இணைந்த இதயம்

Wednesday, April 15, 2015

குண்டர்கிராஸ் மறைந்தார்

குண்டர் கிராஸை நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிவேன்.அப்பொழுது கிராஸ் இந்தியாவிற்கு வந்திருந்தார்.தாய்மொழி ரீதியிலான புரிதல் மட்டுமே அறிவை கலையாற்றலை வளர்க்க இயலும்;ஆங்கிலத்தினால் அன்று என்று அவர் கொடுத்த பேட்டி வழியாக அவர் மீதான் ஆர்வம் அதிகரித்தது.

ஜெர்மனி சார்ந்த நாவலாளர்-விமர்சகர்-கலைவிமர்சகர் எனும் பன் முகம் கொண்டவர் கிராஸ்.நோபல் பரிசு வெற்றியாளரும் கூட.எனினும் இஸ்ரேல் ,  பாலஸ்தீனர்கள் மீதும் ஈரான் மீதும் கொடும் ஆயுதத் தாக்குதலை-அணு ஆயுத மோதலை உருவாக்கிய 2006 களில் கிராஸ் கேட்ட கேள்வி `நாம் என்ன சொல்ல வேண்டும்?’

இந்தத் தலைப்பின் கவிதை இஸ்ரேலை அச்சப்படுத்தியது;அமெரிக்காவை எரிச்சல் செய்தது.எனினும் கிராஸின் கவிதை உலகம் முழுவதுமுள்ள சமாதானப் பிரியர்களுக்கு பெறும் உற்சாகத்தை தந்தது.

கவிதை எனப்படுவது யாதெனின் என்று நுரைத் தள்ளப் பேசுபவர்கள் குண்டர்கிராஸ்  எழுதிய இந்தக் கவிதையை வாசிக்க வேண்டும்.

ஜெர்மனியின் லுபெக் நகர வீட்டில் தன் 87 ஆம் வயதில்   இலக்கிய பரிசோதனை எனும் நூலிற்கான பணியில் இருந்த பொழுது,  13 ஆம் திகதி மறைந்திருக்கிறார் கிராஸ்.

Sunday, April 5, 2015

ஸர்மிளாவின் சிறகுகள்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கவிதை இலக்கியத்திற்கான 2012 ஆம் ஆண்டின் செல்வன் கார்க்கி நினைவு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட கவிதைத் தொகுதி “சிறகு முளைத்த பெண்“.

விருதுநகரில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு விருதை ஏற்க முடியாமல் போன கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் அண்மையில் சென்னை வந்தபோது எம்மைத் தொடர்பு கொண்டார்.

அவகாசம் கொடுத்து வந்தால் ஒரு சிறிய இலக்கிய சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கலாம். எனினும் குறுகிய நேரத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு , ஆசிரியர் தினத்தன்று புத்தகம் பேசுது அலுவலக மாடியில் நிகழ்ந்தது.

 சைதை ஜெ,கி.அன்பரசன், மயிலை பாலு,ஜேசுதாஸ் போன்ற தோழர்கள் பல வேலைகளில் மாட்டிக் கொள்ள, கருப்பு தேநீர் தந்து மொழிபெயர்ப்பாளர் பெரியசாமி வறவேற்க, இலக்கிய செய்திகள் பறிமாற்றத்தினூடாய் எழுத்தாளர் ஜாகிர்ராஜா புன்முறுவல் காட்ட, பிறகு கருப்பு பிரதிகள் நீலகண்டனும் குவர்னிகா யாழ்ப்பாண மலரோடு வந்து சேர்ந்து கொள்ள அறிவிக்கப்படாத ஒர் இலக்கிய சந்திப்பு அங்கே நிகழ்ந்தேறியது. 

அதற்கு முன், தமுஎகசவின் கவிதைக்கான 2012 ஆம் ஆண்டின் விருதிற்கான ரூபாய் ஐந்தாயிரத்தோடு படைப்பாளர்களின் விருதுக் குறிப்பேடை மாநில துணைப் பொதுச்செயலாளர் இரா.தெ.முத்து, மாநிலக்குழுவின் சிறப்பு அழைப்பாளர் கீரனூர் ஜாகிர்ராஜாவும் இணைந்து வழங்கினர்.


தீர்க்கமான அறிவும் கள அனுபவமும் இலங்கை குறித்த தரவுகளோடு கிண்டலும் கேலியும் கொண்ட முப்பது வயது ஸர்மிளா ஸெய்யித் ஊடகத்துறை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்திட்டமொன்றில் போரினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுடன் பணியாற்றியது, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புடன் இயங்கியது போன்ற அனுபவங்கள் தனது பல கவிதைகளின் வாசலாகவும் களமாகவும் இருந்திருக்கிறது என்றார். 

ஈழத்தில் பெண் படைப்பாளிகள் குறித்துத் தெரிவிக்கையில், இலங்கையிலிருந்து எழுதும் பெண் படைப்பாளிகளில் தமிழகத்தில் பெருதும் கவனத்தைப் பெற்ற கவிஞர்களாக அனார்,பஹிமா ஜஹான் இருவரையும் குறிப்பிடலாம். இவர்கள் தவிர்ந்த பெண்படைப்பாளிகளே ஈழத்தில் இல்லை என்று அர்த்தமில்லை. பல பெண் படைபாளர்கள் உள்ளனர். 

அவர்கள் தமது அவசங்களை மட்டுமின்றி  விவசாய, கூலிப் பெண்கள் பற்றியும் எழுதுகிறார்கள். சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் நடத்தும் ”பெண்” சஞ்சிகை, மேலும் மலையகத்தில் இருந்து வரும் சில சஞ்சிகைள், கொழும்பைத் தளமாகக் கொண்டு வரும் ”கோசம்,” ”சொல்” போன்ற சஞ்சிகைள் பெண்களுக்கு களம் தருகின்றன. மலையகத்தில் பெண்கள் குறித்த பல சஞ்சிகைகளும் வருகின்றன என்றார்.


`அங்கு இப்போது சாதி முரண்பாடுகளின் நிலவரம் எப்படி இருக்கின்றது?’என கேட்க ` இன்றைய சூழலில் எங்களுக்கு சாதி முரண்பாடுகளை விட, எம் மீதான இனப் பாரபட்சமும் பெரும்பான்மை சமூகத்தின் அழுத்தங்களுமே ஆகப் பெரிதாக இருக்கின்றது’ என்றார்.

