இணைந்த இதயம்

Monday, November 28, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி 13    ஆற்றுபடுத்தும் ஆணை  

பூம்புகார்  பிரசுரத்தார் வெளியிட்ட  பாரதியார் கவிதைகள் நூலில் ஞானப் பாடல்கள் பகுதியில் உள்ள சென்றது மீளாது கவிதை இது:

      சென்றதினி மீளாது மூடரே!நீர்
         எப்போதும் சென்றதையே சிந்தை  செய்து
      கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
         குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
      இன்றுபுதி தாய்ப்பிறந்தோம்  என்று நீவீர்
          எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்  கொண்டு
       தின்றுவிளை யாடின்புற் றிருந்து வாழ்வீர்
           தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
 
 மக்கள்  மீது பேரன்பு கொண்டு  அவர்கள் எதிர்கொள்ளும்  வாதைகள் அழிந்து போகும்;எதற்கும் எப்போதும் கவலை கொள்வதை தவிர்த்து நடக்கும் செயல்களை மனதில் நிறுத்தி இன்று புதிதாகப் பிறந்தோம் என்று கவலை அற்ற மகிழ்ச்சியான மனதோடு வாழுங்கள் என்று சொல்வது குறி சொல்லும் முறை அல்ல. 

தன்னை சமூகத்தை சுற்றி நடக்கும் மாற்றங்களை உள்வாங்கிக் கொள்கிற அரசியல் சார் கவி மனது,மாற்றங்களை உருவாக்கும் புதிய சக்தி மீது ,புதிது புதிதாய் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கும் இளைஞர்கள் மீது பேரவா கொண்டு ,இவர்களால் மாற்றம் வரும் என்று நம்பிக்கை சுமந்து ,இவைகள் பற்றி தெளிவில்லாத ,கஞ்சி குடிப்பதற்கு இயலாத காரணம் இவை என தெளிவு இல்லாத எளிய மக்கள் மீது நேசம் கொண்டு ,அவர்களின் தலை வருடி,கரம் தொட்டு கவலை விடு;மாற்றம் வரும் என ஆறுதல் சொல்ல ஆழ்ந்த அரசியல் கவிமனதால் மட்டுமே இயலும். ஆற்றுப்படுத்துவது  புரட்சிகாரர்களுக்கு மட்டுமே சாத்தியம்.ஏனெனில் இவர்கள் அரசியல்,பொருளாதார,பண்பாட்டு காரணிகளால் மாற்றம் சாத்தியம் என்ற அறிவியல் பார்வை உடையவர்கள்.பாரதி இப்படியான தெளிவு கொண்டவன். 

பாரதி மறைந்து 5 மாதங்களில் அவன் விருப்பப்பட்டபடி அழகிய தாளில்,உயர்வான அச்சில்,அழ்கிய எழுத்துகளில்  அவர் மனைவி செல்லம்மா ஸ்வதேசகீதங்கள் என்ற பாரதியின் இரண்டாம் தொகுப்பை வெளியிடுகிறார்.அதில் ஆங்கிலத்தில் ஒரு முன்னுரை.10 பக்கம் கொண்டது.அதுவும் அவரின் அரசியல் வாழ்க்கை குறித்த முன்னுரை.அதில் சில வரிகள்: 

“தமிழ் மறுமலர்ச்சியை  முன்னெடுத்த முன்னோடி மறைந்து  விட்டான்.தேசியத்தால் ஈர்க்கப்பட்ட புறநானூற்று பாணன் மறைந்து விட்டான்.ஆனாலும் பல நாயகர்களைப் போல இவனும் தன் வசீகர புல்லாங்குழல் பாடல்களால் நம்மோடு வாழ்கிறான்.ஒரு தடவை வாழ கிடைத்த வாழ்க்கையில் ,ஏராளமான மாநாடுகள்,குழுக்கூட்டங்களில் ஆளும்கூட்டத்தை கீழிறக்கும் வண்ணம் அவன் குரல் ஒலித்தது.அதே பொழுது அதிகாரகூட்டத்திற்கு எதிராக  தமிழ்நாடெங்கும் அனற்வரி பூண்ட கவிதைகளை பாடினான்;எழுதினான்” 

இந்த முன்னுரையை பாரதியின் நண்பரும்,தொழிற்சங்கத் தலைவருமான,பாரதியை ஆற்றுபடுத்தியவர்களுள் முக்கியமானவருமான வி.சக்கரை என தன்னை அழைக்கும் சக்கரை செட்டியார் எழுதி இருக்கிறார். 
இத்தகைய தெளிவு கொண்ட பாரதி,நாட்டு விடுதலையில் எளிய மக்களை நாட்டம் கொள்ளச் செய்ய இந்த ஆறுதலை கவித்துவ வரிகளில் அதே பொழுது,உரிமையோடு அதட்டிஓர் ஆணையிடும் தோரணையில் பாடிச் செல்கிறான்.இந்த உரிமையும் ஆணையிடுதலும் யாவருக்கும் வாய்த்து விடாது.மக்களை நேசிக்கிற ,மக்களால் நேசிக்கப்படுகிற ஆளுமைகளுக்கு மட்டுமே இது இயலும்.இது ஆணவக்குரல் அல்ல.ஆணவக்குரல்களை அடிவருடிகள் மட்டுமே ஏற்பர்.மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

பாரதியின் ஞானப்பாடல்களை நம்மால் கடந்துவிட இயலாது.அவனின் தத்துவதரிசனம் அங்கே துலங்குகிறது.அவனின் ஞானப்புதையல் அது.தொடக்க காலத்தில் அவன் கொண்டிருந்த பல தெளிவின்மைகளிலிருந்து அவன் அனுபவம் சுடரும் பகுதி அது.பலவித வடிவமைப்பில் பல கோணங்களில் உண்மையை தேடும் இடம் அது.இது விதந்தோதுதல் அல்ல;அவன் மனதின் இயல்பை புரிந்து கொண்ட பின் எழுந்த அலைஓசை இது.

Friday, November 25, 2011

எஸ்.லட்சுமணப்பெருமாளின் வளசல்

திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.அன்று ஞாயிறு இரவு பஸ் கிடைக்குமோ என்னமோ என்கிற பதட்டம் மனசில்.உடன் வந்த தோழர்கள் இந்த பதட்டத்தில் முன்னரே கிளம்பி விட்டனர்.இப்பொது நான் மட்டும் தனியாய்.ஒரு பஸ் வாகாய் வந்து நிற்க வெடுக்கென ஏறி விட்டேன்.பரவாயில்லை கூட்டம் குறைவு என்ற ஆசுவாசத்தில் பஸ்ஸின் பின்பக்கம் வலது ஓர இருக்கையில் நடுவில் அமர்ந்து கொண்டேன்.

போகப் போக கூட்டம் தொற்றிக் கொண்டது.என் பக்கத்தில் அமர்ந்த இளைஞன் டி சர்ட் போட்டு பார்க்க டீசெண்ட் டாக இருந்தான்.எனது வலது ஓரம் இருந்தவன் தூங்கி வழிகிறான்.இன்னும் மூணரை மணி நேரம் ஆகும் சென்னை போக.சரி என்ன பண்னலாம் என் யோசிக்கையில்,மணிமாறன் தொகுத்த ஊருக்கு சென்று கொண்டிருக்கிறேன் கதை தொகுப்பு ஞாபகம் வந்தது.பின் பக்க அட்டையில் பார்வையை ஓட்டினேன்.

