Monday, June 18, 2012

தாலி விலையில்லாப் பொருள்களினூடாக பண்பாடு குறித்த சொல்லாடலும் மக்களின் பண்பாட்டு ஓர்மையும்





நூறாண்டு பேசும் ஓராண்டுச் சாதனை என்கிற பெயரில் செல்வி ஜெ.ஜெயலலிதா அரசு ஓராண்டை நிறைவு செய்ததை அறிவிக்கும்  அரசு விளம்பரம் கடந்த மே 16 முதல்நாளேடுகளில் வெளிவந்ததை கண்டிருப்போம்.

அதில் காணப்பட்ட முக்கிய அம்சங்களில் சிலதை இங்கு பட்டியலிடலாம். அது:
பசியாறி மகிழ விலையில்லா அரிசி,பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு கிராம் தங்கம்,மகளிர் மனம் குளிர விலையில்லா மிக்ஸி,கிரைண்டர்,மின்விசிறி,எளியோர் ஏற்றம் பெற விலையில்லா கரவை மாடுகள்/ஆடுகள்,மாண,மாணவியர் கல்வியில் சிறக்க விலையில்லா மடிக்கணினி.

இந்த அம்சங்களிலிருந்து செல்வி ஜெயலலிதா அரசின் அல்லது தமிழக அரசின் பண்பாட்டு நோக்கை பகுத்துப் பார்ப்பதினூடாக பண்பாடு குறித்து அரசின் பார்வை/பண்பாட்டை பேணுவதில் அரசிற்கான செல்நெறி /பண்பாட்டை பேணுவது யார்?/எதை முன்னிட்டு பண்பாட்டை பேணுதல் வேண்டும்?/பண்பாட்டை பேணுவதில் அரசின் பங்களிப்பு / போன்றவைகளை அவதானிப்பதே இந்த கட்டுரையின் நோக்கு.

அரசின் அறிவிப்பில் ஒன்று தாலி,அதற்கான தங்கம்-திருமண உதவி;மற்றொன்று விலையில்லா பொருட்கள் பற்றியது.
தாலியோடான திருமணம் வழியாக பெண்களுக்கு தாலி அவசியம்;அதை ஆடவன் அணிவிப்பான்;தாலியை ஏற்பது பெண்களின் கடமை.இந்த தாலிக்குத் தங்கம்;இதோடு பண உதவி என்பதன் வழியாக அரசு அமைப்பு பெண்களுக்கு தாலியை கட்டாயப்படுத்துகிறது.திருமணத்திற்கு தாலி தேவை என்கிறது .தாலியை ஏற்காதப் பெண்களின் உணர்வுகளைப் புறந்தள்ளுகிறது.
அரசாங்கம் பழைய நிலவுடமையின் எச்சமான தாலியை நிறுவுவதன் வழி , ஆளும் வர்க்கம் அதனுடனான பிரதிநிதிகளால் காக்கப்பட்டு வரும் பெண்ணை சிறுமைப்படுத்தும்பண்பாட்டுக் கருத்துருவை,இருபத்தோராம் நூற்றாண்டிலும் கெட்டிப்படுத்த இப்படியான முன்னகர்த்துதல்களை செய்கின்றனர்.

மங்கல நாண் என்கிற தாலி தமிழ் சமுகத்தில் தொன்று தொட்டு வந்த பழக்கமல்ல.இடைகாலத்தில் வந்த பழக்கம்.தமிழ் சமுகத்தில் தாலி வீரத்தின் அடையாளமாகவும்இருந்திருக்கிறது..குறிப்பிட்ட பெண்ணை மணக்க விரும்பும் ஆடவன்,புலியோடுப் போரிட்டு அதன் பற்களைக் கொண்டு வந்து, பெண்ணின் கழுத்தில் அணிவிக்க வேண்டும்.இந்த மரபு முன்னெடுக்கப்பட்டிருந்தால் வீரம் ,வீரம் சார் மரபு
என கருதி இருக்கலாம்.