இலங்கையிலுள்ள இசுலாமியர்களின் பிரச்சினைகள் பற்றி பிரஸ்தாபிக்கப்படுவதில்லை என்றும் அவர்களது பிரச்சினைகள் தேவைகள் ஊடகங்களால் புறக்கணிப்படுகின்றன என்றும் வருத்தம் தெரிவித்த அவர், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட இலங்கை இசுலாமியர்கள், தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டத்திற்கு அளித்த பங்களிப்புகளும் தியாகங்களும் இன்று முற்று முழுதாக மறக்கடிக்கப்பட்டுள்ளதுடன், இசுலாமியர்களுக்கு திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதிகள் வெறும் துன்பியல் நிகழ்வுகள் என்பதாக மட்டுமேயாகி புறக்கணிப்படுவது கவலையளிப்பது என்றார்.

 பேரின சமூகத்தினால் இன்று இசுலாமியர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். பொதுப்பலசேனா என்கிற சிங்கள தீவிரவாத அமைப்பின் திட்டமிட்ட நடவடிக்கைகள் இசுலாமியர்களை அச்சமடையச் செய்வதாக உள்ளது. இசுலாமியர்களின் எதிர்கால இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. அவர்களது வணக்கஸ்தலங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் மீது பல்வேறு விதமாக தாக்குதல் கட்டவிழ்த்து விடப்படுகின்றன என்றும் கூறினார்.

போர் முடிவடைந்த பின்னரும் நிலவுகின்ற நம்பிக்கை அற்ற அரசியல் அரங்கு காரணமாக எம் படைப்புகளில் நம்பிக்கையின்மை இருக்கிறது; இது படைப்பாளிகளின் குறைபாடு கிடையாது; சூழலே காரணம் என்றார்.

உங்கள் படைப்புகள் எப்படி அறியப்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு

 தனக்கான முதல் அங்கீகாரமே தமுஎகசவின் இந்த கவிதை விருதுதான் என்றவர். ”சிறகு முளைத்த பெண்” தொகுப்பைப் பற்றி கவிஞர் சமயவேல், குட்டிரேவதி, இளைய அப்துல்லாஹ் போன்றோர் எழுதி இருக்கின்றனர்

இலங்கையில் பி.பி.சி. வானொலியில் நான் அளித்த நேர்காணல் சர்ச்சைக்குப் பின்னர் முன்பை விடவும் நான் அதிகம் அறியப்பட்டதனால் எனது கவிதைகளும் அதிகம் பேரால் படிக்கப்பட்டது, விமர்சிக்கப்பட்டது. இந்த விமர்சனம் தனிநபர்களின் திட்டமிட்ட தாக்குல்களாக என்னை நோக்கி வந்ததினால் சில பின்னடைவுளுக்கும் சமூகப் புறக்கணிப்புகளை எதிர்கொள்வதற்கும் காரணமாக அமைந்தது என்பதாகவும் ஸர்மிளா ஸெய்யித் பகிர்ந்து கொண்டார். விரைவில் தனது நாவல் ஒன்று வெளிவரவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சிறியதாகத் திட்டமிட்ட சந்திப்பு ஒரு நிறைவான இலக்கிய நிகழ்வு போன்றே 

நிறைவடைந்தது. மாலை ஆறு மணியாகிவிட ”தனியாகப் 

போய்விடுவீர்கள்தானே, என்றதற்கு `தோழர் இவ்வளவு தூரம் வந்த எனக்கு 

இருக்கிற இடத்திற்கு போகத் தெரியாதா, என்று ஒரு பஞ்ச் வைத்து

கலகலவென்று சிரித்து நேசத்தை வெளிப்படுத்திக் கொண்டார்

Tuesday, March 31, 2015

உயிரச்சம்


உங்களின் துப்பாக்கிகள் நின்று கொல்லும் வறுமையை நோக்கிக் 
குறி வைத்திருக்கின்றனவா?

உங்களின் பத்வாக்கள் பாலின்றி குழந்தைகளைச் சாகவிடும்
ஆயுதவியாபரிகள் மீது பாய்ந்தது உண்டா?

தேவாலயங்களின் மன்றாட்டல்களும் ஆராதனைப்பலிகளும் 
வெள்ளை மாளிகையை என்ன செய்து விட்டன?

மினராக்களின் பாங்குகளை பெண்கள் நடத்த வழி விட்டு நின்றீர்களா?

மனம் பிசகிய இளம்பெண் உடல்மீது ஏறிக் குதித்து 
உயிர் பறிக்க முகமதுநபி ஆணையிட்டாரா? 

ஓசோன் படலத்தைக் கிழித்து சுற்றுச்சூழலை மாசாக்கும் 
 அமெரிக்க,ஐரோப்பிய அரசுகளை  போப்பாண்டவர் 
என்ன செய்து கிழித்து விட்டார்?

சன்னி,ஷியா,குர்த்து என்று பேதம் பிரிக்கும் 
இராக் சிரியா கொலைவாதிகளே 
ஒரு தொப்புள் கொடியில் பிறந்ததை மறந்து 
உங்கள் உடலங்களையும் பேதம் கொண்டு கிழித்து எறிவீர்களா ?

நீண்டது  ஒரு  நிழற்படமெடுக்கும் கருவி என அறியாமல் 
கண்ணீர் மன்றாட்டு நடத்தும் குழந்தைகளா 
உங்கள் கொலை இலக்குகள்? 

 நீங்கள் தனி நாடு பிடித்து எதைச் சாதிக்கப் போகிறீர்கள்? 

ஆஃப்ரிக்கா  தென் அமெரிக்கா ஆஃப்கனிஸ்தான் போல
ஓபியம்  மெப்பிட்ரோன் வயகரா கஞ்சா என நீங்களும்
உற்பத்தி செய்வீர்கள் அல்லது செய்ய வைக்கப்படுவீர்கள்


 உங்களின் மார்க்கங்களும் புனித நூல்களும்  வாழ்க்கைக்கான திறவுகோலாக நிச்சயம் இருக்கப் போவதில்லை என்றே 
வரலாறு நெடுக சாட்சியங்கள் பதிவாகி இருக்கின்றன 

ஐ. எஸ் ,அல்கொய்தா, ஆர்.எஸ்.எஸ், பெண்டகன் போன்ற  பெயர்கள் 
ஒரு சரக்கின் வெவ்வேறு வணிக முத்திரைகள் என்றே அறிவோம் 

பிஞ்சுகளின் மனதில் உயிரச்சம் விளைவிக்கும் 
உங்கள் முகம் பூசிய ஒப்பனைகள் கிழிபட 
உங்கள் வார்த்தைகள் வகுந்து பொய்தனை  நிரூபணமாக்கிட

