Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

Wednesday, October 18, 2017

பண்டிகைகளும் கொண்டாட்ட மனநிலையும்

 


தீபாவளியின் கொண்டாட்ட மனநிலைக்கு  , பொருள் உற்பத்தி சார்ந்த சந்தை மனோபாவம் காரணம். சமுகத்தின் வாழ்வாதார இயங்குதலிற்கு, அரசுகளின் நிலைத்தன்மைக்கு சந்தை அவசியமானது.

தீபாவளி சார்ந்த  காலத்தில், உற்பத்திப் பொருட்களின் வணிக விநியோகச்சந்தை சார்ந்த பணப்புழக்கம் , தொழிலாளர்கள் தொட்டு முதலீட்டாளர்கள் வரை அவசியமானது.

ஆண்டுதோறும் வரும் , இருபதிற்கும் மேற்பட்ட மதங்கள் சார்ந்த சாராத பண்டிகைகள், மாதம் தோறுமான திருமணங்கள் , இதனை ஒட்டிய உற்பத்திகள், பணப்புழக்கம், பொருள் உற்பத்திக்கும் அதன் விற்பனைக்கும், அதை ஒட்டி வாழ்வு நடத்துவோருக்கான , வாழ்வாதார தேவைகளுக்கு அவசியமானது.அதற்கு கொண்டாட்ட மனநிலை உருவாக்கம் அவசியம்.

கொண்டாட்டமும் சந்தையுமாக பண்டிகைகள் மக்கள் முன் வருகிற பொழுது, அன்றாடங்களிலிருந்து விடுபட்டு மனம் மகிழ,  மக்களுக்கும்  பண்டிகைகள் அவசியம். இந்த புள்ளிகளிலிருந்துதான் கொண்டாட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

இதனை முறைபடுத்துவதும் உதவி செய்வதும் அரசுகளின் பொறுப்பாக இருக்க வேண்டும். சமயம் சார்ந்த பண்டிகை எனில், அதில் சமயத்தின் இடம் , அரசியல் சாசனத்திற்குட்பட்ட முறைகளில் இருந்து இயங்கிட சட்ட சமுகம் மற்றும் அறிவு சமுகம் வழி காட்ட வேண்டும்.

கொண்டாட்டமே கூடாது என்பதும், யாவுமே மதம் சார்ந்தது என, அறிவு சமுகம் கொண்டாட்டங்களிலிருந்து தள்ளி நிற்பதும் , கொண்டாட்டங்களை சனநாயகப்படுத்த உதவாது.

Monday, March 28, 2016

நாடகமும் நானும்

நான் ஒன்பதாம் வகுப்பு ( 1975)படிக்கும் பொழுது தாயின் மடியில் என்றொரு நாடக ஸ்கிரிப்ட்  எழுதினேன். இன்று யோசித்துப் பார்க்கும் பொழுது அதனினும் பல ஆண்டுகள் முன்பு( 1968) ,எங்கள் ஊர் ஆரல்வாய்மொழியில் வசன மட கோவில் அருகே நடைபெறும் கட்சிப் பொதுக்கூட்டங்களில் இடம் பெறும் , நாடகம்,பாடல் நிகழ்வு போன்றவ்ற்றைப் பார்த்ததன்  பாதிப்பாக கூட இருக்கலாம்; நான் என் பதினான்காம் வயதில் நாடகம் ஒன்று எழுதியது.

பின் பத்தாம் வகுப்பு( 1976) படிக்கையில் ஆண்டு இறுதிப் பள்ளிப் போட்டியில்  பிச்சைக்காரன் வேடம் போட்டு,நானே ஒப்பனை செய்து கொண்டு,மேடையில் தோன்றி நடித்தேன். என் இருபத்தோராம் வயதில்( 1982) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிமுகம் ஏற்பட்டு, அதன் சார்பான அமரர் ஜி.எஸ் மணி கலைக்குழு என்ற கன்னியாகுமரி மாவட்ட  குழுவில் நான் இணைந்து கொண்டு, மாவட்ட்ம் முழுவதும் வீதி நாடத்தை நடத்தி நடித்துக் கொண்டிருந்தேன்.

பின் சென்னை வந்து, 1989 ஆம் ஆண்டு , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு ஒட்டிய பிரச்சாரத்திற்கான கலைக்குழுவிற்கான தேடலில் சென்னையில் இருக்கும் நாடக குழுவிற்கான நாடக அரங்கேற்றம் நடந்தது. நான் வடசென்னை நாடகக்குழுவினை உருவாக்கிப் பொறுப்பேற்று அந்த அரங்கேற்றத்தில் குழுவுடன் பங்கேற்றேன்.

பின் அமைப்பு சார்ந்த களப்பணியில் தீவிரமாக இயங்கியதால் நடிப்பதில் இருந்து விலகினேன். ஆனாலும் இன்று வரை வடசென்னையில் நிகழும் நாடக பட்டரைகளில் பங்கு பெற்று, பொறுப்பு வகித்து, பரப்புரைக்கான குழுவிற்கு பயிற்சி அளிப்பதில் உதவி செய்து வருகிறேன்.வரும் ஏப்ரல் 1,2,3 தேதிகளில் ஐந்து குழுவிற்கான பயிற்சி அளிக்கும் பணியில் ஆயத்தப் பணிகளை செய்து வருகின்றோம்.

இது  என் நாடக அனுபவத்தை எழுதிப் பார்ப்பதற்கான ஒரு சிறு குறிப்புகள்தான்.பல சுவையான அனுபவங்கள் ,
திடுக்கிடும் நிகழ்வுகள் எல்லாம் உண்டு.பின் விரிவாக எழுதிப் பார்க்கலாம்.
-மார்ச் 27 உலக நாடக தினத்தை ஒட்டி எழுதியது.

Tuesday, November 12, 2013

சங்க காலத்தை மீட்டிய சஹ்ருத வேதி







தீபாவளிக்கு அடுத்த நாள் காலை சரியாக பத்தரை மணிக்கு பாலக்காடு மணிகண்டன் குழுவினரின் செண்டை மேளத்தோடு தொடங்கியது சஹ்ருத வேதி அமைப்பின் கேரளநாள் விழா.கேரள மாநிலம் உருவான நவம்பர் 1 ஆம் தேதியை முன்னிட்டு சகோதர மேடை என்கிற அமைப்பு இந்நாளை கலாச்சார விழாவாக  சென்னை அண்ணா ஆதர்ஸ் கல்லூரி அரங்கில் நடத்தியது.

பண்டிகை நாளில் அணியப்படும் வெள்ளை,மஞ்சள் சேலை உடுத்தி திரளான பெண்கள் கலந்து கொண்டிருக்க ,வேட்டி சட்டையோடு சில ஆண்களைப் பார்க்க ,பல ஆண்கள் பேண்ட் சட்டையோடு விழாவில் கலந்து கொண்டிருந்தார்கள்.அரங்கின் வாசலில் அழகான பெரிய கோலமிட்டு வறவேற்றார்கள்.

முழுநாள் விழாவின் மதியம் வரையிலான கொண்டாட்டத்தில் கவிசங்கமம் என்கிற கவியரங்கம்,ஓவியப் போட்டி,பாடல் போட்டி என இளைஞர்கள்,குழந்தைகளின் பங்கேற்பில் அரங்கு அழகானது.மாலை விழாவில் அமைச்சர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் ,தொழில் முனைவர்கள் என பலர் பங்கேற்றனர்.

காலை அமர்வில் முனைவர் ரவீந்திரராஜா,கும்பளங்காடு உன்னிகிருஷ்ணன்,இரா.தெ.முத்து,வி.பி.கங்காதரன்,வி.பரமேசுவரன் நாயர்,அமராவதி ராதாகிருஷ்ணன்,ஆர்.முகுந்தன்,சன்னி ஜான்,ஓவியர் சண்முகன் திருப்புணித்துரா போன்ற ஆளுமைகள் பங்கேற்றனர்.

ஈழத்தில் உயிரோடு பிடிக்கப்பட்டு பின்னர் சிங்கள ரானுவத்தால் கொலை செய்யப்பட்ட இசைப்பிரியா மரணத்திற்கு விழா தொடக்கத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.கேரள அரசு விடுத்த வேண்டுகோள்படி தாய்மொழி காப்பு உறுதிமொழியை பின்னர் எடுத்துக் கொண்டனர்.

கவிசங்கமத்தை தொடங்கி வைத்த கும்பளங்காடு உண்ணிகிருஷ்ணன்,மலையாள மொழி காலந்தோறும் நவீனப்பட்டு வருகிறது.புதிய நோக்கில் புதிய பார்வையில் படைப்புகள் வெளிவருகின்றன.முகநூல்,வலைப்பூக்களில் இப்படியான படைப்புகளை காணமுடிகிறது.நைரோபியக் கவிஞர் கோஃபி அவனுர் மொழியில் மக்களின் பாடுகள் வாதைகள் பதியப்பட வேண்டுமென்றதை நாம் கவனத்தில் கொண்டு புதிய சூழலிற்கேற்ப சென்னையில் வாழும் மலையாள படைப்பாளர்களும் தமது படைப்புகளை அளிக்க வேண்டுமென்றார்.

தமிழ்நாட்டு கவிஞர்கள் சார்பில் விழாவிற்கு அழைக்கப்பட்டு சிறப்புரையாற்றிய இரா.தெ.முத்து,தமிழுலகமும் அயல் உலகமும் கொண்டாடும் சங்க இலக்கியம்,காப்பியங்கள்,பதிணென்கீழ்கணக்கு போன்ற படையல்களை தந்ததில் ஆறாம் நூற்றாண்டு வரையிலும் தமிழோடு இணைந்திருந்த உங்கள் ஆதி வாழ்கைக்கும் அனுபவத்திற்கும் பங்குண்டு.இளங்கோவடிகள்,தொல்காப்பியர்,திருவள்ளுவர்,அவ்வை,அதங்கோட்டாசான் போன்ற படைப்பாளிகள் உங்களுக்கும் சொந்தமானவர்கள்தான்.

தமிழும் மலையாளமும் இன்று உலகமயமாக்கல் சூழலில் ஆங்கிலத்தின் பாதிப்பிற்கு உள்ளாகி கொண்டிருக்கிறது.மலையாளத்தை பாதுகாக்க நீங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியைப் போல,தமிழைக் காக்க தமிழ் படைப்பாளர்களும் தாய்மொழிவழிக் கல்விக்கான இயக்கம்,மாநாடு என்று இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இனம்,மொழி,வர்க்க உணர்வோடு இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் வாழ அனைவருக்கும் உள்ள உரிமையைப் பாதுகாக்க தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் முன் நிற்கிறது என்று பேசினார்.

தொடர்ந்து நிகழ்ந்த கவிசங்கமத்தில் கிரேஸ் நெல்சன்,அய்யப்பன் காரியத்,சரோஜினி ஜெயதேவன்,தாமஸ் வண்ணப்புரம்,கலா.எஸ்,செருதுருத்தி ராதாகிருஷ்ணன்,ஆஷா சசிகுமார்,காஞ்சனா அரவிந்த்,டவ்டன் மோகன்,மன்மதன் மாவேலிக்கரா என பங்கேற்று சங்கக் கவிமரபின் ஓசையோடு கவிதை பாடியது,அனைவரையும் சங்க காலத்திற்கே இட்டுச் சென்ற உணர்வை 
அளித்தது.
 தொகுப்பு:கும்பளங்காடு உண்ணிகிருஷ்ணன்,கிரேஸ் நெல்சன்

Wednesday, February 13, 2013

காவற்பெண்டுகள் தோழிகளின் துயரம் சொல்லும் வஞ்சியர் காண்டம்





 இராதெ முத்து 
இளங்கோவடிகளின் சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்தை மறுவாசிப்பு செய்த முறையில் நிகழ்த்தப்பட்ட  நாடகம் பிரளயனின் வஞ்சியர் காண்டம்.

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோட்டம் அமைக்க இடம் தேடியதும்,வடபுலம் சென்று கல் எடுத்து வந்தமையும்,கோட்டம் அமைத்தமையும் ஆன காட்சிகள் கொண்டது இளங்கோவின் வஞ்சிக்காண்டம்.

பிரளயனின் வஞ்சியர் காண்டமோ கன்ணகியின் செவிலித்தாய் காவற்பெண்டு,கண்ணகியின் தோழி தேவந்தி,ஆயர்சேரி மாதரி மகள் ஐயை ஆகியோர் வழி கண்ணகியின் தெய்வப் பிம்பம் கலைக்கப்பட்டு,அவளுள் கனன்ற எண்ணங்களை,மதிப்பீடுகளை,மனிதர்கள் குறித்த அளவுகளை அசை போடும் நிகழ்வின் வடிவம்.

நீர் கலசத்தோடும் முளைப்பாரிகளோடும் கூட்டம் கூட்டமாக மக்கள் குடவாயில் கோட்டம் காணச் செல்கின்றனர்.இவர்களோடு கோட்டம் காண செல்கிறார்கள் காவற்பெண்டு,தேவந்தி,ஐயை.

தேவந்தியும் ஐயையும் கண்ணகியின் சிறு பருவம்,அவளின் வளர்ப்பு முறை,மாதவி குறித்து கண்ணகியின் உயர்மதிப்பீடு ,புகாரில் தனிமையில் கண்ணகி வாழ்ந்த அவலம் ,மதிரையில் கோவலனோடு வாழ்ந்த துயரம் என காவற்பெண்டிடம் விவாதித்து விவாதித்து தாங்கள் அறிந்து கொள்ளும் முறையினூடாக பார்வையாளர்களுக்கு ஒரு புதிய கண்ணகியை,இதுவரை அறியப்படாத நவீன கண்ணகியை நம்மோடு உலவவிட்டிருக்கிறார்கள்.

 நாகநாட்டிலிருந்து புகாருக்கு,மதுரைக்கு  காவற்பெண்டுகள் தாங்கள் அடிமையாய் வந்த வரலாற்றை கண்ணகிக்கு முந்தைய மூன்று தலைமுறைகளின் வரலாறு தொட்டு பேசுவதும்,மாசாத்துவான் மகளுக்கு பால் ஊட்டுவதற்காக காவற்பெண்டுகள் வணிககுலத்தாரால் கருவுறச் செய்யப்பட்ட கண்ணீர் கதையையும்,தன் மடியில் வேல்கம்பு தாங்கி வெதுவெதுப்பான குருதியை ஓடவிட்டு உயிர்துறந்த தலைக்கோலியான தன் காதலனை நினைத்து காவற்பெண்டு அழுவதும் அரற்றுவதுமான காட்சிகள் வழி ,இலக்கியத்தில்,நாடகத்தில் பதியப்பெறாத காவற்பெண்டுகள்,தோழிகளின் துயரக்கதையை நாடகம் நம்மோடு பகிர்ந்து கொள்கிறது.

கணவனுக்காக பிறந்த வீட்டிற்காக ஊருக்காக தனது ஆசைகள் விருப்பங்கள் நசுக்கப்படுவதையும்,தன் துயரம் மாறி நல்வழி பிறக்க தீர்த்தமாடி கோயில்கள் வழிபட்டு வரவா என தேவந்தி கண்ணகியிடம் கேட்குமிடத்தில் `உன்னைவிட்டு பிரிந்த உன் கணவனுக்காக எத்தனை தீர்த்தமாடினாய் உன் கணவன்உன்னிடம்  வரவில்லையே;கோவலன் மட்டும் எப்படி மீண்டு வருவான்’ எனக் கேட்டு கண்ணகி சொல்லும்`உன் அகத் தீர்த்தமாடி உன்னையே அறிவது நல்லது’என்கிற இடம் மூடத்தனத்தை,தெய்வமின்மையை விமர்சிக்கும் இடமாக துலக்கமுறுகிறது.

பட்டறிவால் சுயசிந்தனை கொண்ட பெண்ணாக, சமுகத்தை உணரும் பென்ணாக ,மாறிய கண்ணகியை பாண்டியனிடம் தேரா மன்னா செப்புவது உடையேன் என்று சிலம்பை உடைத்து நியாயம் கோரிய பெண்ணாகிய கண்ணகியை ,இயக்கி என்றும் கொற்றவை என்றும் காளி என்றும் மாற்றி, பின் தொடரும் சமுகத்தை மூடத்தனத்தில் ஆழ்த்தும் திருப்பணியை செய்த சேரன் செங்குட்டுவனின் அதிகார முகத்தை கிழித்தெறியும் புதிய புனைவாக அழகியலோடு வெளிப்பட்டிருக்கிறது வஞ்சியர் காண்டம்.

தேசிய நாடகப்பள்ளி,மண்டல வள மையம்-பெங்களூரு,தென்னக பண்பாட்டு மையம்-தஞ்சாவூர் இணைந்து நடத்தும் ஒருமாத கால உண்டு உறைவிட நாடகப் பயிலரங்க பங்கேற்பாளர்கள் வழங்கும் வஞ்சியர் காண்டத்தின் இயக்குநர் பேராசிரியர் ராஜூ,நாடகப்பனுவல் பிரளயன்.

மேடையில்:க.பிரியங்கா-கண்ணகி/சே.அஜிதா-காவற்பெண்டு/ம.வித்யா-தேவந்தி/ஆ.ரூபா-ஐயை/சு.நந்தினி-மாதரி/த.மகேஸ்வரி-கண்ணகியின் தாய்/மதியழகன் -மாநாய்க்கன்/ச.மணிகண்டன் -கோவலன்/சாரதி கிருஷ்ணன்-கூத்தன்/மா.மோகன்-உவச்சன்/பிரகதீஷ்வரன்- பூசகன்


2013 பிப்ரவரி 12 அன்று சென்னையில் நாடகத்தை நிகழ்த்த மேடை அமைத்தவர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவல்லிக்கேணி கிளை மற்றும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை மற்றும் கல்வியாளர்  பிரின்ஸ் கஜேந்திரபாபு. 

சிங்கீதம் நினைவுகள்

  1972 ல் வெளிவந்த ராஜாஜியின் திக்கற்றப் பார்வதி நாவலை ஒட்டி சிங்கீதம் சீனிவாசராவ் எடுத்த திக்கற்றப் பார்வதி திரைப்படத்தின் சுவரொட்டிகளை என்...