மங்கல நாண் என்கிற பெயரில் பெண்களை வாட்டி வதைக்கிற இந்தத் தாலி, சொத்தை பாதுகாக்க வேண்டி ஆண் வாரிசுகளை ஈன்றெடுக்க வேண்டிய பெண்ணை அடையாளப் படுத்தும  நிலவுடமை சார் அடையாளம் அன்றி வேறல்லஇந்தத் தாலியை பாதுகாக்க சொத்துடமை அமைப்பும்,மத நிறுவனங்களும் எடுத்துக் கொள்கிற பெறுமுயற்சிகள் அதன் மீது கட்டமைக்கப்படுகிற புனிதத்தன்மைகள் ,பரப்பப்படுகிற பரப்புரைகள்,பெண்ணின் சுயத்தை மதிக்காத ,தடுப்பு அரண் பணிகளை  நவீன காலத்தில் அரசே பொறுப்பேற்றுச் செய்வது பொறுப்பற்றச் செயல்நவீனப் பார்வையோடு செயல் படவேண்டிய அரசே ,பிற்போக்குச் சடங்குகளுக்குள் ஆற்றுப்படுவது பேரபாயம் ஆகும்
.
விலையில்லா பொருட்கள் பற்றியச் செயற்பாடுகளை கடந்த அரசும்,இந்த அரசும் தம்மை ஒரு சமுகநல அரசாக தோற்றங் காட்டிக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்கிறது.அடிப்படை உரிமைசார் வாழ்வை மேற்கொள்வதற்கான தேவைகளைப் பெறும் பொருட்டான  குறைந்த பட்ச வருவாய்,இலவசக் கல்வி,
இலவச மருத்துவம்,மனமகிழ் தேவைக்கான சூழல் போன்றவைகளை தரும் பொறுப்பிலிருந்து வழுவும் அரசு,தன் மேல்தட்டுவர்க்கச் சார்பை மக்களிடம் மறைக்கும் பொருட்டும்,எளிய மக்கள் மீது தமக்கு அக்கறை உண்டு என்று பொதுஒப்புதல் பெறும் பொருட்டும் , வெகுமக்களை இப்படியான பாப்புலிசம் சார்ந்த வசிகரிப்ப்பிற்கு உள்ளாக்கும் .( எம்.ஜி.ஆர் காலத்து பற்பசை,சோப்,தண்ணீர் வாளி கலைஞர் காலத்து வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி,எரிவாயு அடுப்புகள் )

அரசின் கீழ் வாழ்கின்ற பெரும்பகுதி எளிய,மத்தியதர மக்களுக்கு அடைப்படை குடிமைசார் வாழ்வாதார வாய்ப்புகளுக்கும் ,மனரீதியிலான ஆக்கப்பூர்வமான நுகர்வுகளுக்கும்,
வெளிப்பாட்டிற்கும் இடமளித்து,பொருள் உற்பத்தி சார்ந்தும்,கலை ஆக்கம் சார்ந்தும் அவர்களின் செயற்தன்மைக்கு மாற்றாக,அவர்களின் வாழ்வாதாரத்தின் மீது தொடர்ச்சியான புறக்கணிப்பையும்,நிந்தனையும் செய்து கொண்டு,பொறுப்பை கைகழுவுதலும், வெகுமக்களின் கவனத்தையும்,எதிர்ப்பையும் மடைமாற்றம் செய்யும் உத்தியான அய்ந்தாண்டுகளுக்கு ஒரு முறையான விலையில்லா பொருள் விநியோகச் செயல்,குடிமக்களின் சுயமரியாதை வாழ்வுரிமைப் பண்பாடு மீதான ,அரசின் பண்பாட்டு வன்மம் ஆகும்.

தாலி சார்ந்தும்,விலையில்லப் பொருள் விநியோகம் சார்ந்தும் அரசின் பண்பாடு பற்றியப் புரிதல் அதன் மொத்தச் செயல்பாடுகளை விளங்கிக் கொள்ளும் மாதிரி ஆகும்.

மரபுச் சின்னங்களை பராமரித்தல்,எழுப்புதல்,செவ்வியல் கலைப் பயிற்சி,நலிந்த கலைஞர்களுக்கு உதவி,நூல்கள் நாட்டுடைமையாக்கல்சிறந்த நூல்களுக்குப் பரிசு,கலை விழாக்கள்,கண்காட்சிகள் என அய்ம்பதாண்டு காலமாக சில ொதுவானப் பணிகளைச் செய்து வருகின்ற தமிழக அரசு ,தனது ஒவ்வோர் ஆண்டுதோறுமானத் திட்டங்களில் பண்பாடு பற்றிய ஒரு தெளிவான ,அரசுசார் கட்சிப் பார்வைகளுக்கு அப்பாற்பட்டு,மாநில மக்களின் பொதுவான மற்றும் குறிப்பான கலைப் பண்பாட்டு தேவைகளைஉள்வாங்கும் முறையில் கருத்துகள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் ஒரு செயல் வரைவுத் திட்டம் வைக்கப்பட்டு செயல் படுகிற அரசாக இருத்தல் வேண்டும்.

