Tuesday, April 9, 2019

யோக்யராஜா..பராக்..பராக்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை கலைக்குழு உருவாக்கியிருக்கும் வீதிநாடகம் யோக்யராஜா. பன்னிரண்டு காட்சிகள் கொண்டதாக நாடகம் இருக்கிறது. இருபத்தைந்து நிமிடத்தில் ஐந்தாண்டு ஆட்சிகளின் அவலத்தை அம்பலப்படுத்தி விடுகிறது நாடகம்.நாடகம் தொடங்குகிறது. பாதிக்கப் பட்டவர்கள் ஒவ்வொருவரும் தங்களை ரத்தசாட்சியாக மாற்றி தங்கள் வாக்கு மூலத்தை பார்வையாளர்கள் முன் வைக்கிறார்கள். வனிதாவின் தாயார், ஒரு விவசாயி, பொறியியல் படித்த இளைஞன், ஓர் இளம்பெண், மேலும் சிலர் தாங்கள் இதனால் பாதிக்கப்பட்டோம் என சொல்வதோடு நாடகம் தொடங்குகிறது.கதை சொல்லி அடுத்து வருகிறார். ஆம் இவர்கள் பாதிக்கப்பட்டது உண்மை. யாரால் பாதிக்கப்பட்டார்கள்? இவராலா? அவராலா? எவரால் பாதிக்கப்பட்டார்கள்? என்று பார்வையாளர்களை நோக்கி கேட்கிறார் கதைசொல்லி.ராஜா ஒருவர் மேடையின் மையத்தில் போடப்பட்டிருக்கும் நாற்காலியை சுற்றி சுற்றி கூத்து அடவு முறையில் ஆடிக் கொண்டு வருகிறார். நாடகம் ஒவ்வொரு காட்சியை விவரிக்கத் தொடங்குகிறது.
எட்டு வழிச் சாலை, பணமதிப்பு நீக்கம், நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவி, கும்பல் பாலியல் கொடுமை, ரபேல் விமான ஊழல், நிலத்தடி நீரும் காற்றும் பாதிக்கப்பட்ட முத்துநகரம் என காட்சிகள் ஒவ்வொன்றாக பார்வையாளர்கள் முன் நடிக்கப்படுகிறது. இடையில் காட்பாடியும் வெந்நீரும் நான் நீ என்று அடித்துக் கொள்கிறார்கள். பின் சமரசமாகிறார்கள். ராஜா மகிழ்ச்சி கொண்டு அவர்களை அணைத்துக் கொள்கிறார்.இப்படி பயணிக்கும் நாடகம், நடந்ததை மீண்டும் பார்வையாளர்களின் ஞாப கத்திற்கு கொண்டு வருகிறது. கடந்து போன காட்சிகள் ஒவ்வொன்றும் பார்வை யாளர்களால் அசை போடப்பட்டு காட்சிகள் விரிய விரிய புரிந்து கொண்டு நாடகத்தை ரசிக்கிறார்கள்; சிரிக்கிறார்கள்; கையொலி எழுப்புகிறார்கள் பார்வை யாளர்கள்.
நாடக விவரணைக் காட்சிகள் முடிந்த பிறகு கதை சொல்லி மீண்டும் பார்வை யாளர் முன் வருகிறார். இந்த அவலங்கள் தொடர வேண்டுமா; ஒழிக்கப்பட வேண்டுமா என கேள்வி கேட்கிறார். மாற்றப்படுவதற்கு மாற்றம் அவசியம். அந்த மாற்றத்தை கொண்டு வரும் அணியாக இருக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அவரவர் சின்னத்தில் வாக்களிக்க கோருகிறார் கதை சொல்லி. நாடகம் முடிந்து விடுகிறது.முடிந்த இடத்திலிருந்து பார்வையாளர்கள் யோசிக்கத் தொடங்குகிறார்கள்.அரசியல் ஊக்கம் பெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கலைஞர்களால் ஒரு வார கால அவகாசத்தில் கூட்டாக முகாமில் நாடகம் உருவாக்கப்பட்டது. தொழிலாளர்களும் இளைஞர்களுமாக இணைந்த நாடகக்குழு மத்திய சென்னை, வடசென்னை என வலம் வருகிறது. பாடல்கள், காட்சி மாற்றத்திற்கான இசைக்கோர்வை, கலைஞர்களை தனித்துவமிக்கவர்களாக காட்டிக் கொள்ளும் சிவப்புநிற இடுப்புத்துண்டு, காட்சி அமைப்பிற்கான மூங்கில்கள் என நாடகம் தனித்து அடையாளம் கொள்கிறது
.-இரா.தெ.முத்து
நெறியாள்கை தி.ராசேந்திரகுமார் - ஜி.உதயகுமார், பாடல் : நா.வே.அருள்.
நன்றி ; தீக்கதிர் 2019 ஏப்ரல் 8

Sunday, September 30, 2018

இவரும் இவர் கதைகளின் படமும் : மண்ட்டோ

Manto எனும் பெயரில் நந்திதாதாஸ் எழுத்து & இயக்கத்தில் ஆங்கில சப் டைட்டிலுடன் கூடிய இந்தி படம் கடந்த 21 ஆம் தேதியிலிருந்து தலா ஒரு காட்சிகள் வீதம் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ, லூக்ஸ் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.nandita dos initiatives நிறுவனம் படத்தை சிலருடன் இணைந்து தயாரித்திருக்கிறது.

