Wednesday, February 3, 2016

13 ஆவது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா

              விக்டோரியா முன் வைக்கும                      ஜெர்மனி
இந்தோ சினி அப்ரிசியேசன் பவுண்டேசன் தமிழக அரசின் உதவியோடு 13 ஆவது சர்வதேச திரைப்படவிழாவை சென்னையில் நடத்தி முடித்திருக்கிறது. ஜனவரி 6 தொடங்கி 13 வரை ஏழு திரையரங்குகளில் 146 படங்கள் திரையிடப்பட்டிருக்கின்றன. தமிழில் கிருமி,மாயா.பிசாசு,ஆரஞ்சு மிட்டாய்,36 வயதினிலே,ரேடியோ பெட்டி, ஓட்டத்தூதுவன்,தனி ஒருவன் என திரைக்கு வந்ததும் வராததுமான பனிரெண்டு படங்கள் தமிழ்ப் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டன. 

கிருமியும் ரேடியோ பெட்டியும் முதல் இரண்டு இடங்களைப் பெற்று பரிசுகளைப் பெற்றுள்ளன. சினிமா குறித்த விவாத அரங்குகளும் நடைபெற்றன. மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், நடிகை மனோரமாவின் சில படங்களும் அஞ்சலி என்கிற முறையில் திரையிடப்பட்டன.

எட்டு நாட்கள் நடைபெற்ற திரையிடலில் சுமார் மூன்று லட்சம் ரசிகர்கள் பங்கேற்றிருப்பார்கள். கண்ட்ரி ஃபோகஸ் என்ற வகையில் சீனா,வெனிசுலா படங்கள் திரையிடப்பட்டன. தொடக்கப் படமாக ஜெர்மெனியின் விக்டோரியா திரையிடப்பட்டது.இந்தப்படம் மிகச்சிறந்த கதைப்படமாக பெர்லின் படவிழாவில் வெள்ளிக்கரடியை வென்றிருக்கிறது.சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதையும் பெற்றிருக்கிறது. சிங்கிள் ஷாட் என்கிற நுட்பத்தைக் கொண்டு இரண்டேகால் மணிநேர படமும் ஒளிப்பதிவு செய்தமைக்கு பெர்லின் படவிழாவில் விருது பெற்றிருக்கிறது.

விக்டோரியா
நான்கு இளைஞர்கள் ஒரு யுவதியைச் சுற்றி பெர்லின் நகரின் ஒரு நாள் பொழுதின் , கொண்டாட்டம் ,அன்பு, கொடூரத்தை , மறைவுலகத்தை சித்திரித்த படம் இது. ஸ்பானிய யுவதி பெர்லினிற்கு வேலை தேடி இடம் பெயர்ந்து வந்து மூன்று மாதம் ஆகிறது.பெர்லினின் ஒர் உணவு மதுபானக் கடை ஒன்றில் பணி முடிந்து , அதிகாலை நான்கு மனிக்கு தான் தங்கும் இடத்திற்குப் போகிறாள். போகும் வழியில் இரவுக் கடையில் மது குடித்த இளைஞர்கள் நால்வர் அவளைப் பகிடி செய்கின்றனர்.தம்மோடு பெர்லினை சுற்றிப் பார்க்க அழைக்க அவளும் உடன் செல்கிறாள். போகும் வழியில் பகிடி மதுவருந்துதல் என்று இருக்கின்றனர்.

இந்த நால்வரில் ஒருவன் பாக்ஸர் . பெர்லினின் மறைவுலகத்தோடு தொடர்பு கொண்டவன். சொன்னே என்கிறவன் யுவதியைப் புரிந்து கொள்ள முயல்கிறான்.அது காதலாய் அரும்புகிறது. இந்தப் புரிதல் அரும்பும் இடம் அற்புதமானது. யுவதியின் கடைக்குப் போகும் சொன்னே , அவளின் அறைக்குப் போக, அங்கிருக்கும் பியானோவில் தனக்கு வாசிக்கத் தெரியும் என்பது போல சொன்னே பாவிக்க, ஒரு புன்முறுவலோடு யுவதி பியானோவில், மெபிஸ்டோ வால்ட்செஸின் இசைக்கோர்வை ஒன்றை வாசித்து தன் உணர்வை வெளிப்படுத்த, இசையில் வெளிபட்ட உணர்வைப் புரிந்து கொள்ளும் சொன்னே , அவளை விட வயது அதிகமானவன் ; எனினும் அன்பிற்கு இது தடையில்லை என்றே காட்சி உணர்த்துகிறது.

யுவதி கள்ளம் கபடம் இல்லாமல் இளைஞர்களோடு நட்புணர்வில் பழகுகிறாள். பாக்ஸர் வங்கி ஒன்றை கொள்ளையிடப் போக,அவன் காரோட்டி போதையில் சரிந்து விழுகிறான். கார் ஓட்ட சொன்னேவை அழைக்க அவன் தயங்க, அவர்களோடு இந்த ஒரு தடவை மட்டும் , கார் ஓட்டி வங்கி கொள்ளைக்கு சொன்னேவின் நண்பியும் போகிறாள். அடிக்கும் கொள்ளையில் பத்தாயிரம் யூரோவை இவர்களுக்குள் பகிர்ந்து கொண்டு,மீதியை மறைவுலக நபரிடம் தந்து விட வேண்டும் என்பது பாக்ஸருக்கு சொல்லப்பட்டுள்ளது.

கொள்ளைக்கான ஒத்திகை கட்டளை பிறப்பித்தல் காட்சியில் வெளிப்படும் டெரரிலிருந்து படம் எகிறிப் போகிறது. வங்கி கொள்ளையிடப் படுகிறது. அவ்வாறே பத்தாயிரம் யூரோவை தம் பங்காக எடுத்துக் கொண்டு,மதுபானக் கடைக்குப் போகும் வழியில் போலிஸ் இவர்களை மோப்பம் பிடித்து சுற்றி வளைக்க பாக்ஸர் பிடிபடுகிறான்.காரோட்டி போலிஸ் துப்பக்கிச் சூட்டில் இறக்கிறான்.பிடிபடும் முன் பங்குத் தொகை பத்தாயிரம் யூரோவை , சொன்னேவிடம் தந்து போகிறான் பாக்ஸர். சொன்னேவும் துப்பாக்கிச் சூட்டில் பலத்தக் காயம் படுகிறான்.அவனைக் காப்பாற்றும் பொருட்டு அவனோடு தப்புகிறாள் யுவதி.  

சொன்னேவை காப்பாற்ற , துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த அடுக்ககத்திலிருந்து போலீசை ஏமாற்றி ஓட்டலிற்கு வந்து சேர்வது வரை படம் படு வேகம். ஓட்டலிற்கு வந்து சேரும் சொன்னேவிற்கு வயிற்றில் பலத்தக் காயம் ரத்தப் போக்கு தான் பிழைக்க மாட்டேன் என்பதை உணர்ந்த சொன்னே, அவளை பத்தாயிரம் யூரோவோடு தப்பிப் போகச் சொல்கிறான்.அவள் மறுக்கிறாள்.நீங்கிப் போக இயலாது என கண்ணீர் சிந்துகிறாள்.வாய்ப்பில்லை கிளம்பிப் போ என்கிறான்;மறுக்கிறாள். இறந்து விடுகிறான் சொன்னே. சொன்னேவின் முன் யுவதி வாயில் எச்சில் ஒழுக அழும் இடம் , பிரிவின் வலியை உணர்த்தும் இடமாக இருந்து அனைவரையும் கசியச் செய்கிறது.

வேறு வழியில்லை. தப்பிச் செல்ல வேண்டும். தப்பிச் செல்கிறாள் ; அதிகாலை அதே நான்கு மணி அளவில். பெர்லின் கூட்டத்தில் கரைந்து போகிறாள்.அவள் தப்ப வேண்டும் என்று உட்லண்ட்சில் படம் பார்த்த எண்ணூறு பேரும்,ஆவலில் இருக்க , அவள் பிடிபடாமல் தப்பியதும் பலத்த கிளாப்ஸ் தியேட்டரில் எழுந்தது.

யுவதியாய் வந்து நட்புணர்வோடும் பாலின நிகர்நிலையில் இளைஞர்கள் நால்வரோடும் அவள் அடிக்கும் லூட்டி பேச்சுகள் , லயா கோஸ்டாவை படு யூத் என்று காட்டுகிறது. சொன்னேவிற்கு அவள் மெபிஸ்டோ இசைக் கோர்வையை வாசித்து விம்மும் பொழுது, தாங்க முடியாத சோகத்தை அடக்கி வெளிப்படுத்த முயலும் இடத்தில் , அன்பிற்கு ஏங்கும் பெண்ணாக மனதோடு கரைந்து விடுகிறார் லயா கோஸ்டா.

ஐரோப்பிய யூனியனில் செழிப்பான வளர்ந்த நாடு என்கிற ஜெர்மனியின்
உண்மை முகத்தை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் முன் வைக்கிறது செபாஸ்டியன் ஷிப்பர் இயக்கிய விக்டோரியா.சிங்கிள் ஷாட்டில் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஸ்ட்டுல்லா ஃபாரந்த் குரோவ்லன்.

நன்றி: தீக்கதிர்-இலக்கியச்சோலை/2016 பிப்ரவரி 01