மானுடத்தின் தூதுவர்களாய் மகரந்தங்களின் வாரிசுகளாய் 
  நாங்கள் இருக்கிறோம் ;ஆம் நாங்கள் இருக்கிறோம் Sunday, March 15, 2015

கிளையில் உயிர்த்திருக்கும் கவிதை
கவிஞர் ஆரிசன் ஹைக்கூ வழியாக தன் பார்வையை வண்ணத்துப்பூச்சியின் வண்ணமென வரைந்து தொடர்ந்து கவிதைகள் வழி இயங்கிக் கொண்டிருக்கும் நவீனக் கவிஞர்களுள் ஒருவர். சமுகத்தின் இயங்குதலை ,இயற்கையின் இயங்குதலை புரிந்து கொண்டவர் என்பதால் இவர் கையாளும் சொற்களில் உண்மையின் உண்மை  வந்து உட்கார்ந்து கொள்கிறது.  பூ மலர்வதைப் போல பொழுது புலர்வதைப் போல சன்னஞ்சன்னமாக அது தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது.

ஆரிசன் மொழி நமக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. ஹைக்கூ கவிஞராக முகிழ்ந்தவர் என்பதால் நீர்த்துப் போகாதபடிக்கு சொற்களை கட்டுறுதியாக காட்சிப்படுத்துகிறார்.

ஒரு சோப்பு குறித்துக் கூட சமுக உணர்வோடு எழுத முடியும் என்று ஸ்ரீஸ்ரீ ஒரு தடவை சொன்னது போல ஆரிசனின் கவிதை பாலை , மணல் ,பச்சையம் ,காற்று ,மரம் ,ஒற்றை இலை , பனி , நிலா ,கடலுயிரிகள் ,கிரானைட் ,கந்துவட்டி ,கருப்புப்பணம் , அம்மிக்குளவியில் உருகும் தாய்மை ,நெசவாளியின் கா குழி வரைக்கும் படிமத்தில் பந்தி வைத்திருக்கிறார்.

படைப்பாளி என்பவர் கிடைத்த உணர்ந்த வாழ்வின் தரவுகளை காலத்தின் முன்னும் பின்னும் சென்று தரவுகளின் நீட்சியை உண்மை போலும் புனைவாக்கி பின்னிப் பின்னி காட்டுபவர் மட்டுமல்லர். புனைவில்லாது காட்சிபுலன் வழியாகவும் ரத்தமும் சதையுமான வாழ்பனுபவத்தை நிகழ்காலம் நம்முன் வைக்கிற பொழுது அதை அப்படியே எடுத்து, அனுபவத்தின் கொதிநிலைக்கு ஏற்றது போல,மொழியில் குழைத்துத் தருபவரும் படைப்பாளிதாம்.

வெள்ளிநிலாவை பார்த்திருக்கிறோம். பால்நிலாவை பர்த்திருக்கிறோம்.அது என்ன சிவப்பு நிலா? சிவப்பு நிலா வழியாக வறட்சியின் தவிப்பை , மாசாகிப் போன சூழலின் உயிர் சுவாசத்தை காட்சிபடுத்தியிருக்கிறார்.
மழை முறித்துப் போட்டாலும் மரங்களை எடுத்து நட இயலாதபடிக்கான ம்னங்களின் நெருக்கடி இருக்கிறதே,அது செடியும் கொடியும் மரமும் தளைப்பதற்கான இடம் நிலம் என்பதை உணராமல்,நிலம் என்பது ஃப்ளாட் என்று குறுக்கிப் பார்க்கும் இரும்புக்குதிரையர்களின் பார்வையை பங்கீடு செய்கிறது கவிதை.

`மழை முறித்துப் போட்ட
மரங்களின் சோகத்தை
இன்னும் பார்த்தபடி
சாலையின் பயணம் தொடர்கிறது
இரும்புக் குதிரைகளோடு


`பாலின் நிறம்
கருப்பாகவே தெரிகிறது
உழைக்கும் தெருக்கோடி
மக்களுக்கு

என்று முடிகின்ற ஒரு கவிதை பாலில் தண்ணீர் கலந்து ஊழல் செய்யும் அரசாங்கங்களின் முகத்தை காட்டுகிறது.

கந்துவட்டிக்காரர்களுக்கு காவல்துறை கனகாபிசேகம் செய்யும் உண்மையை உரக்கச் சொல்கிறது நெல்லை கோபி குறித்து எழுதப்பட்ட கவிதை.

கறுப்புப் பணத்தை
கடலில் இருந்து எடுக்க
பூதம் ஒன்று
புறப்பட்டு வந்தது

என்று தொடங்கும் கவிதையின் பகடி வசீகரம்,  புறப்பட்டு வந்த பூதம் யார் என்பதை சொல்லாமல் சொல்லி,
“முந்தானை முடிச்சிலிருந்து
விடுபட முடியாமல் இருக்கிறது
முதலைகளின் தூவானமாக இருக்கும்
முதலாளித்துவம்
என்று ஊழல் முதலைகளுக்கு தூவானமாக இருக்கும் முதலாளித்துவம் சார்ந்து எந்த பூதம் புறப்பட்டு வந்தாலும் கதி இதுதான் என்று சொல்லி,  காவியின் பக்கத்தை காங்கிரஸின் பக்கத்தை பகடி செய்து மீட்சிக்கான தேடுதலைச் செய்கிறது இந்தக் கவிதை.

ஆறு, மலைகளை தூர்த்து எடுக்கப்பட்ட மணல் குவாரிகள், சதுக்கப்பாறைகள் பற்றிய நிகழ்காலத்தின் பாலையை வெம்மையை பதிவு செய்த ஆரிசன் நெடிதுயர்ந்து நிற்கிறார்.


காகங்களின் கரைதலில் பசியின் சுவடுகளைப் பார்த்தவர்
தாவிப் பறக்க முடியாமல்
கா குழிக்குள் அடக்கமாகிப் போகிறது
வாழ்க்கை

என்று நெசவாளிகளின் மீதான கைவினைத் தொழில்கள் மீதான நவீன தாராளமயத்தின் அழிமதியைப் பாடுகிறார் ஆரிசன்.

“ வார்த்தைகளை விட்டு
வெளியில் நின்றே சிரிக்கிறது
கவிதை
ஹைக்கூ எழுதிப் பார்த்த கவிமனசு என்பதால் சொல்லவிழ்ந்து சடை விரிக்காமல் நறுக்கென வந்து விழும் கவிதை வழி , அனுபவத்தின் படிமத்திரட்சியிலிருந்து கவிதை விலகி நிற்பதை கவிதையே கண்டுணர்ந்து சிரிப்பதாக எழுதினாலும்

குடித்த முலைப்பாலின் ஓர்மையில் உதடுசப்பி தூங்கும் தூளிக் குழந்தை போல

“ ஒரு மாலைப் பொழுதில்
மரக்கிளையில் உயிர்த்திருக்கிறது  
பறவை

என்றே பறவை பற்றிய எழுத்தானாலும் கூட , அது எமக்கு கவிதையே என்பதாகப்படுகிறது. வாழ்த்துகள் ஆரிசன்;தொடர்ந்து உயிருக்கு உரமாகட்டும் உங்களின்  சொற்றானியம்.
(படங்கள்:அய்யப்பமாதவன்)

Thursday, February 26, 2015

கணங்களின் தோற்றம்

-1-
கனவுகளில் உயர்ந்தெழும்
வீர நாச்சியாளின் நெடுவாள் முனை
உன் கண்களை பிரதிபிம்பம் செய்து கொண்டிருக்கின்றன
சில கணங்களினூடாய் தோற்றம் கொள்ளும் உன் முக இறுக்கமும்
 நாச்சியாளையே ஒர்மை செய்து கொண்டிருக்கிறது!

-2-
கன்னக்குழிச் சிரிப்பில்
சிக்குண்டு நான் கிடக்க
பெருவரம் வேண்டும் சகியே சகியே!

-3-
 ஆழப் பெருங்கடல் ஆயினும்
உன் மடிதானே அதன் புகலிடம்!

-4-
திசைப்பறவைகள்
ஒரு பொழுதும்
திக்கற்றுக் கிடப்பதில்லை!

-5-
வளர்பிறை
உன் குறுநகை!

-6-
அடர்ந்து பெய்யும் பனியும்
உன் அன்பையே ஞாபகப்படுத்துகிறது!
Tuesday, February 24, 2015

இயக்குநர் ஆர்.சி.சக்திமனிதரில் இத்தனை நிறங்களா? சிறை,கூட்டுப்புழுக்கள் என்று வந்த 
அவரின் படங்களைப் பார்த்து,அவர் மீது மரியாதை வந்த காலம் அது.
தர்மயுத்தம் படம் பெருவெற்றி பெற்றதோடு,அந்த தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு என்று வரும் மலேசியாவின் பாடலை எங்கு கேட்டாலும் உணர்வலை புரளும் படத்தை தந்தவர்.
அவரை 96 வாக்கில் சாய்நகர் வீட்டில் பல முறை சந்தித்து பேசியிருக்கிறேன்.
சினிமாவின் சாயலை எப்போதும் சொந்த வாழ்வில் படிய விடாத எளிய மனிதர்.
அவரின் பிள்ளைகளும் அப்படியே.என் வழியாக பல ஊர்களின் கலைஇரவிற்கு வந்து மனசில் உள்ளதை பளிச்சென்று பேசி மனங்களைக் கவர்ந்தவர்.
அவரின் மறைவிற்கு அஞ்சலியும் வணக்கமும்

Saturday, November 15, 2014

தமிழ்த் திரைப்படங்கள் உறவும் ஊடாட்டமும்


1970 களிலிருந்து தமிழ்த் திரைப்படத்தை பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறேன்.ஞானஒளி நான் பார்த்த முதல் திரைப்படம்.சிவாஜிகணேசன்,சாரதா,மேஜர் சுந்தர்ராஜன் நடித்தப் படம்.பி.மாதவன் இயக்கிய படம்.நான் கேட்ட முதல் திரைப்பாடலும் இந்த படத்தில் இடம் பெற்று டி.எம்.எஸ் பாடிய `தேவனே என்னைப் பாருங்கள் என்பதுதான்.நான் சமீபத்தில் பார்த்தப் படம் பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ்
ஞானஒளிக்கும் மெட்ராஸிற்கும் இடையில் நாற்பது ஆண்டுகள் ஓடிவிட்டன.இந்த நாற்பது ஆண்டுகளில் குத்து மதிப்பாக மூவாயிரம் தமிழ்த் திரைப்படங்கள் வந்திருக்கலாம்.நானும் குத்து மதிப்பாக ஆயிரத்து ஐநூறு படங்கள் பார்த்திருப்பேன்.

தமிழ்த் திரைப்படத்தை தென்னக அளவில் இந்திய அளவில் பிரபலப்படுத்திய கலைஞர்கள்,இயக்குநர்கள்,தயாரிப்பாளர்கள் நம்மிடையே உண்டு என்ற பெருமையும்,அவர்களோடு நாம் வாழ்ந்திருக்கிறோம்,பழகியிருக்கிறோம் என்ற கூடுதல் பெருமையும் உண்டு.

இந்தியத் திரைப்படத்திற்கு நூற்றாண்டு கால வரலாறு உண்டு என்பதினுள் தமிழுற்கும் இந்த நூற்றாண்டு பெருமை உண்டு.தமிழ்நாட்டில் திரைப்படம் வந்து நூறாண்டு ஆகி விட்டது.தாதா சாகிப் பால்கே தயாரித்த மவுனப்படமான ஹரிச்சந்திரா வந்த அடுத்த மூன்றாண்டில் சென்னை ஆர்.நடராஜமுதலியார் எடுத்த மவுனப் படம் கீசகவதம்.இது வெளிவந்த ஆண்டு 1916.

இந்த நூற்றாண்டில் தமிழ்த் திரைப்படத்தின் முகமும் மொழியும் வளர்ந்து வந்திருக்கின்றன. உலகெங்குமான திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைப்படங்கள் பங்கு பெறுகின்றன.அடையாளம் பெறுகின்றன.கதை மொழியும் காட்சி மொழியும் உடல்மொழியும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன.உலகப் படங்களோடு,இந்தி,வங்கம் போன்ற இந்திய மொழிப் படங்களோடு தமிழ்த் திரைப்படங்களுக்கான உறவும் ஊடாட்டமும் தொடக்க கால முதலே இருந்து வந்திருக்கின்றது.