புதுமைப்பித்தன் பிறந்து ஆறாண்டுகளுக்கு பின் பிறந்து , 1955 ஆம் ஆண்டில் 43 வயதில் இறந்து போன படைப்பாளி சாதத் ஹசன் மண்ட்டோ.பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் லூதியானாவில் பிறந்தவர். வாழும் பொழுதே தென்கிழக்காசியா நாடுகளின் புகழ்பெற்ற உருது சிறுகதை படைப்பாளராக அறியப்பட்டவர்.இலக்கியம் ,இதழியல்,சினிமாஉலகில் பெரிதும் பேசப்பட்டவர் மண்ட்டோ
மண்ட்டோ  கதைகள் பாலியல் ஆபாசம் என்பதற்காக பிரிட்டிஷ் அடசியில் இவர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன .குடும்பம் நட்பு வட்டங்களில் தன்  கதைகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் .தீராத குடிப்பழக்கத்திற்கு ஆளானவர் .அதனாலேயே இளவயதில் மரணம் அடைந்தவர் சாதத் ஹசன் மண்ட்டோ .இந்திய விடுதலையும் பிரிவினையும் தொடங்கி வைத்த இஸ்லாம் மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களின் வலிகளின் இலக்கிய ஆவணமாக மண்ட்டோ கதை விளங்குகிறது .மதவெறிக்கு எதிராக மானுட நேயத்தை தன படைப்புகளின் வழியாக முன் வைத்தவர் .

இவரைப் பற்றிய படமும் இவர் கதைகளின் படமுமாக அற்புதமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது மண்ட்டோ .படைப்பாளியும் கதாபாத்திரமும் சந்திக்கும் உத்தியை படத்தில் நந்திதாதாஸ் கலாபூர்வமாகப் பயன்படுத்தி இருப்பார் .மண்ட்டோ பம்பாய் நிலத்த்தின் வழியாக உலகை தரிசித்தவர் என்ற புரிதலை , பழுப்புநிறக் காட்சிகளின் வழியாக 40 களிலான பம்பாயில் மண்ட்டோவின் வாழ்வை பார்வையாளர்களுக்கு  அழகியலாக  உணர்த்தி  இருப்பார் இயக்குநர் .

ண்ட்டோவின் திற ,சில்லிட்ட சதைப்பிண்டம்,டோபா டேக் சிங் கதைகலின் பாத்திரங்கள் மண்டோவோடு சக பாத்திரங்களாக இணைக்கப்பட்டு ,எழுத்தும் சினிமாவும் முயங்கும் காட்சி தரிசனத்தை நமக்கு நந்திதா தாஸ் கையளித்திருப்பார்  .வரலாற்று காலக்கட்ட படம் என்பதற்கான பழுப்பு டோனில் கார்த்திக் விஜய் படமாக்கி இருக்கிறார் .ஸ்ரீகர் பிரசாத்தின் படக்கோர்வை மிளிர்கிறது .நவாஸுதீன் சித்திக்  மண்ட்டோவாக வாழ்ந்திருக்கிறார் .அவரின் மனைவியாக  ரசிகா சாந்தமான இயல்பான உடல்மொழியில் வசீகரிக்கிறார்

படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலோடு , படம் முடிந்து டைட்டில் ஓடும் பின்புலமாக இசைக்கப்படும் பாடலும் மனதை வசீகரிக்க சினேகா கான்வால்கர் காரணம். பின்னனி இசை சஹிர்ஹுசைன்  என டைட்டில் பெயர் வருகிறது.அது தபேலா சாஹீர் ஹுசைனா  என தெரிய வேண்டும் .

இந்து இஸ்லாம் எனற பிரிவினைகள் மேலும் மேலும் அதிகரிக்க செய்யப்படும் காலத்தில் ,அவைகளை எதிர்க்க மானுட நேசம் கொண்ட சாதத் ஹசன் மண்ட்டோ நமக்கு மேலும் மேலும் தேவைப்படுகிறார் .அதன் திரைமொழியே மண்ட்டோ .வாழ்த்துக்கள் நந்திதா தாஸ்.

Sunday, June 3, 2018

படைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்

கலைஞரை நான் 5 முறை சந்திருக்கிறேன் .நான்குமுறை தமுஎகச பிரதிநிதிக்குழுவில் இருந்து போய் பார்த்து பேசி இருக்கிறோம்  .ஒரு முறை அந்த முதன்முறையான  சந்திப்பு , நான் மாணவனாக இருந்த பொழுது, முதல்வராக  இருந்த அவரை , வறவேற்கும்  பொருட்டான நிமித்தம் 1974 ஆம் ஆண்டு நிகழ்ந்தது .

மூன்று சந்திப்புகள் சுவாரசியமான சந்திப்பாக இருந்தது .அதில் ஒன்றை மட்டும் இப்பொழுது சொல்கிறேன் .பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகளுக்கும் ராசபக்சே தலைமையிலான அரசிற்கும்  இலங்கையில் பெரும் யுத்தம் நடந்த 2008.

தமிழ்நாடு அரசின் கோட்டையில் ,கலைஞர் முதல்வராக இருந்து ,இலங்கை தமிழர் பாதுகாப்பு நிதியை,  முதல்வர் நிவாரண நிதிக்கு திரட்டிக் கொண்டிருந்தார் .இலங்கை தமிழர்க்கு,  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பாக நம்மால் இயன்றதை அளிப்பது என இயக்குனர் பாலுமகேந்திரா சொன்ன ஆலோசனையை

அருணன் தலைவராகவும் ,ச.தமிழ்ச்செல்வன் பொதுசெயலாளராகவும் ,இரா.தெ.முத்து பொருளாளராகவும் இயங்கிய தமுஎச ஏற்று கொண்டது.தமிழ்நாட்டு முதல்வர் கலைஞரை  சந்தித்தது நிதியை அளிப்பதற்காகன நேரத்தை உறுதி செய்ய ,  பாராளுமன்றத்தின்  திமுக மேலவை தலைவராக இருக்கும் கவிஞர் கனிமொழி உதவியை தொலைபேசியில் பேசிப் பெற்றோம் .

2008 நவம்பர் 7 வெள்ளி

காலை 11 மணி .இலங்கை தமிழர் பாதுகாப்பு நிதியை காசோலையாக எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டரசின் கோட்டைக்குச் சென்றோம் .இயக்குனர் பாலுமகேந்திரா ,சிகரம் ச.செந்தில்நாதன் ,இரா.தெ .முத்து ,மயிலை பாலு ,கே .பி.பாலசந்தர்,மணிநாத் ,நா.வே .அருள் என தமுஎச வின் குழுவாகச்   சென்றோம்.

முதல்வர் அறைக்கு வெளியே தொழில் அதிபர்கள் பலர் நிதியை அளிக்க காத்திருந்தனர்.ஒரு சீட்டில் வருகையை எழுதிக் கொடுத்தோம் .அடுத்த சில நிமிடங்களில் நாங்கள் அழைக்கப்பட்டோம் .முதல்வரின் செயலர் சண்முகநாதன் புன்னகையோடு வரவேற்றார் .

நாங்கள் கொண்டு சென்ற காசோலையை  முதல்வரின் கையில் வழங்கினோம் .முதல்வர் கலைஞர் புன்னகை ததும்ப நாங்கள் அளித்த காசோலையைப் பெற்றுக் கொண்டார் . கரகரப்பான குரலில்  மகிழ்ச்சி என்றார் .

முதல்வரோடு நின்ற புகைப்படத்தை அரசு காமிராகாரர் எடுத்தார் .மறுநாள் நாளேடுகளில் அது செய்தியாக வெளிவந்தது . அவ்வளவு மகிழ்ச்சியாக நாங்கள் அளித்த காசோலையை முதல்வர் பெற்றார் .பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல  இலங்கை தமிழர் பாதுகாப்பு நிதிக்கு தமுஎகச ரூபாய் 25000 ஐ மட்டுமே வழங்கினோம் .

ஆனாலும் இந்தச்  சிறிய தொகையை பெருமனதோடுப் பெற்று , எமக்கு  மதிப்பு செய்தார் முதல்வர் கலைஞர் . பெருந்தன்மையான,  படைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர் அவர்களுக்கு இன்று 95 ஆவது பிறந்தநாள் .அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

Wednesday, October 18, 2017

பண்டிகைகளும் கொண்டாட்ட மனநிலையும்

 


தீபாவளியின் கொண்டாட்ட மனநிலைக்கு  , பொருள் உற்பத்தி சார்ந்த சந்தை மனோபாவம் காரணம். சமுகத்தின் வாழ்வாதார இயங்குதலிற்கு, அரசுகளின் நிலைத்தன்மைக்கு சந்தை அவசியமானது.

தீபாவளி சார்ந்த  காலத்தில், உற்பத்திப் பொருட்களின் வணிக விநியோகச்சந்தை சார்ந்த பணப்புழக்கம் , தொழிலாளர்கள் தொட்டு முதலீட்டாளர்கள் வரை அவசியமானது.

ஆண்டுதோறும் வரும் , இருபதிற்கும் மேற்பட்ட மதங்கள் சார்ந்த சாராத பண்டிகைகள், மாதம் தோறுமான திருமணங்கள் , இதனை ஒட்டிய உற்பத்திகள், பணப்புழக்கம், பொருள் உற்பத்திக்கும் அதன் விற்பனைக்கும், அதை ஒட்டி வாழ்வு நடத்துவோருக்கான , வாழ்வாதார தேவைகளுக்கு அவசியமானது.அதற்கு கொண்டாட்ட மனநிலை உருவாக்கம் அவசியம்.