லட்சுமணப்பெருமாளின் பெயரைப் பார்த்து பக்கத்தை புரட்டி” வளசல் ”கதையை வாசிக்க ஆரம்பித்தேன்.இடதுபக்க இளைஞன் கை என் மார்பிலிடித்துக் கொண்டே வர ”தம்பி கையை கொஞ்சம் தளர்த்தி வச்சிங்கன்னா சரியாயிருக்கும் ”என்றேன்.அவன்” நீ நீங்க ஒழுங்கா வாங்க;நீங்க புக் படிக்க நான் இப்படி இருக்கணுமா?”என பதில் சொல்ல ,நான் “நீங்க உதவி செஞ்சிகன்னா இந்த கதையை படிப்பேன் “என சொல்ல பொறுமிக் கொண்டே இருந்தான்.

இடதுபக்கப் பொறுமல்,வலதுபக்க வழியும் தூக்கம் நடுவில் நான்
.
.கதை இப்படி ஆரம்பிக்கிறது.
வெங்கடாசலத்தேவர் பொஞ்சாதி கடல்தாயம்மாள் ஒரு ஓரத்தில் பொரும் பொரும்னு பொருமிட்டு இருந்தா.என்ன இருந்தாலும் அவரு அப்படி பேசியிருக்கக் கூடாது என்ற ஆரம்பத்திலேயே ஒரு ஈர்ப்பு வந்து விட்டது.வெங்கடாசலத்தேவர்,கடல்தாயம்மாள் என்கிற பெயர் கிளர்த்தி நின்ற மண்வாசனை ஒரு ஈர்ப்பை தந்தது.இதன் பெயர் ஒட்டில் ஈர்ப்பு என்று தப்பர்த்தம் கூடாது நண்பர்களே.

நாலரை பக்க கதை.

மகள் வேணிக்கு தான் பார்த்து வந்த மாப்பிள்ளை பற்றி சொல்கிறார் வெங்கடாசத்தேவர்,”நாத்துனா,கொழந்தானாரு தொரட்டுங் கிடையாது.மாப்பிள்ளை உன்னை கையோட விஜயவாடா கூட்டிட்டு போயிடுவாரு.அங்கே நீயி கால்படி அரிசியை பொங்கி வச்சிட்டு பொன்னம் போல படுத்து எந்திரிக்க வேண்டியதுதான்”என்பார்.பொன்னம் போல படுத்து எந்திரிக்க வேண்டியதுதான் என்ற சொல் அதன் எல்லையைத்தாண்டி இலகுவையையும்  கூடலின் இனிமையையும் நாசுக்காக சொல்லி நிற்கிறது.

இந்த எதார்த்தமான உரையாடல் ஒரு அழகைக் கொடுத்தது.

சொந்தம் பந்தத்தில ஏழு பிள்ளைகளுக்கு பெண் கொடுத்து,பெண் எடுத்து சீர்.செனத்தி,நல்லது,பொல்லது பார்த்துபோதுமடா சாமி அப்படின்னு ஆகிருச்சி அவருக்கு.அதனால கடைக்குட்டி வேணிக்கு அசல்ல மாப்பிள்ளை பார்த்திட்டு வந்து அவளிடம் மேற்படி பேசிக்கிட்டு இருந்தார்.

பொழுதெல்லாம் ஓடிப் போயி ராத்திரி வந்தது.வேணிக்கு கல்யாண களை வந்து விட்டிருந்தது.அக்காமாரு நாலு பேரு பத்தி ஓட்டி பாத்தா மனசுக்குள்ள்ள.அடிச்சிகிட்டாலும் புடிச்சிக்கிட்டாலும் ஆத்திர அவசரத்திற்கு நம்ம ஆளுக ஆதரவு இருக்குன்னு அவங்கவங்க வாழ்ந்திட்டு இருக்காங்க என்ற யோசனை வேணியை புரட்டிப் போட்டது.அப்பா இதுவரை தன் சொந்ததிலேயேதான் பெண் எடுத்து,பெண் கொடுத்திருக்கிறார் ;அம்மா வழியில கட்டிக் கொடுக்க அம்மவிற்குள்ள பிரியத்தை சட்டை செய்யாத அப்பாஎன்ற கூடுதல் யோசனை வேணியை ஆட்கொண்டது.

காலையில அப்பாவிற்கு தன் முடிவை சொல்ல வேண்டும் வேணி.தாவணியை சரி செய்து அப்பாவை தாண்டி,பாயில் ஓரமாய் சுருண்டு ப்படுத்திருந்த அம்மாவை இறுக அணச்சிப் படுத்தாள் வேணி.அம்மாவை உஸ் என்று அமர்த்தி ,”காலையில் உன் தம்பியை ஒம் மருமகனோட வந்து அப்பாவை பாக்கச் சொல்லு” என்றாள்.

”ஏ ராசாத்தி எம் பச்சைக்கிளி நாம் பெத்த செல்லம் என்னப் பெத்த அம்மா” என்ற அம்மவின் கொஞ்சலில் வேணி வெட்கத்தில கண்னை மூடிக் கொண்டு சிரித்தாள்.

இந்தக்கதையில் அசல்ல கட்டிக் கொடுத்தா நல்லது பொல்லதுக்கு தாங்கிக்க ஆள் துணை இல்லாம போயிரும் என்ற புள்ளிக்குள் நின்று கதை அபாரமா பயணப்பட்டு சாதக பாதகங்களை கதைப் போக்கில் விவரித்து இயல்பான முடிப்பில் முடியும் கதையில் மனம் விகசித்தது.மற்றபடி கட்டுடைப்பு தன்மையில் கதையை வாசித்து ஒன்னுமே இல்ல இதுல சாதி வாடை அடிக்கிறதுஎன்றும் சொல்ல ஆட்கள் இருப்பார்கள்.

Sunday, November 20, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி 12பாரதியை வசிகரித்த  சமத்துவம்

பாரதியின் கவிதைத் தொகுப்பில் புதிய  பாடல்கள் என சில பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.அதில்  ஒன்று குருவிப்பாட்டு.குருவியிடம்  மனிதர் கேள்விக் கேட்டு அதற்கு குருவி பதில் சொல்லும் முறையிலான  பாடல்.மொத்தப் பாடலை தொகுப்பில் வாசித்துக் கொள்ளலாம்.அதன் சில பகுதிகள்: 

கேளடா மானிடவா-எம்மில்  கீழோர் மேலோர் இல்லை
மீளா அடிமை  யில்லை-எல்லோரும் வேந்தரெனத் திரிவோம்
உணவுக்குக்  கவலை இல்லை-எங்கும் உணவு கிடைக்குமடா
பணமும் காசுமில்லை-எங்கு  பார்க்கினும் உணவேயடா 

ஏழைகள் யாருமில்லை செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வுகள் தாழ்வுமில்லை-என்றும் மாண்புடன் வாழ்வமடா
கள்ளம் கபடமில்லை-வெறும் கர்வங்கள் சிறுமையில்லை
கட்டுகள்  ஒன்றுமில்லை-பொய்க் கதைகளும் ஒன்றுமில்லை 
தீட்டுகள் தீதங்கள்-முதற் சிறுமைகள்  ஒன்றுமில்லை

குடும்பக் கவலையில்லை சிறுகும்பியத்துயருமில்லை
துன்ப மென்றில்லையடா-ஒரு  துயரமும் இல்லையடா 
விடுதலைப் பெறடா-நீ விண்ணவர் நிலைபெறடா
கெடுதலை ஒன்றுமில்லை-உன்  கீழ்மைகள் உதறிடடா

இன்ப நிலைபெறடா-உன்  இன்னல்கள் ஒழிந்ததடா
 சத்தியம்  கைக்கொள்ளடா-இனிச் சஞ்சலம்  இல்லையடா
தர்மத்தைக்  கைக்கொள்ளடா-இனிச் சங்கடம் இல்லையடா 

நீ எப்படி இருக்கிறாய்? உன் வாழ்க்கை முறை என்ன?என்று குருவியிடம்  கேள்விக் கேட்கப் படுகிறது.குருவி தான் நன்றாக இருக்கிறேன்.தனக்கு தின்ன தானியம் கிடைக்கிறது.வாழ்ந்திட ஒரு சிறு கூடும் உள்ளது.தானும் தன் இணையும் சென்று உலாவிட பூநிறைந்த மரங்கள் உண்டு;அடர்ந்த சோலைகள் உண்டு.திரிந்து விளையாட குளம்,ஏரி,சிறு குன்று,பெருமலை உண்டு என மட்டுமே சொல்ல வேண்டிய குருவி தன் எல்லைகளைக் கடந்து தம்மில் கீழோர் மேலோர் இல்லை என்கிறது.எல்லோரும் ஒன்று என்கிறது.உணவுக்கு பஞ்சமில்லை என்கிறது. 
ஏழைகளும்  செல்வர்களும் இல்லை என்கிறது.களவுகள் கொலைகள் இல்லாத காமுகர்களும் இல்லாத தனி உலகம் இது என்கிறது.விடுதலையைப் பெறு என்கிறது.இதற்கு சத்தியம்,தர்மத்தை கைக்கொள் என வழி சொல்கிறது.இப்படி செய்வதனால் மானுடர்களே உங்களுக்கு சங்கடமில்லை;இச்சகத்தினில் பெற இன்பம் மட்டுமே உண்டு என்கிறது.
இது குருவிகள் காணும் கனவு எனக் கொள்ளலாமா?அல்லது எங்கோ உலகத்தின் ஒரு பகுதியில் நிகழ்கிற மாற்றத்தை குருவிகள் வழி மானுடர்களுக்கு கடத்துகிற உத்தி எனக் கொள்ளலாமா?இதை குருவிகள் வழி அல்லாமல் நேரடியாக ஏன் சொல்லப்படவில்லை?நேரடியாகச் சொல்லாததற்கு இரண்டு காரணங்கள்;ஒன்று பிரிட்டிஸ் ஆட்சியில் இருந்த கடுமையான தணிக்கை,அடக்குமுறை.இன்னொன்று அழ்கியல் சார்ந்தது.ஆனாலும் இதில் அழகியலை அரசியல் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது.அழகியல் அரசியலை தின்றுவிடக்  கூடாது என்கிற அதீத கவனம் போலும் 

முன் எழுப்பிய இரு கேள்விகளுக்குக்கானப் பதிலை பாரதியின் கட்டுரைத் தொகுப்பிலுள்ள கட்டுரையான செல்வம்(2) வழி பெறலாம்.நீண்டக் கட்டுரையின் சில பகுதிகள் இப்படி இருக்கிறது.

“இதனிடையே மனித ஜாதி நாகரீகத்தில் முற்ற  முற்ற சமத்துவம் அவசியமென்ற கொள்கை ஒரு புறத்தே பரவிக் கொண்டே வருகிறது.இங்ஙனம் பரமார்த்த ஞானமுடையோர் மானிட வாழ்க்கை ஸுகமாகவும் ஸமாதனமாகவும்  நடைபெறவெண்டும் என்கிற லெளகீகக் காரணத்தைக் கருதி சகல ஜனங்களும் சமமாகவே நடத்தப்படவேண்டும் என்கிற கருத்தை பிரச்சாரஞ் செய்து கொண்டு வருகிறார்கள்.இக்கொள்கை நாட்பட நாட்பட ஐரோப்பாவிலும் அதன் கிளைகளாகிய அமெரிக்கா,ஆஸ்திரேலியாக் கண்டங்களிலும்,ஐரோப்பிய நாகரீகத்தை அநுசரிக்க விரும்பும் ஜப்பான்,இந்தியா முதலிய தேசங்களிலும் மிக விருத்தியடைந்து வருகிறது.” 

1917 நவம்பர் 7 ல் சோவியத் ருசியாவில் நடைபெற்ற புரட்சியின் வெற்றிக்குப் பிறகு பொது உடைமைச் சிந்தனை சார்ந்த வாத ,பிரதி வாதங்கள் உலகெங்கும் புது வீச்சாய்,புது பேச்சாய் அறிவுலகில் எழுகிறது.அரசியல் உலகிலும் எழுகிறது.உலகெங்கிலும் முதலாளித்துவ நுகத்தடியில் வதைப்பட்டு கொண்டிருந்த ,மாற்றத்தை விரும்பிய மக்கள் மனதை இது வசிகரிக்கிறது.ஐரோப்பாவைத் தாண்டி இந்தியா வந்த சமத்துவ கருத்தாக்கம் பாரதியையும் வசிகரிக்கிறது. 

எப்பொழுதும் அறிவுத் தேடல் மிகுந்த  பாரதி,பாழ்பட்ட பாரத தேசம்  அடிமை தளையறுத்து முன்னேற ,யாவருக்கும் உணவும்,சிறுமைகள் இல்லாத வாழ்வும் கிடைத்திட,யாவரும் தீட்டு பேதமின்றி சமத்துவமாக நடத்தப் பெற முதலாளித்துவ பிரிட்டன் போலன்றி ஸ்ரீமான் லெனின் தலைமையில் குடிமக்கள் சொன்னபடி குடி வாழ்வு,மேன்மையுற குடிமை நீதி சோவியத் மக்களுக்கு கிடைத்தது போல் தன் தாயக மக்களுக்கும் கிடைத்திட ஆவலுறுகிறார். 

பாரதி மேலும் தெளிவாக எழுதுகிறார்:”ஏற்கனவே ருசியாவில் ஸ்ரீமான் லெனின்,ஸ்ரீமான் மிந்த்ரோஸ்கி தலைமையில்  தேசத்து விளைநிலமும்,பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொது உடைமை ஆகிவிட்டது.” என்று வறவேற்று இம்மாற்றம் இந்தியாவில் மலர,எந்தந்த வகையில் மாற்றம் வரும் என்பதை உலகப் போக்கை கவனிக்கும் முற்போக்கு அரசியல்வாதி என்ற முறைமையிலும்,ஒரு படைப்பாளி என்ற உரிமையிலும் தான் பார்த்த,அனுபவித்த,தன் மக்கள் அனுபவிக்கிற மிடிமைகள் ஒழிந்து சமான,சகஜ வாழ்வு மலர குருவியை ஒரு பாத்திரமாக்கி,குருவியின் பார்வை வழி தான் சரியென உணர்ந்த கொள்கையை வந்தனம் செய்து ,அதன் பரவலுக்கு தன் கவிதையை தளமாக்குகிறார். 

வானத் தேவர்கள் போல  மேன்மை நிலை பெறவும்,கீழ்மையை ஒழித்திடவும்,துன்பம் இல்லாத நிலை எய்தவும் இந்தக் கவிதையில் ஒரு வழி சொல்கிறான் அந்த வழி சத்தியவழி,தர்மவழி.இந்த வழியில் மானுடர் செல்வது ஒன்றுதான் அவர்கள் செய்ய வேண்டிய கருமம் என்கிறான்.சமத்துவ,பொது உடைமை.வழிதான் பாரதி மொழிகிற சத்திய வழி;தர்மவழி.ஆனால் ஒன்று சமத்துவத்தில் முழு ஏற்பு கொண்டவன் இதன் நடைமுறையில்,எதிரியோடு மோதுவதில் சில விமர்சனமும் வைத்திருந்தான்.இந்த விமர்சனம் தோழமை விமர்சனம். முதலாளித்துவ இம்சையை புரிந்து கொண்ட அவனின் அகிம்சை ,கருணாவாதிகள்,நல்லவர்கள் அகிம்சை பக்கமே நிற்பது சரி என்கிற ரீதியிலான நட்பு விமர்சனம்..
(2011 நவம்பர் 21 தீக்கதிர் இலக்கியச் சோலையில் வெளியானது)