Tuesday, April 7, 2020

மீன்குகைவாசிகள் : தமிழ்இஸ்லாமியர் வாழ்வியல் சித்திரம்

கீரனூர் ஜாகிர்ராஜாவின்  5 ஆவது நாவலான மீன்குகைவாசிகள் நாவலை ஏற்கனவே 28.3.2011 ல் வாசித்திருக்கிறேன்.இந்த கொரானா ஊரடங்கு காலத்தின் கடந்த நான்கு நாட்களாக வீட்டு வேலைகள் போக, 13 ஆவது நாளான  நேற்று  06. 4.2020  பிற்பகல் 2.45 மணிக்கு இரண்டாவது முறையாக நாவலை வாசித்து முடித்தேன்.இந்தப் பத்தாண்டு காலத்தில் சாருநிவேதிதாவின் ஜீரோடிகிரி பதிப்பகம் உள்ளிட்டு  வெவ்வேறு பதிப்பகங்கள் சார்பாக இந்த நாவல் நான்கு பதிப்புகள்  கண்டுள்ளன  .

திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி தாராபுரம் சாலையின் இடையே இருக்கும் ஊர் கீரனூர்.சண்முகநதி  இந்த ஊரின் வழியாக அமராவதி ஆற்றில் போய் கலக்கும் முனை கீரனூர்.  ஆலங்குளம் எனும் மீன்பிடிக்குளம்  குளத்தம்மாவாக வாழ்வளிக்கும் இந்த ஊரின் வாழ்வியல் சித்திரம்தான் மீன்குகைவாசிகள் நாவல். 1975 களின் வாழ்வு நாவலின் காலமாக உணரமுடிகின்றது.

உடல்  எரிக்கும் வெயிலும் , வியர்வைக் கரிப்பும் ,காற்றும் ,குளமும் ,குளத்தின் மீன்களும் ,மீன்கவுச்சியும், அழுகையும் ,கோபமும் ,சாபமும் ,மகிழ்வும் ,பாலியல் உரையாடல்களும் , காதலும், மதம் மாறுதலும் ,மதம் மாறினாலும் தொடரும் சாதிய இழிவுகளும் ,  பங்களாத்தெருவின் புலம்பெயர் தொழிலும் அதன் ஒளிவு மறைவுகளும் , முதலாளிமார்களின் பாலியல் வேட்டையும், பள்ளிவாசல் தர்கா சார்ந்த  முரண்பாடுகளும்,ஆணவக்  கொலையும் நாவலின் அத்தியாயங்களாக நம் வாசிப்பிற்கு வருகின்றன.

மார்க்கம் ஒன்றானாலும் வடக்குத்திசை மீன்காரத் தெருவின் எளிய மக்களை ஏற்றுக் கொள்ளாத பள்ளிவாசலில் ஆதிக்கம் செலுத்தும் தெற்குதிசை பங்களா தெருவின் பொருளாதாரமும்  அதிகாரமும் காட்சி சித்திரங்களாகின்றன. குளத்தை அம்மாவாக ஆமீனா விளிப்பதன் வழி இஸ்லாமாக மாறினாலும் மாறாத தங்களின் பூர்வீக நினைவுகளுமாக நாவல் பயணிக்கிறது.

மீன்காரத்தெரு ,பங்களாத்தெரு,செக்காட்டும் செக்காதெரு,பறத்தெரு என ஒவ்வோர் தெருவின் தன்மை ,வாழும் மனிதர்களின் இயல்பு என யாவற்றையும் காட்சிப்படுத்துகிறார் கீரனூர் ஜாகிர்ராஜா.
  ஆமீனா. நசீர் ,ஷேக்கா, சுபைதா,கணீர்காசிம்,ரஜியா,நைனார்முகமது,சண்முகம் ,நர்கீஸ் ,குப்பி,கூனன் லியாத்,நாச்சம்மை,மருதவீரன் போன்ற பாத்திரங்களின் வழியாக அவர்களின் உரையாடல் வழியாக ஊரின் சமூகத்தின் தோற்றத்தை அறிய முடிகின்றது.

கணீர் காசிம் ,ரஜியா,ஷேக்கா,நாவிதன்சண்முகம்,போன்ற பாத்திரங்கள் வாழ்வை சமூகத்தை வெல்ல முடியாத அதன் கைதிகளாக மாறி அவதிப்படுவதை வாசிக்க வாசிக்க அவர்கள் பின்னாலே மனம் சென்று  உழன்றாடுகிறது.

வட்டாரமொழி வழக்கில் நாவல் எழுதப்பட்டாலும் நாவலைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏதும் இல்லை. லே/ஏட்டி/பூட்டி/ஏனம்/ஆணம் போன்ற சொல்லில் கிளைக்கும் மொழி நடைகள் குமரி மாவட்ட வட்டார மொழிநடையோடு ஒட்டிப்  போகிறது . ஜாகிரோடு இதுபற்றி பேசிய  பொழுது ஏதோ ஒரு  காலத்தில் நெல்லை குமரி மாவட்ட எல்லை பக்கமாக இருந்து திண்டுக்கல் கீரனூர் வந்தவர்களாக மீன்காரத்தெருமக்கள்  இருப்பார்கள் தோழர் என்றார்.

வட்டார மொழிநடையோடு படைப்பாளியின் மொழிநடையும் இணைந்து நாவலை ஒரு நவீனப் பிரதியாக மாற்றி விடுகிறது
சுபஹ் ,இஷா ,ஜக்காத்,மினார்,பாங்கு ,ஜனாப்,ஜனாபா ,ஒலு,தீதார் ,
முத்தவல்லி,சால் போன்று நூற்று இருபது இஸ்லாம் வாழ்வியல் சார்ந்த சொற்களுக்கு பொருள் சொல்லும் பின்னிணைப்பு இஸ்லாம்   
வாழ்வியல் சொல்லாடலைப்  புரிந்து கொள்ள உதவுகிறது.

 'ஈருசுருக்காரி தர்காவை கெவர்மெண்ட் ஆர்டரோடு வந்து   இடிக்கிறாங்க' என்று மோதி நூர்தின் சொல்லி நாவல் முடியும் இடத்திலிருந்து ,அடுத்த நாவலிற்கான களத்தை துலக்கப்படுத்தி இருக்கிறார் ஜாகிர்ராஜா.இதன் தொடர்ச்சியை எழுதுவீர்களா ஜாகிர்?

வெளியீடு ஆழி பப்ளிஷர்ஸ் /2010 பதிப்பு விலை 140.00