கொண்டாட்டமும் சந்தையுமாக பண்டிகைகள் மக்கள் முன் வருகிற பொழுது, அன்றாடங்களிலிருந்து விடுபட்டு மனம் மகிழ,  மக்களுக்கும்  பண்டிகைகள் அவசியம். இந்த புள்ளிகளிலிருந்துதான் கொண்டாட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

இதனை முறைபடுத்துவதும் உதவி செய்வதும் அரசுகளின் பொறுப்பாக இருக்க வேண்டும். சமயம் சார்ந்த பண்டிகை எனில், அதில் சமயத்தின் இடம் , அரசியல் சாசனத்திற்குட்பட்ட முறைகளில் இருந்து இயங்கிட சட்ட சமுகம் மற்றும் அறிவு சமுகம் வழி காட்ட வேண்டும்.

கொண்டாட்டமே கூடாது என்பதும், யாவுமே மதம் சார்ந்தது என, அறிவு சமுகம் கொண்டாட்டங்களிலிருந்து தள்ளி நிற்பதும் , கொண்டாட்டங்களை சனநாயகப்படுத்த உதவாது.

Monday, July 17, 2017

மல்லிகைப் பூவே ..... மல்லிகைப் பூவே

                                                              மல்லிகைப் பூவே
                                                                மல்லிகைப் பூவே
                                                                பார்த்தாயா?
                                                                 பொன்மாலை
                                                                எங்கள் தோட்டத்தைப்
                                                                பார்க்கப் பூத்தாயா?
                                                                ஆயிரம் கோடிகள் செல்வம்
                                                                அது
                                                                யாருக்கு இங்கு வேண்டும்
                                                                 அரை நொடி என்றால் கூட
                                                                  இந்த
                                                                ஆனந்தம் ஒன்றே போதும்
                                                                 பூவே
                                                                எங்கள் தோட்டத்தைப்
                                                                 பார்க்கப் பூத்தாயா

இது கவிஞர் தாமரை எழுதிய பாடல். இசை எஸ்.ஏ. ராஜ்குமார்.இயக்குநர் விக்ரமன் இயக்கிய உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் இடம் பெற்றப் பாடல்.அஜித்தும் ரோஜாவும் ஆர்ப்பாட்டம் இல்லாத நளினமான நடனத்தில் ஆடிப் பாடி நடித்தப் ரசிகர்களை மகிழ்வித்தப் படம். 1999 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம். யார் பாடியது என்று நான் பார்த்த யூ டியூப் பதிவில் செய்தி இல்லை.

தாமரையை தமிழ்நாடெங்கும் , யார் இந்த தாமரை என விசாரிக்க வைத்தப் பாடல்.இது.  தாமரை எழுதிய இரண்டாவது பாடல்.   மல்லிகைப் பூவை முன் வைத்து, அதனிடம் ஒரு பெண் தன் மனதை பார்வையை பகிர்ந்து கொள்வதான தொனியில் பாடல் காட்சிபடுத்தப் பட்டிருக்கும். பெண் குரலோடு ஆண் குரலொன்றும் டூயட் பாடியிருக்கும்.


பாடலே கவிதையாகவும் வண்ணம் கூட்டி நிற்கும் பாடல்.

ஆயிரம் கோடிகள் செல்வம்
அது
யாருக்கு இங்கு வேண்டும்
அரை நொடி என்றால் கூட
இந்த
ஆனந்தம் ஒன்றே போதும்

பாடலின் பல்லவியில் வரும் இந்த வரிகளால்தான் என்னளவில் கவிஞர் தாமரை அவர்கள் குறித்த கவனமும் மதிப்பும் உருவாகியது. பணம் மட்டுமே மனிதர்களின் ஏற்பை மறுப்பை நிகழ்த்த வல்லது என்கிற தனியுடைமை சார்ந்த கருத்துருவாக்கம் , சமுகத்தின் செல்நெறியாக இருக்கிறது ; தொடர்ந்து கொண்டிருக்கிறது..இதன் பின்னணியில் எழுதப்பட்ட இந்தப் பாடல், பணத்தை செல்வத்தை அதன் மதிப்பை மறுத்து, அந்த இடத்தில் அன்பை பரிவை கூட்டுறவை அதனூடாக உருவாகும் ஆனந்தத்தை முன்மொழிந்து பாடுகிறது
.
நட்பில் காதலில்  குடும்பத்தில் சமுகத்தில் ஆயிரம் கோடி செல்வத்தை துச்சமாக மதித்து , பணத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள் மீதான நேசத்தை பாடல் எழுதிச் செல்வது என்பது, அன்பை பரிவை பொதுவுடைமையை நோக்கிய மாறுதலை நோக்கிய , அதனை முன்னெடுத்துப் போராடுகிற அன்பு சக்திகளுக்கு இந்தப் பாடல் மிகுந்த உற்சாகத்தை தந்து கொண்டே இருக்கும்.

 வடசென்னை திருவொற்றியூர் தேரடியில் நிகழ்ந்த , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின், கலை இரவு மேடையில் கவிஞர் தாமரை 1999 ஆண்டில்  , இந்தப் பாடலிற்காக அழைத்துப் பாராட்டப்பட்டர் . எனது கேள்விகளுக்கு கவிஞர் தாமரை பதில் சொல்லும் நேர்காணலாக நிகழ்ச்சி வ்டிவமைக்கப்படிருந்தது.

Thursday, June 1, 2017

தமிழ் அடையாளத்தை தடப்படுத்தும் வேள்பாரி
வீரயுகநாயகன் வேள்பாரி எனும் தொடரை சு.வெங்கடேசன் ஆனந்த விகடனில்  முப்பதியிரண்டு வாரங்களாக , எட்டு மாதங்களாக எழுதி வருகிறார். அவ்வப்பொழுது வாசித்து வருகிறேன். பரபரப்பான இயக்கம் சார் பணிகளில் இருக்கும் எனக்கு, இந்தத் தொடரை , தொடர்ந்து வாசிக்கப்  பயம் தொடர்ந்து கொண்டே வந்தது.

தமிழ் அடையாளம் சார்ந்து திணை , பொழுது சார்ந்து எழுதப்படும் புனைவு , வாசிக்கப் போய், அப்படியே கட்டிப் பிடித்து உள்ளிழுத்துக் கொள்ளும் சதுப்புநிலச் சரிவு புதைகுழி போன்ற ,வாசிப்பு அனுபவம் கிடைப்பதால் தோய்ந்து போய் பொழுதுகள் போகுமோ என்கிற் அச்சத்தில் தொடர்ந்து வாசிப்பதை தவிர்த்து வந்தேன்.

இயலவில்லை. சில வாரங்களாக தொடர்ந்து வாசிக்கிறேன். செந்தாது ஒட்டிக் கொண்ட சூழலை வள்ளி சொல்லும் பொழுது அப்படியே மனம் பரவசமாகி, அந்தக் காட்டிடை வள்ளியின் அருகன் , முருகன் போல நாமும் அவளோடு உடன் செல்கிறோம்.

அன்னமழகியரிசியின் கதிரைக் கசக்கி உண்ட வள்ளிக்கு விக்கலெடுக்க , அவளுக்கு நீர் தேடி, ஓடும் முருகன் , கானவெள்ளெருக்கு விளைந்திருக்கும் நிலம் பர்ர்த்து ஓடி , மண்ணைத் தோண்டி நீரைக் கண்டடையும் பொழுதில் அங்கு முருகன் இல்லை  ; நாம் தான் இருக்க உணர்கிறோம்..

”  நீர் இருக்கும் இடத்தில் தழைக்கும் வேர் அல்ல; வேர் இருக்கும் இடத்தில் சுரக்கும் நீர் “  என்று காதலிற்கு முருகன் சொல்லும் விளக்கம் உண்மை.
தோள் சாயும் காதலைத் ஏந்திப் பிடித்து நிலைக்கச் செய்யும் ஆறுதல் காதல் என்று , அன்பைத் தவிர பிரிதொன்றை தேடாதது காதல் என்று முருகனின் விளக்கத்தில் தொடரோடு நாம் நெருக்கமாகிறோம்.

 குறிஞ்சி, முல்லை, நிலம் சார்ந்த எனக்கு , மழைக் குறித்தப் பகிர்வு,   பதின் பருவ மழை வாசனையைத் மீட்டுத் தருகிறது. தூசி,தும்மல்,கூடல்,முதுநிலை என்ற நாம் அயித்துப் போன விடயத்தை , நம் இலக்கியங்களில் பதிந்து கிடப்பதை, புனைவுச் சித்திரமாக்குகிற பொழுது , அதன் ஈர்ப்பு பெருமகிழ்ச்சித் தருகிறது.

இயற்கையிலிருந்து விலகிப் போன கற்றல்முறை குறித்து கபிலர் விசனப்படும் இடமும் , பாரி கேட்ட கேள்விக்கு , பொருளோடு மொழியைப் பொருத்திய ஆதிகாலம் குறித்ததாக, கார்த்திகை விண்மீன்கூட்டம் குறித்ததாக, பாரியின் கேள்வியை கபிலர் எதிர் கொள்ளும் , மற்றொரு இடமும் , இருபெரும் ஆளுமைகளால் நாம்  வியக்கின்ற இடங்களாகும்.

உதிரன்,நீலன் திசைவேழர் என்று பாத்திரங்களுக்கானப் பெயர்கள் , நம் ஆதி தமிழ் அடையாளத்தை தடப்படுத்தும் , வந்த இடத்தை ருசுப்படுத்தும் சித்திரப்பாடுகள்.

மணியன் செல்வன் கோட்டோவியம் குறிஞ்சி நிலத்தை அதன் மனிதர்களை அற்புதமாக காட்சிபடுத்தித் தருகின்றன.

ஒரு வாரம் முன்பு வாங்கிய விகடனில் இந்த அத்தியாயத்தை ருசித்து, உணர்ந்து முகர்ந்து அனுபவித்து வாசிப்ப்பதற்குள்  , 33 ஆம் அத்தியாயத்தின் விகடன் வந்து விட்டது.
வாழ்த்துகள் சு.வெ !


Thursday, May 25, 2017

கூடற்றக் குயில் : நா.காமராசன்


இருபத்து மூன்று வயதில் ,  இரண்டாயிரம் ஆண்டு (இலக்கிய ஆதாரம் கிடைத்தபடி)  வரலாற்றுப் பெருமை உடைய தமிழ்க்கவிதையை , மரபை யாப்பை அறிந்து , அதன் கதி மாற்றி , போக்கு மாற்றி , பொருள் மாற்றி , திசை மாற்றி விட்ட , பாரதிக்குப் பிறகான முதல் விதை , புதுக்கவிதையின் அரசன் நா.காமராசன்.

   வயலார் ராமவர்மா, கலாநிதி கைலாசபதி,காண்டேகர் போன்ற மானுடநேயம் கொண்ட இடதுசிந்தனை கொண்ட படைப்பாளிகளின் படைப்பில் உதவேகம் பெற்று, தமிழண்ணல்  வழிகாட்டலில் படிமமொழி பழமொழி கற்று, இருபதாம் நூற்றாண்டின் புதுக்கவிதைக்கு புதுப்பாதை அமைத்தவர் காமராசன்.

 இளவயதில் தமிழ்க்கவிதைப் போக்கை மாற்றி அமைக்க வேண்டுமானால், தமிழின் கடந்த கால கவிதையை , அதன் வரலாற்றை , ஆழங்கால் கண்டு மொழியில் கவிதையில் தோய்ந்து போய் , சமுகத்தை உற்றுப் பார்த்து , புதுச்சூரியனாக பிறப்பதன் வழியாகவே  சாத்தியமாகி இருக்க வேண்டும்.

 சாத்தியமாக்கி இருக்கிறார்.

சாத்தியத்தை  தொடர்ந்து வடிவிலும் பொருளிலும் முன் செலுத்துவதற்கு மாறாக வடிவில் படிமத்தில் அழகியலில் மட்டுமே பயணம் என்று குறுக்கி தொடர்ந்ததன் விளைவு , வானம்பாடிகளின் வானத்திலிருந்து விலகிப் போய், மு.கருணாநிதி, எம்.ஜி.இராமச்சந்திரன் புகழ் பாடி, கூடற்ற குயிலாகிப் போனார் நா.கா
(தொடரும் )

Tuesday, May 2, 2017

தமிழ்த் தேசிய சலனப்படம் 100 ஆண்டு


இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தலைமையிலான உலகாயுதா அமைப்பு, சர்வதேச தொழிலாளர் தினமான மே1 அன்று , சென்னை காமராசர் அரங்கில், தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு விழாவை, தமிழ்த் தேசிய சலனப்படம் 100 ஆண்டு என கொண்டாடியது.

தமிழ்சினிமாவின்  மூத்தத் தொழிலாளர்கள்  நூறு பேருக்கு அவர்களின் திரைத்துறைப் பங்களிப்பை பாராட்டும் விதமாக, ஒவ்வொருவருக்கும்  ஒரு சவரன் தங்க நாணயம் வழங்கும் விழாவாக நடைபெற்றது. விழா தொடக்கத்தில் FEFSI ஐ நிறுவிய முன்னோடிகள் நிமாய்கோஷ், எம்.பி.சீனிவாசன் படங்களை இயக்குநர் முக்தா சீனுவாசன், எடிட்டர் மோகன் திறந்து வைத்துப் பேசினார்கள்.

நடிகர் விஜய் சேதுபதி வழங்கிய தங்க நாணயங்களை அவரின் அம்மா சரஸ்வதி காளிமுத்து, விஜய் சேதுபதியை அறிமுகம் செய்த, இயக்குநர் சீனுராமசாமிக்கு வழங்கி , இந்த நிகழ்வை தொடங்கி வைக்க், பின் நூறுபேருக்கும் திரைத்துறை ஆளுமைகள் ரோஹிணி,எடிட்டர் லெனின், எடிட்டர் மோகன்,இயக்குநர் சேரன்,இயக்குநர் அமீர், இயக்குநர் ஸ்டான்லி,இயக்குநர் செல்வமணி என தொடர்ந்து தங்க நாணயங்களை வழங்கிப் பாராட்டினார்கள்.

கவிஞர் பரிணாமன் எங்களைத் தெரியலையா பாடலைப் பாடி அனைவருக்கும் மே நாள் வாழ்த்துகள் சொன்னார்.

