Saturday, December 29, 2012

உனக்கு மட்டுமானது இல்லை பிறப்புறுப்பில் செருகப்பட்ட கம்பிநீ மறைந்ததாய் அறிவிக்கின்றன ஊடகமும் அரசும் 
விதவிதமான சொற்களால் புகழ்கின்றனர் உன்னை
தேசத்தின் மகள் என்றும் உண்மை நாயகி என்றும்

உனது வீட்டை அண்டை அயலாரை படம் பிடிக்கின்றனர்
உன்னை எதிர் கொண்டு வறவேற்க வருகின்றனராம் அதிகாரிகள்
நீ பிற்பகலிலோ பின்னிரவிலோ வந்து விடுவதாயும் சொல்கிறார்கள்

முன்னாயத்தமாக கூடுதல் காவலர்கள் நகரெங்கும் வலம் வருகின்றனர்
இந்தியா கேட் ,விஜய் சவுக், நார்த் ப்ளாக் ,சவுத் ப்ளாக்
நுழைய தடை செய்யப்பட்டுள்ளதாய் அறிவிக்கிறார்கள்

துவாரகை செல்லும் பேருந்து என்று ஏறி 

அந்த இருண்ட ஒரு மணி நேரம் வாதைப்பட்டது நீ அல்ல மகளே

பிறப்புறுப்பில் செருகப்பட்ட கம்பி உனக்கு மட்டுமானதாய் இல்லை சிதைக்கப்பட்டு தெருவில் வீசப்பட்டது நீ அல்ல மகளே

ஆயிரம் பக்கங்களில் தயாராகிக் கொண்டிருக்கிறதாம் குற்றப்பத்திரிகை
அதிகபட்ச தண்டனைக்கு வாதாடுமாம் அரசாங்கம்
விசாரணைக்கு இரு வேறு குழுக்கள் அமைக்கபட்டுள்ளதாம்

உன் மூளையும் ஈரலும் காயமேறி கிருமி தொற்று ஆகிவிட்டதாம்
உன் இதயம் அதிர்ச்சியில் உறைந்து நின்று போனதாம்
அறிவிக்கிறார்கள் மருத்துவர்கள்

பிடிபட்ட குற்றவாளிகளை விரல் நீட்டி 

மறைமுக குற்றவாளிகள் சட்டம் ஒழுங்கு என்று 
ஊடகம் முன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

டெல்லி மாநகரம் அமைதி காக்க வேண்டுமென்றும்
உன் ஆன்மா சாந்தியடைய வேண்டுவதாயும்
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்

 வன்புணர்விற்கும் வன்கொடுமைக்காளான பெண்களின் 

அமைதியுறாத ஆன்மா அரசாங்கத்தின் 
வாடிக்கைப் பதிலை கைகொட்டி ஏளனம் செய்து கொண்டிருக்கின்றன

பதின்மூன்று நாள் தொடர்ந்த உன் போராட்டம் மாமூல் பதில் கேட்கவா?
நீதியை காக்க வேண்டுமென்கிற ஆவேசத்தின் அடையாளம்

உன்னில் செருகப்பட்ட இரும்புத்தடியின் கோரத்தை 

தனக்கு நேர்ந்ததாய் கருதிக் கொள்கின்றனர்
ஐம்பது கோடி பெண்ணினம்

நீ எமது மகள் நீ எமது சகோதரி என
ஆவேசம் கொள்கிறது புதிய பாரதம்
டிசம்பர் 6 ஐயும் டிசம்பர் 16 ஐயும் நினைத்து
தூங்காது துடிக்கிறது ஜனநாயகத்தின் ஆன்மா

பெண் பருகப் படவேண்டிய இச்சைப்பால் என்றும்
ஆண் குறியின் துய்ப்பிற்கானது யோனி என்றும்
லிங்கத்தை வழிபடும் மனுசாஸ்திர சட்டங்கள்

 பொருட்களை சந்தைப் படுத்த பெண்ணை
நுகர்வுப் பொருளாக்கும் ஊடகங்கள்

நீர்,நிலம்,கடவுளுக்கு பெண்ணின் பெயர் சூட்டி
சிந்தனையை சுதந்திரத்தை பூட்டி வைக்கும்
மத்திய கால மதங்கள்

நியாயம் கோரி எழுந்த யுவபாரத சிவில் சமுகத்தை
ஊரடங்கு 144 என்று
அடக்க நினைக்கும் ராணுவ அரசாங்கம்

பிடிபட்ட குற்றவாளிகள் என்னவோ ஆறுபேர்

பிடிபடாத குற்றவாளிகளால் நிரம்பி வழிகிறது
நாடாளுமன்றத்தோடு  நார்த் ப்ளாக் சவுத் ப்ளாக்

திருவாதிரை நாளும் தாளகக் களியும்


நேற்று நண்பர், மொழிபெயர்ப்பாளர்,ஏஜிஎஸ் அலுவலகப் பணியாளர் கி.ரமேஷை பார்க்கச் சென்றிருந்தேன்.போகும் போது மணி 12.30 தொட்டு விட,தூறலும் சேர்ந்து கொண்டது.ஆடிட் ஜெனரல் அலுவலக சங்க அறையில் நான் நுழையும் போது,என்னை எதிர் கொண்டு ரமேசும் பிறிதொரு நண்பர் வெங்கடாசலமும் வறவேற்க,மத்திய அரசு ஊழியர்கள் மகாசபையின் பொதுச் செயலாளர் துரைப்பாண்டியனும் எதிர்கொள்ள சினிமா,பட்டிமன்றம்,லியோனி,டெல்லி சமாச்சார் என அவரோடு பேசிவிட்டு,மேலிருந்த உணவுக் கூடத்திற்கு என்னை சாப்பிட வைக்க நண்பரோடு அழைத்துப் போனார் ரமேஷ்

.ரமேஷ் சங்க பொறுப்பாளர் மட்டுமன்று;இலக்கியம்,கவிதை,வட்டார வரலாறு போன்றவைகளில் ஆர்வம் கொண்டவர்.எனக்கு உடன் வந்த வெங்கடாசலம் உப்புமாவும்,பஜ்ஜியும் வாங்கி வர,அதன் முன் தன் சாப்பாட்டு வட்டிலின் மேல்பகுதியை திறந்த ரமேஷ்,அதிலிருந்து கொஞ்சம் எடுத்து தந்து,`சாப்பிடுங்க;இது களி’ என்றார்.களியா? என்றேன்.`ஆமாம் களிதான்.இது அரிசிக் குருணையில் வெல்லம் சேர்த்து செய்தது.இன்று எங்கள் மதுரைப் பக்கம் திருவாதிரை கொண்டாடுகிறார்கள்.

அதனை ஒட்டி இந்த களியும்,தாளகமும் வீட்டுக்கு வீடு செய்து சாப்பிடுவார்கள்’என்று சொல்லி விட்டு தயிர்சாதமும் அதோடு இன்னொரு வட்டிலை திறந்து `இதுதான் தாளகம்.ஒன்பது வகையான காய்கறிகளோடு செய்யும் கூட்டு’ என்றார்.`என்ன திருவாதிரை சொல்லுங்கள் ’என்றேன்.

`பாண்டியன் காலத்தில்,பெருக்கெடுத்த வைகைக் கரையை வலுப்படுத்த வீட்டுக்கு ஒருவர் பணிக்கு வரவேண்டும் என்ற அரசனின் ஆக்ஞையை நிறைவேற்ற,அந்த மூதாட்டி வீட்டில் யாரும் இல்லாததால்,அவளுக்கு பதிலாக ஒருவன் கரையை வலுப்படுத்தும் பனிக்கு வருகிறான்.

