Wednesday, June 22, 2016

அணுமூலப்பொருள் விநியோகக் குழுமமும் அமெரிக்காவின் தந்திரமும்நம் ஊடகங்கள் சீனாவிற்கு எதிரான செய்தியை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இப்பொழுது அணுமூலப்பொருள் விநியோகக் குழுமத்தில் இந்தியாவை சேர்க்கக் கோரி அமெரிக்கா ஆதரவு தருகிறது என்றும், இதை சீனா எதிர்ப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

உண்மை எது? சீனா என்ன சொல்கிறது? அமெரிக்காவின் நோக்கம் என்ன? இதை அறிய நமக்கு அவகாசம் இல்லாமல், கபாலி கபாலி என்றும் , மு.க வை எதிர்த்து ஜெ என்ன சொன்னார் ? ஜெவை எதிர்த்து மு.க என்ன சொன்னார் என்றே வெற்றாகப் பேசி நேரத்தை போக்கிக் கொண்டிருக்கிறோம்
.
அணுமூலப்பொருள் விநியோகக் குழுமத்தில் இந்தியா சேர்வதற்கு என்ன தேவை வந்தது ? தேவை இருக்கிறது என்றால், வளர்ந்த நாடுகள், சோசலிசச் சார்பு நாடுகளுக்கு எதிரான முடிவெடுக்கும்  , இம்மாதிரி குழுக்களில் இந்தியா உண்மையை உரக்கப் பேசுமா? அல்லது சமீப காலங்களில் இந்தியா அவ்வாறு பேசி இருக்கிறதா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியம் , தோரியம் போன்ற தாதுப் பொருட்கள் தமிழ்நாட்டின் குமரி மாவட்டம் , ஆந்திரக் கடற்கறைகளில் இருப்பதை நாம் அறிந்தோமோ இல்லையோ அமெரிக்காவும் பிரிட்டனும் அறிந்திருக்கிறது. இதனைக் கைப்பற்றத் துடிக்கும் அமெரிக்கா  இந்தியாவைக் கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டும் சாக்கில், சீனாவிற்கு எதிராக தொடர்ந்து இந்தியாவை நிறுத்தி, தனது ராணுவ அணிசேர்க்கையை , ஆசிய வட்டாரத்தில் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

மோடியின்  சமீபத்திய அமெரிக்க சுற்றுப்பயணத்தில் கையொப்பமிட்ட உடன்படிக்கைகள் வழியாகவும் ,  அமெரிக்காவின்  வெஸ்டிங் அவுஸ் என்ற அணுசக்தி நிறுவனத்திற்கு இப்பொழுது , ஆந்திர கடற்கறையைத் திறந்து விட்டதன் வழியாகவும், இந்தியாவை அமெரிக்காவிற்கு சரண் அடையச் செய்த செயல்கள் வழியாகவும் , உலக அரங்கில் தன் தனித்த கூட்டுச்சேராக் கொள்கை அடையாளத்தை, இந்தியா இழந்து விட்டது.

வளரும் எளிய  நாடுகளுக்கு ஆதரவாக  , சுயேச்சையான முறையில் குரல் கொடுக்கத் தவறிய இந்தியா, nuclear suppliers group ( NSG ) என்ற அணுமூலப்பொருள் குழுமத்தில் இணைந்து எதைச் சாதிக்கப் போகிறது ?

Nuclear  non proliferation treaty ( NPT) என்ற அணுஆயுதப் பரவலிற்கு எதிரான தடைச் சட்டத்தில் கையொப்பம் இடாத இந்தியா உட்பட  , எந்த நாடுகளையும் , அணுமூலப்பொருள் விநியோகக் குழுமத்தில் சேர்க்கக் கூடாது என்ற அமெரிக்கா , இன்று தன் நிலைபாட்டை ஏன் மாற்றுகிறது ? என்றே சீனா கேள்வி எழுப்புகிறது.

அமெரிக்காவின் நோக்கம் இந்தியா உட்பட உலகம் அறிந்ததுதான். சீனாவை அதன் அறிவை அதன் அசுர வளர்ச்சியை அதன் பலத்தை மட்டம் தட்ட வேண்டும் என்கிற, அமெரிக்காவின் சோசலிச எதிர்ப்பு எண்ணமே, ஏகாதிபத்திய அரசியலே காரணம்  ஆகும்.

இந்தியா , அமெரிக்காவின் ராணுவ விளையாட்டிற்கு துணை போகாமல் சீனா
,பாகிஸ்தான்,இலங்கை போன்ற அண்டை நாடுகளுடன், தன் நட்பை

வலுப்படுத்த வேண்டும். நட்பையும் நல்லிணக்கத்தையுமே இந்தியமக்கள்
என்றும் விரும்புகிறார்கள்

நன்றி :https://thetimestamil.com/
23.06.2016


Monday, June 6, 2016

நீர்கொத்தி மனிதர்கள் நாவல் குறித்து


அபிமானியின் நாவல் இது.
1967-1971 காலவாக்கில் கதை சொல்லப்படுகிறது. இந்தக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு எல்லையை ஒட்டிய பல கிராமங்களில்  ஒன்றில் நிலவிய கோடைவறட்சி,  குடிநீருக்கான பஞ்சம் , இந்தத் தடத்தில் செல்லும் நாவல், சாதி,சாதிதுவேசம் என்று  ஒதுக்கபட்ட மக்களிடம் வெளிப்படும் சாதிய முரண்பாட்டின் மீதான விமர்சனத்தை எழுப்பிப் பேசுகிறது.

வர்க்கம் சாதி என்ற பிரிவுகளில் கடைநிலையாய் இருக்கும் மக்கள் மத்தியில் வெளிப்படும் முரண்பாட்டில் அரசு தப்பித்துக் கொண்டு , நம்மை அதிகாரம் செய்யும் ,அதிகாரப்பரப்பு குறித்து கேள்வி எழுப்புகிறது நீர்கொத்தி மனிதர்கள்.

சாதிப்படிநிலையில் கீழ்நிலையில் அலைவுறும் மக்கள் மத்தியில், தனக்குக் கீழேயும் அதிகாரம் செலுத்த வேண்டிய,  மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கருதும் எளிய மக்கள் குறித்து, நமக்கு பெரும் விசனத்தை அபிமானி  உருவாக்குகிறார்.

நாவலின் ஒவ்வொருக் காட்சியும் வலி மிகுந்த துயர் சித்திரமாகப் படிந்து, நம்மை அலைக்கழிக்கிறது.


வாழ்ந்த வாழ்வை ஞாபகம் செய்யும் எழுத்தாக  , அசலான வாழ்வின் மீதான குறுக்குவெட்டுப் பார்வையாக நாவல் அழுத்தமாக விழுந்திருக்கிறது.
நீர்கொத்தி மனிதர்கள் / தடாகம் வெளியீடு / விலை ரூபாய் 220/
போன் : 9791020127