Saturday, July 20, 2013

அவமதிப்பிற்கு ஆளான வாலி





++வாலிக்கு இறுதி அஞ்சலி செய்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் படைப்பாளிகள்.++
படம்{கவாஸ்கர்}

வெள்ளி நிலவே விளக்காய் எரியும்
 கடல்தான் எங்கள் வீடு
-வாலி

கவிஞர் வாலி இன்றில்லை என்றாகி நம் நினைவுகளில் மட்டுமே இனி இருப்பார் என்றாகி விட்டார்.வாலியின் எழுத்துகளில் எளிமையின் வசீகரமும்   மொழின் துள்ளலும்  அடர்த்தியின் நளினமுமாக இருக்கும்.தொடர்ந்து ஐம்பதாண்டு காலமாக எழுதி வந்தவர்;புதிது புதிதாக சொற்களை எடுத்து இயங்கி வந்தவர்.1961 மேஜர் சந்திரகாந்தில் ஆரம்பித்து 2013 ன் கூத்தாடிகள் வரை திரைப்படம் வழியாக காதல்,தத்துவம்,மகிழ்ச்சி,துன்பம்,அரசியல்,எழுச்சி என தமிழ் தொட்டு தொடர்ந்து வந்தவர் வாலி.பதினைந்தாயிரம் பாடல்களில் விதவிதமான ரசரசமான வரிகளை காற்றில் உலவ விட்டவர்

 .சிக்கல் இல்லாத சிடுக்கு இல்லாத வரிகளை நெய்யும் ஆற்றல் கொண்டவர் .இவரின் வரிகளால் எம்.ஜி.ஆர் அரசியலில் தனது கருத்துகளை அழுத்தமாக அழகாக சொல்ல முடிந்தது.தொடர்ந்து திரைப்படத்தில் இயக்கி வந்ததோடு,அச்சு ஊடகத்தில் கவிதை,கட்டுரை,பத்தி எழுத்து,சொல்லோவியம் என கவனம் காட்டியவர்.மத்திய ,மாநில அரசுகளின் விருதுகள் பெற்றவர்;தமிழகத்தின் ஐந்து முதல்வர்களை அறிந்தவர்;பழகியவர்.அன்பின் முகத்தோடு யாவரிடமும் இருந்தவர் என்று வாலி உணரப்பட்டாலும் அவருக்கான அவர் தமிழுக்கான மரியாதையோடு அவரின் இறுதி அஞ்சலி நடைபெறவில்லை.

திரை உலகம் சார்ந்த சிலர் அவருக்கு அஞ்சலி செய்தாலும்,வாலியின் ரசிகர்கள்,சக படைப்பாளிகள் வாலியின் இறுதி நேரத்தில் பார்த்து  விடை கொடுக்க இயலவில்லை.வாலியின் இடம் தமிழில் என்னவாக இருக்கிறது என்று அவரின் சொந்த உறவுகளுக்கு தெரியாமல் இருக்கலாம்.ஆனால் இவரின் வரிகளால் வளர்ந்த திரைஉலகம்,படைப்பாளிகள்  வாலியின் இறுதி அஞ்சலியை ஒழுங்கு படுத்தி,அனைவரும் காண உதவ முன் வந்திருக்க வேண்டும்.குறிப்பாக அவரோடு நெருங்கிப் பழகிய கலைஞர் கருணாநிதி, வைரமுத்து,இளையராஜா,கமல்ஹாசன்,சங்கர் போன்றோர் இதை ஒழுங்கு செய்திருக்க வேண்டும்.

திரை உலகத்தின் உண்மை முகத்தை பார்த்து வந்த வாலியின் உறவுகள்,திரைஉலகத்தின் மீதான விமர்சனத்தை திரைஉலகத்தினரிடம் வெளிப்படுத்தாமல்,இறுதி அஞ்சலி செய்ய வந்த கவிஞர்கள்,பொதுமக்களிடம் வெளிப்படுத்தியது வருத்தமாக இருந்தது.மாலை ஐந்து மணிக்கு இறுதி சடங்கு என தெரியப் படுத்தி,ஒன்றறை மணிக்கு எடுத்ததோடு இல்லாமல் ,அஞ்சலி செய்ய வந்த பொது மக்களை அஞ்சலி செய்ய விடாமல் தடுத்து அனுப்பியது வாலிக்கு நிகழ்ந்த அவமதிப்பாகும் என்பதை வாலியின் குடும்பத்தாரோ அல்லது திரைஉலகமோ புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்து கொட்டும் மழையில் பெசந்து நகர் மின்மயானம் வரை சென்ற இறுதி ஊர்வலத்தில் அதிகபட்சமாக கலந்து கொண்டோர் இருநூறு என்கிறார் கவிஞர் பாரிகபிலன்.தலை சிறந்த ஒரு கவிஞரின் இறுதிப் பயணம் நிகழ்கிறது என்ற எந்த உணர்வும் இன்றி முகம் தெரியாத ஒருவரின் பயணம் போல சாலையில் போனது கொடுமை.ஒரு நீதிபதி கார் வந்தால் வழி கொடுக்கும் காவல்காரர்கள்,ஓர் அமைச்சர் கார் வந்தால் விலக்கி வழி தரும் போக்குவரத்து காவல்துறையினர் வாலியின் ஊர்வலத்தில் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தது.

அடிமைப்பெண் படத்தில் வாலியின் பாடலான அம்மா என்றால் அன்பு என்ற பாடலைப் பாடிய முதல்வர் ஜெயலலிதா, தனது தலைவரான எம்.ஜி.ஆரின் செல்வாக்கிற்கு தனது பாடலால் உதவிய  கவிஞருக்கு அஞ்சலி செய்ய கொடநாட்டிலிருந்து வந்து போயிருந்தால்  மரியாதையாக இருந்திருக்கும்.அதுவும் இல்லை;ஒ.பன்னீர்செல்வம் போன்ற இரண்டாம் நிலை தலைவர்கள் வழியாக அஞ்சலி செய்திருக்கலாம் தமிழ்நாட்டு அரசு.

அண்டை மாநிலமான கேரளத்தில் ஒரு படைப்பாளி,ஒரு கலைஞர்,ஒரு கல்வியாளர்  இறந்தால் மாநில அரசு ,இறந்தவருக்கு  மரியாதை செய்து,இறுதி விடை கொடுக்கிறது.

ஆனால்  பெசந்த் நகர் மின் மயானத்தில் வாலிக்கு வணக்கம் செய்ய  வந்த வைரமுத்து,பாக்யராஜ்,மேத்தா,பா.விஜய்,கபிலன் போன்ற  சொற்ப கலைஞர்களுக்கு ஒர் அஞ்சலி உரை நிகழ்த்தி,வாலிக்கு விடை கொடுக்க வேண்டும் என்று உணர்வில்லாது போனதை  ஏதும் அறியாதவர்கள் என்று எடுத்துக் கொள்வதா?அல்லது காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகள் என்று எடுத்துக் கொள்வதா?

மனசு உடுத்தின கவலைத் துணி
அவிழ்த்து எறி எதற்கு இனி

-வாலி

Monday, July 1, 2013

சமணர்கள் யார்?










இவர்கள் பிராமணர்கள் அல்லர்.பிராமணர்களுக்கு முன்பு,இந்தியாவில் ஆரிய குடியேற்றம் நிகழ்வதற்கு முன் இருந்த,திராவிடர்களின் சமயம் இது.

சமணம் என்றால் உருவ வழிபாடற்ற சமயம் என்று பொருள்.
ஆன்மாவில் நம்பிக்கை இல்லாத ,இயங்கு பொருள்(matter) சார்ந்த செயற்பாட்டின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள்.
இந்தப் பார்வை வைதீக மதமான பிராமணியத்திற்கு ,பிற்காலத்தைய இந்து மதத்திற்குக் கிடையாது.

அன்றைய இனக்குழு,அதன் பின்னான தொடக்க வேளான் சமுகப் பொருளாதாரத்தின் மையமாக விளங்கிய ஆடு,மாடுகளை அழிப்பதிலிருந்து காக்க வேண்டி,கொல்லாமை,புலால் உண்ணாமையை கடைபிடிக்க வழி காட்டியவர்கள்.

இந்தியாவில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயன்ற வைதீக மதம்,இவர்களிடமிருந்தே புலால் புசிப்பதை விடுத்து,புலால் மறுப்பை கடைபிடிக்கத் தொடங்கினார்கள்.

தொல்காப்பியர்,திருவள்ளுவர்,இளங்கோவடிகள் போன்றோர் சமணம் சார்ந்த படைப்பாளிகள்;அறிவாளிகள்.

தத்துவம்,அறிவியல்,இலக்கியம்,கலை,மருத்துவம் போன்ற துறைகளில் சமண அறிஞர்கள்,கலைஞர்கள்  மதிப்புவாய்ந்த பங்களிப்பை தமிழுக்குச் செய்தவர்கள்.

கி.பி 16 ஆம் நூற்றாண்டு வரை செல்வாக்கோடு இருந்து,மாறிய சமுகத்தின்  பொருள் சார்ந்த அதீத நாட்டத்திற்கு,சமணத்தின் முப்புரக் கொள்கையான காமம்,வெகுளி,மயக்கத்தை அழித்தல் என்ற செயற்பாடு, ஆசை,அனுபவித்தல் போன்ற தன்னோக்குப் பார்வைக்கு உதவியாக இல்லாததால்,கி.பி 16 க்கு பின் பின்னடைவை  சந்தித்தது.

என்றாலும் முற்றாய் அழிந்துவிடவில்லை.காத்திரமான தத்துவ,இலக்கிய செயற்பாட்டை இன்றளவும் தமிழுக்குத் தந்து கொண்டிருக்கிறது சமணம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்ற குறளின் முதற்பாட்டில் உள்ள ஆதிபகவன் என்பது கடவுள் அல்ல.
சமணத்தின் ஆதி தீர்த்தங்கரரான ஆதிநாதர் குறிப்பது.இந்த ஆதிநாதர் நிலந்தருதிருவின் பாண்டியனின் முதற்சங்கத்தில் இருந்த மதிப்புமிகு தமிழாசானும் ஆகும்.

சிங்கீதம் நினைவுகள்

  1972 ல் வெளிவந்த ராஜாஜியின் திக்கற்றப் பார்வதி நாவலை ஒட்டி சிங்கீதம் சீனிவாசராவ் எடுத்த திக்கற்றப் பார்வதி திரைப்படத்தின் சுவரொட்டிகளை என்...