Sunday, June 3, 2018

படைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்





கலைஞரை நான் 5 முறை சந்திருக்கிறேன் .நான்குமுறை தமுஎகச பிரதிநிதிக்குழுவில் இருந்து போய் பார்த்து பேசி இருக்கிறோம்  .ஒரு முறை அந்த முதன்முறையான  சந்திப்பு , நான் மாணவனாக இருந்த பொழுது, முதல்வராக  இருந்த அவரை , வறவேற்கும்  பொருட்டான நிமித்தம் 1974 ஆம் ஆண்டு நிகழ்ந்தது .

மூன்று சந்திப்புகள் சுவாரசியமான சந்திப்பாக இருந்தது .அதில் ஒன்றை மட்டும் இப்பொழுது சொல்கிறேன் .பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகளுக்கும் ராசபக்சே தலைமையிலான அரசிற்கும்  இலங்கையில் பெரும் யுத்தம் நடந்த 2008.

தமிழ்நாடு அரசின் கோட்டையில் ,கலைஞர் முதல்வராக இருந்து ,இலங்கை தமிழர் பாதுகாப்பு நிதியை,  முதல்வர் நிவாரண நிதிக்கு திரட்டிக் கொண்டிருந்தார் .இலங்கை தமிழர்க்கு,  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பாக நம்மால் இயன்றதை அளிப்பது என இயக்குனர் பாலுமகேந்திரா சொன்ன ஆலோசனையை

அருணன் தலைவராகவும் ,ச.தமிழ்ச்செல்வன் பொதுசெயலாளராகவும் ,இரா.தெ.முத்து பொருளாளராகவும் இயங்கிய தமுஎச ஏற்று கொண்டது.தமிழ்நாட்டு முதல்வர் கலைஞரை  சந்தித்தது நிதியை அளிப்பதற்காகன நேரத்தை உறுதி செய்ய ,  பாராளுமன்றத்தின்  திமுக மேலவை தலைவராக இருக்கும் கவிஞர் கனிமொழி உதவியை தொலைபேசியில் பேசிப் பெற்றோம் .

2008 நவம்பர் 7 வெள்ளி

காலை 11 மணி .இலங்கை தமிழர் பாதுகாப்பு நிதியை காசோலையாக எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டரசின் கோட்டைக்குச் சென்றோம் .இயக்குனர் பாலுமகேந்திரா ,சிகரம் ச.செந்தில்நாதன் ,இரா.தெ .முத்து ,மயிலை பாலு ,கே .பி.பாலசந்தர்,மணிநாத் ,நா.வே .அருள் என தமுஎச வின் குழுவாகச்   சென்றோம்.

முதல்வர் அறைக்கு வெளியே தொழில் அதிபர்கள் பலர் நிதியை அளிக்க காத்திருந்தனர்.ஒரு சீட்டில் வருகையை எழுதிக் கொடுத்தோம் .அடுத்த சில நிமிடங்களில் நாங்கள் அழைக்கப்பட்டோம் .முதல்வரின் செயலர் சண்முகநாதன் புன்னகையோடு வரவேற்றார் .

நாங்கள் கொண்டு சென்ற காசோலையை  முதல்வரின் கையில் வழங்கினோம் .முதல்வர் கலைஞர் புன்னகை ததும்ப நாங்கள் அளித்த காசோலையைப் பெற்றுக் கொண்டார் . கரகரப்பான குரலில்  மகிழ்ச்சி என்றார் .

முதல்வரோடு நின்ற புகைப்படத்தை அரசு காமிராகாரர் எடுத்தார் .மறுநாள் நாளேடுகளில் அது செய்தியாக வெளிவந்தது . அவ்வளவு மகிழ்ச்சியாக நாங்கள் அளித்த காசோலையை முதல்வர் பெற்றார் .பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல  இலங்கை தமிழர் பாதுகாப்பு நிதிக்கு தமுஎகச ரூபாய் 25000 ஐ மட்டுமே வழங்கினோம் .

ஆனாலும் இந்தச்  சிறிய தொகையை பெருமனதோடுப் பெற்று , எமக்கு  மதிப்பு செய்தார் முதல்வர் கலைஞர் . பெருந்தன்மையான,  படைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர் அவர்களுக்கு இன்று 95 ஆவது பிறந்தநாள் .அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்