அவன் பாண்டியன் வரும் அன்று மண் சுமக்காமல்,படுத்து தூங்கியிருக்க,பாண்டியன் கோபத்தில் அவனை கம்பால் அடிக்க,அந்த அடி பாண்டிய நாட்டிலுள்ள அனைத்து ஜீவராசிகளின் மீது வீழ,திகைத்து பதறிய மன்னன் முன் மண் சுமக்க வந்து தன்னால் அடிக்கப்பட்டவன் , பேருறுவாய் எம்பெருமான் சிவனாய் காட்சிதர,நெடுஞ்சாண் கிடையாய் மன்னன் மன்ணில் வீழ்ந்து தரிசித்த தினம் திருவாதிரை நட்சத்திர நாள்.

இந்த தினத்தை திருவாதிரை நட்சத்திர நாளை பாண்டிய நாட்டு மக்கள் திருவாதிரையாக இப்படிக் கொண்டாடுகிறார்கள்’என்று எனக்கு தந்த களியின் தாளகத்தின் வட்டார வரலாற்றுக் கதையை சொல்லி முடித்தார் ரமேஷ்.

அந்த களி,தாளகம் படமாகவும் இங்கு இருக்கின்றது.வலது வட்டிலில் இருப்பது களி;இடது வட்டிலில் தாளகம்

Tuesday, December 11, 2012

ப்ரான்சிஸ் த்ரோபாவின் உரத்தக் குரல்


நேற்று சென்னையில் தமுஎகச சார்பாக தொடங்கிய எழுத்தாளர் கலைஞர்களின்  2 ஆவது உலகப் படவிழாவில் ஃப்ரான்ஸ் புதிய அலை சினிமாவை தொடங்கி வைத்த முன்னோடியான ஃப்ரான்சிஸ் த்ரோபாவின் 400 blows படம் பார்த்தேன்.

59ல் வந்த படம்;கருப்பு வெள்ளை படம்.இன்றைக்கும் புதியதாய் இருக்கிறது படம்.அடுத்தடுத்த பணிகளுக்கு மனம் ஆட்பட்ட போதும்   படத்தின் 12 வயது சிறுவன் ஆண்டனி, மனதோடு வந்து கொண்டே இருக்கிறான்.

வீட்டில்,பள்ளியில் ஆண்டனி  சந்திக்கிற கசப்புகள்,வீட்டை விட்டு வெளியேற   வைக்கின்றன.சீர்திருத்தப் பள்ளி திருத்துவதை விட ,அதன் விதிகள்,கறார்கள் அவனை புரட்டிப் போடுகின்றன.தப்பித்து ஓடிக் கொண்டே இருக்கிறான் பாலம்,புல்வெளி,ஆற்றுவெளி,கடல்வெளி என்று ஓடிக் கொண்டே இருக்கிறான்.விதிகளும் கறார் தன்மையும் விடாது துரத்துகின்றன.தப்பிக்க வழியின்றி திகைக்க படம் முடிகிறது.

காட்சிகளும் காமிரா நகர்வும் ,ஸ்டுடியோவை விட்ட இயற்கை சூழலும்,இசையும் இன்னும் புதிதாய் இருக்கிறது.

வீட்டின் ,வெளியின் தப்புகள் அவர்கள் மனதை புரட்டிப் போட்டு விடுகின்றன.குழந்தைகள் முன்பு தப்பு செய்யாதீர்கள்.குழந்தைகள் யாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று படம் பேசுகிறது.

20 ஆண்டுகள் சென்ற பிறகே 77 களில் கோலிவுட்டிலும் நிர்மாணங்களை விட்டொழித்த இயற்கை ஸ்டுடியோ ஊடான காட்சி பதிவுகள் வரத் தொடங்கின.இந்தப் படத்தில் காட்டப்படுகின்ற கட்டுமான பணிகளுக்கான கிரேன்கள்,நமது ஊரில் சில ஆண்டுகளாகத்தான் புழக்கத்தில் இருக்கின்றன.ஃப்ரான்ஸ் சினிமாவில் மட்டுமல்ல,தொழிற்நுட்பத்திலும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சென்றதை 400 blows உணர முடிகின்றது.

ஆண்டனியின் `ப்ளோஸ் ’உரத்ததுக்   கேட்டுக் கொண்டே இருக்கின்றது.