கலைவாணர் நடிப்பில்,கருத்தில் சாப்ளினின் பின்புலம் இருக்கும்.பீம்சிங் படங்களில் சாந்தாராம் அணுகுமுறை இருக்கும்.சிவாஜியின் நடிப்பில் மார்லன் பிராண்டோவின் நுட்பம் இருக்கும்.ராஜா ராணி படத்தின் மூலம் ரோமன் ஹிஸ்டரி படமல்லவா?அறுபதில் மறைந்து போன அமெரிக்க இசைஞன் நேட்கிங் கோலின் பாதிப்பு தமிழில் இல்லையா?சத்யஜித் ராய்,ரித்விக் கட்டக் போன்றோர் தமிழ்ப் படங்களுக்கு நெருக்கமான ஆளுமைகள் அல்லவா?ரிதுபர்ன கோஷ் பெயரை தமிழ்த் திரைப்பட ஆர்வலர்களும் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

ஸ்ரீதர்,எஸ்.பாலசந்தர்,கே.பாலசந்தர்  வழியாக மாறத் துவங்கிய தமிழ்த் திரைப்படம் ஜெயபாரதி,தேவராஜ் மோகன்,பாரதிராஜா,மகேந்திரன்,பாலுமகேந்திரா,அரிகரன்,ஜான் ஆஃப்ரகாம்,சிங்கிதம் சீனிவாசராவ்,துரை போன்றோரின் படங்கள் ஃப்ரான்ஸ் புதிய அலையின் ட்ரூபோ,கோதார்த் பெயரை இவர்களின் படங்களை அறியாமலா மாறி வந்திருக்கும்.எங்க பாட்டன் சொத்து,ரிவால்வர் ரீட்டா போன்ற ஜேம்ஸ்பாண்ட் படங்களின் மூல ஹீரோ சீன் கானரி,ரோஜா மூர் தானே?

இந்த உறவும் ஊடாட்டமும் இயற்கைக்கும் சமூகத்திற்கும் அவசியமானது போலவே இயற்கையின் ஒர் அங்கமான மனிதர்களுக்கும் இவர்களின் கலையாக்கத்திற்கும் அவசியமாகிறது.ஊடாட்டமும் பரிவர்த்தனையும் பண்பாட்டுத் துறையில் ஒன்றை ஒன்று பாதித்து புரிதலையும் வளர்சியையும் சாத்தியமாக்குகிறது.ஏனைய துறைகளைப் போலவே திரைப்படத் துறையிலும் ஊடாட்டம் அவசியமாகிறது.

 பார்க்கத் தவறுகிற அல்லது பார்க்காத ஒரு கோணத்தை ஒரு மொழி படம் சொல்லும் பொழுது,அது இன்னொரு மொழி சார்ந்த படைப்பாளியின் உணர்தலை தொட்டுப் பேசி  விரிவாக்குகிறது.எங்கே நிற்கிறோம்?அடுத்து என்ன?என்பதை படைப்பாளி உணர்ந்த கோணம் தொட்டு துலக்குகிறது.புதிதாய் கிடைக்கும் புரிதல் அசலிலிருந்து இன்னொரு அசலை தம் மண் சார்ந்து,தம் மொழி சார்ந்து தம் சூழல் சார்ந்து உருவாக்குகிறது.  அசலின் சாயல் மூலக் கதையின் கருவாய் இருக்கும். ஆனலும் அது அசல் அல்ல.மூல அசல் தந்த விளைவில் தம் சூழல் சார்ந்து கதையில் வந்திருக்கும் இன்னொரு அசல் என்பதே சரி.

இப்படியான புதிய அசல்களை நம் திரை உலகம் உருவாக்கி வந்திருக்கின்றது.இந்த உருவாக்கம் தமிழின் திரை முகத்தையும் புதியதாய் உருவாக்கி இருக்கிறது.இந்த புரிதல் அல்லாவிடில் விஜய்யின் தெய்வத் திருமகள் ஐ ஆம் சாம் படத்தின் காப்பி என்பார்கள்.மிஷ்கினின் நந்தலாலா கிருசிரொ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்பார்கள்.

வெற்றிகரமாக ஓடிய நலன் குமாரசாமியின் சூது கவ்வும் படம் தமிழில் புது முயற்சி.மேலோட்டமாகப் பார்த்தால் இதில் என்ன புதிது என கேட்கலாம்.கடத்தல் கும்பல் பற்றிய கதை எனலாம்.கடத்தல் பின்னணியில் சமுகத்தை  பகடி செய்கிறது.சமுக இழிவுகளை பாத்திரங்களுக்குள் கொண்டு வந்து, கதைப் போக்கில் அவைகள் சமுகத்தை நையாண்டி செய்யும் பொழுது, வாழ்பனுவத்தின் மீது நையாண்டி  ஊடுருவி அனுபவத்தின் புரிதலை மேம்படுத்தி,அனுபவம் எங்கே இருந்து பெறப்பட்டதோ,அந்த சூழலை அந்த அரசியலை மாற்றம் செய்ய வேண்டும் என்கிற புரிதல் கதைப் போக்கில் நிகழும் பொழுது,மனம் இந்த நையாண்டியை,நக்கலை,பகடியை கை கொட்டி வறவேற்று ஆரவாரிக்கிறது.

*பிழைக்க ஆசை எனினும் வேலை கிடைக்காமல் அலாரம் வைத்து எழுந்து குளித்து பேண்ட் சர்ட் அணிந்து  தலை வாரி காலையில் குடிப்பதையே வேலையாக்கிக் கொண்ட ஒரு பாத்திரம்.
*புரிந்து கொள்ளப்படாத அலுவலகத்தை விட்டு வெளியேறும் கணினி பொறியாளர் ஒரு பாத்திரம். 
*நடிகைக்கு கோயில் கட்டி நடு வீதியில் தத்தளிக்கும் இளைஞன் ஒரு பாத்திரம்.
* அன்றாட செலவிற்கு மட்டும் ஆட்களைக் கடத்தி விடுவிக்கும் ,ஐந்து ரூல்ஸ் கடத்தல் குழு தலைவன் ஒரு பாத்திரம்.
*சினிமா எடுப்பதற்கான பணம் சேர்க்க போலி டாக்டரான சிறு கேடி ஒரு பாத்திரம்.
*அரசியலில் நேர்மையான அமைச்சர் ஒரு பாத்திரம்
*அரசியலை பணம் கரக்கும் தொழிலாக்கிக் கொண்ட முதல்வர் ஒரு பாத்திரம்
*குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க அரசியலை தேர்வு செய்யும் அமைச்சரின் மகன் ஒரு பாத்திரம்.
*பிரதிபலன் பாராத என்கவுண்டர் போலீஸ் ஒரு பாத்திரம்

இப்படி பாத்திரங்களை உருவாக்கி,பாத்திரங்களின் நோக்கம்,செயல்பாடுகளை குறிப்பிட்ட சூழலிற்குள் அதன் இயல்புத் தன்மையோடு இயங்க விடப்பபட்டிருக்கிறது.கதைக்கு நாயகர்கள் என்று யாரும் இல்லை.வில்லன் என்றும் யாரும் இல்லை.ஆனால் கதையில் ட்விஸ்ட் உண்டு;முரண் உண்டு.இந்த முரண்கள்தான் பாத்திரங்களோடு மோதி மோதி கதையை, காட்சிகளை நகர்த்திப் போய்க் கொண்டிருக்கிறது.

