Thursday, January 31, 2013

விஸ்வரூபம் :சர்ச்சையும் சந்தேகமும் 3


உலகநாயகன் என்ற பட்டத்தோடு மட்டும் இருந்தவரை மெய்யான உலகநாயகனாக்கியப் பெருமை தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவை சாரும். விஸ்வரூபத்திற்கான தடை நீட்டிப்பு  ஒட்டி கமல்ஹாசன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் தன்மை,செய்திகள் மனசாட்சி உள்ளோரை உலுக்கி விட்டது.

இந்தியா முழுவதும் செய்தி தீயாக பரவி விட்டது. இனி கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டை ஆண்டவன் மட்டுமில்லை  என உணர்த்தி விட்டன ஊடகம்.

தமிழ்த் திரைஉலகு சார்ந்த பல கலைஞர்கள் குறிப்பாக பாரதிராஜா,மனிரத்தினம்,ரஜினிகாந்த்,விஜயகாந்த்,சிம்பு,ராதிகா,குஷ்பு,பார்த்திபன்,செல்வமணி,கே.ஆர்,பிரபு,சிவகுமார்,வைரமுத்து,அரவிந்தசாமி,எஸ்.ஏ.ராஜ்கண்ணு போன்றோர் நெருக்கடியான இந்த கட்டத்தில் கமலஹாசனோடு நிற்கிறார்கள்;வாழ்த்துகள்.

 இந்தப் படத்தை தமிழக அரசு அணுகிய முறையை கடுமையாகச் சாடி இருக்கிறது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

பரமக்குடி கலவரம்,தர்மபுரி கொடூரம் என அண்மையில் தமிழகத்தில் நிகழ்ந்த அதிமுக்கிய நிகழ்வுகளில் ஊடகத்தை சந்திக்காத ஜெயலலிதா,விஸ்வரூபம் பிரச்சினையில் இன்று மதியம்(ஜனவரி 31) ஊடகத்தை சந்தித்திருக்கிறார்.

ஆறு நாட்களாக பேசப்பட்டும் எழுப்பப்பட்டும் வருகின்ற இப்பிரச்சினை சார்ந்த  பல கேள்விகள்,விமர்சனங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்திருக்கிறார்.கூடவே  கமலஹாசன் பற்றி அவர் வைத்திருந்த கருத்துகள் அவர் கொண்ட கோபத்தால் வெளியேயும் வந்துவிட்டன

கமல்ஹாசன் இந்தப் பிரச்சினையை ஏன் கோட்டிற்கு கொண்டு சென்றார்?அவர் ஏன் என்னிடம் முறையிடவில்லை?அவர் சொத்தை இழப்பதற்கு என் அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்?வேட்டி கட்டிய தமிழன்தான் அடுத்த இந்திய பிரதமர் என்று இவர் சொல்வதற்கு இவர் என்ன கிங்மேக்கரா?

என்று ஜெயலலிதா தொடுத்த பல எதிர் கேள்விகளால் தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொண்டார். இதுவரை ஊடகங்களும் பொதுமக்களும் விஸ்வரூப சிக்கல் குறித்து முன் வைத்த விமர்சனங்கள்,கருத்துகள்  சரி என்று இன்று ஜெயலலிதாவால்  நிரூபிக்கப்பட்டுள்ளது.

எவர் ஒருவரும் தன்னை நாடி நிற்காமல் போனால் இந்தக் கதிதான் என்று  ஏனைய திரைக்கலைஞர்களை விஸ்வரூப தடை வழி  மிரட்டியிருக்கிறார் ஜெயலலிதா. இவர் என்ன கிங்மேக்கரா என்று கேட்பதன் வழியாகவும் ஒவ்வோர் குடிமக்களுக்குமான கருத்து  வெளியிடும் உரிமையை மறுத்து தனது காழ்ப்பை  மெய்ப்பித்திருக்கிறார் தமிழக முதல்வர்.

கூடவே இந்த பேட்டியில் ஜெயலலிதா உண்மைக்கு மாறானவைகளை  சொல்லி இருக்கிறார்.ஜெயா தொலைக்காட்சிக்கு விஸ்வரூப படத்தின் செயற்கை கோள் ஒளிபரப்புரிமை கிடைக்காததாலேயே இந்த சிக்கல்  என்ற கருத்திற்கு ஜெயலலிதா பதில் சொல்கையில், ஜெயா தொலைக்காட்சியில் தான் எந்த பங்குதாரரோ, பொறுப்போ வகிக்கவில்லை என்றும் இந்த தொலைக்காட்சி அதிமுக வை ஆதரிக்கிறது என்றும் சொல்லிக் கொண்டார்.

 நாளாக நாளாக விஸ்வரூபம் திரைப்படம் குறித்த சர்சைகளும் சந்தேகங்களும் நீடித்துக் கொண்டிருக்கின்றன.புரியாத புதிர்கள் புரிய தொடங்கி இருக்கின்றன.அடுத்தடுத்து கூடுதல் தகவல்களோடு இந்த பத்தி தொடரும்..
Wednesday, January 30, 2013

விஸ்வரூபம் :சர்ச்சையும் சந்தேகமும் 2
நேற்று ஒரு நபர் அமர்வு(வெங்கட்ராமன்) சென்னை உயர்நீதிமன்றம்,
விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்திருந்த 15 நாட்கள் தடையை விலக்கி அளித்த  தீர்ப்பின் மீது இன்று மாலை(ஜனவர் 30) இருவர் அமர்வு நீதிமன்றம்(தலைமை நீதிபதி பொறுப்பு எமிலி தர்மாராவ்,அருணா ஜெகதீசன்) தடை விதித்திருக்கிறது.

வரும் திங்கள் அன்று அரசு தரப்பு விளக்கத்தை இருவர் அமர்வு நீதிமன்றம் கோரி இருக்கிறது.பிப்ரவரி 6 அன்று இதன் மீது இறுதி தீர்ப்பு அளிப்பதாக நம்பப்படுகிறது.

இஸ்லாமிய தரப்பிடமிருந்து பெறப்பட்ட புகாரின் மீது ஓர் ஆக்கப்பூர்வமான தீர்வை எட்டுவதற்கு மாறாக செங்கோல் ஏந்தி பரிபாலனம் செய்ய வேண்டிய அரசு,செங்கோலை கன்னக்கோலாக மாற்றி இருக்கிறது.

நேற்று வந்த தீர்ப்பை ஒட்டி தமிழ்நாடு எங்கும் பல திரையரங்குகளில் இன்று  காலை காட்சியாக படம் ஓடிக்கொண்டிருந்த பொழுது அதிமுக தரப்பினர் காவல்துறை உதவியோடு திரையரங்கினுள் நுழைந்து காட்சியை நிறுத்தவும் பொதுமக்களை பீதிசெய்தும் ரகளை செய்திருக்கின்றனர்.இதை அரசு செய்ய வேண்டியது என்ன என்ற கேள்வி பெரிதாய் எழுகிறது.

விஸ்வரூபம் திரைப்படத்தின் செய்தி இதன் ஆக்கம் என்பது பேசப்படவேண்டியதுதான்.விவாதிக்கப்படவேண்டியதுதான்.ஆனால் விவாதிக்கப்பட வேண்டிய விடயத்தை வேதனையாக்கி தீர்விற்கு உதவி செய்ய வேண்டிய அரசே எதிர்தரப்பாக மாறி நிற்பது வேதனையானது

 இன்று கமல்ஹாசன் அளித்திருக்கும் பேட்டியில் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் மதச்சார்பின்மையை மதிக்கும் மாநிலம் அல்லது தேசத்தில் குடியேறுவேன் என்று சொல்லி இருக்கிறார்.நீதிபதி நீதிமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு கமல்ஹாசன் பதில் சொல்கையில் தேசஒற்றுமையா?அல்லது தனிநபர் சுதந்திரமா? என்றால் தேசஒற்றுமை முக்கியம் என்றும் பதில் சொல்லி இருக்கிறார்.

இன்று மாலை இஸ்லாம் தூதுக்குழு ஒன்றிடம்(ஹாருண் எம்.பி,,பஷீர் அகமது உள்ளிட்ட குழு) கமல் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்கள் சுட்டிக் காட்டிய எழுதிக் கொடுத்திருக்கக் கூடிய ஆட்சேபங்களை நீக்கி படத்தை வெளியிட தயார் என்று அறிவித்திருக்கிறார்.

இந்த சந்திப்பிற்கு கவிஞர் வைரமுத்து பாலமாகச் செயல்பட்டிருக்கிறார்.இனிமேல் இந்த படம் குறித்து எந்த கருத்து வித்தியாசங்களும் தமக்கோ அல்லது இஸ்லாமிய குடும்பத்தினருக்கோ இல்லை என்றும் கமல் அறிவித்திருக்கிறார்.

இஸ்லாமிய தரப்பிலிருந்து இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு வரும் என்று சொல்லியே அரசு இன்று வரை பேசிவருகிறது.இன்றைக்கு எதிர்ப்பு காட்டிய அமைப்புகளே பேச்சுவார்த்தையில் தீர்வை எட்டியிருக்கிறது.எதை சொல்லி நீதிமன்றத்தில் இதுவரை  ஜெயலலிதா அரசு வாதாடியதோ அந்தக் காரணமே இப்பொழுது இல்லை என்றான பின் அரசு தன் விளக்கத்தை எப்படி அளிக்க இருக்கிறது என்று பின்னர் பார்ப்போம்.

இந்த அச்சுறுத்தலிற்கு ஜெயலலிதாவிற்கு தூபம் போட்டவர்கள் தமிழ்நாட்டு உள்துறைச்  செயலாளர் ராஜகோபாலன் மற்றும் சென்னை மாநகரகாவல் ஆணையர் ஜார்ஜ் என்றும் சொல்லப்படுகிறது.

அரசின் இந்த அச்சுறுத்தல் காரணமாக கமல்ஹாசன் மீது பெரியளவிற்கு அனுதாபம் ,ஆதரவு அலை உருவாகிக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது.


Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் :சர்ச்சையும் சந்தேகமும் 1

விஸ்வரூபம் திரைப்படத்தின் மீது தமிழக அரசு பதினைந்து நாட்களுக்கு விதித்திருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் விலக்கி இருக்கிறது.

கமல்ஹாசன்,இஸ்லாமிய அமைப்புகள்,தமிழ்நாடு அரசு இடையே நடைபெற்ற காரசார வாக்குவாதத்தின் நிறைவில்,படத்தின் மீது தடை விதிக்க இயலாது என்றும்,மறுநாள் முதல்(ஜனவரி 29) படத்தை வெளியிடலாம் என்றும்,144 தடை உத்தரவை நீக்கிக் கொள்ள வேண்டும் என்றும்,இது யாரையும் புண்படுத்தும் படம் அல்ல என்று அறிவிப்பு செய்து படத்தை திரையிட அனுமதி அளித்துள்ள நீதிபதி வெங்கட்ராமன் அவர்களைப் பாராட்டுகிறோம்.

2011ல் ஆட்சிக்கு வந்தது முதல் தமிழக அரசு அதன் முதல்வர் சில சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்;மாநிலத்திற்கு உதவ மறுக்கும் மத்திய அர சை எதிர்த்து சண்டமாருதமும் செய்து வருகிறார்.ஆனால்
விஸ்வரூபம் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதாவும் மாநில உள்துறையும் கையாண்ட விதம் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

ஒரு தரப்பு புகார் அளிக்கும் போது,மறுதரப்பை அழைத்து விளக்கம் கேட்டு தீர்விற்குப் போவதற்கு மாறாக ஒரு தரப்பாக நடந்து கொள்வது நேர்மையான அணுகுமுறை அல்ல.விஸ்வரூபம் பிரச்சினையில் அரசு ஒருதலைசார்பாகவே நடந்து கொண்டது.

இஸ்லாமிய அமைப்புகள் இரண்டு சுற்று கமல்ஹாசனோடு பேசியிருக்கிறது.படமும் போட்டு காட்டப்பட்டிருக்கிறது.படம் பார்த்த உடன் மாற்று கருத்தைச்சொல்லாமல் பல நாட்கள் கடந்து,படம் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்திரிக்கிறது என்று சொல்வது யாரோ இஸ்லாமிய தரப்பை தூண்டி விட்டிருக்கிறார்கள் என கருத வேண்டி உள்ளது.

சென்னை காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகாருக்கு சென்னையை சுற்றி படம் திரையிடக்கூடாது என காவல்துறை,144 ஐ காரணம் காட்டி தடைஉத்தரவு விதித்திருக்கலாமே தவிர(வாதத்திற்கு)மொத்த தமிழ்நாட்டிற்குமாக தடை விதித்திருப்பதுதான் அரசை சந்தேகத்தோடு பார்க்க வைத்திருக்கிறது.

அரசின் இந்த ஒருதலைசார்பிற்கு காரணம் என்ன என்று நாம் ஊகிக்கலாமெனினும் அரசு தன் தரப்பு விளக்கத்தை மக்கள் மத்தியில் விளக்க வேண்டும்.மாறாக சென்னை முதல் அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.இதன் தீர்ப்பு வந்த பின் ஏனைய விடயத்தை அலசலாம்..