரங்களின் பேரிழுப்பில்
அசையாமல் நிற்பதில்லை தேர்
உடமை இழந்தோர்களின் விழிநெருப்பில்
எரியாமல் இருப்பதில்லை பெருதீபம்.
(நன்றி:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
20 ஆவது மாநில மாநாட்டு மலர்)

Wednesday, February 8, 2012

உடலின் வாசனை




பிச்சிவெள்ளை கொய்த
முன்காலை நேரத்தில்
பிச்சிப்பூ வாசனையை விட
மேலெழும்பிய
உன் உடலின்
வாசனை
கமழ்ந்து கொண்டிருக்கிறது
இன்றும்
பெட்ரோல் வனாந்திர
பெருங்காட்டு வாழ்வில்.