Friday, July 7, 2023

மாமன்னன் தவறவிட்ட இலக்கு எது?

இரண்டாவது நாளிலேயே மாமன்னனைப் பார்த்து விட்டேன்.மக்களின் உணர்வை அறிவதற்காக நம்ம மக்கள் திரளாக வாழும் வடசென்னை பட்டாளம் மகாலட்சுமி அரங்கில் பார்த்தேன்.மகாலட்சுமியில் படம் பார்ப்பதே சுகமான அனுபவமாக இருந்தது. எனது பார்வையை கருத்தை பிறகு சொல்லலாம் என நினைத்து ஐந்து நாட்களுக்கு பிறகு இன்று எழுதுகிறேன். மாரி செல்வராஜியின் விடுதலை உணர்வு சார்ந்த அரசியலைப் போற்றுகிறேன். அடித்தால் அடிப்போம்;வாடா என்றால் போடா என்போம்;திருப்பி அடிப்போம் என்று தோழர் சீனிவாசராவ் தலைமையில் ஐம்பதுகளில் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான விவசாயத் தொழிலாளர்கள் காவிரி நதிக்கரை மண்டலத்தில் முழங்கி வெற்றி பெற்றார்கள் என்பது சமநீதிக்கான போராட்ட வரலாறு. மாரிசெல்வராஜ்,வைகைப்புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின்,ஏ.ஆர்.ரஹ்மான்,தேனி ஈஸ்வர் ,பகத்பாசில், கீர்த்தி சுரேஷ், கீதாகைலாசம் பங்களித்த கொங்குமண்டலத்தின் சாதீயை சித்திரித்த மாமன்னனை பாராட்டாமல் இருக்க இயலுமா? மாமன்னன் தன் இலக்கை நோக்கி பயணித்தாரா? இலக்கை அடைவதற்கான சமூகத்தின் சூழலைப் புரிந்து கொண்டாரா ? சனாதனத்தின்படி மனிதர்களை மேல் கீழ் என வரலாற்று காலத்திற்கு பிறகு தொடங்கி மனிதர்களை இன்று வரை பிரித்து வைத்து உழைப்பை உற்பத்தியை அபகரித்து வளரும் தமிழ்நாட்டின் இந்தியாவின் சனாதன சிஸ்டத்தை கார்ப்பரேட் சாதியம் மதவெறி இடையிலான கள்ளக் கூட்டணியை உடைத்தெறிய அழகியல் சார்ந்த அரசியலை மாரியால் பயன்படுத்த முடிந்ததா? போன்ற கேள்விகள் எழுந்ததால் இன்று எழுதுகிறேன்.
மெய்யாலுமே தன்னை உணர்ந்த தன் சொந்தக் கட்சியின் சாதீயப்பார்வையை ஒடுக்குமுறையை உணர்ந்து,வாழும் வீட்டை தாக்க வேண்டும் என்கிற முடிவோடு வருகின்ற ரத்னவேலுவின் ஆள் அம்புகளை உணர்ந்து மகன் அதிவீரனிடம் மாமன்னன் வடிவேலு சொல்கின்ற அந்த வசனம் இருக்கிறதே, "வீட்டுக்குள் அத்துமீறி நுழையறவன் ஒருத்தனும் உசிரோடு வெளியே போகக்கூடாது" என்ற அந்த வசனம் தருகின்ற புரிதல் இருக்கிறதே அபாரமானது.தன் மீது சொந்தக் கட்சியினராலேயே சுமத்தப்படுகின்ற சாதீயத்தை உணர்ந்த பாத்திரமாக மாமன்னன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தன் அப்பனுக்கு உட்கார மறுக்கப்படுகிற இருக்கையில் உட்காரச் சொல்கின்ற அதிவீரனின் அந்த ஆவேச கொந்தளிப்பான எதிர்வினைக்கு மகாலட்சுமி திரையரங்கும் அதிர்ந்து ஆர்ப்பரித்தது.