சில நாட்களுக்கு முன் தீக்கதிர் இதழின் திரைக்கதிர் பகுதியில் கவிஞர்
வைரமுத்து அவர்களின் சினிமா குறித்த கருத்து பிரசுரமாயிருந்ததை வாசித்தேன்.கொஞசம்
அதிர்ச்சி அடைந்தேன்.விவரம் அறிந்தவர்,சிரமப்பட்டு முன்னுக்கு வந்தவர்,பிற்போக்குவாதியாக
இல்லாதவர் என்ற நோக்கில் இன்றைய தமிழ் சினிமா உலகம் குறித்த கவிஞரின் கருத்து
ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது
“பெரிய படங்கள் மட்டுமல்ல சிறிய படங்களும் கவனிக்கப் படவேண்டும்.காட்டில்
குயில் மட்டும் கூவினால் காடு நிசப்தமாகி விடும்.எல்லா சத்தங்களாலும்
நிறைந்திருந்தால்தான் காடாக இருக்கும்.”(தீக்கதிர்
23.12.2011)
.சில நாட்கள் முன் சென்னையில் நடைப் பெற்று
முடிந்த 9 ஆவது சர்வதேச உலகத் திரைப்படவிழாவில்
திரையிட மறுக்கப்பட்டு பின் திரையிடப்பட்ட தென்மேற்கு பருவக்காற்று
திரைப்படம் குறித்த அவரின் பரிவுணர்ச்சியை தெரிவிக்கும் போது வெளிவந்த கருத்தாக இது இருக்கலாம்.
என்றாலும் அவரின் இந்த சொல்லாடலும் உவமையும் சரியானதாக இல்லை:மட்டுமல்ல இவர்
யாரின் பிரதிநிதியாக பேசுகிறார் என்கிற சிக்கலும் வந்து விடுகிறது.
வைரமுத்து சொன்ன முன் பகுதி சிறிய
படங்களுக்கான ஆதரவுக் குரல் போலவும்,பின்பகுதி பெரிய படங்களுக்கான நியாயக் குரல்
போலவும் வெளிப்பட்டுள்ளது. இன்றைய தமிழ் திரைப்பட அகராதியில் சிறிய படம் என்பது 2கோடி
வரையிலும் பெரிய படங்கள் என்றால் 25 கோடி வரையிலும் .எடுக்கப்படும் படம் என
அர்த்தப்படும்.2கோடி செலவில் படம் எடுப்போர் சொந்த பணம் மட்டுமின்றி வட்டிக்கு
வாங்கி படம் எடுப்போராகவே பெரும்பாலும் உள்ளனர் இதன் பெரும்பகுதி நடிகர்களின் ,தொழில்நுட்பக்
கலைஞர்களின் சம்பளமாகவே போய் விடுகிறது. சங்கங்களின் உடன்படிக்கைக்கு உட்படாத அல்லது
அடாவடியாக மீறுகிற சம்பளக் கட்டாயம் பெரும் மூலதனம் போட்டு படம் எடுப்போர்களால் திணிக்கப்பட்டது.
பெறும் சிரமப்பட்டு படம் எடுக்கும் சிறிய தயாரிப்பாளர்களின் படத்தை திரையிட
அரங்குகளும் கிடைப்பதில்லை.கிடைப்பதில்லை என்றால் இதுவும் பெரு மூலதனக்காரர்களால்
உருவாக்கப்பட்ட சதிவலைதான்.ஆண்டுக்கு 10அல்லது 15 என்ற அளவில் வெளிவரும்
பெருமூலதனத்தில் வெளிவரும் படங்களின் சந்தையை மனதில் வைத்து போட்டி அற்ற களத்தை
உருவாக்குவதற்காக சிறுமூலதன படங்களுக்கு திரைஅரங்கை மறுக்க வைப்பது தொடர்ச்சியாக
நடைபெறுகிறது.இதை எல்லாம் மீறிய ரசிகர்களின் புத்தெழுச்சி சிறுபடங்களுக்கான தளமாக
உள்ளது.
ஆண்டுக்கு 100 முதல் 130 வரை வெளியாகிற தமிழ்படங்களில்
பெருநட்சத்திர,பெருமூலதன படங்களை கழித்து விட்டால் தொண்ணூறு சதம் படங்கள்
சிறியமூலதன படங்கள்தான்.இந்தப் படங்கள்தான் தமிழ் திரைக்கு
புத்தெழுச்சியும்,புதுப்பார்வையும் தந்துகொண்டு வருகின்றன.மொத்த தமிழ்திரை உலகின்
சந்தையாகவும்,சிறுகலைஞர்கள்,தொழில் நுட்பக்கலைஞர்கள்,திரைஅரங்குகள் உள்ளிட்ட மொத்த
திரைஉலகின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது.
இந்த சிறுமூலதன படங்களால்தான் தமிழ்திரைக்கு உலகளாவிய அங்கீகாரமும்
மரியாதையும் உருவாகி வருகின்றன.இந்திய அளவில் சொந்த மண்,மக்கள் அடையாளத்தை முன்னிறுத்தி புதுப்பாதையை
திறந்து விட்டதும் இந்த படங்கள்தான்.உலகாளாவிய சந்தையும் கவனமும் வட்டார மொழியில்
வட்டார பண்பாட்டு அடையாளத்தை முன்னிறுத்துகிற போதே பெறப்பட்டு அந்த வகைப் படங்களே
உலகப்படங்களாக கொண்டாடப்படுகின்றன.
இந்த வகைப் படங்களுக்கு பிறில்லாமல் குரல் கொடுக்க வேண்டிய வைரமுத்து,தன்னை
வளர்த்த தனக்கு ஒர் அடையாளத்தை கொடுத்த சிறு மூலதனப்படங்கள் மட்டும் போதாது
குயில்கள் மட்டும் கூவினால் போதாது;சிங்கம்,புலி,காண்டாமிருகம் வகையிலான
தயாரிப்பாளர்கள்,நட்சத்திரங்கள் இருந்தால்தான் காடு அல்லது திரைஉலகமாக இருக்கும்
என்று அவர் உதிர்த்திருக்கும் கருத்து
பெருமூலதனங்களுக்கு அடிக்கிற ஜால்ரா அல்லது அவர்கள் பயணத்திற்கு விரிக்கப்படுகிற
நடைப்பாவாடை என்றே அர்த்தம்.
(மாற்று இணைய இதழில் வெளியானது)
(மாற்று இணைய இதழில் வெளியானது)
No comments:
Post a Comment