Friday, January 27, 2012

சிக்கலில் தவிக்கும் தமிழ் சினிமா: தீர்வை நோக்கிய பார்வை  3/3  
                    


கடந்த சில மாதங்களாக புகைந்து கொண்டிருந்த தமிழ்த் திரைப்படத் தொழிலாளர் பிரச்சினை எரிய ஆரம்பித்திருக்கிறது.இயக்குநர்கள் முதல் கேட்டரிங் ஊழியர்கள் வரை இருபத்து நான்கு சங்கத் தொழிலாளர்களின்  வாழ்வாதாரப் பிரச்சினை. பதினைந்தாயிரம் தொழிலாளர்களைச்  சார்ந்து இருக்கும் சுமார் ஒரு லட்சம் பேர்களின் வாழ்க்கை   இன்று வீதிக்கு வந்திருக்கின்றது.

தயாரிப்பாளர்கள்,தொழிலாளர்களின்  காரசாரமான அறிக்கைப் போர் ஊடகங்களில் நடைப்பெற்று கொண்டிருக்கிறது.மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இரு தரப்பும்  பேசி புதுப்பிக்கப்பட வேண்டிய சம்பள ஒப்பந்தம்,ஆறு மாத காலமாக இழுத்துக் கொண்டு வருகிறது. ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஓடி விட்டன.போன ஆண்டே பேசியிருக்க வேண்டிய விசயம் இது

சட்டம் ஒரு இருட்டறை,சாதிக்கொரு நீதி,சிவப்புமல்லி,நான் சிவப்பு மனிதன் என்று படம் எடுத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்  தயாரிப்பாளராகி,இன்று தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் ஆகிவிட்டார்..கடந்த தி.மு.க ஆட்சியில் இவரும் இவர் மகன் நடிகர் விஜய்யும் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டிருந்தும்  ,இன்று தானே முன் நின்று தீர்க்கப் படவேண்டிய விசயத்தை தீர்க்காமல் முதலாளிகள் சங்கம் சார்பாக ,தொழிலாளர்களைப் பார்த்து சவால் விடுகிறார்.

 தொழிலாளர் சங்கமும்(பெப்ஸி) ஒப்பந்தம் எட்டப்படாத வரை,படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தருவதில்லை என அறிவித்திருக்கிறது..தாங்கள் சொல்லும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலை செய்யும் ஆட்களை வைத்து படப்பிடிப்பு நடத்தப் போவதாக தயாரிப்பாளர் சங்கம் மீண்டும் அறிவித்திருக்கிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்பு வாங்கிய தினக்கூலி ரூபாய் முன்னூற்று ஐம்பதிலிருந்து,நாற்பது சதம் உயர்த்தி நானூற்று தொண்ணூறு தரவேண்டும் என்பது தொழிலாளர் கோரிக்கை.மனம் திறந்து பேசினால் சுமுகத் தீர்வை எட்டமுடியும்.தொழிலாளர்களின் இந்த கோரிக்கை அதிகமானது அல்ல.

 கூலியைத் தவிர்த்து வாடகைப்படி,மருத்துவ செலவு,ஓய்வூதியம் என்று எந்தச் சலுகையும் இல்லாத சூழலில்,விலைவாசி பிரச்சினை,நகரின் மையப் பகுதிகளில் குடியிருக்க வேண்டிய தொழிற்சூழல்,பிள்ளைகளின் கல்விச்செலவு என்று பார்க்கிற போது, ஐநூறு தினக்கூலி அதிகப்படியானதில்லை.

தயாரிப்பாளர்களுக்கும் சிக்கல்கள் இருக்கும். கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து ,படம் ஓடுமா?ஓடாதா?என்கிற அச்சம்.வாங்கிய பணத்திற்கான வட்டி:நடிகர்கள்,இயக்குநர்கள்,தொழிற்நுட்பக் கலைஞர்களின் அதீதமான சம்பளம்,விளம்பரச்செலவு,வரி,அரங்க வாடகை என பலவற்றையும் பார்க்க வேண்டி இருக்கும்.

இந்தப் பிரச்சினையை தீர்க்க  நல்ல கதைதான் அடிப்படையான தேவை.,திறமையான ,அனுசரித்துப் போகக்கூடிய  கலைஞர்கள்:இவர்கள் புதியவர்களாகக் கூட இருக்கட்டும். தேவையான குறைந்தபட்ச விளம்பரம்;ரசிகர்கள் பார்க்கக்கூடிய அளவிலான கட்டணம்:படம் வெளியாகி ஐம்பது நாட்கள் ஆன பிறகு  படத்தை,தொலைக்காட்சி, டி.வி.டி  வடிவில் வெளியிட்டு உரிய லாபத்தைப் பெறுவது என திட்டமிட்டு பணியாற்றினால் இழப்பு என்பதில்லை.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ,திரைப்படம்  கலையும் தொழிலுமான ஒன்று  என்பது பிடிபட மாட்டேன் என்கிறது.புதிய பார்வை,வாசிப்பு என்பதும் பலரிடம் இல்லை.போட்டப் பணத்தை  எப்படியாவது  ஈட்ட வேண்டும் என்கிற வெறிதான் இருக்கிறது. மாறி வரும் ரசிகர்களின் மனம்,புதியச்சூழல் இதையெல்லாம். கணக்கில் கொள்ளாத மசாலாக்களாக  இருந்து விட்டு ,தொழிலையே சிக்கலுக்கு உள்ளாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.அதோடு முதலாளிகள் என்கிற மமதை வேறு.

