இணைந்த இதயம்

Saturday, April 6, 2013

அயலும் தமிழும் சந்திக்கும் வலசை


கவிஞர் நேசமித்ரன்,கார்த்திகைப்பாண்டியனின்  ஒருங்கிணைப்பில் வலசை 3 ஆம் இதழ்  வெளிவந்திருக்கிறது.ஏற்கனவே உடலரசியல்;முன்றாம் பாலினம்(?) இதழ் வந்ததை அடுத்து இப்பொழுது குழந்தைகளின் கற்றல் குறைபாடு குறித்த பொருளை எடுத்து 212 பக்க இதழாக வந்திருக்கிறது.

வடிவும் ஆக்க முறையும் மகிழ்ச்சி தருகின்றது;நம்பிக்கை தருகின்றது.இதழாசிரியர்கள் இடைச்சேர்க்கை என்ற தலையங்கப் பகுதியில்,`அனுமதிக்கப்பட்ட சுவாச வெளியில் கருவறுக்கப்பட்ட பிராணிகளாய் மானுடர்கள்;கல்விகூடத்திற்கும்,பிராய்லர் கோழிப்பண்ணைகளுக்கும் வித்தியாசம் இல்லாத கல்விச்சூழல்’பற்றி தமது  கவலையை பகிர்ந்து கொள்கிறார்கள்.

இதழ் நெடுக அயலும் தமிழும் சந்திக்கும் புள்ளியாக வலசை இருக்கிறது.மதிப்புமிகு கூட்டுழைப்பாகவும் இதழ் இருப்பதை பார்க்க முடிகிறது.

ஒரு சிறு ஆதிக்க அதிகார கூட்டத்திற்கான வளர்ச்சியை ஒட்டி வணிக பிராந்தியமாகவும், தேவையானதை திருப்பிச் சொல்லும் அரசியற் கிளிப்பிள்ளைகளாகவும் மக்களை தேசத்தை வார்க்கும் அசமத்துவ சமுகச்சூழலில் கல்வியும்,மாணவர்களும் ஜனநாயகமற்று படைப்பூக்கமற்று , கற்றல் குறைபாடுகளும் மனச்சிதைவுகளும் கொண்டதான  நம் காலச்சூழலை இடைமறித்து மாற்றத்திற்கான விவாத மேடையாக வலசையின் படைப்புகள் ஆக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி.

படைப்புகள் கல்வியின் இருப்பை  யதார்த்தத்தை கட்டுரையாக,கவிதையாக,கதையாக சொல்கிறது.மாற்றம் கோரும் சூழலிற்கான படைப்புகள்,கேள்விகள்,விவாதங்கள் இல்லாமல் இருப்பது குறைபாடுதான்

வலுக்கட்டாயமான போதனாமுறை சிந்தனையை அழிக்கிறது எனில் இதன் மாற்றுதான் என்ன?நாம் கடந்து வந்த பழைய திண்ணைகளுக்கோ மரத்தடிகளுக்கோ காடுகளுக்கோ செல்வது மாற்றா?இயற்கையை புரிந்து கொள்வது கல்வியின் மிக முக்கியமான அம்சம் எனில் புரிந்து கொண்ட இயற்கையை மானுட வளர்ச்சிக்காக மேம்படுத்துவதும் அதனோடு வினை செய்வதும் அவசியம்

.வினையும் எதிர்வினையும்  மானுடத்திற்கும் இயற்கைக்கும் தேவை.இயற்கையின் காலில் விழுந்து புலம்புவதை விடுத்து இயற்கையை மானுட வளர்ச்சிக்கு ஆற்றுப்படுத்துவதே காலம் தோறுமான வளர்ச்சிக்கு ஏற்றது

கல்விக்கான மாற்று என்று விவாதிக்கும் பொழுது பாவ்லோ ஃபிரைய்ரே தவிர்க்க இயலாத ஆளுமையாக நம் முன் வரவேண்டும்.இதழில் ஃபிரைய்ரே குறித்த கட்டுரைகள் இல்லாதது குறைபாடே.எனினும் நேசமித்ரன்,கார்த்திகைப்பாண்டியன் மீது நம்பிக்கை இருக்கிறது;பெயர்தலிற்கான வலசையாக இன்றி பேசு பொருளாகவும் வலசையை மாற்றுவார்கள்.வலசை 4 ஐ எதிர்நோக்குகிறேன்.