கதையில் இரு வேறு உலகம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.அன்றாடத் தேவைகளை சரிக்கட்ட சிறு சிறு கடத்தல் வேலையில் ஈடுபடும் ஒர் உலகம்.மக்களின் நம்பிக்கையை மூலதனமாக்கி கோடி கோடியாய் சுருட்டிக் கொண்டு மக்கள் மத்தியில் அம்பலப்படாத ஆளும் கூட்டம் இன்னொரு உலகம்.

சிறு கடத்தலில் ஈடுபடும் கூட்டத்தின் தேவைகள்,வாழ்வாதாரம் பூர்த்தியாகிற  சூழல் வாய்க்கிற பொழுது,  சாப்பாட்டிற்கான சிறிய திருட்டு,கடத்தல் குறையும் வாய்ப்பு உண்டு. மக்களின் நம்பிக்கையை நாசமாக்கி,அரசியலை,ஆட்சியை கொள்ளை அடிக்கும் களமாக மாற்றிக் கொண்ட ஆளும் கூட்டம் அம்பலப்படாமல்  மக்கள் மத்தியில் இருக்கிறது என்கிற உண்மையின் எதார்த்தம்  காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.இந்த இரண்டு பிரிவையும் வேறுபடுத்திப் பார்க்காமல் இரண்டுமே திருட்டுக் கூட்டம் என்ற முடிவிற்கு போவது ஆளும் கூட்டத்திற்கே சாதகக் களமாகிவிடும்.

 படத்தின் காட்சிகளும் பின்னணியும் பார்வையாளர்களுக்கு உணர்த்தும் மறைபொருள் இதுதான்.அரசியலில்  பரிச்சயம் கொண்டவர்கள் காட்சிகளை துலக்கமாகச் சொல்ல வாய்ப்பு உண்டு.அவ்வாறு வாய்ப்பு இல்லாத ஆனால் சமுகப் போக்குகளின் மீது கவனமும் கவலையும் கொண்ட படைப்பாளர்கள் இப்பபடியான மறைபொருளிலேயே சொல்ல இயலும்.இந்த மறைபொருள் கலைக்கு அவசியம்.இதுதான் அழகியலாக இயங்கி, பார்வையாளர்களின் கவனப்படிமத்தை பட்டை தீட்டுகிறது.

பெரும்பாலான நடிகர்கள்,  தொழிற்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர் உட்பட இந்தக் குழுவே புதுமுகக் குழுவாக இருக்கிறது.எனினும் தொழிற்நுட்பத்தில் அணுகுமுறையில் புதிய தொடுதலைப் பெறுகிறோம்.நகைச்சுவையை மிகச்சரியாக பயன்படுத்தி உணர்த்த வேண்டியதை உணர்த்தும் திரைலாவகம் இவர்கள் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கிறது.
 இங்கிலாந்தின் குறும்பட இயக்குநராக இருந்து பின் திரைப்பட இயக்குநரகாக மாறிய கெ ரிட்சி(gue Ritchie) யின்  உத்தி அவரின் கதை சொல்லும் முறைமை நலனிடம் இருப்பது தவறல்ல.

நலனும் நாளைய இயக்குநர் போட்டியில் வெற்றி பெற்ற இயக்குநர்.திரைக்கலைஞர் ரோகிணி இதை சிங்கிதம் சீனிவாசராவின் டச் என்கிறார்கள்.நகைச்சுவை பெரும் உத்தியாக இயங்கி இருக்கிறது.நலன்குமரசாமி மற்றும் ஸ்ரீனிவாசன் கவிநேயன் இருவரின் கதை மாறுபட்ட அணுகுமுறையோடு ஒரு படத்தை தமிழுக்குத் தந்திருக்கிறது.


 நிறைய இளம் இயக்குநர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.தமிழ்

 திரைப்படத்தின் மொழியை முகத்தை மேலும் அழகாக்குவார்கள் என்கிற

 நம்பிக்கை இருக்கிறது.இதற்கான அச்சாரமாக நலனையும் எதிர் நீச்சல்

செந்தில்குமார்,ஹரிதாஸ் குமாரவேலு,,மதுபானக்கடை

கமலக்கண்ணன்,அட்டகத்தி,மெட்ராஸ்

 ரஞ்சித் என சொல்லிக் கொண்டுப் போகலாம்.

Thursday, November 13, 2014

special economic zone or special cscape zone

போன ஞாயிற்றுக் கிழமை காஞ்சிபுரம் மாவட்டம் எனாவூரில் படித்துக் கொண்டிருக்கும் மகளை பார்க்கப் போனேன்.15 ஆண்டுகளுக்கு முன் பெங்களூர் பிரதான சாலை வழியாகப் போனால் ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவிலை தவிர வேறொன்றும் இருக்காது. பின் தங்க நாற்கரசாலை வந்தது.நிறைய கண்டெய்னர் லாரிகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தன.பல தாபாக்கள்,நாஸ்டா கடைகள் சாலைகளில் முளைத்தன.

பின்னர் சிப்காட் வந்தது. ஸ்பெசல் எக்னாமிக் சோன் வந்தது.சாலைகளில் சுங்க வசூல் வந்தது.நோகியா,பாக்ஸ்கான்,செய்ன் கோபன்,டொயோட்டா என பஸ்சில் பொகும் போது பார்க்கும்படியான பன்னாட்டு கம்பெனிகள் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி வந்தன.சென்னையிலிருந்து இங்கெல்லாம் வேலை தேடி போய் அலைந்தார்கள்.ஸ்ரீபெரும்புதூர்,பூந்தமல்லியில் மனை,கொடைகூலி எகிறியது.சாலைகளில் குளிரூட்டு ஹோட்டல்கள்,லாட்ஜ்கள் வந்தன.

கோட்டு,சூட்டு போட்ட சி.இ.ஓக்கள்,சேர்மன்கள்,பன்னாட்டு தூதர்கள் சென்னை கோட்டைக்கு வந்து முதல்வரைப் பார்ப்பார்கள்;பூங்கொத்து தந்து போவார்கள். பேட்டி தந்து போவார்கள். கோட்டை எழுந்தருளும் சாமிகள் இத்தனாயிரம் டாலர் முதலீடு வந்தது என்பார்கள்.ஊரெல்லாம் தண்ணீர்,மின்சாரம் தட்டுப்பாடு இருக்கும்.ஆனால் இந்த சோன்களில் எந்த வெட்டும் இருக்காது.சந்தை விலையைவிட மிகக் குறைந்த விலைக்கு அடிமனையை விற்றார்கள்;குத்தைகக்கு தந்தார்கள்.பதினைந்து ஆண்டுகள் வரிவிலக்கு என்றார்கள்;சலுகைகள் தந்தார்கள்.

இப்பொழுது பதினைந்து ஆண்டுகள் ஓடி விட்டன.வந்த கம்பெனிகள் அனைத்தும் இங்குள்ள தொழிலாளர் சட்டங்கள்,தொழிற்சங்க உரிமைகள் எதைனையும் மதிக்கவில்லை.அரசாங்கம் இந்த நிறுவனங்களுக்கு ஆதரவாக நின்று தொழிலாளர்களுக்கு எதிராக தடியை சுழற்றுகிறது. நவம்பர் 1 முதல் நோகியா 25 வயது கொண்ட இளந்தொழிலாளர்களை கட்டாய ஓய்வு தந்து வெளியே அனுப்பியது.ஆலையை கைமாற்றிக் கொண்டது.

வந்த டாலர் முதலீடு தொழிலாளர்கள், பொதுமக்களை ஏமாற்றி வந்த வழியே சென்று விட்டது.இந்த ஓடுகாலி கம்பெனிகளைத்தான் மோடி ஊர் ஊராக சென்று பேசி செல்பி எடுத்துக் கொண்டு இன்ஸ்டாகிராமில் படங்களைப் பகிர்ந்து கொண்டு வாங்கோ வாங்கோ என்று அழைக்கிறார்.நேற்று வரை இந்த பணியை காங்கிரஸ் செய்தது.

தேவை ஓடுகாலி டாலர் கம்பெனி அல்ல.வந்த லாபத்தை இங்கேயே மறுமுதலீடு செய்து,எவரையும் வீட்டுக்கு அனுப்பாத,உற்பத்தியை செய்யும் நிறுவனங்கள்.சீனாவில் அப்படித்தான் பன்னாட்டு முதலீடு வறவேற்கப்படுகிறது.கூடுதலாக சீனாவில் பத்தாண்டு முடிந்தால் அந்த கம்பெனி நாட்டிற்கு சொந்தமாகிவிடும்.அது சோசலிச அரசு.இது கார்ப்பரேடுகளுக்கு முறைவாசல் செய்யும் அரசு.

இன்று நோகியா ஆலைவாசல் பூட்டப்பட்டு கிடக்கிறது.ஜெர்மன் செய்ன் கோபன் கிளாஸ் கம்பெனியும் தொழிலாளர்களுக்கு சலுகை இல்லை,ஓவர் டைம்,அத்துக்கூலி என்று சண்டித்தனம் செய்கிறது.பன்னாட்டு கம்பெனி,செழுமையான வாழ்வு என்று நம்பிய அப்பாவி ஊழியர்கள் செய்வதறியாது நிற்கிறார்கள்.

சிஐடியூ  இங்கே சங்கம் ஆரம்பித்து,ஆலைக்கு வெளியே சங்கக் கொடி ஏற்றவும் உரிமை மறுக்கப்பட்டது.அரசு நிர்வாகத்தின் பக்கம் நின்று கொண்டது.தொடர்ந்து போராட்டம்,டிஸ்மிஸ்,போராட்டம்,முத்தரப்பு பேச்சுவார்த்தை,கைது,சங்கிலி பூட்டப்பட்டு கைது என்று தொடர்போராட்டம் நடந்தும் இந்த புரிந்துணர்வில் வந்த காப்பரேட்டுகள்,அரசுகளினூடான உறவில் புரிந்துணர்வை காப்பற்றிக் கொண்டது.

பொதுமக்கள்-தொழிலாளர்கள்-தொழிற்சங்கம் இடையே புரிந்துணர்வு வந்தாக வேண்டும். தருவது போல் வந்து தட்டிப்பறிக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளை எதிர்க்கும் புரிந்துணர்வு வந்தாக வேண்டும்.தாராளம்,தனியார் கொள்கையை எதிர்த்த புரிந்துணர்வு வந்தாக வேண்டும்.

Friday, September 5, 2014

உள்ளூர் முகங்கொண்ட உலகக்கவிதைகவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியிருக்கும் கிருதுமாலை
கவிதையை இந்த வார ஆனந்தவிகடனில் பார்த்தேன்.கிருதுமால் என்கிற சொல்லை எங்கோ படித்த ஞாபகம் முந்தி வந்தது. தமுஎகச அமைப்பின் பணி நிமித்தமாக அடிக்கடி மதுரை போய் வரும் நான்,மதுரையின் நாளிதழ்களை வாங்கிப் படிக்கும் பொழுது செய்திகளினூடாய் பண்பாடு,உள்ளூர் வரலாறு,இயற்கை,சுற்றுசூழல் குறித்த செய்திகளை படிப்பதுண்டு.அப்படியான ஒரு வாசிப்பில் இந்த கிருதுமால் சொல்லும் மனதில் தங்கிவிட்டது.

இன்று மதுரையில் சாக்கடையாக அறியப்படுகிற கிருதுமால் கால்வாய்,ஒரு காலத்தில் நதியாக இருந்து இராமநாதபுரம் வரை ஓடி,ஒன்றரை லட்சம் கிருஷிகாரர்களுக்கு விவசாயிகளுக்கு பயன்பட்ட நதியின் மணலை அள்ளி அள்ளி,நதியோட்டம் தடைபட்டு ,நதி பயணப்பட்ட படுகையெல்லாம்,குடியிருப்புகளாக குறுக்கப்பட்டு,அதன் மீதம் சாக்கடையாக அறியப்படும் பேரவலத்தை,அதன் ஆதி வரலாற்றை, கிருதுமால் தண்ணீரை குடித்து வளர்ந்த மக்களின்  தொடர்ச்சியாக வந்து நிற்கும் தமிழச்சி தங்கபாண்டியன்,கிருதுமாலை கவிதை வழி பாடியிருக்கிறார்.

கிருதுமால் சொல்லை வாசிக்கும் பொழுது ஊடாக திருமால் என்கிற சொல்லும் வந்து நிற்கிறது.கிருதுநதி நடந்த நிலமெல்லாம் திருமாலின் இடமாக அவரைப் பின் தொடர்ந்த மக்களின் நிலமாக இருந்ததை உணர்த்தும் குறிச் சொல்லாக கிருதுமால் இருப்பதை உணரலாம்.

பழைய மாமதுரை சார்ந்து அழகர்,சுந்தரேசப்பெருமாள்,கள்ளழகர் என்கிற வைணவச் சொற்களும் வைணவத்தைப் பின் தொடரும் மக்களின் வாழ்நிலையும் உடன் வந்து நிற்கிறது.மதுரையின் மேற்கு கிழக்காய் ஓடிய வைகையின் தென்புறத்தில் ஊரும் சொக்கனும் மீனாட்சியும் அருள் பாலிக்க,ஊரின் வெளியே வடக்கு ஆற்றங்கரையைத் தாண்டி சுந்தேரசப்பெருமாள் என்கிற அழகர் என்கிற திருமால் மாமதுரையினுள் வரயியலாத அரசியலின் பின்னணியை,திருமாலைத் தொடரும் கிருதுமால் மக்களின் வாழ்வையும் இதனூடாக இணைத்துப் பார்க்க வேண்டி உள்ளது.

வைகைக்கு இணையாக நாகமலையில்(நாகமலை புதுக்கோட்டை) தோன்றி ஒரு முன்னூறு கிலோமீட்டர் சுற்றுவட்டார நிலத்தினூடே இராமநாதபுரம் வரை ஓடி பாசனத்திற்குப் பயன்பட்ட கிருதுமாலும் திருமாலைப் போலவே ஊரினுள்ளிருந்து புறப்படுத்தப்பட்டிருக்கிறது.

சமணர்களின் வழிபாட்டுக்குரியதாக நாகப்பாம்பு இருந்ததை நாகமலையோடு ஒப்பிட்டு,மதுரையில் சமணத்தை ஒழிக்க பாண்டியஅரசுக்கு நெருக்கமான சைவம் செய்த அனல்வாதம்,புனல்வாதம்,கழுவேற்றம் போன்ற அழிச்சாட்டிய கிருத்திரிம நிகழ்வுகள் எல்லாம் இந்தக் கவிதையை வாசிக்கையில் வந்து போவதை தடுக்க இயலவில்லை.

கவிதையின் முடிவில் தமிழச்சி குறிப்பிட்டிருக்கிற அரசின் 2011 ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கை `வைகைக்கும் கிருதுமாலுக்கும் தொடர்பு இல்லைஎன்று சொல்லி முடிகிறது.

காலந்தோறுமான சமுகத்தின், சமுகத்தை வழி நடத்தும் ஆட்சியின் எதிரும் புதிருமான, பழமைக்கும் புதுமைக்குமான, முற்போக்கிற்கும் பிற்போக்கிற்குமான,நாத்திகத்திற்கும் ஆத்திகத்திற்குமான,ஒன்றிற்கும் மற்றொன்றிற்குமான, ஆட்சியாளர்களின் தேவைக்கும் பொதுமக்களின் தேவைக்குமான இடையில் நடைபெறும் கருத்துப் போராட்டங்கள்,திட்டங்கள் கருத்தை உள்வாங்கும் அல்லது மாற்றுக் கருத்தை முன் வைக்கும் மக்களின் வாழ்நிலையை அவர்களின் நிலத்தை நீரை, சூழலை பாதிப்பதை இதனூடாகப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.


அரசிற்கும் அரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான, அரசின் உள்நோக்கு செயற்திட்டத்திற்கும் அதனால் சாக்கடையாகிப் போன நதிக்குமான முரண், நதியின் புலம்பலாக கண்ணீர் ஓலமாக அன்றைய நதியால் வாழ்ந்த மக்களின் ஆவலாதியாக விசனமாக  வந்திருக்கிறது கவிதை.

பாண்டியர்களின் சைவசார்பு சமணம் வைணவத்திற்கு எதிரான, இவைகளைப் பின்பற்றும் மக்களுக்கு எதிரான சதியாக வைகை எதிர் கிருதுமால்,சொக்கன் எதிர் அழகர்,ஊர் எதிர் புறம் போன்ற எதிர் நிலைபாடுகளின் வழியாக இயங்கியதை வரலாற்று பொருள்முதல்வாத நோக்கில் அறிந்து கொள்ளலாம்.

ஆங்கில துரைமார்களின் காலத்திலும் புதிய துரைமார்களின் காலத்திலும் கிருதுமால் குறித்த வரலாற்று புரிதல் இன்றி,விளைநிலங்களை வேறு தேவைகளுக்கோ நகர்மயமாக்கலின் பொருட்டோ ஓடிய நதியோட்டத்தை முடக்குவது தேவை என்கிற அரசியல் சதிராட்டம் வழியாக,நதி சாக்கடையாக மாற்றப்பட்டு அதன் ஆதி ஓர்மை அறுபட்டு கிடக்கும் இடத்தை தொட்டுப் பேசுகிறது கிருதுமாலை.

நதியின் பாடாக மட்டுமின்றி நதியோடிய நிலத்தின் வரலாற்றை சொல்லும் உள்ளூர் வரலாறாக,மக்களின் வணக்கத்திற்குரிய ஒச்சம்மா,லிங்கம்மா,கச்சம்மா,எல்லம்மா போன்ற சிறுதெய்வ மரபை ஓர்மை செய்யும் பனுவலாக கிருதுமாலை தொடுக்கப்பட்டிருக்கிறது.

சிறுதெய்வ மரபையும் உள்ளூர் வரலாற்றையும் சொல்வதன் வழியாக

கவிதையின் இறைச்சியில் பாடுபொருளில் அதிகாரத்திற்கு எதிரான குரல் 

ஒலிக்கிறது;இந்தக் குரல் வறவேற்கப்படவேண்டியது.கார்ப்பரேட்டுகளின் 

உலகமயமாக்கலில் உள்ளூர் நிலமும் நீரும் சூழலும் கைமாறும் அரசியலுக்கு

எதிராக அவர்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்

ஆட்சியாளர்களுக்கு எதிரான குரலை மக்கள் சார்பாக இலக்கியத்தில்

மனசாட்சியுள்ள ஒரோர் படைப்பாளியும் பதிவது தேவை.அது ஒச்சம்மாவின்

குரலாக துவரிமானின் குரலாக உள்ளூர் முகங்கொண்டு ஆங்காரமாகவும்

ஓங்காரமாகவும் ஒலிக்கட்டும்;வாழ்த்துகள் தமிழச்சி தங்கபாண்டியன்.