இணைந்த இதயம்

Thursday, May 25, 2017

கூடற்றக் குயில் : நா.காமராசன்


இருபத்து மூன்று வயதில் ,  இரண்டாயிரம் ஆண்டு (இலக்கிய ஆதாரம் கிடைத்தபடி)  வரலாற்றுப் பெருமை உடைய தமிழ்க்கவிதையை , மரபை யாப்பை அறிந்து , அதன் கதி மாற்றி , போக்கு மாற்றி , பொருள் மாற்றி , திசை மாற்றி விட்ட , பாரதிக்குப் பிறகான முதல் விதை , புதுக்கவிதையின் அரசன் நா.காமராசன்.

   வயலார் ராமவர்மா, கலாநிதி கைலாசபதி,காண்டேகர் போன்ற மானுடநேயம் கொண்ட இடதுசிந்தனை கொண்ட படைப்பாளிகளின் படைப்பில் உதவேகம் பெற்று, தமிழண்ணல்  வழிகாட்டலில் படிமமொழி பழமொழி கற்று, இருபதாம் நூற்றாண்டின் புதுக்கவிதைக்கு புதுப்பாதை அமைத்தவர் காமராசன்.

 இளவயதில் தமிழ்க்கவிதைப் போக்கை மாற்றி அமைக்க வேண்டுமானால், தமிழின் கடந்த கால கவிதையை , அதன் வரலாற்றை , ஆழங்கால் கண்டு மொழியில் கவிதையில் தோய்ந்து போய் , சமுகத்தை உற்றுப் பார்த்து , புதுச்சூரியனாக பிறப்பதன் வழியாகவே  சாத்தியமாகி இருக்க வேண்டும்.

 சாத்தியமாக்கி இருக்கிறார்.

சாத்தியத்தை  தொடர்ந்து வடிவிலும் பொருளிலும் முன் செலுத்துவதற்கு மாறாக வடிவில் படிமத்தில் அழகியலில் மட்டுமே பயணம் என்று குறுக்கி தொடர்ந்ததன் விளைவு , வானம்பாடிகளின் வானத்திலிருந்து விலகிப் போய், மு.கருணாநிதி, எம்.ஜி.இராமச்சந்திரன் புகழ் பாடி, கூடற்ற குயிலாகிப் போனார் நா.கா
(தொடரும் )

Tuesday, May 2, 2017

தமிழ்த் தேசிய சலனப்படம் 100 ஆண்டு


இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தலைமையிலான உலகாயுதா அமைப்பு, சர்வதேச தொழிலாளர் தினமான மே1 அன்று , சென்னை காமராசர் அரங்கில், தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு விழாவை, தமிழ்த் தேசிய சலனப்படம் 100 ஆண்டு என கொண்டாடியது.

தமிழ்சினிமாவின்  மூத்தத் தொழிலாளர்கள்  நூறு பேருக்கு அவர்களின் திரைத்துறைப் பங்களிப்பை பாராட்டும் விதமாக, ஒவ்வொருவருக்கும்  ஒரு சவரன் தங்க நாணயம் வழங்கும் விழாவாக நடைபெற்றது. விழா தொடக்கத்தில் FEFSI ஐ நிறுவிய முன்னோடிகள் நிமாய்கோஷ், எம்.பி.சீனிவாசன் படங்களை இயக்குநர் முக்தா சீனுவாசன், எடிட்டர் மோகன் திறந்து வைத்துப் பேசினார்கள்.

நடிகர் விஜய் சேதுபதி வழங்கிய தங்க நாணயங்களை அவரின் அம்மா சரஸ்வதி காளிமுத்து, விஜய் சேதுபதியை அறிமுகம் செய்த, இயக்குநர் சீனுராமசாமிக்கு வழங்கி , இந்த நிகழ்வை தொடங்கி வைக்க், பின் நூறுபேருக்கும் திரைத்துறை ஆளுமைகள் ரோஹிணி,எடிட்டர் லெனின், எடிட்டர் மோகன்,இயக்குநர் சேரன்,இயக்குநர் அமீர், இயக்குநர் ஸ்டான்லி,இயக்குநர் செல்வமணி என தொடர்ந்து தங்க நாணயங்களை வழங்கிப் பாராட்டினார்கள்.

கவிஞர் பரிணாமன் எங்களைத் தெரியலையா பாடலைப் பாடி அனைவருக்கும் மே நாள் வாழ்த்துகள் சொன்னார்.

விஜய்சேதுபதி பேசும் பொழுது,  “ எனக்கு எல்லாமே தமிழ் சினிமாதான். எனக்கான அடையாளம் சினிமாதான்.இயக்குநர் ஜனநாதன் இந்த விழாவின் தேவையை சொன்ன பொழுது, நூறு தங்க நாணயங்களை வழங்கி,எனக்கு அடையாளம் தந்த தமிழ் சினிமாவிற்கு , என் நன்றிக் கடனை செய்திருக்கிறேன் “ என்றார்.

விழாவிற்கு இயக்குநர் அமீர் தலைமையேற்க , இயக்குநர் கரு.பழனியப்பன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

என்னை விழாவில் பங்கேற்க இயக்குநர் ஜனநாதன் அழைத்திருந்தபடியால், நானும் பங்கேற்று ,ஜனநாதன் அவர்களுக்கு வாழ்த்துகள் சொன்னேன். தமுஎகச சார்பில் கி.அன்பரசன், பேராசிரியர் அண்ணதுரை போன்றோரும் நிகழ்வில் பங்கேற்றனர்