பிரபல நடிகர்கள்,இயக்குநர்கள்,,முக்கிய தொழில்நுட்பக கலைஞர்களின் ஒப்பந்தத்திற்கு உட்படாத பல கோடி அளவிலான சம்பளம் மொத்தத் தொழிலையே நாசம் செய்து கொண்டிருக்கிறது.ஏ.ஆர்.முருகதாஸின் இன்றைய சம்பளம் பதினைந்து கோடி.,ரஜினி,சூர்யா,அஜீத்,விஜய், இவர்களின் சம்பளமும் தலா பதினைந்து முதல் இருபது கோடி என்றால் தயாரிப்பு செலவு முப்பது,நாற்பது கோடி ரூபாய் என உயர்ந்து , நியாமான வணிகம் போய் சூதாட்டமும்,கட்டை பஞ்சாயத்துமாகத்தான்   தன்மை மாறும்.

சிக்கல்களை பல தரப்பும் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.எனினும் விட்டுக் கொடுக்க மாட்டாத போட்டி,வணிகவெறி மொத்தத் துறையையே கெடுத்து விடும் என்பதை தொழிலாளர்கள் அல்லாத ஏனையோர் சிந்தித்து பார்க்க வேண்டும்.அரசு பார்வையாளராக  அல்லாமல் ,மூன்றாம் முக்கியத் தரப்பாக இருந்து ,தொழிலாளர்களின் சம்பளம்,மற்றும் ஆரோக்கியமான தொழிற்சூழலை கட்டமைக்க  வேண்டும்.,திரைப்பட தொழில் வளர்ச்சிக் கழகம் ஒன்றை அமைத்து  நிரந்தரமான,சீரான வளர்ச்சிக்கு அடித்தளமிட வேண்டும்.
( நன்றி:மாற்று இணைய இதழ்)
>> கட்டுரை முகப்பில் உள்ள நிமிர்ந்த பெருவிரல் சுட்டியை அழுத்தி வாக்களிக்கலாம்<<

Sunday, January 22, 2012

சந்தையில் ஜனநாயகம் சாத்தியமா?நியூயார்க்கில்  தொடங்கப்பட்ட வால்ஸ்டிரீட் இயக்கத்திலிருந்து அமெரிக்க,இந்திய ஆளும் வர்க்கங்கள் எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை.வால்ஸ்டிரீட் இயக்கத்தினர் கூடி திட்டமிட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான பூங்காவை அமெரிக்க போலிஸ் மூடி சீல் வைத்ததோடு மட்டுமில்லாமல் போராட்டக் காரர்களை தாக்கி,வழக்குகள் புனைந்து இந்த இயக்கத்தை முடிவிற்கு கொண்டு வந்துவிடலாமென அமெரிக்க அரசு தாக்குதலை தொடுத்து வருகிறது.இந்திய மன்மோகன் அரசோ சில்லரை வர்த்தகத்தில்,காப்பீட்டுத்துறையில்,கல்வியில்,சட்டத்துறையில் அமெரிக்க மாடலை கொண்டுவர தொடர்ந்து ஆசைப்படுகிறது. 

ஜி7,ஜி8,ஐரோப்பிய கூட்டமைப்பு என வித விதமான சந்திப்புகளை வளர்ச்சிப் பெற்ற நாடுகள் நடத்திப் பார்க்கின்றன. .இறுதியில் அவர்கள் கண்ட தீர்வு இந்தியா போன்ற வளரும் நாடுகளோடு வள்ர்ச்சியை பகிர்ந்து கொள்ளுதல் என்பதிலான அவலும் உமியும் கொண்டு வந்து சாப்பிடும் கதைதான்.வால்ஸ்டிரீட் எதிர்ப்பியக்கம் அமெரிக்காவைத் தாண்டி,நாங்கள் 99 என்ற பெயரில் ,ஏனைய வளர்ச்சிப் பெற்ற நாடுகளிலும் நடைபெறுகிறது

.இத்தாலி பிரதமர் மரியோ மாண்டி போப்பாண்டவரை பார்த்து பொருளாதார சீர்குலைவை கவலையோடு பகிர்ந்து கொண்டிருக்கின்றார். 
ஆனாலும் இந்த ஆளும் வர்க்கங்கள் சிக்கலுக்கு  ஏற்ற தீர்வு தெரியாமல் திண்டாடுகிறார்கள்.சீனா,கியூபா, போன்ற நாடுகளின் வளர்ச்சி சூத்திரத்தை அறிந்தும்  இவர்களால் அதை ஏற்றுக்  கொள்ள இயலாது.இந்த நாடுகளின் வளர்ச்சிக்கான அடிப்படை பெரும்பகுதி 99% மக்களுக்கானது.அமெரிக்கா ,இத்தாலி, பிரிட்டன் ,பிரான்சு உள்ளிட்ட வளர்ச்சிப் பெற்ற நாடுகளோ 1% கார்ப்பரேட் முதலாளிகளுக்காக 99% பெரும்பகுதி மக்களை காயப்போடும் குணம் கொண்டவைகள் 

