Sunday, May 1, 2022

புதுமைப்பித்தனை வாசித்த முதல் அனுபவத்தை முன் வைத்து...

  


புதுமைப்பித்தன் பிறந்து 116 ஆண்டுகள் ஆகி விட்டன.

முதன் முதலாக புதுமைப்பித்தனை எப்போது வாசித்தேன்?

1982 கன்னியாகுமரியில் எனது உறவினர் சங்கம் லாட்ஜ் உரிமையாளர் அவர்களின் வீட்டிற்கு சென்ற உறவினரோடு நானும் சென்றிருந்தேன்.

அவரின் இளைய மகள் பிளஸ் டூ மாணவி. அவருடைய பிளஸ் டூ தமிழ் புத்தகம் வீட்டின் மேசையில் இருந்தது.எடுத்துப் புரட்டிப் பார்த்து வாசித்து பார்க்கிறேன்.

அதில் "ஒரு நாள் கழிந்தது" என்கிற கதை பாடமாக வைக்கப்பட்டிருந்தது. அதை எழுதியவர் புதுமைப்பித்தன் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. 

தமிழ்நாடு பாடப்புத்தக பாடத்திட்டத்தின் வழியாக புதுமைப்பித்தனின் ஒரு நாள் கழிந்தது கதை வழியாக நான் புதுமைப்பித்தன் எனும்  பெயரை முதன்முதலாக அறிந்து கொள்கிறேன்.

பிளஸ் டூ மாணவி உயர்படிப்பு படித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த பேராசிரியர் ராமச்சந்திரன் அவர்களை மணமுடித்ததை பின்னர் அறிந்து கொண்டேன் என்பது தனி.

ஒரு நாள் கழிந்தது கதை 1937 ல் எழுதப்பட்டது. மீண்டும் "ஒரு நாள் கழிந்தது" கதையை வாசிக்கிற பொழுது காலங்கள் ,ஆட்சிகள் மாறின; காட்சிகள் மாறினவா? என்பதற்கான ஓர் ஆவணமாக அந்தக் கதை இன்றும் இருக்கிறது.

அன்றாடம் காய்ச்சிகளின், ஒட்டுக் குடித்தன வாசிகளின், எழுத்து வாழ்வை இலக்கியவாழ்வை முழுவாழ்வாக வரித்துக்கொண்ட இலக்கியவாதிகளின் வாழ்க்கைப் பாடுகளை இந்த வாழ்வின் வரவிற்கும் செலவிற்கும்  பொருந்தி வராத சம்பளக் காசுகளை,  கதை மீண்டும் மீண்டும் அன்றாட வாழ்வின் துயரங்களை ஞாபகங்களை  நினைவுபடுத்தி 21 ஆம் நூற்றாண்டின் வாழ்வு 20 ஆம் நூற்றண்டின் வாழ்விலிருந்து அப்படி ஒன்றும் தலைகீழாக மாறிவிடவில்லை என்பதை துலக்கப்படுத்துகிறது ஒரு நாள் கழிந்தது.

 குழந்தை அலமுவின் வார்த்தைகளும் செயல்களும் கதையின் இன்னுமொரு அடுக்காக நின்று எழுத்தாளர் முருகதாசர் -கமலா இணையரின் வாழ்வின் துயரத்தை பேசாமல் உணர்த்துகின்றன. முருகதாசர் கொடுக்க தாமதிக்கும்  11 ரூபாய் நிலுவைக்காக அந்தியில் விளக்குப் பொறுத்த தீப்பெட்டியைக் கூட தர மறுக்கும் கடைக்காரரின் செயல் பெரிய பாரத்தை வாசகர் மீது வைத்து விடுகின்றன. 

நேர்கோட்டு linear கதையாக இல்லாமல் non linear கதையாக உத்தி கொண்டு அரசியல் பொருளாதார பண்பாட்டு விடயங்களை புதுமைப்பித்தனின் இந்தக் கதை உள்வாங்கி இருக்கிறது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யங்கள்-  இந்தியச் சந்தைக்கு வந்து குவியும் சோயாபீன்ஸ் முதல் மெழுகுவர்த்தி வரையான இறக்குமதிப் பொருட்களுக்கு எழுத்தாளர் முருகதாசர் ,அட்வர்டைசிங் கம்பெனியின் பொருட்கள் விளம்பரத்திற்காக சாகா வரம் பெற்ற எழுத்தோவியங்கள் எழுதுவதை விட்டு விட்டு, சந்தைப்படுத்தப்படுத்தப்படும் பொருட்களின் மீதான மகாத்மியங்களை காவியங்களை இயற்றிக் கொண்டிருக்கிறார் எனும் புபி யின் எழுத்தில் தொனிக்கும் நையாண்டி, வந்து இறங்கும் வெளிநாட்டுப் பொருட்களையும்  நையாண்டி வழி அவர் சமூகத்தின் விசாரணைக்கு உட்படுத்துகிறார் என நாம் உள் வாங்கிக் கொள்ள வேண்டும்.

மளிகைக்கடை பாக்கியில் ஒரு முன்று ரூபாய் கொடுத்து விட்டால் கொஞ்ச நாள் மளிகைக்கடைக்காரரின் அர்ச்சனைக்கு ஆட்படாமல் இருக்கலாம் என்பதற்காக சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுக்க நினைத்தாலும் ஒட்டிக் கொள்கிற சுந்தரம்பிள்ளை, பக்கத்து வீட்டு நெக்டை சுப்ரமணியபிள்ளை விளக்குப் பொறுத்தும் நேரத்தில் அந்திக் காப்பி குடிக்கும் நேரத்தில் வீட்டிற்கு வந்துவிட அலமுவை வைத்துக் கொண்டு மூணு கப் காப்பிப் போட கமலாவிற்கு குரல் கொடுக்கிறார் முருகதாசர்.

அப்பா எனக்கில்லையா? மாமா எனக்கில்லையா? எனக் கேட்கும் அலமுவை விட்டு விட்டு வந்தவரோடு காப்பி சாப்பிடுகிறார் புனைப்பெயர் சூடிக் கொண்ட பிரபல எழுத்தாளர் முருகதாசர்.

சுந்தரம் காப்பி குடித்து விட்டு கிளம்பி விட்டார்.தொண்டையைக் கணைத்துக் கொண்ட நம் எழுத்தாளர் சுப்ரமணியம்பிள்ளையிடம் "சேஞ்ச் இருக்கிறதா? ஒரு மூன்று ரூபாய் வேண்டும்" என கேட்கிறார். "சம்பளம் போடலே; அவசியமாக இருக்கிறது" என்கிறார். அதனாலென்ன என்ற டாம்பீகத்தோடு பர்ஸ் திறந்து எட்டணாவை (50 பைசா) "இப்போதைக்கு இதுதான் இருக்கிறது" என தூக்கித் தருகிறார் சுப்ரமணியம்பிள்ளை.

எட்டணாவை வைத்துக் கொண்டு என்ன செய்ய என நினைக்கும் முருகதாசரிடம் மளிகைகடைக்கான மூன்று ரூபாயை திங்கள் கிழமை பார்ப்போம்; இப்போதைக்கு இதை கொடுத்து காப்பிப்பொடி வாங்கியாருங்கோ என கணவரை கடைக்கு விரட்டுகிறார் கமலா

பதினோரு ருபாய் கடனைத் தாள இயலாத மளிகைக்கடைக்காரர் ,ஒரு மூன்று ரூபாய் புரட்டுவதற்கு சிரமப்படும் ஓர் எழுத்தாளர்; காப்பிப் பொடிக்கும் வழி இல்லாத சென்னை ஒட்டுக்குடித்தன வாழ்வு, நண்பர்கள் எனும் பேரில் அந்திக்காப்பி குடிக்க வரும் வாழ்வில் சிரமப்படும் இன்னும் இருவர்; சப்ரிஜிஸ்தர் மகள் ரிக்‌ஷாவில் போவது போல,தானும் ஏன் போகக்கூடாது என ரிக்‌ஷாகாரரிடம் சண்டை இடும் ஐந்து வயது அலமு என ஒரு தினசரி வாழ்வை கழிக்க சிரமங்களை எதிர்கொள்ளும் மனிதர்கள் என 1937 ல் ஒரு நாள் வாழ்வு என்பது 85 ஆண்டுகள் கழிந்தும் மாறிவிடாமல், மனிதர்களின் ஒரு நாள் வாழ்வை கடத்துவதே பெரும் போராட்டமாக இருக்கிறது என்பதை காட்சிப்படுத்துகிறது.

உற்பத்தி பெருகி இருக்கிறது; டிஜிட்டல் இந்தியா பிறந்து பத்தாண்டுகள் ஆகிறது;ரிக்‌ஷாவிற்குப் பதில் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் வந்து விட்டன. இன்றும் கமலாக்கள் முருகதாசர்கள் சுப்பிரமணிய பிள்ளைகள் வாழ்வில் வறுமை இல்லாத வாழ்வு வந்து விட்டனவா? காப்பி பொடிக்கும் பாலுக்கும் மல்லுக்கட்டும் எத்தனையாயிரம் குடும்பங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.இந்தநிலை மாறுவது எப்போது? என கதையில் இல்லாத பல கேள்விகளை ஒரு நாள் கழிந்தது வழி புதுமைப்பித்தன் எழுப்புகிறார்.

No comments:

Post a Comment