கலைவிழாக்கள்,உதவிகள்,பரிசுகள்,பயிற்சிகள் என காலத்திற்கும் பொதுவான நடவடிக்கைகள் அவசியமானதுதான். ாலச்சிறப்பும்தொன்மை சிறப்பின் அடையாளங்களாய் எஞ்சி நிற்கிற,உள்ளூர் அளவிலான,வயற்வெளி சார்ந்தது மட்டுமின்றி ,மலைவெளி,கடல்வெளி இனக்குழுக்கள்சார் பண்பாட்டு அசைவுகள் பாதுகாக்கப்பட,அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்பட வேண்டும்.கால்ம் கடந்து பயணப்பட்டு வருகின்ற ,பழமைவாத மாசுகள் அண்டாத சிறப்பான வாழ்வியல் கூறுகள் பேணப்பட வேண்டும் .பெரும்பகுதி விளிம்புநிலை மக்களின்  ஜனநாயக விருப்பங்களுக்கு உட்பட்டதான பண்பாட்டு நிரல்கள் பேணப்படுகின்ற குறிப்பான அணுகுமுறைகள் வேண்டும்.

இன்றைக்கும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிற வாழ்வியல் சடங்குகள்,கலைநிகழ்வுகள்,வாய்மொழி சொல்லாடல்களை பார்க்கிற பொழுது ஒவ்வொரு சமுகக் குழுக்களின் ஒழுங்கலாறுகள் பிறிதொரு குழுக்களின் ஒழுங்கலாறுகளிலிருந்து வேறுபட்டும்,ஒன்றுபட்டும் இருப்பதைக் காணலாம்பிழைப்புத் தேடி நகர்ந்த  புலப்பெயர்வுகளிலும் . வழி வழி தாம் பற்றி வந்த தொன்மரபு ஒழுங்கலாறுகளை பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.சொந்த புலத்திலோ,பெயர்ந்த புலத்திலோ ,பழக நேர்ந்த  மக்களின் மரபுகளையும் மதித்து அதனோடு ஊடாடியும் வரும் மரபு நம் தமிழ்மக்களின் மரபு.

மழைமறைவு பகுதியாகவும்,வெயில் தின்னும் நிலனாகவும் உள்ள தமிழ் மாநிலத்தின் அரசர்,மன்னர்,வேந்தர்களின் சொத்துடைமை காப்பதற்கான பேரழிவுப் போர்களின் மத்தியிலேயே தத்தமது சடங்கு,சாங்கியம்,தொழில்நுட்பத்தினூடாக வெளிப்பட்ட பண்பாட்டு அசைவுகளை உயிர்ப்போடு வைத்திருந்ததும்,இன்றைய அறுபதாண்டு காங்கிரஸ்,கழக ஆட்சியினூடாகவும் வைத்திருப்பதும் தமிழ் மக்களின் கூட்டுப் பண்பாட்டு ஓர்மை சார்ந்த பெருநிகழ்வாகும்.அடர்த்தி மிகுந்த பண்பாட்டு ஓர்மையின் பாதை,தமிழ் இனக்குழுக்களின் செறிவான கலை,இலக்கிய ,தொழில்நுட்ப மரபின் பாதையுமாகும்.தமிழகத்தின் எந்த அரசுகளின் பேருதவியாலும் பிழைத்து வந்ததல்ல இந்த எளிய மக்களின் பண்பாட்டுப் பொக்கிசம்.

நவகாலத்திய கார்ப்பரேட்டுகளின் நிதிமூலதனப் பாய்ச்சலினூடாக வந்த உலகமயம்,தமது பிராண்டுப் பொருட்களின் சந்தைக்காடாக மொழிகளின் நிலனை மாற்ற,மொழிகளின் பண்பாட்டு ஓர்மை,செழுமை,பன்மையை குலைத்துப் போட முயல்வதினூடாக ,இவைகளைப் பாதுகாக்கவும் பரவலாக்கவும் அரசின் பங்களிப்பு அமைய வேண்டும்.இப்படி இல்லாமல் வேடிக்கை பார்க்கும் அரசை எதிர்மறையாக பதிவு செய்யும் மக்களின் பண்பாட்டு ஓர்மை.
2012 ஜூன் 17 ல் தமுஎகச தமிழகப் பண்பாட்டு மலரில் வெளிவந்தது

No comments:

Post a Comment