இணைந்த இதயம்

Sunday, November 20, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி 12பாரதியை வசிகரித்த  சமத்துவம்

பாரதியின் கவிதைத் தொகுப்பில் புதிய  பாடல்கள் என சில பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.அதில்  ஒன்று குருவிப்பாட்டு.குருவியிடம்  மனிதர் கேள்விக் கேட்டு அதற்கு குருவி பதில் சொல்லும் முறையிலான  பாடல்.மொத்தப் பாடலை தொகுப்பில் வாசித்துக் கொள்ளலாம்.அதன் சில பகுதிகள்: 

கேளடா மானிடவா-எம்மில்  கீழோர் மேலோர் இல்லை
மீளா அடிமை  யில்லை-எல்லோரும் வேந்தரெனத் திரிவோம்
உணவுக்குக்  கவலை இல்லை-எங்கும் உணவு கிடைக்குமடா
பணமும் காசுமில்லை-எங்கு  பார்க்கினும் உணவேயடா 

ஏழைகள் யாருமில்லை செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வுகள் தாழ்வுமில்லை-என்றும் மாண்புடன் வாழ்வமடா
கள்ளம் கபடமில்லை-வெறும் கர்வங்கள் சிறுமையில்லை
கட்டுகள்  ஒன்றுமில்லை-பொய்க் கதைகளும் ஒன்றுமில்லை 
தீட்டுகள் தீதங்கள்-முதற் சிறுமைகள்  ஒன்றுமில்லை

குடும்பக் கவலையில்லை சிறுகும்பியத்துயருமில்லை
துன்ப மென்றில்லையடா-ஒரு  துயரமும் இல்லையடா 
விடுதலைப் பெறடா-நீ விண்ணவர் நிலைபெறடா
கெடுதலை ஒன்றுமில்லை-உன்  கீழ்மைகள் உதறிடடா

இன்ப நிலைபெறடா-உன்  இன்னல்கள் ஒழிந்ததடா
 சத்தியம்  கைக்கொள்ளடா-இனிச் சஞ்சலம்  இல்லையடா
தர்மத்தைக்  கைக்கொள்ளடா-இனிச் சங்கடம் இல்லையடா 

நீ எப்படி இருக்கிறாய்? உன் வாழ்க்கை முறை என்ன?என்று குருவியிடம்  கேள்விக் கேட்கப் படுகிறது.குருவி தான் நன்றாக இருக்கிறேன்.தனக்கு தின்ன தானியம் கிடைக்கிறது.வாழ்ந்திட ஒரு சிறு கூடும் உள்ளது.தானும் தன் இணையும் சென்று உலாவிட பூநிறைந்த மரங்கள் உண்டு;அடர்ந்த சோலைகள் உண்டு.திரிந்து விளையாட குளம்,ஏரி,சிறு குன்று,பெருமலை உண்டு என மட்டுமே சொல்ல வேண்டிய குருவி தன் எல்லைகளைக் கடந்து தம்மில் கீழோர் மேலோர் இல்லை என்கிறது.எல்லோரும் ஒன்று என்கிறது.உணவுக்கு பஞ்சமில்லை என்கிறது. 
ஏழைகளும்  செல்வர்களும் இல்லை என்கிறது.களவுகள் கொலைகள் இல்லாத காமுகர்களும் இல்லாத தனி உலகம் இது என்கிறது.விடுதலையைப் பெறு என்கிறது.இதற்கு சத்தியம்,தர்மத்தை கைக்கொள் என வழி சொல்கிறது.இப்படி செய்வதனால் மானுடர்களே உங்களுக்கு சங்கடமில்லை;இச்சகத்தினில் பெற இன்பம் மட்டுமே உண்டு என்கிறது.
இது குருவிகள் காணும் கனவு எனக் கொள்ளலாமா?அல்லது எங்கோ உலகத்தின் ஒரு பகுதியில் நிகழ்கிற மாற்றத்தை குருவிகள் வழி மானுடர்களுக்கு கடத்துகிற உத்தி எனக் கொள்ளலாமா?இதை குருவிகள் வழி அல்லாமல் நேரடியாக ஏன் சொல்லப்படவில்லை?நேரடியாகச் சொல்லாததற்கு இரண்டு காரணங்கள்;ஒன்று பிரிட்டிஸ் ஆட்சியில் இருந்த கடுமையான தணிக்கை,அடக்குமுறை.இன்னொன்று அழ்கியல் சார்ந்தது.ஆனாலும் இதில் அழகியலை அரசியல் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது.அழகியல் அரசியலை தின்றுவிடக்  கூடாது என்கிற அதீத கவனம் போலும் 

முன் எழுப்பிய இரு கேள்விகளுக்குக்கானப் பதிலை பாரதியின் கட்டுரைத் தொகுப்பிலுள்ள கட்டுரையான செல்வம்(2) வழி பெறலாம்.நீண்டக் கட்டுரையின் சில பகுதிகள் இப்படி இருக்கிறது.

“இதனிடையே மனித ஜாதி நாகரீகத்தில் முற்ற  முற்ற சமத்துவம் அவசியமென்ற கொள்கை ஒரு புறத்தே பரவிக் கொண்டே வருகிறது.இங்ஙனம் பரமார்த்த ஞானமுடையோர் மானிட வாழ்க்கை ஸுகமாகவும் ஸமாதனமாகவும்  நடைபெறவெண்டும் என்கிற லெளகீகக் காரணத்தைக் கருதி சகல ஜனங்களும் சமமாகவே நடத்தப்படவேண்டும் என்கிற கருத்தை பிரச்சாரஞ் செய்து கொண்டு வருகிறார்கள்.இக்கொள்கை நாட்பட நாட்பட ஐரோப்பாவிலும் அதன் கிளைகளாகிய அமெரிக்கா,ஆஸ்திரேலியாக் கண்டங்களிலும்,ஐரோப்பிய நாகரீகத்தை அநுசரிக்க விரும்பும் ஜப்பான்,இந்தியா முதலிய தேசங்களிலும் மிக விருத்தியடைந்து வருகிறது.” 

1917 நவம்பர் 7 ல் சோவியத் ருசியாவில் நடைபெற்ற புரட்சியின் வெற்றிக்குப் பிறகு பொது உடைமைச் சிந்தனை சார்ந்த வாத ,பிரதி வாதங்கள் உலகெங்கும் புது வீச்சாய்,புது பேச்சாய் அறிவுலகில் எழுகிறது.அரசியல் உலகிலும் எழுகிறது.உலகெங்கிலும் முதலாளித்துவ நுகத்தடியில் வதைப்பட்டு கொண்டிருந்த ,மாற்றத்தை விரும்பிய மக்கள் மனதை இது வசிகரிக்கிறது.ஐரோப்பாவைத் தாண்டி இந்தியா வந்த சமத்துவ கருத்தாக்கம் பாரதியையும் வசிகரிக்கிறது. 

எப்பொழுதும் அறிவுத் தேடல் மிகுந்த  பாரதி,பாழ்பட்ட பாரத தேசம்  அடிமை தளையறுத்து முன்னேற ,யாவருக்கும் உணவும்,சிறுமைகள் இல்லாத வாழ்வும் கிடைத்திட,யாவரும் தீட்டு பேதமின்றி சமத்துவமாக நடத்தப் பெற முதலாளித்துவ பிரிட்டன் போலன்றி ஸ்ரீமான் லெனின் தலைமையில் குடிமக்கள் சொன்னபடி குடி வாழ்வு,மேன்மையுற குடிமை நீதி சோவியத் மக்களுக்கு கிடைத்தது போல் தன் தாயக மக்களுக்கும் கிடைத்திட ஆவலுறுகிறார். 

பாரதி மேலும் தெளிவாக எழுதுகிறார்:”ஏற்கனவே ருசியாவில் ஸ்ரீமான் லெனின்,ஸ்ரீமான் மிந்த்ரோஸ்கி தலைமையில்  தேசத்து விளைநிலமும்,பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொது உடைமை ஆகிவிட்டது.” என்று வறவேற்று இம்மாற்றம் இந்தியாவில் மலர,எந்தந்த வகையில் மாற்றம் வரும் என்பதை உலகப் போக்கை கவனிக்கும் முற்போக்கு அரசியல்வாதி என்ற முறைமையிலும்,ஒரு படைப்பாளி என்ற உரிமையிலும் தான் பார்த்த,அனுபவித்த,தன் மக்கள் அனுபவிக்கிற மிடிமைகள் ஒழிந்து சமான,சகஜ வாழ்வு மலர குருவியை ஒரு பாத்திரமாக்கி,குருவியின் பார்வை வழி தான் சரியென உணர்ந்த கொள்கையை வந்தனம் செய்து ,அதன் பரவலுக்கு தன் கவிதையை தளமாக்குகிறார். 

வானத் தேவர்கள் போல  மேன்மை நிலை பெறவும்,கீழ்மையை ஒழித்திடவும்,துன்பம் இல்லாத நிலை எய்தவும் இந்தக் கவிதையில் ஒரு வழி சொல்கிறான் அந்த வழி சத்தியவழி,தர்மவழி.இந்த வழியில் மானுடர் செல்வது ஒன்றுதான் அவர்கள் செய்ய வேண்டிய கருமம் என்கிறான்.சமத்துவ,பொது உடைமை.வழிதான் பாரதி மொழிகிற சத்திய வழி;தர்மவழி.ஆனால் ஒன்று சமத்துவத்தில் முழு ஏற்பு கொண்டவன் இதன் நடைமுறையில்,எதிரியோடு மோதுவதில் சில விமர்சனமும் வைத்திருந்தான்.இந்த விமர்சனம் தோழமை விமர்சனம். முதலாளித்துவ இம்சையை புரிந்து கொண்ட அவனின் அகிம்சை ,கருணாவாதிகள்,நல்லவர்கள் அகிம்சை பக்கமே நிற்பது சரி என்கிற ரீதியிலான நட்பு விமர்சனம்..
(2011 நவம்பர் 21 தீக்கதிர் இலக்கியச் சோலையில் வெளியானது)

2 comments:

  1. நல்ல ஆய்வுக் கட்டுரை தோழர். //அழகியல் அரசியலை தின்றுவிடக் கூடாது என்கிற அதீத கவனம் போலும்// மிகச் சரியான வரி.

    ReplyDelete
  2. மகிழ்ச்சி யுவபாரதி

    ReplyDelete