இணைந்த இதயம்

Monday, October 17, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி-8


 

படைப்பில்  எரிந்த தீ


வேள்வித்  தீ என்றொரு பாடல் 80 அடிகளைக் கொண்டதாக இருக்கிறது. ரிசிகள் வளர்த்த வேள்வித்தீயில் அசுரர்கள் அலறித் துடிப்பதாக,போக்கிடம் இன்றி பொசுங்கிப் போவதாக , வானை நோக்கி கைகள் தூக்கி வளர்கிறது தீ என்பதை மேலோட்டமாக வாசிக்கிற போது வேள்வித்தீயில் அசுரர் மடிவதாகவே புராண ரீதியில் பொருள் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

பாரதியின் கவிதைகளில்,பாடல்களில் தீ குறித்த புனைவுகள் அதிகமாக வருகின்றன..இந்தத் தீ குறித்து பாரதி கவிதைகளை முன் வைத்து அந்தக் காலம் முதல் பல விளக்கங்கள் சொல்லப்பட்டும் வருகின்றன.பாரதியும் தன் கட்டுரைகளில் தீ பற்றி பேசியிருக்கிறான். அது ருத்ரன் என்கிற சிவன் என்றும்,சிவமைந்தன்  அல்லது தேவசேனாதிபதி எனப்படுகிற முருகன் என்றும் மற்றொன்று தத்துவார்த்த நோக்கில் அறிவை,உள்ளத்தை சுடர்விட்டு பிரகாசிக்கச் செய்யும் ஒளி என்றும் வீரம் என்றும் எழுதிச் செல்கிறான். பாரதி தன் படைப்புகளில் தத்துவார்த்த நோக்கிலேயே தீயை,வெம்மையை,ஒளியை அதிகமாகப் பயன்படுத்தி இருக்கிறான்.பாரதியைப் பொறுத்த அளவில் செயல்பாட்டிற்கான


 உந்து  விசையாக அவனின் தத்துவப்  பார்வை செயற்பட்டிருக்கிறது.
வேள்வித்  தீ பாடலில் ரிசிகள் வளர்க்கும் தீயினால்,பங்கமுற்று   பேய்கள் ,அரக்கர்கள் ஓடுகிறது என்றும்   எமனும் இல்லாத பகையும்  தீமையும் இல்லாத அமர வாழ்க்கை வருகிறது என்றும் பதியப் பட்டுள்ளது. இதே பாடல் அசுரர் பார்வையில் வாழ வந்த காடு எரிகிறதே என்றும், காட்டின் மக்களை வலுவில்லாதவர்கள் என்று நினைத்தோமே என்றும் உயிரை விட்டு உணர்வை விட்டு ஓடி வந்த இடத்தில் துயில் கொள்ளும் உடல் மீதே தீ கவ்வுகிறதே என்றும் புலம்புவதாக படைக்கப்பட்டுள்ளது இந்த சித்திரிப்பை பார்க்கிற போதே இது வழக்கமான அசுரர்/ரிசிகள் பாடல் இல்லை என தெரிய வரும். வழக்கமான நெய்யூற்றி வளர்க்கும் வேள்வி இல்லையெனவும் புரிய வரும்.இங்கு அசுரர் என்போர் இந்தியர்களை காலனிய ரீதியில் ஆண்டு முடித்த வெள்ளையர் என்றும் ரிசிகள் யாரென சொல்ல வேண்டியதில்லை.விடுதலைக்காக போராடிய தீரர்கள்,மக்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

ஏனையப் பாடல்கள் போல இந்தப் பாட்டின் வெளிப்பாட்டுத்  தன்மையில் வெளிப்படை உத்தியை பாரதி கைக் கொள்ள வில்லை ..பாஞ்சாலி சபதம் போலவும்,குயில் பாட்டுப் போலவும் இந்தப் பாட்டிலும் ஒரு பூடகம்,ஒரு படிமம் வைத்து மக்கள் மொழியில் சொல்வதானால் பொடி வைத்து பாடி இருக்கிறான்.அழகியல் சார்ந்த உத்தி மட்டும் அல்ல இது. அன்றைய பிரிட்டிஸ் ஆட்சியின் தணிக்கை தொல்லையிலிருந்து படைப்பை பாதுகாத்து மக்கள் மத்தியில் பரப்ப வேண்டிய அரசியல் உத்தியும் ஆகும்.

பாரதி கல்வி  குறித்து எழுதினாலும்,மொழி மேன்மை முன்னிட்டு எழுதினாலும்  சுதந்திரப்பயிர் பற்றி  கவலைப் பட்டாலும், வ.உ.சி /விஞ்ச உரையாடல் என எது பற்றி எழுதினாலும் வெள்ளை அரசு நடுங்கியது.அரசாங்கப் பார்வையில் பாரதி ஒரு வெடிகுண்டு;ஒரு கிளர்ச்சிக் காரன் என்பதால் அவனின் பல பாடல்கள்,கவிதைகளை  சுடச் சுட அரசாங்கம் மொழிப் பெயர்த்து அவனை கன்காணிப்பிற்கு உள்ளாக்கியது;பாரதியின் பல பாடல்கள் தடை செய்யப்பட்டன;வழக்குகளில் அவைகள் வெள்ளையர்களால் ஆவணமாகப் பயன்படுத்தப்பட்டன. கலைக்டர் ஆக்ஷ் கொலைவழக்கு பற்றிய நீதிபதி சங்கரன் நாயர் தனது தீர்ப்பில் பாரதியின் இப்படியான பாடல்கள்,வ.உ.சி., சுப்பிரமணியசிவா வின் உரைகள் ஒரு பகை மோதலை உருவாக்கியதின் அடிப்படையில் ஆக்ஷ் கொலை நிகழ்ந்தது என குறிப்பிட்டுள்ளார்.