விஜய்சேதுபதி பேசும் பொழுது,  “ எனக்கு எல்லாமே தமிழ் சினிமாதான். எனக்கான அடையாளம் சினிமாதான்.இயக்குநர் ஜனநாதன் இந்த விழாவின் தேவையை சொன்ன பொழுது, நூறு தங்க நாணயங்களை வழங்கி,எனக்கு அடையாளம் தந்த தமிழ் சினிமாவிற்கு , என் நன்றிக் கடனை செய்திருக்கிறேன் “ என்றார்.

விழாவிற்கு இயக்குநர் அமீர் தலைமையேற்க , இயக்குநர் கரு.பழனியப்பன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

என்னை விழாவில் பங்கேற்க இயக்குநர் ஜனநாதன் அழைத்திருந்தபடியால், நானும் பங்கேற்று ,ஜனநாதன் அவர்களுக்கு வாழ்த்துகள் சொன்னேன். தமுஎகச சார்பில் கி.அன்பரசன், பேராசிரியர் அண்ணதுரை போன்றோரும் நிகழ்வில் பங்கேற்றனர்

Monday, March 6, 2017

பெட்ரோல்கடல்


மீன்கறிக்கு உமிழ்நீர் சுரக்கிறது குழந்தை 
வாங்கிட ஆளின்றி கொண்டு வந்த மீனைக்
கொண்டு போகிறான் வேலப்பன்
வறள் உப்பு வாசக் காற்று
பெட்ரோல் கவிச்சியை கொண்டு சேர்க்கிறது
மீன்சந்தை தோறும் கண்ணீர்கதையாடல் 


சேவையின் மீது நம்பிக்கை சேர்க்க உபகரணங்கள் எதுவுமின்றி
கடற்கறையில் கசிந்துருகிக் கிடக்கிறது வாலிபம்
விபத்தா சதியா மீவெளிப் பகிர்வுகள் பார்வைக்கு வருகின்றன
கப்பல் மீது குற்றப்பத்திரிகை உண்டா
எழுகின்றன கேள்விகள்
சுவாசச்சிக்கலால் இறந்து மிதக்கின்றன கடலினங்கள்
இருந்து தொலைக்கின்றன அரசுகள்

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத...
தந்தை பெரியார் திடலின்( தமிழ்நாடு-சென்னை) பிரம்மாண்ட எம்.ஆர்.ராதா அரங்கினுள் நுழைந்த பொழுதே பூக்களால் ஆன மணமேடை மனதை வசீகரித்தது.அருகில் போய் பூக்களைத் தொட்டுப் பார்த்து அதன் அழகில் வண்ணத்தில் பூரித்தேன்.மணமேடையின் வலதுப்பக்கத்தில் இருந்த மஞ்சள் பூசப்பட்ட மண்பானை அடுக்குகள் பார்த்து, சரேலென நினைவு ஈராயிரம் ஆண்டுகளுக்கு பின் போனது.தமிழ்க்குலம் தழைத்து நடந்து வந்த பண்பாட்டுப் பாதையை நினைவுகளில் ஓட்டி கண்ணீர் கசிய நின்று கொண்டிருந்தேன்.

திருமண நாளன்று ( 2017 மார்ச் 02 ) காலை எட்டரை மணி நெருங்க உற்றாரும் சுற்றமும் வரத் தொடங்கி இருந்தார்கள்.மணமக்களின் பெற்றோர் இவர் இவர் எனக் காட்ட கவிஞர் ச.விசயலட்சுமி-சு.பழனிக்குமார் / அனந்தநாயகி-மனோகரன் கழுத்தில் அழகிய மாலைகள் சூட்டி அருகருகில் நின்று கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளை கோபிநாத் அழகிய பட்டு வேட்டிக் கட்டி தோளில் துண்டு அணிந்து கொண்டு மணமேடை வந்து அமர்ந்தார். அன்பின் தேவதை சு.ப .நிவேதிதா கட்டம் போட்ட கூரைப்புடவைக் கட்டி மேடைக்கு வந்தார். மணமக்களைச் சுற்றி வித விதங்களில் பட்டுப் புடவைகள் கட்டிக் கொண்ட பெண்கள் மகிழ்ந்தும் பேசிக் கொண்டும் மணமக்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அரங்கினுள் இருந்து ரசிக்கத் தக்க அளவில் நாயனம் தவிலின் லயத்தோடு கூடிய இசையை தூவிக் கொண்டிருந்தன. மங்கலநாண் வைக்கப்பட்ட பூக்கள் தேங்காய் வாழ்த்தரிசித் தட்டு வாழ்த்துப் பெற சுற்றுக்குத் தரப்பட்டன.அவரவர்கள் வாழ்த்த வாழ்த்தரிசி, பூக்களை எடுத்துக் கொண்டு மங்கல்நாண் தட்டை வாழ்த்தி மேடைக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். தட்டு மண மேடைக்கு வந்தது. நாயனத்திலிருந்து "பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி " என்று அமரத்துவம் கொண்ட கவியரசு கண்ணதாசனின் பாடல் உதிர்ந்து கொண்டு வந்தன.

கண்களில் ததும்பி நின்று, தொண்டையில் இறங்கிய கண்ணீர் , தொடர்ந்து சுரந்து மகிழ்வின் அதிர்வைத் தந்து கொண்டிருந்தது. மேடையில் நின்ற பார்த்திபனின் அம்மா நாயனத்தை நோக்கி தன் கையசைப்பில் கெட்டி மேளத்திற்கான சமிக்ஞை தந்து கொண்டிருந்தார். கெட்டிமேளம் ஒலிக்க அன்பின் தேவதை சு.ப.நிவேதிதா கழுத்தில் காலை 10.35 மணிக்கு மங்கலநாணைக் கட்டிக் கொண்டிருந்தார் கோபிநாத் . 

மனதில் வந்து நின்றது ஆண்டாளின்
இந்தப் பாடல்:
“ மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துணன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்

Sunday, March 5, 2017

திரைக்காதலன் பாலுமகேந்திராஇயக்குநர் பாலுமகேந்திரா அவர்களின் உதவியாளர் ரோஸ்லின் பிப்ரவரி 9 ஆம் தேதி காலையில் போன் செய்து, 13 ஆம் தேதி நம்ம சாரோட மூணாவது நினைவுநாள். வரணும் என்றார்.அவசியம் வருவேன் என்று பிப்ரவரி 13 காலை 11 மணிக்கு சென்னை ஏ.வி.எம் பிரிவியூ தியேட்டர் 1  சென்றேன். போகும் பொழுது இயக்குநர் பாலுமகேந்திரா  குறித்த டாக்குமெண்ட்ரி( இயக்கம் வசந்த்) ஓடிக் கொண்டிருந்தது.ஒன்றரை மணிநேரம் ஓடியது டாக்குமெண்ட்ரி.அருமையான முயற்சி.

பின்னர் பாலுமகேந்திரா குறித்த ஞாபகப்பதிவு. இதில் பாலுமகேந்திரா மகன் சங்கிபாலுமகேந்திரா,இயக்குநர் சீனுராமசாமி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், நடிகர் அர்ச்சனா, ஓவியர் வீரசந்தனம், ஒளிப்பதிவாளர் மூர்த்தி, ஜூனியர் பாலையா, இயக்குநர் மீரா கதிரவன், நிழல் திருநாவுக்கரசு, இரா.தெ.முத்து,ரோஸ்லின் என் பங்கேற்றுப் பேசினோம்.

சங்கி தனக்கு  ”தன் அப்பா  நண்பர் ”   என்றார். சீனுராமசாமி ” தன் உதவியாளர்களை மிகுந்த தோழமையோடு நடத்தியவர் சார்’  என்று நெகிழ்ந்தார். ”தன் ஞானத்தகப்பன் பாலு சார்” என்று குறிப்பிட்டார் எஸ்.ராமகிருஷ்ணன்.நடிகை அர்ச்சனா பேசும் பொழுது “ சினிமாவில் பலரால் மறுக்கப்பட்ட சுதா என்கிற என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி எனக்கு வாழ்வும் முகமும் தந்தவர் சார் ” என்றார்.

  “பாலுவை மகத்தானக் கலைஞன் என்று கொண்டால் அவரின் பிறகுணங்கள் காணாமல் போகும் “ என்று விமர்சனங்களுக்கு பதில் தந்தார் வீர சந்தானம்.  ” பொருத்தமான பாத்திரங்களில் தன்னை நடிக்க வைத்தவர் பாலுமகேந்திரா” என்றார் ஜூனியர் பாலையா. “நானும் சாரின் மாணவர் “ என்று மகிழ்ந்தார் மீரா கதிரவன்.

 “பாலுமகேந்திராவிற்கும் எங்கள் தமுஎகச அமைப்பிற்கும் எனக்கும் முப்பதாண்டு நட்பு என்றும், எதையும் வெளிப்படையாக எங்களோடு விவாதித்து, உடன் நின்று செயற்படும் நல்ல நண்பர்; ஆசிரியர் என்றும், அவர் நடத்திய சினிமாப் பட்டறை கட்டிடத்தில் அவருக்கான படைப்புகளை அவர் புழங்கிய நூல்களைக் கொண்ட காப்பகம் ஒன்றை அமைக்க ஷங்கி உள்ளிட்டு அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றும், அவர் காலத்திலேயே அழிந்து போன அவரின் சினிமாக்களை போல் அல்லாமல் , தமிழின் மிச்சமுள்ள சினிமா படைப்புகளை திரை ஆவணக் காப்பகம் உருவாக்கி அதில் வைத்து தமிழ்நாட்டு அரசாங்கம் பராமரிக்க நாம் குரல் கொடுக்க வேண்டும் “ என்றும் நான் ( இரா.தெ.முத்து ) பேசினேன்