1% பெருமுதலாளிகளுக்கான  உலகமயம் அடுத்த இருபது ஆண்டுகளில் ஏமாந்தவர்களை விழித்தெழச் செய்து விட்டது. உலகமயம்,தனியார்மயம் பணம் இல்லாதவர்களை,போதிய கட்டுமானம் இல்லாதவர்களை யாரும் சந்தையில் போட்டி போடலாம் என்ற ஜனநாயகப் போர்வை சுற்றி  நசுக்கிய கொடுரத்தை அடுத்து வந்த இருபது ஆண்டுகளில் சாதாரண மத்தியதர,எளிய உழைப்பாளிகள் புரிந்து கொண்டு விட்டதன் அடையாளமே 99% எதிர்ப்பியக்கம்.இந்திய அளவில் இடதுசாரிகளின் எதிர்ப்பியக்கம் 90களிலிருந்து நடைபெற்று வருகிறது. 

தொடக்கம்  முதல் இடதுசாரிகள் மட்டுமே  உலகமயம் ஏகாதிபத்திய நாடுகளின் சூழ்ச்சிவலை; மனித முகமூடி போட்டுக் கொண்டு வரும் கபளிகர நாச எண்ணம் கொண்ட அதே பழைய ஏகாதிபத்தியமே என்றனர்.அப்போது காதில் போட்டு கொள்ளாதவர்கள் இப்போது யோசிக்கிறார்கள்.யோசனை சரி.ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் வாழ்க்கையை இழந்து தெருவிற்கு வந்த,நிலைமையை சமாளிக்க வழியின்றி தற்கொலை செய்து கொண்ட எளிய உழைப்பாளிகளும்,விவசாயிகளும்,மீடில்கிளாஸ் என்கிற மத்தியமர்களும் ,சிறு முதலாளிகளும்அடைந்த வாதைகள்,இழப்புகள் கொஞ்சமன்று.  

வால்ஸ்டிரீட்  எதிர்ப்பியக்கதிற்கு பிறகு ஜோசப் ஸ்டிகிளிட் போன்ற நோபல் பரிசு பெற்ற,அமியாகுமார் பக்ஸி போன்ற அறிவாளிகள் பலர் மாற்று கருத்தை முன்வைக்கிறார்கள்.இது அசமத்துவமான  சமூக அமைப்பின் அரசியல்,பொருளாதார தோல்வி  என்கிறார்கள்.மார்கெட் என்கிற சந்தையில் ஜனநாயகம் இல்லை என்கிறார்கள்.கார்ப்பரேட்டுகளின் தோல்வி ஜனநாயகமற்ற முதலாளித்துவத்தின் அரசியல் தோல்வி என்கிறார்கள்.  

வால்ஸ்டிரீட்  எதிர்ப்பியக்கம் உலக அளவில் ஜனநாயக சிந்தனை கொண்ட பல அறிவாளிகளை யோசிக்க வைத்திருக்கிறது. முதலாளித்துவ சார்பு போக்கை விமர்சிக்க வைத்திருக்கிறது.மாற்று என்ன என்று கேள்வி கேட்க வைத்திருக்கிறது.சந்தையை ஜனநாயகப்படுத்த வேண்டும் என சிந்திக்க வைத்திருக்கிறது.நிலையான,சமத்துவமான ,ஜனநாயக,பொருளாதார வளர்ச்சியை பேச வைத்திருக்கிறது.  

இந்த மாற்று சிந்தனகள் சரி.மாற்றை யார் முன்னெடுப்பார்கள் என்பதே கேள்வி.கார்ப்பரேட்டுகளால் ஆளப்படும் அரசுகள்  கார்ப்பரேட்டுகளின்  இழப்பை சரிசெய்ய மக்களின் வரிகளை,அரசு கஜானாவை ஈடுகட்டல் என்ற பெயரில் எடுத்துக் கொடுக்கும் கொள்ளையை நிகழ்த்தும் அறம் அற்ற முதலாளித்துவ நிறுவன அமைப்புகளிடமா இந்த தார்மீகத்தை எதிர்பார்க்க முடியும்?.ஓபாமாவோ,பிரிட்டனின் டேவிட் காம்ரூவோ,பிரான்சின் நிக்கோலஸ் சார்கோக்ஷியோ,மன்மோகனோ இந்த தலைகீழ் மாறறத்தை செய்ய ஒப்புவார்களா?இந்த 99% மக்களுக்கு எதிரான கொள்கையை வடிவமைத்ததும்,நடைமுறைப்படுத்துவதும் இவர்கள்தானே? முதலாளித்துவத்திற்குள்ளே நபர்கள் மாறுவதோ,கட்சிகள் மாறுவதோ தீர்வல்ல.  

99% மக்களுக்கு  சார்பான கொள்கையும் நோக்கும்  கொண்ட ,இடதுசாரி மற்றும்  மாற்றம் விரும்பும் ஜனநாயக சக்திகளாலேயே ஜனநாயகமிக்க  ஒரு மாற்று சந்தையை வடிவமைக்க இயலும்.நிலையான,சமமான அரசியல்,பொருளாதார வளர்ச்சியை சாத்தியமாக்க இயலும்.இந்த மாற்றம் கொணரும் வேட்கை மிக்க அமைப்பிற்கு துணையாக அமியாகுமார் பக்ஸி,ஜோசப் ஸ்டிகிளிட் போன்ற அறிவாளிகள் நிற்க வேண்டும்.


