Sunday, February 9, 2020

புரட்சியைக் கொண்டாடும் நாடோடிகள் 2

நாடோடிகள் 2 ன் சுவரொட்டியைப் சென்னையில் பார்த்தப் பொழுதே பரவசம் தொற்றிக் கொண்டது.சசிகுமார்,அஞ்சலி,பரணியின் நிறைந்த சிரிப்பு மனதில் பரவசத்தை உருவாக்கியது.கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் என்று பி.சமுத்திரக்கனி இணைந்த, நாடோடிகள் 2 எதிர்பார்ப்பை எகிறவிட்டது.

பரவசமும் சிரிப்பும் கோபமும் வெடிப்பும் ஆவேசமும் கொண்டு மனதை வழி நடத்துகிறது நாடோடிகள் 2 .சாதிக்கு எதிராக , ஆணவக் கொலைக்கு எதிராக நாமாவோம் என்ற முழக்கம் உணர்வில் கலந்து பெரும் கொந்தளிப்பை  ஏற்றி விட்டிருக்கிறது.

 சம்போ சிவசிவ சம்போ / உறங்கும் மிருகம் எழுந்து கிடக்கும்/தொடங்கும் கலகம் துணிந்து கிடக்கும்/துடிக்கும் இதயம் கொழுந்து விடட்டும் என்ற நாடோடிகள் படத்தின் யுகபாரதியின் தீம் பாடல் நாடோடிகள் 2 லும் இடம் பெற்று , சாதியில் உறைந்து கிடக்கும் பகைமை அழிக்க பெரும் ஆவேசத்தை கிளறி விட்டிருக்கிறது.

புரட்சியை புரட்சியால் கொண்டாடுவோம் ,காட்சி முழுவதும் பரவி நிற்கிறது. சாதி அரசியலுக்கு எதிரான தொழிலாளிவர்க்கப் பார்வையை படம் கொண்டாடுகிறது.  இனம்,சுயசாதி அபிமானத்திற்கு எதிராக வசனங்களால் பின்னி பெடல் எடுத்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. தோழர்-ஜீவா-செங்கொடி-சிவப்பு வண்ணம்-சிவப்பு எண்ணம்-தமிழ் உணர்வு படத்தின் பாத்திரங்களாக கலையின் அரசியலாக வெளிப்பட்டிருக்கிறது.

 வாழும் காலத்தின் இழிவுகளை , முதலாளித்துவ அரசியல் சீர்கேடுகளை அச்சமின்றி விமர்சிக்கும் மெகா போன் புரட்சியாளர் பாத்திரம் (மூர்த்தி) காவியப்பாத்திரமாக மிளிர்கிறது.

சமயோசித அறிவு , போராட்டக்குணம்,கலைப்பார்வை கொண்ட ஆளுமையாக அங்காடித்தெரு அஞ்சலி மனம் கவர்கிறார். துள்ளல், துடிப்பு ஆவேசம் , புரட்சியின் புத்துயிர்ப்பாக சசிகுமார் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்.ரெட் சல்யூட் தோழர் சசிகுமார்.

செங்கொடியின் குடும்பம் அன்பால் வனையப்பட்ட , புரட்சி புரிந்துணர்வுள்ள குடும்பமாக அழகியலோடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சுயசாதி தீக்குள் சிக்கிக் கொண்ட ஜீவாவை பாதுகாக்க,  கம்பு சுற்றி களமாடும் செங்கொடிவ்யின் அப்பா (ரவிச்சந்திரன்) அம்மா ஸ்ரீரஞ்சனி பாத்திரம் கச்சிதம்.

சசிகுமாரின் தாய்மாமா ஞானசம்பந்தன்,அம்மா துளசி, சுபாஷினி கண்ணன் அவரவர் இயல்பான நடிப்பில் ஒளிர்கிறார்கள்.
 சின்னச் சின்ன சொல் எடுத்து புரட்சிக்கு கட்டியம் கூறி இருக்கிறது யுகபாரதியின் தீம் பாடல் வரிகள்.வாழ்த்துகள் தோழா.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு, ஏ.எல்.ரமேஷின் எடிட்டிங் படத்திற்கு துணை நிற்கிறது.
தயாரிப்பாளர் நந்தகோபால் மிகுந்த வணக்கத்திற்குரியவர்.செவ்வணக்கம் இயக்குநர் பி.சமுத்திரக்கனி.

தமிழ்நாட்டின் இடதுசாரி கட்சிகள்- முற்போக்கு இயக்கங்கள்,தொழிற்சங்கங்கள்,இளைஞர்,பெண்ணிய அமைப்புகள்,தமிழ் உணர்வாளர்கள் நாடோடிகள் 2 திரைப்படத்தை கொண்டாட வேண்டும்.திரையரங்கில் படத்தை சில வாரங்கள் ஒட வைக்க வேண்டும்.குற்றம் குறை பார்க்காமல் படத்தின் கலைக்காக அரசியலிற்காக, தமிழகத்தின் இடதுசாரி இயக்கங்களின் வளர்ச்சிக்காக இந்தப் பொறுப்பை ஏற்றாக வேண்டும்.

செய் புரட்சி செய்/துணிந்து செய்/விரைந்து செய்

No comments:

Post a Comment