மணிமேகலை : வாசிப்பின் அரசியல் , முனைவர் கா.அய்யப்பன் எழுதிய ஆய்வு நூல் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலவிருது பெற்றமைக்கான , தேர்வுப்பார்வை என்னால் எழுதப்பட்டு, தீக்கதிர் நாளேட்டின் இலக்கியச்சோலையில் பிரசுரமாகி இருந்தது. இதை மதிப்புறு தோழர் , விடுதலைப் போராட்ட தீரர் என்.சங்கரய்யா அவர்கள் வாசித்திருந்தார்கள்.இதை ஒட்டி இந்த நூலை வாசிக்க வேண்டுமென்ற அவாவை மயிலை பாலுவிடம் தோழர் என்.எஸ் வெளிப்படுத்தி இருந்தார்கள்.
மணிமேகலை வாசிப்பின் அரசியல் நூலை , அன்பிற்குரிய தோழரிடம் தரும் பொருட்டு, சந்திக்க நேரம் கேட்டு, தோழரின் சென்னை குரோம்பேட்டை இல்லத்திற்கு காலை சென்றேன். ஐந்து நிமிடம் தாண்டி பதினொன்று ஐந்திற்கு நான் செல்ல, முன்னமே ஆயத்த நிலையில், கூடத்தில் காத்திருந்தார் பொதுவுடமை இயக்கத் தோழர்களின் ஆதர்ச தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள்.
தோழருக்கு வயது தொண்ணூற்று ஆறு என அவரிடமே உறுதிப்படுத்திக் கொண்டேன்
.மிகுந்த ஞாபகம் ; தினசரி நாளேடுகளை வாசிக்கும் பழக்கம் ;பல தன்மையான செய்திகளை அறிந்து கொள்ளும் ஆர்வம் ;மனதிற்கு நெருக்கமாக பேசும் இயல்பு ; கால ஒழுங்கு என்று தன்னை முழுமையான புரட்சிக்காரராக தகவமைத்துக் கொண்டிருந்தார் தோழர் என்.சங்கரய்யா அவர்கள்.
கூடத்தில் நுழைந்ததும் , வாங்க வாங்க என்று கை தந்து வறவேற்றார் ஆதர்ச நாயகன். கண்ணாடி அணியாத நிலையிலும் தெளிவான பார்வை. தீர்க்கமான சொல்.கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் என்று வசீகரித்துக் கொண்டிருந்தார்.
மணிமேகலையிலிருந்தே பேசத் தொடங்கினார்.இலக்கியச் சோலையில் நூலை வாசித்திருந்தேன் ; டெப்தான ஆழமான நூல் என்று கருதுகிறேன் என்றார்.
ஆமாம் தோழர் ஆழமான நூலாக இருக்கிறது. திருமயிலை சண்முகம் பிள்ளை, கயப்பாக்கம் முருகேச செட்டியார்( 1894) அடுத்து, உ.வே.சாமிநாதய்யர் (1898) என்று சிறு குறிப்பு தந்துதான் இவர்களால், மணிமேகலையை பதிப்பிக்க முடிந்தது. இவர்கள் தவிர இதுவரை மணிமேகலைக்கு உரை எழுதப்படவில்லை. இப்பொழுது கா.அய்யப்பன் தான், பவுத்தக் கொள்கை நிலையிலிருந்து, முழுமையான ஆய்வை மணிமேகலைக்கு செய்திருக்கின்றார் என்றேன்.
உ.வே.சாமிநாதய்யர் , அவரின் ஆசிரியர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, நா.மு. வேங்கடசாமி நாட்டார் போன்றோர்களை நான் என்னுடைய கல்லூரி காலத்தில் படித்திருக்கிறேன்.இவர்களை தொடர்ந்து படிக்க வேண்டும் .நாம் அறிவுச் செல்வங்களை தேடிக் கொள்ள வேண்டும்.அதனால்தான் உங்களுடைய தமிழர் உரிமை மாநாட்டில் , சங்க இலக்கியங்களை படிக்கச் சொன்னேன்.நம்முடைய மரபான இலக்கியங்களை வாசித்து , நம்மை இலக்கிய பண்பாட்டு அறிவுநிலையில் , யாருக்கும் சளைக்காதவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று , முகம் பார்த்து , சற்றே முகத்தை முன்னுக்கு கொண்டு வந்து பகிர்ந்து கொண்டார்.
நம்மிடம் பேச்சாளர்கள் இருக்கிறார்கள் ; இசைப்பாடல் பாடுகிறவ்ர்கள் இருக்கிறார்கள் ; எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் ; நாடகக் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று நான் பேசும் பொழுது, புன்னகைத்தவாறே தன் இடது ஆட்காட்டி விரலை , முகத்தின் முன் எழுதிக் காட்டுவது போலவோ, சரி என்று ஏற்பளிப்பதாகவோ அபிநயித்துக் கொண்டு என்னை கவனித்துக் கொண்டிருந்தார் தோழர் அவர்கள்.
என் பாய்ண்ட் ஆஃப் வியூ என்னவென்றால் , இலக்கிய ஆய்வில் , பல்கலைக்கழக அளவில் அறிஞர்களை வசீகரிக்கும் அளவிற்கு , நம் தோழர்கள் சங்க இலக்கியத்தில், பழந்தமிழர் இலக்கியத்தில் பாண்டியத்தியம் பெற வேண்டும். இன்றும் அந்த இடம் நம்மிடம் வேகண்ட் ஆகவே இருக்கிறது என்று நீண்ட சுட்டு விரலை தன் பக்கமாக உள்ளிழுத்துக் கொண்டு பேசினார்.
அமரர் ஜீவா அவர்கள் நீங்கள் சொல்வது போல அன்று , பாரதி, கம்பன் , சங்க இலக்கியம் என்று பேசினார்கள்.நமக்கு வெளியே பொதுமக்களை , அறிவார்ந்தவர்களை வசீகரித்தார்கள் ; பின் ஆய்வு நோக்கில் தோழர் கே.முத்தையா பின் தொடர்ந்து எழுதினார் என்று நான் பகிர்ந்து கொண்டு, ஆனாலும் என்.எஸ், மணிமேகலை பற்றி தலைவர்கள் அளவில், நாம் அன்று பேசியதாக எழுதியதாக ஒன்றும் தெரியவில்லை என்றதை, கேட்டுக் கொண்டார்.
தமுஎகச என்னென்ன வகைமைகளில் இலக்கியப் பரிசு தருகிறது, மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை ,சென்னையில் எத்தனை பேர் உறுப்பினர்கள் என்று வினவினார் . நான் புதுமைப்பித்தன்,குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கே.முத்தையா,கு.சின்னப்பபாரதி பெயரில் வழங்கும் விருதுகள் ,சிறந்த முற்போக்கு இலக்கிய ஆளுமை விருது, திரைப்பட விருது என்று அனைத்து விருதுகளையும் சொல்லிக் கொண்டே வந்தேன்.
முற்போக்கு இலக்கிய ஆளுமைக்கான வறையறை என்ன என்று கேட்டார் தமுஎகச வை உருவாக்கிய தலைவர்களுள் ஒருவரான தோழர் என்.சங்கரய்யா அவர்கள். பேராசிரியர் ந.ரவீந்திரன் இலங்கையில் எங்கிருக்கிறார்? ஈழப்பகுதியா ? என்றார்.ஆமாம் தோழர் யாழ்பாணம் சார்ந்தவர் என்றேன்.கண்கள் பூக்க புன்னகைத்தார் அவர்.
கந்தர்வன் பெயரில் , புதுக்கோட்டை மாவட்டம் விருது ஒன்று கொடுத்தார்களே, அதை தொடர்ந்து தருகிறார்களா ? என்று விசாரித்தற்கு, பதில் சொன்னேன். அந்தத் தோழர்கள் கந்தர்வன் பெயரில், தமுஎகசவில் மாநில விருது ஒன்றை நிறுவலாமே என்று சொல்லி வந்தவர், கந்தர்வன் பெயரில் மாநிலக்குழுவில் விருது அமைப்பது நல்லது என்று ஆலோசனையாகச் சொன்னார்.
தோழர் , மேலாண்மையை நீங்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் பாராட்டியதாக , தீக்கதிரில் மேலாண்மை எழுதிய கட்டுரை வந்திருக்கிறது என்றேன். ஆமாம். அது சாத்தூர் கட்சிப் பொதுக்கூட்டம். நமக்கு வெளியே பேர் வாங்கிய, நம் மகத்தான படைப்பாளி அவர். அவரை வேறு மாதிரி நாம் டீல் செய்திருக்க வேண்டும் என்று சொல்லி வந்தவர் அமைதியானார். அருகிலிருந்த தோழரின் மகன் நரசிம்மன், மேலாண்மை வீட்டிற்கு , அப்பா போக வேண்டும் என்று சொன்னதாகச் சொன்னார். மேலாண்மை வீட்டின் முகவரி, செல்லும் வழி என்று தோழர் சங்கரய்யா அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.இந்திய அளவில் , அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்தார் , தொண்டால் பொழுதளந்த மகத்தான தோழர் அவர்கள். அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த கலாச்சாரப் போக்குகளின்படி விவாதித்து செயல்பட , அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அவசியம் தேவை. பரஸ்பரம் அனுபவங்களை பறிமாறிக் கொள்ள, அதற்கான ஓர் ஆலோசனை அமைப்பு தேவை என்றும், தம் ஆவலை வெளிப்படுத்தினார். .
இயக்குநர் கோபிநயினார் இயக்கிய அறம் திரைப்படம் பற்றி பேச்சு திரும்பியது.ஆமாம்.நான் கேள்விப்பட்டேன்.பத்திரிகைகளில் படித்தேன்.இந்த மாதிரிப் படங்கள் வறவேற்கப்பட வேண்டியது அவசியம் என்று வாழ்த்தினார். ஒரு மணி நேரம் ஆனது.
இந்த நூல் முனைவர் கா.அய்யப்பனுக்கு ஆறாவது நூல் என்றும், அவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் , இளம் அறிஞர் விருது பெற்றவர் என்றும் பகிர்ந்ததும், வாழ்த்துகள் என்றார்.