Friday, January 20, 2012

நண்பன்: கல்விச் சூழலை விமர்சிக்கும் படம்
தொடர் பணிகளால் பல மாதங்களுக்குப் பிறகு தமிழ் சினிமா பார்த்தேன்;அது நண்பன்.மதியம் இரண்டே முக்கால் காட்சிக்கு சென்னை பெரம்பூர் பிருந்தா வாசலில் டிக்கெட் வாங்கி விட்டு காத்திருந்தேன்.நான்கைந்து கல்லூரி மாணவர்கள் மாணவிகளோடு காதலாடிக் கொண்டிருந்தார்கள்.அவர்களின் கலாய்ப்பு , மொழி,உடை,பாவனைகளை பார்த்திருக்கையில்  மணி அடிக்கப்பட்டு திரையரங்கம் உள் சென்ற சில நிமிடங்களில் பப் பப் பப்பரப்பா என்ற ஒலியோடு ஜெமினி நிறுவனத்தின் வர்த்தக முத்திரையோடு படம் தொடங்கிய கொஞ்சம் நேரத்திலேயே அதனோடு ஒன்றிப் போக முடிந்தது.

கதைதான் காரணம். .கல்வி கற்றுக் கொள்தலில் மாணவர்களின் சொந்த தேடலை,கற்பனையை கவனத்தில் கொள்ளாத கரடு தட்டிப் போன  ஒர் எஞ்னியரிங் கல்லூரி. மதிப்பெண் வாங்கும் பொருட்டு மனப்பாடம் செய்யும் முறை,புத்தகத்தை உருப்போட்டு களிமண்ணாக வார்க்கும் ஆசிரியர்கள்,பாடத்திற்கு வெளியே மாணவ்ர்கள் செல்லாமல் தடுப்பதற்காக  நிர்வாகம் போட்டு விடும் படுதா என கதை சமகாலத்தின் கல்விச் சூழலை விமர்சிக்கத் தொடங்க  நமக்கு ஆர்வம் கூடி விடுகிறது.

காதல்,கல்யாணம்,குறித்த விமர்சனப் பார்வைகள் ,நண்பர்களின் குடும்ப துயரம், அதில் பங்கு கொள்வது ,அதற்கான உதவிகள் செய்வது என படம் ஆக்கப்பூர்வமான பங்களிப்பைச் செய்கிறது.எங்கேயும் இந்த காட்சிகள் செயற்கையாக துருத்திக் கொண்டு இல்லாமல் இயல்பான ஒட்டத்தில்,கலகலப்பான காமெடிகளோடு படம் ஆக்கப்பட்டிருப்பது ப்ளஸ் பாய்ண்ட்.

ஒரே சிஸ்டத்தில் கேள்விகள் கேட்டு பயணப்படுகிற ஒரு பிரிவு:எந்த கேள்விகளும் அற்று சிஸ்டத்தின் பின் செல்கிற இன்னொரு பிரிவு என இருவகையான சிந்தனை ஓட்டத்தை பதிவு செய்கிறது படம்.இரு பிரிவினரின் முரண்பாடுகளை  காட்சி படுத்தி இருக்கும் படம் ,கேள்விகள் கேட்கும் பிரிவு சந்திக்கும் சிஸ்டத்தின் நெருக்கடிகளை காட்சிப் படுத்தி இருக்கலாம். இறுதியில் இரு பிரிவும் சார்ந்து வாழக்கூடிய சனநாயகத்தன்மையோடு சிஸ்டத்தின் தன்மை இருப்பதாக உணர்த்தி படம் முடிகிறது.

தொடக்கம் முதல் இறுதி வரை எங்கேயும் சிக்கல் இல்லாமல் படம் செல்கிறது.காட்சிகள்,ஒளி,இசை,நடிப்பு அனைத்திலும் ஒரு ப்ரக்ஷ் லுக்கை பார்க்க முடிகிறது.படத்தின் ஹீரோ விஜய் நண்பர்ளிடம் உதை வாங்குவதை இளைய தளபதியின் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருப்பது ஆரோக்கிய ரசனையின் தொடக்கம்.மூன்று ஹீரோக்கள் இணைந்து நடித்திருக்கும் படம் அடுத்தடுத்த நல்ல படங்களுக்கு பாதை அமைக்கட்டும் 

சங்கர் படம் அத்தனையும் பார்த்த ரசிகன்,ஒரு கவிஞன் என்ற நோக்கில் எனக்கு பிடித்த சங்கரின் இரண்டாவது படம் (சில விமர்சனம் இருந்தாலும்) நண்பன்.முதல் படம் இந்தியன்.

Monday, January 16, 2012

வைரமுத்துவின் வார்த்தை ஜாலமும் வர்க்கப் பாசமும்
சில நாட்களுக்கு முன் தீக்கதிர் இதழின் திரைக்கதிர் பகுதியில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சினிமா குறித்த கருத்து பிரசுரமாயிருந்ததை வாசித்தேன்.கொஞசம் அதிர்ச்சி அடைந்தேன்.விவரம் அறிந்தவர்,சிரமப்பட்டு முன்னுக்கு வந்தவர்,பிற்போக்குவாதியாக இல்லாதவர் என்ற நோக்கில் இன்றைய தமிழ் சினிமா உலகம் குறித்த கவிஞரின் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது

“பெரிய படங்கள் மட்டுமல்ல சிறிய படங்களும் கவனிக்கப் படவேண்டும்.காட்டில் குயில் மட்டும் கூவினால் காடு நிசப்தமாகி விடும்.எல்லா சத்தங்களாலும் நிறைந்திருந்தால்தான் காடாக இருக்கும்.”(தீக்கதிர் 23.12.2011)

 .சில நாட்கள் முன் சென்னையில் நடைப் பெற்று முடிந்த 9 ஆவது சர்வதேச உலகத் திரைப்படவிழாவில்  திரையிட மறுக்கப்பட்டு பின் திரையிடப்பட்ட தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் குறித்த அவரின் பரிவுணர்ச்சியை தெரிவிக்கும்  போது வெளிவந்த கருத்தாக இது இருக்கலாம். என்றாலும் அவரின் இந்த சொல்லாடலும் உவமையும் சரியானதாக இல்லை:மட்டுமல்ல இவர் யாரின் பிரதிநிதியாக பேசுகிறார் என்கிற சிக்கலும் வந்து விடுகிறது.

வைரமுத்து  சொன்ன முன் பகுதி சிறிய படங்களுக்கான ஆதரவுக் குரல் போலவும்,பின்பகுதி பெரிய படங்களுக்கான நியாயக் குரல் போலவும் வெளிப்பட்டுள்ளது. இன்றைய தமிழ் திரைப்பட அகராதியில் சிறிய படம் என்பது 2கோடி வரையிலும் பெரிய படங்கள் என்றால் 25 கோடி வரையிலும் .எடுக்கப்படும் படம் என அர்த்தப்படும்.2கோடி செலவில் படம் எடுப்போர் சொந்த பணம் மட்டுமின்றி வட்டிக்கு வாங்கி படம் எடுப்போராகவே பெரும்பாலும் உள்ளனர் இதன் பெரும்பகுதி நடிகர்களின் ,தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளமாகவே போய் விடுகிறது. சங்கங்களின் உடன்படிக்கைக்கு உட்படாத அல்லது அடாவடியாக மீறுகிற சம்பளக் கட்டாயம் பெரும் மூலதனம்  போட்டு படம் எடுப்போர்களால் திணிக்கப்பட்டது.

பெறும் சிரமப்பட்டு படம் எடுக்கும் சிறிய தயாரிப்பாளர்களின் படத்தை திரையிட அரங்குகளும் கிடைப்பதில்லை.கிடைப்பதில்லை என்றால் இதுவும் பெரு மூலதனக்காரர்களால் உருவாக்கப்பட்ட சதிவலைதான்.ஆண்டுக்கு 10அல்லது 15 என்ற அளவில் வெளிவரும் பெருமூலதனத்தில் வெளிவரும் படங்களின் சந்தையை மனதில் வைத்து போட்டி அற்ற களத்தை உருவாக்குவதற்காக சிறுமூலதன படங்களுக்கு திரைஅரங்கை மறுக்க வைப்பது தொடர்ச்சியாக நடைபெறுகிறது.இதை எல்லாம் மீறிய ரசிகர்களின் புத்தெழுச்சி சிறுபடங்களுக்கான தளமாக உள்ளது.

ஆண்டுக்கு 100 முதல் 130 வரை வெளியாகிற தமிழ்படங்களில் பெருநட்சத்திர,பெருமூலதன படங்களை கழித்து விட்டால் தொண்ணூறு சதம் படங்கள் சிறியமூலதன படங்கள்தான்.இந்தப் படங்கள்தான் தமிழ் திரைக்கு புத்தெழுச்சியும்,புதுப்பார்வையும் தந்துகொண்டு வருகின்றன.மொத்த தமிழ்திரை உலகின் சந்தையாகவும்,சிறுகலைஞர்கள்,தொழில் நுட்பக்கலைஞர்கள்,திரைஅரங்குகள் உள்ளிட்ட மொத்த திரைஉலகின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது.

இந்த சிறுமூலதன படங்களால்தான் தமிழ்திரைக்கு உலகளாவிய அங்கீகாரமும் மரியாதையும் உருவாகி வருகின்றன.இந்திய அளவில்  சொந்த மண்,மக்கள் அடையாளத்தை முன்னிறுத்தி புதுப்பாதையை திறந்து விட்டதும் இந்த படங்கள்தான்.உலகாளாவிய சந்தையும் கவனமும் வட்டார மொழியில் வட்டார பண்பாட்டு அடையாளத்தை முன்னிறுத்துகிற போதே பெறப்பட்டு அந்த வகைப் படங்களே உலகப்படங்களாக கொண்டாடப்படுகின்றன.

இந்த வகைப் படங்களுக்கு பிறில்லாமல் குரல் கொடுக்க வேண்டிய வைரமுத்து,தன்னை வளர்த்த தனக்கு ஒர் அடையாளத்தை கொடுத்த சிறு மூலதனப்படங்கள் மட்டும் போதாது குயில்கள் மட்டும் கூவினால் போதாது;சிங்கம்,புலி,காண்டாமிருகம் வகையிலான தயாரிப்பாளர்கள்,நட்சத்திரங்கள் இருந்தால்தான் காடு அல்லது திரைஉலகமாக இருக்கும் என்று அவர் உதிர்த்திருக்கும்  கருத்து பெருமூலதனங்களுக்கு அடிக்கிற ஜால்ரா அல்லது அவர்கள் பயணத்திற்கு விரிக்கப்படுகிற நடைப்பாவாடை என்றே அர்த்தம்.
(மாற்று இணைய இதழில் வெளியானது)

Wednesday, January 11, 2012

புத்தகத்தோடு வாழும் பொழுதுகள்

புத்தகத்தோடு                                  
வாழும் பொழுதுகள்
வசீகரமானது

ஒலி
ஒளி
எண்மம் என
எத்தனை வடிவம் வந்தாலும்
புத்தகத்திற்கான தேவை
இருந்து கொண்டே இருக்கும்

எழுத்து
சொல்
பொருளில்
ஒவ்வொரு படைப்பும்
கற்பனைக் கதவுகளை
திறக்கும் சாத்தியத்தால்
புத்தகத்தின் பயணம்
தொடர்ந்து கொண்டே இருக்கும்

ஒவ்வொரு சொல்லும்
மணப்பதற்கும்
ஒவ்வொரு காதலும்
வெல்வதற்கும்
ஒவ்வொரு மனதை
மர்ற்றுவதற்கும்
ஒவ்வொரு நொடியில்
வாழ்வதற்கும்
புத்தகம் ஒன்றே
கடவுச்சொல்
புத்தகம் ஒன்றே
திறவுகோல்

இதயமும் மூளையுமான இளைய சக்தி

                                                                                                         
இன்றைய இந்தியாவிற்கும்                                            

இனிவரும் இந்தியாவிற்கும்
என்றைய இந்தியாவிற்கும்
இதயமும் மூளையும் நீ.....

நீ இல்லையெனில்
ஓரணுவும் அசையாது உணர்.

உன்னால் தேசம்
புதுமை கொள்ளும்
உன்னால் தேசம்
துடிப்பு கொள்ளும்
உன்னால் தேசம்
உண்மை கொள்ளும்.

உனது ஆட்காட்டி விரலிலிருந்துதான்                                                 
அதிகாரம் பிறக்கிறது
அதிகாரம் என்பதும்
ஆட்சி என்பதும்
கோட்டை கொத்தளங்கள்
என்பதும் நீ..

உன்னால் தேர்வு செய்யப்பட்டவர்கள்
அதிகார போதை தலைக்கேறி
உன்னை மறந்து போனார்கள்
தேசத்தை வளமாக்க வேண்டியவர்கள்
குடும்பத்தை வளமாக்கிக் கொண்டார்கள்

பாதை எங்கும் பார்வை பதித்து
பழுது பார்க்க வேண்டியவர்கள்
பழுது பட்டு புழுதியில் கிடக்கிறார்கள்.

தீட்சண்யம் சுடரும்
உனது விழிகளுக்கு முன்னால்
நித்தியானந்தங்கள் ஆன்மீகத்தை
அழுக்காக்கிக் கொண்டு
சரசமாடிக் கிடக்கிறார்கள்

மகிழ்ச்சிக்கும் ஒற்றுமைக்கான
போட்டி விளையாட்டுகள்
சூதாட்டக் களங்களாகி
உன்னை மட்டுமின்றி
மொத்த தேசத்தையே
களங்கப்படுத்திக் கொண்டிருக்கிறது

நான்கு சுவர்களுக்குள்
பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய
காதலையும் காமத்தையும்
சுதந்திரம் என்ற பெயரில்
ஊரறிய நிகழ்த்திக் காட்டுவது
ஏனையோர் சுதந்திரத்தை
எள்ளி நகையாடுவதன்றி
வேறென்ன?

எத்தர்களுக்கும் பித்தர்களுக்கும்
சாதி மதக் காரர்களுக்கும்
ஏய்க்கும் சுயநலக்காரர்களுக்கும்
ஒடு பிள்ளையாய்
எடுபிடி வேலை செய்ய வேண்டியதா
உனது வேலை?
சுவரொட்டி ஒட்டுவதும்
கட்டவுட் கட்டுவதும்
வாழ்க ஒழிக முழக்கம் போடுவதா
உனது இலக்கு?

நிதி மூலதன பெருமுதலாளி சந்தைக் கூட்டங்களும்
அவர்தம் அடிவருடிகளும்
உனக்கான வாழ்க்கையை
நாசப்படுத்தும் பொழுது
உன்னை காக்கவும்
மானுடம் காக்கவும்
ஆயுதங்கள் எடுக்க வேண்டியதும்
உன் பொறுப்பு

குடும்பம் சார்ந்தது அல்ல
உனது பரம்பரை
தேசம் சார்ந்தது
உலகம் சார்ந்தது

ஹோசே மார்த்தியும்
சேகுவேராவும்
 கிளாரா ஜெட்கின், ரோசாலக்சம்பர்க்
கல்பனாதத் கேப்டன் லட்சுமிகளும்
லெனின், ஸ்டாலின், அலன்டே, நெருடா
பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்
ஞானத் தொப்புள் வழி
வளர்ந்து படர்ந்து வரும்
வீரப்பரம்பரையின் இன்றைய முகம் நீ.

இடியிடமிருந்து மொழியையும்
மழையிடமிருந்து காதலையும்
தீயிடமிருந்து தீரத்தையும்
ஆகாயத்திடமிருந்து அரவணைப்பையும்
கைக்கொண்டதும் நீ

காற்றை குதிரையாக்கி
சந்திர சூரிய ஜோதி எடுத்து
மின்னல் வாளேந்தி
சுழலும் பூமியை முகமெனக் கொண்டு
புதிய உலகையும் புதிய பண்பாட்டையும்
அமைத்திடும் பொறுப்பு
பாலினம் தகர்த்த
உங்கள் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது

அவனும் அவளுமான
இளைய சக்தியே
உருகி ஓடும் எரிமலைக் குழம்பில்
படை நடத்திட வா
பகடை அழித்திட வா....!

Friday, January 6, 2012

திறந்த கதவுகி.ராஜநாராயணன்
சந்திப்பு:இரா.தெ.முத்து

நான் முப்பது  வயசுக்கு பிறகுதான் எழுத ஆரம்பிச்சேன். இப்போ எனக்கு தொண்ணூறு வயசு.ஏன் எழுத ஆரம்பிச்சேன்;எதனால எழுத ஆரம்பிச்சேன் அதெல்லாம் இப்ப சொல்ல வேண்டியது இல்ல.முதல் கத பிரசுரமானதை யோசிக்கிற போது அப்போ கையெழுத்துப் பத்திரிகைக்கு கொடுத்தத சொல்லவா?சக்தி இதழுக்கு என் நண்பன் கு.அழகிரிசாமி ஒரு கத கேட்டு கொடுத்ததச் சொல்லவா?இல்ல விஜயபாஸ்கரனின் சரஸ்வதி இதழுக்கு அனுப்பி வச்சக் கதையச் சொல்லவா?ஆனாலும் முதல்ல பிரசுரமானது மாயமான் கதைதான்.இது 1958ஆம் வருசம் நவம்பர் மாசம் சரஸ்வதியில் வெளிவந்தது.. 

முதல் தொகுப்பாக  வந்தது கதவு தான்.இது சிறுகதைத்  தொகுப்பு.1965 ஆம் வருசம் வெளிவந்தது.இந்த கதைங்க பூராவும் மாயமானைத் தவிர தாமரையில் வந்தது .மாயமான் கதைய தோழர் ஜீவா அவர்கள் படித்து விட்டு எனக்கு ஒரு கடிதம் போட்டார்.அதில கதை நன்றாக இருப்பதாகவும் தாமரை இரண்டாவது இதழை பொங்கல் மலராக கொண்டு வர இருப்பதாகவும் அதற்கு ஒரு கதை வேண்டும் என்றும் கேட்டிருந்தார்..  

தாமரை இதழுக்கு அனுப்பி வச்சக் கதைதான்  கதவு.அப்போது கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பு கொண்ட எழுத்தாளர்களின் படைப்புகள்,செய்திகள் வேறு இதழ்களில் வெளிவருவது சிரமம்.ஒண்ணு ரெண்டு கதைகளைக் கூட போட்டு விடுவார்கள்..ஆனா தொகுப்பாக பதிப்பகங்கள் கொண்டுவர மாட்டார்கள்..இப்படியான காலத்தில்தான் என் கதைகள் தாமரையில் வெளிவந்தன. 

வெளிபதிப்பகங்களின்  இந்தத் தன்மை காரணமாகவும் ஆரம்பிக்கப்பட்டதுதான் நியூ செஞ்சுரி புக் அவுஸ்.என் கதைகளை தொகுத்து புஸ்தகமாக கொண்டு வரலாம் என்று என்.சி.பி.ஹெச் நிறுவனம் விருப்பம் தெரிவிச்சது.அதன் படியே  என்.சி.பி.ஹெச் வெளியீடாக கதவு புஸ்தகம் வந்தது.இதோடு சேர்ந்து நான் தொகுத்த தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள் என்கிற தொகுப்பும் வந்தது.தொகுப்பாக கொண்டு வருவதற்கு எனக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை.காரணம் என்.சி.பி.ஹெச்சும் சக தோழர்களும்.நான் எழுத ஆரம்பித்த மூன்று ஆண்டுகளிலேயே இந்த கதவு தொகுப்பு வெளிவந்தது. 

அப்போது நான் அறியப்படாத ஆள்.என் கதவு கதை தாமரையில் வெளிவந்தது அல்லவா?அதற்கு சன்மானமா பத்து ரூபாயை அனுப்பி இருந்தார்கள்.ரொம்ப சந்தோசம் எனக்கு.சிறு பத்திரிகைகளில் அப்போது சன்மானமெல்லாம் அனுப்பும் வழக்கமிருந்தது இல்ல.தாமரை அனுப்பிய அந்த பத்து ரூபாய் பெரிய விசயம்.அதற்கு பிறகு அவர்கள் சன்மானம் அனுப்பினது இல்லை.மொதல்ல புது மாடு குளிப்பாட்டினது கணக்கா அனுப்பினாங்க.அப்போது எவர்சில்வர் வந்திருந்த காலம்.அந்த பத்து ரூபாயை செலவழிக்க மனமில்லை.அதுக்கு அழகான ஒரு எவர்சில்வர் வெற்றிலைச் செல்லம் வாங்கினேன்.எனக்கு அப்போ வெத்திலை போடும் பழக்கம் இருந்தது.அதை இன்னும் ஞாபகமா வச்சிருக்கேன். 

கதவு தொகுப்பிற்கு முன்னுரை அணிந்துரை எல்லாம் கிடையாது.பதிப்பாளர் குறிப்பு மட்டும் இருக்கும்.ஏன் முன்னுரை இல்லை என்று கேட்டால் எழுத்தாளன் தான் சொல்ல வேண்டியதை எல்லாம் கதையில படைப்புல சொல்லி விடுகிறான்.இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு?இன்னொரு காரணம் இருக்கு. இந்த விமர்சனம் ,மதிப்புரை பண்ணுரவங்க இருக்காங்களே அவங்க பெரும்பாலும் கதையை படிக்க மாட்டாங்க.அவங்களுக்கு வேலை கொடுக்கனுமின்னா பழத்தை உறிக்காம முழுசா கொடுக்கனும். 
கதவு புஸ்தகமாக  வந்தது நண்பர்களுக்கு தோழர்களுக்கு சந்தோசம்.எனக்கு வெளியீட்டு விழாக்களில் ஆர்வம் கிடையாது.மண்டபம் பிடிச்சு மைக் போட்டு செலவு செய்யுறது தேவை இல்லை.ஆனாலும் நண்பர்கள் விழா மாதிரி செய்ய வேண்டாம் என்று சொல்லி ஒரு வாசகர் வீட்டில எளிய முறையில் செய்யலாம் என்று தீபம் நா பார்த்தசாரதியின் மைத்துணர் தீபம் நடராசன் மூலம் என்னை சம்மதிக்க வைத்து விட்டனர். 

  காசு கொடுத்து புத்தகம் வாங்கி சேகரிக்கும் ஆர்வம் கொண்டத.பி.செல்லம் ராஜபாளையத்தில் கட்டின புது வீட்டில் அவர் தலைமையில் மதுரைப் பேராசிரியர் பேரு மறந்து போச்சு அவர் வெளியிட ஒரு வாசகர் புஸ்தகத்தப் பெற ஒரு பதினைந்து பேரு வந்த கூட்டத்தில் கலந்துரையாடல்,பேச்சு என போனது.செல்லம் இப்போது இல்லை.காலமாயிட்டாரு.அவரைப் பற்றி புத்தகக் காதலர் என்று ஒரு கட்டுரை ஒன்னும் எழுதி இருக்கேன்.  

கதவு புஸ்தகம் வெளிவந்ததுக்கு பிறகு சிறந்த புஸ்தகம் என்று தமிழக அரசு பரிசளித்துப் பாராட்டியது.1971 ஆம் வருசம் இந்தப் பரிசை முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் வழங்கிப் பாராட்டினார்.கதவை யோசிக்கிற பொழுது இதெல்லாம் மனசுக்கு வந்து இனிமை தருகிறது. 

                   (2012 சனவரி புத்தகம் பேசுது இதழில் வெளிவந்தது)

Thursday, January 5, 2012

அன்பின் வண்ணம்  
காட்டுப்  பருத்தி கொய்து நூலாக்கி
வானவில்லின் பிடித்த வண்ணங்களைத் தொட்டு
 குழைத்துப் பூசி மெருகேற்றி
கண்ணுறக்கம் தொலைத்து கவனமோடு
நெய்த துணியில் எழிற்சித்திரம் தீட்டி
ஆக்கிய ஆடை  அணிவித்து
தேக்கம் பூவை கருக்கிச் செய்த
அஞ்சனம் எடுத்து புருவம் வனைந்து
முல்லைப்  பூக்களில் உருக்கிய நெய்யில்
தலைவாரி பின்னலிட்டு
திறந்திருந்த  காதுகளில்
 கவிதையோடு  அன்பை ஓதி
கண் திறந்து உயிர் பெற்ற மரப்பாச்சி
உடனிருந்து எப்போதும்
 விளையாடுமென அன்பைப் பகிர்ந்து
கவிதைகளாக்கி  களிப்புற்றிருந்த
 ஒர் இளவேனிற்காலத்தின்
நண்பகலொன்றில் 
இனிப்போடு கடுந்துவர்ப்பு கலந்து
உண்ணச் சொல்லி
கொடுஞ் சொற்களால்  பகடி செய்து
நெஞ்சில்  நெருஞ்சி விதைத்து
அன்பென உணர்ந்ததின்
வண்ணமும்  சுவையும் மாயையோ என
மருவிய கணமொன்றில்
நடுவீதி நிறுத்தி நீங்கிச் சென்றது என்னை. 
(2012 சனவரி -பூவரசி அரையாண்டு இதழில் வெளிவந்தது)