துரோகத்திற்கும் விசுவாசத்திற்குமான போட்டா போட்டியாக புரிதலை உருவாக்குகிறது வடசென்னை.
பத்மாவிற்காக செய்த அசால்ட் தாக்குதல் , ஜாவா பழனியின் சாவில் முடிய ,சொந்தத் தம்பி சங்கர் பேரில் வழக்கு வாங்கி ,உயிரைக் காத்த காசிமேடு குணாவிற்காக ,சென்னை மத்தியச் , சிறை போய் ராயபுரம் செந்திலை போட்டுத் தள்ள ,முயற்சி எடுக்கும் , நாகூரான்தோட்டம் கேரம்போர்ட் அன்பு ,தன் சொந்த அனுபவத்தில் யார் நல்லவர்? யார் கெட்டவர் ?எனப் புரிந்து கொள்கிறான்.
பால்யத்தில் தன் மனம் கவர்ந்த காசிமேடு ராஜன் கொலைக்காக ,ராஜனின் காதல்மனைவி சந்திரா கேட்டுக் கொண்டதன் பேரில் ,ராஜனைக் கொலை செய்த குணா,செந்தில்,வேலு,ஜாவா பழனியை ஒவ்வொருவராக போட்டுத் தள்ள, பொருள் எடுத்து ,ராஜன் மீதான விசுவாசத்திற்காக துரோகத்தைப் பழி வாங்கும் அன்புவின் கதை , வெற்றிமாறனின் வடசென்னை .
நேர்கோட்டுப் பாதையில் கதை போகாமல் ,ஏதாவது ஒரு புள்ளியிலிருந்து கதையைத் தொடங்கி , க்ளைமேக்ஸ் நோக்கிப் போகும் , நான் லீனியர் கதையாக ,வடசென்னையின் கதையமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது .ஆகவே கதை என்ன என முதல் முறைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது .இரண்டு ,மூன்று முறை படத்தைப் பார்க்கப் பார்க்க கதையின் முடிச்சு அவிழ்ந்து கொள்கிறது.
ஆசைப்படும் வாழ்வு ஒன்றாகவும் எதிர்படும் வாழ்வு இன்னொன்றாகவும் இருந்து மாயக் கலைடாஸ்கோப் ஆட்டத்தை வாழ்வு ஆடுவதை ,உணர்த்தும் வடிவாக ,நான் லீனியர் உத்தி வெற்றிமாறனிற்கு பயன்பட்டிருக்கிறது. 1983 லிருந்து 2004 வரைக்குமான முப்பதாண்டு காலம் , படத்தில் காட்சியாக்கப்பட்டிருக்கின்றன . இந்தக் காலத்தில் சென்னை கடற்கரையை முன் வைத்து ,மாநில அரசுகள் என்ன ஆட்டம் ஆடியதோ அவைகள் உணர்த்தப்பட்டிருக்கின்றன .அந்தந்த அரசுகளின் ஆளும் கட்சிகளின் பிரதிநிதிகள் ,தத்தம் செல்வாக்கை பவர்குப்பம் ,காசிமேடு,ராயபுரம்,நடுக்குப்பம் பகுதிகளில் நிலைநிறுத்த எடுத்த முயற்சிகள் , அவைகளை அந்த மக்கள் எதிர் கொண்ட முறைகள் , படத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன
ராதாரவி வரும் காட்சிகளில் , வசனங்களில் அவர் , இந்தக் கட்சி என தெளிவாகிறது; ஒரு காட்சியில் அவர் வீட்டின் முகப்பில் பறந்து கொண்டிருக்கும் கொடி வழியாகவும் வெற்றிமாறன் அந்தக் கட்சியை துலக்கப்படுத்தி இருக்கின்றார்
ராஜனை முன் வைத்து கதை நாற்சதுரங்க காயாட்டம் ஆடுவதால் ,ராஜனின் தம்பிகள் ,கூட்டாளிகள் ,பயன்படுத்திக் கொள்ளும் ஆளும் கட்சிகள் ,வணிகர்கள் ,இடைத்தரகர்கள் என்று நாம் அறியாத அல்லது அறிந்தும் அறியாத ,இந்த உலகம் காமிரா முன் வருவதால் ,இதுதான் வடசென்னையா என கேள்விகள் எழுகின்றன .இதுவும் வடசென்னைதான் என நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
எதார்த்தத்தை பார்த்தவர்கள் என்பதால் , எமக்கு இதுவென்றும் புதிதாக இல்லை .இருந்ததை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் .அந்தக் காலத்தில் படத்தில் வருகிறவர்கள் போல சிலர் இருந்தனர் என்பதை நாம் அறிவோம். ராஜன் கொல்லப்படும் ஹோட்டல் காட்சி வருகிறதே ;அது தண்டயார்பேட்டையிலிருந்த ,இன்று லாட்ஜாக மாறியிருக்கின்ற ஹோட்டல் அம்பாஸடர் என்று பலருக்குத் தெரியும் .
ராயபுரம்,காசிமேடு,பள்ளம்,பவர்குப்பம்,நாகூரான் தோட்டம்,பூண்டி தங்கம்மாள் தெரு ,ஜீவாநகர் ,சென்ட்ரல் ஜெயில்,கடல் என்று வடசென்னையின் பல பகுதிகள் படத்தினுள் வருகின்றன . மக்கள் படத்தினுள் வருகின்றனர் .அன்பு அந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பிரதிநிதி .
பத்மா ,பத்மாவின் குடும்பம் ,குறி சொல்லும் பெண் என படம் அவர்களை உள்வாங்கியிருக்கின்றது. குணா,செந்தில்,வேலு,பழனி,சிவா என யாருமே சூழலின் கைதிகளாகவே இருக்கின்றனர் .இவர்கள் வழியாக அரசியலை , தொழிலை செய்வோர்களின் வெட்டுக்காய்களாக , தாம் இருப்பதை உணர்கின்ற்னர் .பிள்ளைகள் பெரியவர்களாகி வருகின்றனர் என்ற கவலை அவர்களை வறுத்தெடுக்கிறது .இந்தத் தொழிலை கைவிட்டு விடலாம் என்றும் ஆசைப்படுகின்றனர் .இவர்கள் மீது நாம் பரிதாபம்தான் கொள்ள வேண்டும் .நமது கோபம் இவர்கள் வழியாக அரசியல் செய்கின்றவர்கள் மீது உருவாக வேண்டும் .
பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அதனதன் போக்கில் இயல்பாக இயங்குகின்றன.குறி சொல்கின்ற சாமியாடிப் பெண் அப்படியே மனதில் தங்கி விடுகின்றார். சந்திராவின் காதலும் அன்பும் உட்பூத்திருக்கும் கோபமும் கொலையுண்ட ராஜனுக்கு அஞ்சலி செலுத்த போகும் வழியில் கால் இடறி விழும் துக்கமும் அற்புதமான பாத்திரமாக சந்திரா அமைக்கப்பட்டிருக்கின்றது.
பத்மாக்கள் அப்படித்தான் அந்தப் பகுதியில் இருந்தார்கள்;காதலித்தார்கள் ;பேசினார்கள் .அடுத்த வீட்டில் டிவி பார்க்கப் போய் முத்தம் கொடுப்பது முத்தம் வாங்குவது ,ஒலியும் ஒளியும் காலத்திலிருந்து தொடரும் அடையாளங்கள் . பத்மாவின் தம்பி கேரக்டர் அப்படியும் இருக்கின்றன .
ஜாவா பழனியின் கெத்து உடல்மொழி அனாயாசமாக வெளிப்பட்டிருக்கின்றது .சங்கர் கேரக்டர் வடசென்னை மண்ணின் அடையாளம்தான் .ராஜன் பாத்திரத்திற்கான மூர்க்கமும் மோகமும் உடலும் அமீர் நடிப்பில் பார்க்கிறோம்.
அப்பாவி இளைஞனின் பால் வடியும் முகத் தோற்றம் , சூழலில் திமிறி எழுவதை தனுஷிடம் ரசிக்க முடிகிறது .தம்பி பாத்திரம் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது .எந்த வெக்கையையும் உணர்ந்து தேவையான முடிவெடுக்கும் அன்புமிகுந்த பாத்திரமாக அந்தத் தம்பி பாத்திரம் கச்சிதம்.
செந்திலின் மனைவியாக வரும் பெண் , அடடா அப்பாவித்தனத்தையும் மனசிற்குள் புழுங்குவதையும் வெகு இயல்பாக வெளிப்படுத்தியிருக்கின்றார்
( 2018 ல் படம் வெளி வந்த அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி எழுதப்பட்டது.இன்றுதான் வெளியாகிறது)