Tuesday, November 15, 2022

சிகரம் 80: செயற்பாடுகளின் கண்ணி அறுந்து போகாத ஆளுமை

தோழர் சிகரம் ச.செந்தில்நாதன் அவர்களின் 80 ஆவது வயதை ஓட்டி , அரியலூர் மாவட்ட செந்துறை தமிழ்ச்சங்க செயலாளர் வே.குமரவேல் முன்னெடுப்பில் ,சந்தியா பதிப்பகம்{சென்னை} சார்பில் வெளிவந்திருக்கும் சிகரம் செந்தில்நாதன் : பாதை பயணம் படைப்புலகம் எனும் தொகுப்பு நூலிற்கு நான் எழுதிய கட்டுரை இங்கு வெளியாகியிருக்கிறது.-இரா.தெ.முத்து சிகரம் ச..செந்தில்நாதன் எனில் நேர்மறைசக்தி எனப் பொருள் கொள்ளலாம்.சரியானது என அவர் கருதினால் அந்த சரியான முயற்சிகளின் ஊக்கசக்தியாக அவர் இருப்பார். சரியான முயற்சிகளுக்கு செயற்திட்டம் முதல் அமைப்பு வரை முன்னெடுக்க அவர் அறிவும் அனுபவமும் துணை நிற்கும்.  இவ்வாறான நேர்மறை பகிர்வின் வழியே உருவானது கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு. 2013 ஆம் ஆண்டின் ஒரு நாள் சிகரத்திற்கு போன்  செய்து 'தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் தன்னை வந்து பார்த்த செ.து.சஞ்சீவி தனக்கு வயதாகி விட்டது என்றும் இனிமேல் கவிஞர் தமிழ்ஒளி குறித்த நிகழ்வுகள் நடத்த இயலாது என்றும் சொல்கிறார். இது குறித்து பொருத்தமாக யோசியுங்கள் என்று சொன்ன தகவலைப் பகிர்ந்தேன். தகவலைக் கேட்டுக் கொண்ட சிகரம் செந்தில்நாதன் ஒன்று செய்வோம் என்றார். பிரின்ஸ் கசேந்திரபாபுவிடம் தான் பேசிவிடுவதாகவும் என்னையும் பிரின்சிடம் பேசி அவர் நவபாரத் பதின்நிலைப் பள்ளியில் கூட்டம் ஒன்றை கூட்டுங்கள் என்று ஆலோசனை தந்தார். யார் யாரை தொடக்க கூட்டத்திற்கு அழைக்கலாம் என்று சிகரம் செந்தில்நாதன்,இரா.தெ.முத்து ,பிரின்ஸ் கஜேந்திரபாபு மூவரும் சில முறைகள் போனில் கலந்து பேசி , 2013 ஜூலை 29 ஆம் திகதி பிரின்சின் பள்ளியான நவபாரத் பதின்நிலைப் பள்ளியில் கவிஞர் தமிழ்ஒளி 90 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தோம். ஆலோசனைக் கூட்டத்திற்கு யார் யாரை அழைப்பது என சிகரம் அவர்கள் வழிகாட்டினார்கள்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்ந்த படைப்பாளர்கள் தோழர்கள்,கவிஞர் ஈரோடு தமிழன்பன்,சே.து.சஞ்சீவி,புதுச்சேரி சார்பாக படைப்பாளர்கள், முகம் மாமணி , பேராசிரியர் இராமகுருநாதன் ,சந்தியா நடராசன்,உதயை வீரையன், முனைவர் பி.இரத்தினசபாபதி,விழிகள் நடராசன் எனப் பட்டியல் தயாரித்தோம். இவ்வாறுத் தொடங்குகிற ஆலோசனைக்கூட்டம் விரிவான அளவில் மாற வேண்டும் என்றும் தன் அவாவை முதல் கூட்டத்திலேயே சிகரம் செந்தில்நாதன் பகிர்ந்து கொண்டார்கள். அவ்வாறே நூற்றாண்டு விழாக்குழுவினை தொடர்ந்து இரண்டாம் முறையாக விரிவாக்கும் திட்டத்தை வைத்திருக்கிறோம். கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு ஒவ்வொர் தேவைக்கும் குழு உறுப்பினர்களை கொடையாளர்களை சார்ந்து செயல்படுகிறது. நவபாரத் பதின்நிலைப் பள்ளியில் நடத்தப்படும் குழுக் கூட்டத்திற்கு சிற்றுண்டி தேநீர் வழங்குவதை பிரின்ஸ் கசேந்திரபாபு வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால் , தொடர்ந்து வரும் விழா நிகழ்வுகளில் செலவுகள் பெரியதாகப் போகும் எனில் முதலில் ஒரு தொகையை அளித்து , நிகழ்வுகள் உற்சாகத்தோடு நடப்பதற்கான மனநிலையை உருவாக்கி விடுவார் சிகரம் செந்தில்நாதன் அவர்கள். நிகழ்வுப் போக்கினை உடனிருந்து கவனித்து சொல்லப்படும் கருத்துகளை உள்வாங்கி நிதி என்பது ஒரு சுமையாக மாறி விடாதபடி முதன் முதலில் விழாக்குழு தலைவர் என்ற முறையில் சிகரம் நல்கும் நன்கொடை, ஏனைய குழு நண்பர்களிடம் செலவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுதியை உருவாக்கி விடும். கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு பல சமூகப் பின்புலத்தைக் கொண்டவர்களால் இயக்கப்படும் குழு என்பதால் , குழு உறுப்பினர்கள் முன் வைக்கும் கருத்துகள் நீர் போல மென்மையாகவும் இருக்கும். மலையருவி போல தடாலடியாகவும் வந்து மோதும். இம்மாதிரியான சூழலில் தலைவர் என்ற முறையில் சிகரம் அவர்கள் கூட்டத்தில் குறுக்கீடு செய்து , சொல்லப்படும் உறுப்பினரின் கருத்தை மட்டும் எடுத்து அதை பொதுக்கருத்தாக மாற்ற முயல்வதோடு ,கருத்தை சொன்னவரை அமைதி செய்து தொடர்ந்து கூட்டம் சுமுகமாக நடைபெறும் சூழலை தக்க வைத்துக் கொள்வார். தனக்கு வயது 80 ஆகி விட்டது என்ற உணர்வை செயல்படுவதற்கான தடையாக மூப்பாக சிகரம் கருதுவதில்லை. கூட்டங்கள் சென்னையில் சென்னைக்கு வெளியே எங்கு நடைபெற்றாலும் குறித்த் நேரத்திற்கு சென்று கலந்து கொள்வதை காலப் பண்பாடாக கடைபிடித்து வருகிறார். கொரொனா பெருந்தொற்று காலத்திலும் பல குழுக்கூட்டக்களை தன் இல்லத்தில் நடத்தி செயல்பாடுகளின் கண்ணி அறுந்து போகாமலும் தோழமையின் தொடர்பை நெருக்கமாவும் இயக்கிக் கொண்டு , ஏனைய தோழர்களுக்கான செய்தியாகவும் இந்தப் இயங்குச் செயற்பாட்டினை உனர்த்தி வருகிறார். ( இரா.தெ.முத்து, தமுஎகச தலைவர்களுள் ஒருவர் செயலாளர்;கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு)