இணைந்த இதயம்

Monday, November 26, 2012

சூடேறி சிவக்கும் களம்


  சூடேறுகின்றது
வர்க்கப
போர்க்களம்

தேசமே
நீ
எப்புறம்?

கேரள
வங்கத்
திரிபுரம்

மண்ணில்
மலர்ந்த
அற்புதம்

மாற்றம்
விரும்பும்
யாவரின்
புருவம்
உயரும்
முப்புறம்

எப்புறம்
நோக்கினும்
முப்புறம்
அழித்திட
எத்தனம்

வெற்றுப் பெயரோ
கேரள வங்கத்
திரிபுரம்?

புதுமைகள்
புகுந்த
திருத்தலம்


உழைக்கும்
மக்களின்
உயிர்த்தலம்

உழுகுடிக்கென
நிலக்குவியலை
திருத்தி வழங்கிய
திருக்கரம்

காலகாலமான
சாதியம்
வீழச்செய்த
மகத்துவம்

அதிகாரப் பரவலால்
உள்ளாட்சிக்கு
உயிரூட்டிய உன்னதம்

எழுத்தறிவை
ஏற்றி வைத்து
சரிபாதி ஆட்சியை
பெண்மையில் பகிர்ந்த
சமத்துவக்கோலம்

காவல்துறையை
பாட்டாளியின்
கூட்டாளியாய்
பரிணமிக்கச் செய்த
பக்குவம்

சந்தேகத்திற்க்கு அப்பால்
பொதுஜனங்களை
சகஜமாய் வாழச்செய்த
சத்திய இதயம்

இந்திய ஒன்றியத்தில்
தேர்தல் வ்ழியாய்
இடதுமுன்னணி இடதுஜனநாயகம்
சூடிக்கொண்ட
புதிய பரிமாணம்

தடையற்ற வர்த்தகத் தலையீடு
தோற்றுப் போகுமோ
தெற்காசியாவில்?
பெண்டகனில் நடைபெறும்
புதுப்புது ஆய்வுகள்

காவி பயங்கரத்தை
டாலர் ஊட்டியும்
வளர்க்கும்
தீவிரவாதத்
துப்பாக்கிகளுக்கு
மம்தாவை மம்மியாக்கி
பாலூட்டவும் வைக்கும்

துப்பாக்கிகளுக்கு
இலக்குகள் இரண்டு என்று
காங்கிரசுக்கு வகுப்பும் எடுக்கும்

நக்சல்பாரியில் ஒலித்த
வசந்தத்தின் இடிமுழக்கம்
தண்டகாருண்யத்தில்
தனக்கான நாட்களை
எண்ணிக் கொண்டிருகிறது.

ஆண்டைகளுக்கு எதிராக
ஆலை அதிபர்களுக்கு எதிராக
கோட்டை கொத்தளத்திற்கு எதிராக
திருப்ப வேண்டியத் துப்பாக்கியை
மார்க்ஸிஸ்ட்டுகளை நோக்கி திருப்புவதால்
மாவோயிஸ்ட்டுகள் தனக்குத் தானே
எழுதிக் கொள்கிறார்கள்
மரணசாசனம்.

புரட்சி
 சீரழிவின் சீள்வடிதலோ
இறக்குமதி சரக்கோ அன்று
புரட்சி
மக்களின் துடிப்பு
மக்களின் வெடிப்பு.

காலம் அழைக்கிறது வாருங்கள்
வரலாறு அழைக்கிறது கூடுங்கள்
சரித்திர காலந்தொட்டு
நடந்து வரும் சண்டையில்
படைப்பாளியே நீ
எந்த பக்கம் கூறு

ஆரியம் எதிர்த்தப் போரில்
மனுவை வீழ்த்தும் போரில்
நீண்டு வரும் சார்வாகத்தின்
நீட்சி நாம்
தொடர்ந்து வரும் சித்தமரபின்
வாரிசு நாம்

ஆதிக்க வர்க்கத்தின்
அடி வயிற்றில்
ஐஸ்கட்டியைச் செருகிய
சமண பவுத்த மரபின்
சரிவாரிசு நாம்
அம்பேத்கரியத்தின் வாரிசும் நாம்.

புதிய வாரிசு நாம்
கம்யூனிஸ்ட்டுகள் நாம்
வாழுங்காலத்தில்
சூடேறிச் சிவக்கிறது
வர்க்கப் போர்க்களம்

வங்கத்திற்கு
பங்கமெனில்
சிங்கமென சிலிர்த்தெழுவோம்

கேரள திரிபுரம்
பாதுகாக்க
தேவை எனில்
உயிரும் தருவோம்
***
(2010 செப்டம்பரில் நடைபெற்ற இடது முன்னணி,இடது ஜனநாயக முன்னணி அரசுகளைப் பாதுகாப்போம்
இயக்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதை)

Wednesday, November 14, 2012

வாழ்க்கை தற்செயலானதா?
புதுசாய் கதைக்க  வந்தவர்கள் முதல்  முன் நாள் கதைத்தவர்கள் வரை வாழ்க்கை  தற்செயலானது என்று எழுதிச் செல்கிறார்கள். இதில் தொனிக்கும் பொருள்  நாம் திட்டமிட்டு எதுவும்  செய்வதில்லை.தானாக வாழ்க்கை நிகழ்கிறது என்பதுதான்

.மேற்கண்ட கதைத்தலில் வெளிப்படும் இன்னொரு பார்வை , வாழ்க்கை நமக்கு வெளியே .ஆன்மீக நோக்கில் சொல்வதானால் இறைப்பொருளால்  இன்னாருக்கு இன்னபடி என்று படி அளக்கப்படுகிறது.செய்து விட்ட செயலை அது சரியான செயலோ தப்பான செயலோ அதற்கு தானோ அல்லது தாமோ பொறுப்பில்லை.அதுவாக நிகழ்ந்து விட்டது என்கிற தப்பித்தல் நோக்கும் இதில் வெளிப்படுகிறது.

ஆன்மீகம் என்கிற பார்வையில் சிக்குண்டு அறிவியல் ரீதியாக பார்க்கப் பழக்கப் படாதவர்களைக் காட்டிலும்,  நவீன காலச் சூழலில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் இந்த கதைத்தலை சொல்வார்களேயானால் அது தப்பித்தல் மட்டுமல்ல.குற்றத்தை  செய்து விட்டு தான் குற்றவாளி அல்ல , சூழல்தான் குற்றவாளி அல்லது தனக்கு கூட்டாளியாக இருக்கிற ,இருந்தவர்களின் குற்றம் என்று நிறுவுவதற்கான   தப்பித்தலின் தததுவ பார்வையாகவும் வெளிப்படுகிறது.

இந்தப் பார்வை ஆன்மீகப் பார்வையை விட மட்டமானது.தன் சுகம்,ன் முன்னேற்றம், தான் என்கிற சுயநலத்திற்கு சூழலை மற்றவர்களை பயன்படுத்திவிட்டு பின் உதறித் தள்ளுகிற வஞ்சகத்தின் வெளிப்பாடு.

எந்த காலத்திலும் வாழ்க்கை தானாய் நிகழ்ந்து விடுவதில்லை.வாழ்க்கை என்பது இயற்கையை  அது சார்ந்த  விடயங்களை மனிதர்கள் பயன்படுத்துகிற கூட்டுச் செயற்பாடுதான்.இந்த கூட்டுச் செயற்பாட்டில் எக்காலத்திற்கும் பொதுவான தன்மை பெறுகின்றவைகள்  வழமையாக ,மரபாக மானுடர்களின் சிறப்பான வெளிப்பாடாக போற்றப்படுகின்றது.

தற்செயல் என்று சொல்வதற்கே  சில மணி நேரம் உட்கார்ந்து யோசித்து எங்கிருந்து ஆரம்பிப்பது என்ன மாதிரி சொல்வது  எங்கே முடிப்பது வரை திட்டமிட வேண்டி இருக்கிறது.எப்போது திட்டமிடல் வந்து விட்டதோ அப்போது எதுவும் தற்செயல் அல்ல என்பது தான் யதார்த்தம்.

மனிதர் தாம் உண்ண ,உறங்க ,உடுத்த,காத்துக் கொள்ள , அனுபவத்தை பரிமாற , பணியை இலகுவாக்க,கேளிக்கையில் ஈடுபட,என்று ஒவ்வொன்றிற்கும் பல்லாண்டு காலம் இயற்கையோடு ,வாழ்க்கை அனுபவத்தோடு,  பிற குழுக்களோடு போராடி  பெற்றதன் வெளிப்பாடுதான் இன்றைய நமது வாழ்க்கை.

இந்த வாழ்வும் வாழ்விற்கான உபகரணங்களும் ,கோரிக்கைகளும், மறுப்புகளும் மானுடர் தம்மோடோ,அல்லது முரண்பாடுகளோடோ மீண்டும் மீண்டும் போராட வேண்டி உள்ளது. முரணோடு நடத்துகின்ற வாதம் ,சம்வாதம் அடுத்த முன்னேற்றத்திற்கான திறப்பாகும்.

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்று போல் இல்லாமல் இருக்கிறது.சமுகத்தின் வளமும் கண்டுபிடிப்புகளும் யாவருக்கும் ஒரே மாதிரியாக கிடைக்காமலும் இருக்கிறது. இந்த ஏற்றமும் இறக்கமும் தற்செயலானது அல்ல;திட்டமிடப்பட்டது.சமூகத்தின் செல்வம் யாரிடம் குவிக்கப்படுகிறதோ ,அந்த நபர் ,அந்த வர்க்கம்,அந்த நாடு அதிகாரம் பெற்று விடுகிறது;வளங்களை முன்னேற்றங்களை சுகிக்க ஆரம்பித்து விடுகின்றது.இது மானுட இனம் வர்க்க ரீதியாக பிளவுப்பட்டதின் பொருளாதார அரசியற் வெளிப்பாடு.

வளங்களை, செல்வங்களை,கலை இலக்கியங்களை யாவருக்கும் நெருக்கமாகக் கொண்டு வருகின்ற செயற்பாடு, வர்க்க ரீதியிலான பொருளாதார அதிகாரத்தை உடைத்து யாவருக்கும் பொதுவாக்குவதுதான்.

இந்த பொதுவாக்குதலிற்கு அரசியற் பெயர் சோசலிசம்,கம்யூனிசம்.பொதுவாக்குதலில் ஈர்க்கப்படும் கலை இலக்கிய மனம் நம்பிக்கையை,அன்பை,தோழமையை ,மாற்றத்தை வெளிப்படுத்துகின்றது.சுயநலத்தில் ஆழ்ந்த மனமோ கலையில் ,இலக்கியத்தில்,அன்பில்,தோழமையில் நம்பிக்கையின்மையை ,பொய்மையை ,வஞ்சகத்தை பரப்புகின்றது.

Sunday, November 11, 2012

இப்பொழுதெல்லாம் தீபாவளிஜெயபாரத்தின் வீட்டுத் திண்ணையில்
 வடிவமைக்கப்பட்ட மாட்டுத் தொழுவத்தில்
 குழந்தை ஏசுவை பார்க்கப் போனதில்
ஒரு துண்டு கேக் கிடைத்ததால்
கிறிஸ்துமஸ் பிடித்துப் போனது

சித்திரை மாதத்தில் அந்த பத்து நாட்களும்
சித்தப்பாவின் நண்பர் டேவிட் வீட்டில்
அச்சு முறுக்கோடு ஜிப்சிலின் தரிசனமும்
கிடைத்ததால் அன்னை வேளாங்கன்னியின்
சப்பரத் திருநாளும் பிடித்துப் போனது

ஒத்தவீட்டு பக்கீர்முகமதுவின் உயர்ந்த கட்டு
வீட்டிற்குப்  போய் அவன் உம்மா கையால்
ஆட்டிறைச்சி குழம்போடு  வெள்ளை வெளேர்
 இட்டிலி சாப்பிடக் கிடைத்ததில்
பக்ரீத் பண்டிகையும் பிடித்துப் போனது

மணிக்கடையில் வாங்கிய ஓலைப் பட்டாசை
வெடிக்கும் ஆசையிலும் உருளைக் கிழங்கும்
உள்ளியும் கலந்து அம்மா வைக்கும்
குழம்புச் சோற்றோடு  சினிமா பார்க்க
நாலணா கிடைப்பதால் தீபாவளி பிடித்துப் போனது

திருமணம் மகள் என்றான புதிய சூழலில்
அவளுக்கான கவுன் அவளுக்கான மத்தாப்பு
அவளுக்கான இனிப்பு என்று வாங்கத் தொடங்கி 
இப்பொழுதெல்லாம் களை கட்டத்
தொடங்கி விடுகிறது தீபாவளி.

(நன்றி:தீக்கதிர் வண்ணக்கதிர் 2012 நவம்பர் 11)