சாதீயத்தை எவ்வாறு எந்த முறையில் எதிர் கொள்ள வேண்டும் என்ற பார்வை அதிவீரனுக்கோ லல்லிக்கோ இருப்பதாக அந்தப் பாத்திரங்கள் வனையப்படவில்லை. கவுண்டர்கள் நடத்தும் கொங்குமண்டல ஆயத்த ஆடை தொழிலகங்கள் மீது உலக வங்கி ஓர் ஆய்வை நடத்துகிறது.இந்த தொழில் வளாகங்களை ஒட்டி மண்டலத்தை ஒட்டி சாதீயம் இயங்குவதை உலக வங்கி அறிந்து, இத்தகைய சாதியத்தோடு பிணைந்திருக்கிற தொழில்களை தொடர்ந்து நடத்திட நிதி உதவி செய்யலாம் என்று எழுதப்பட்ட அறிக்கையை அறிஞர் ஆனந்த் தில்டும்டே தன் சமீபத்திய நாலான தலித்துகள்: நேற்று இன்று நாளை என்கிற நூலில் ( கிழக்கு பதிப்பகம்,2020, தமிழில்: பாலுமணிவண்ணன்) குறிப்பிடுகிறார். சாதீயம் பழைய காலம் போல இல்லாமல் அது தன்னை காத்துக் கொள்ள இந்திய நிலப்பரப்பில் புதிய தாராளவாத , ஒளிரும் பாரதத்தை முன் வைத்து தங்களின் ஆட்சி அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ள இயங்கும் பெருமுதலாளித்துவ சக்திகளொடு இணக்கமாகிப் போகிறது. நவீன ஓருலக அணுயுத்த போரை முன்னெடுக்கும் நிதிமூலதன கார்ப்பரேட் சக்திகளை தங்களை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு இந்திய அளவிலான பெருமுதலாளிகள் பயன்படுத்துகிறது. உலக அளவில் தன்னுடைய சுரண்டலை அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள சாதிய திரட்சி அடிப்படையிலான தொழில்கள் மீது குறி வைத்து சாதீயத்தை மதவாதத்தை கையாள்கிற இந்திய ஆளும் வர்க்கத்தினரை காப்பாற்றிக் கொள்ள உலகவங்கியை கையாளும் க்ரோனி காப்பிடலிசம் உதவுகிறது.
இந்தப் புரிதல் நவீனகல்வி பெற்ற அதிவீரனோ லல்லியோ அறியாமல் இருப்பது என்ற முறையில் மாரி செல்வராஜ் உருவாக்கிய அந்தப் பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டதன் வழியாக சாதீயத்தின் மதவாதத்தின் வேர் எது என்கிற புரிதல் தெளிவாக்கப்படவில்லை.உள்ளூர் அளவிலான ரத்தினவேலுவை எதிரியாக கட்டமைத்து ரத்தினவேலு போன்றவர்களை இயக்குகிற தீண்டாமை சாதீயத்தை தாங்கிப் பிடிக்கும் சக்திகளை மாமன்னன் காப்பாற்றவே செய்கிறது. சாதீயத்தின் சனாதன அரசின் தாங்குசக்தி எதுவென மாமன்னன் போன்ற படங்கள் சித்திரிக்காதவரை இவைகளை அழித்தொழிப்பதற்கான வேர்களை இந்த திரைப்படங்கள் கண்டறியாதவரை இந்திய தமிழ்நாட்டின் சாதியத்திற்கு எந்த ஆபத்தும் இத்தகைய படைப்புகளால் உருவாகப் போவதில்லை. படியேறும் பெருமாளில் கற்கத் தொடங்கிய மாரி , கர்ணன் வெற்றிப்படமாக அமைந்து விட்டனதால் தொடர்ந்து கற்பதை அவர் விட்டுவிடக்கூடாது சிவப்பு காட்டும் தத்துவ வெளிச்சத்தில் தொடர்ந்து சாதீயத்திற்கு எதிரான கலைபடைப்புகளை தர மாரிசெல்வராஜ் முயல வேண்டும். வாங்க தோழர் ஒரு டீ குடித்துக் கொண்டே பேசுவோமா?

No comments:

Post a Comment