முறையான அமைப்பு  உருவாக்கப்படாததின் ஆரம்ப  நாட்களில் இப்படியான சுதந்திரப் போரட்ட தீரர்கள்,படைப்பாளிகள் தம் நெஞ்சுரம் சார்ந்து இயங்க வேண்டிய சூழலில் பலதை வெளிப்படையாகவும் மேலும் பலதை மறைமுகமாகவும் செய்ய வேண்டிய கட்டாயம் சார்ந்து அவர்களின் செயல்பாட்டுப் பணிகளும்,படைப்பும் இருந்தன.இந்தப் பின்னணியில் வேள்வித்தீ பாடலை,அதன் உத்தி,வெளிப்பாட்டு முறையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பாடல்கள் நெடுக தீ வளர்க்கும் ரிசிகள்  ஆனந்தக் களிப்பில் மிதப்பதாக ,காடெல்லாம் பற்றி எரிவதாக சொல்லப்பட்டிருக்கும்.இங்கு தேசத்தின் குறியீடாக காடு சொல்லப்பட்டுள்ளது.1908 ல் நாடு முழுவதும் ஆங்காங்கு நடைபெற்ற வீறு கொண்ட இயக்கங்கள்.தொழிலாளர் வேலைநிறுத்தங்கள்,தீவிரவாதச்செயல்கள் மிதவாத பெட்டிசன் காங்கிரசுக்கு எதிரான புதியக் கட்சியின் தலைமையான திலகர்,விபின்சந்திரபாலர்,அரவிந்தர்,வஉ.சி,பாரதி,சுரேந்திரநாத் ஆர்யா,சக்கரை செட்டியார் போன்ற தலைவர்களுக்கு பெறும் உற்சாகத்தை தருகின்றன.இந்த அரசியல் உத்வேகத்தின் கலை வெளிப்பாடுதான் இந்தப் பாடல்.

ரிசிகள்: எங்கள் வேள்விக் கூடமீதில் 
          ஏறுதே தீ தீ-இந்நேரம்
        பங்கமுற்றே பேய்களோடப்
          பாயுதே தீ தீ

அசுரர்:  தோழரே,நம்  ஆவி வேவச்
          சூளுதே தீ தீ-ஐயோ நாம்
        வாழ வந்த காடு வேவ
          வந்ததே தீ தீ-அம்மாவோ
 இப்படியாக  பாடல் போகும்.

அக்கினி குஞ்சொன்று கண்டேன் –அதை
   அங்கொரு  காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு-தழல்
   வீரத்தில்  குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
      தத்தரிகிட தததரிகிட தித்தோம்

இந்தக் கவிதையிலும் மேற்சொன்ன கால இயக்கத்தின் பிரதிபலிப்பு உண்டு. செயல் வீரத்தை குறிப்பிட வரும் போது அதில் முதிர்ந்த வீரம்,இளைய வீரம் என்றெல்லாம் இல்லை.மொத்தத்தில் வீரம் எனச் சொல்ல வரும் பாரதி குறிப்பாக இளைய வீரத்தை அதன் களச்செயலை பார்த்து பூரித்து ஆனந்த கூத்தாடி வழிமொழிகிறார். இந்த அக்கினி குஞ்சாக ஆக்ஷை வீழ்த்திய வாஞ்சி, மாடசாமி; நெல்லை சீமையினூடாக சென்னை ராஜதானியை கலக்கிய ஹார்வி மில்,கோரல் மில் தொழிலாளர்கள் வரத்தான் செய்வர்.இதைத்தானே பாடினான் பாரதி.

6 comments:

 1. ஆறுவது சினம் என்ற கோட்பாட்டையே மாற்றி
  ரௌத்திரம் பழகு எனச் சொன்னவன் அல்லவா??!!
  பாரதியின் எழுத்துக்கள் பற்றி அருமையாய் ஒரு கட்டுரை
  நன்று நண்பரே.

  ReplyDelete
 2. மகிழ்ச்சி.இது பாரதி தொடரின் 8 ஆவது கட்டுரை.உங்கள் வலைப்பூ பார்த்தேன்;வாழ்த்துகள்

  ReplyDelete
 3. நல்ல பதிவு... முந்தைய பதிவுகளையும் படிக்கிறேன்...

  ReplyDelete
 4. பதிவின் ஊடாய் கருத்துகளைச் சொன்னால் நலம் பரிதி

  ReplyDelete
 5. தொடர்ந்து வாசித்து வருகிறேன் தோழரே.நல்ல முயற்சி.மொத்தமாக விமர்சிப்போம் என்று காத்திருக்கிறேன்.ரிஷாவை எழுதியவன் ரிஷி.ரிஷா என்றால் செய்யுள் என்பார் ராகுல்ஜி.

  ReplyDelete
 6. மகிழ்ச்சி தோழர்;நானும் உங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete