Sunday, January 22, 2012

சந்தையில் ஜனநாயகம் சாத்தியமா?



நியூயார்க்கில்  தொடங்கப்பட்ட வால்ஸ்டிரீட் இயக்கத்திலிருந்து அமெரிக்க,இந்திய ஆளும் வர்க்கங்கள் எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை.வால்ஸ்டிரீட் இயக்கத்தினர் கூடி திட்டமிட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான பூங்காவை அமெரிக்க போலிஸ் மூடி சீல் வைத்ததோடு மட்டுமில்லாமல் போராட்டக் காரர்களை தாக்கி,வழக்குகள் புனைந்து இந்த இயக்கத்தை முடிவிற்கு கொண்டு வந்துவிடலாமென அமெரிக்க அரசு தாக்குதலை தொடுத்து வருகிறது.இந்திய மன்மோகன் அரசோ சில்லரை வர்த்தகத்தில்,காப்பீட்டுத்துறையில்,கல்வியில்,சட்டத்துறையில் அமெரிக்க மாடலை கொண்டுவர தொடர்ந்து ஆசைப்படுகிறது. 

ஜி7,ஜி8,ஐரோப்பிய கூட்டமைப்பு என வித விதமான சந்திப்புகளை வளர்ச்சிப் பெற்ற நாடுகள் நடத்திப் பார்க்கின்றன. .இறுதியில் அவர்கள் கண்ட தீர்வு இந்தியா போன்ற வளரும் நாடுகளோடு வள்ர்ச்சியை பகிர்ந்து கொள்ளுதல் என்பதிலான அவலும் உமியும் கொண்டு வந்து சாப்பிடும் கதைதான்.வால்ஸ்டிரீட் எதிர்ப்பியக்கம் அமெரிக்காவைத் தாண்டி,நாங்கள் 99 என்ற பெயரில் ,ஏனைய வளர்ச்சிப் பெற்ற நாடுகளிலும் நடைபெறுகிறது

.இத்தாலி பிரதமர் மரியோ மாண்டி போப்பாண்டவரை பார்த்து பொருளாதார சீர்குலைவை கவலையோடு பகிர்ந்து கொண்டிருக்கின்றார். 
ஆனாலும் இந்த ஆளும் வர்க்கங்கள் சிக்கலுக்கு  ஏற்ற தீர்வு தெரியாமல் திண்டாடுகிறார்கள்.சீனா,கியூபா, போன்ற நாடுகளின் வளர்ச்சி சூத்திரத்தை அறிந்தும்  இவர்களால் அதை ஏற்றுக்  கொள்ள இயலாது.இந்த நாடுகளின் வளர்ச்சிக்கான அடிப்படை பெரும்பகுதி 99% மக்களுக்கானது.அமெரிக்கா ,இத்தாலி, பிரிட்டன் ,பிரான்சு உள்ளிட்ட வளர்ச்சிப் பெற்ற நாடுகளோ 1% கார்ப்பரேட் முதலாளிகளுக்காக 99% பெரும்பகுதி மக்களை காயப்போடும் குணம் கொண்டவைகள் 

1% பெருமுதலாளிகளுக்கான  உலகமயம் அடுத்த இருபது ஆண்டுகளில் ஏமாந்தவர்களை விழித்தெழச் செய்து விட்டது. உலகமயம்,தனியார்மயம் பணம் இல்லாதவர்களை,போதிய கட்டுமானம் இல்லாதவர்களை யாரும் சந்தையில் போட்டி போடலாம் என்ற ஜனநாயகப் போர்வை சுற்றி  நசுக்கிய கொடுரத்தை அடுத்து வந்த இருபது ஆண்டுகளில் சாதாரண மத்தியதர,எளிய உழைப்பாளிகள் புரிந்து கொண்டு விட்டதன் அடையாளமே 99% எதிர்ப்பியக்கம்.இந்திய அளவில் இடதுசாரிகளின் எதிர்ப்பியக்கம் 90களிலிருந்து நடைபெற்று வருகிறது. 

தொடக்கம்  முதல் இடதுசாரிகள் மட்டுமே  உலகமயம் ஏகாதிபத்திய நாடுகளின் சூழ்ச்சிவலை; மனித முகமூடி போட்டுக் கொண்டு வரும் கபளிகர நாச எண்ணம் கொண்ட அதே பழைய ஏகாதிபத்தியமே என்றனர்.அப்போது காதில் போட்டு கொள்ளாதவர்கள் இப்போது யோசிக்கிறார்கள்.யோசனை சரி.ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் வாழ்க்கையை இழந்து தெருவிற்கு வந்த,நிலைமையை சமாளிக்க வழியின்றி தற்கொலை செய்து கொண்ட எளிய உழைப்பாளிகளும்,விவசாயிகளும்,மீடில்கிளாஸ் என்கிற மத்தியமர்களும் ,சிறு முதலாளிகளும்அடைந்த வாதைகள்,இழப்புகள் கொஞ்சமன்று.  

வால்ஸ்டிரீட்  எதிர்ப்பியக்கதிற்கு பிறகு ஜோசப் ஸ்டிகிளிட் போன்ற நோபல் பரிசு பெற்ற,அமியாகுமார் பக்ஸி போன்ற அறிவாளிகள் பலர் மாற்று கருத்தை முன்வைக்கிறார்கள்.இது அசமத்துவமான  சமூக அமைப்பின் அரசியல்,பொருளாதார தோல்வி  என்கிறார்கள்.மார்கெட் என்கிற சந்தையில் ஜனநாயகம் இல்லை என்கிறார்கள்.கார்ப்பரேட்டுகளின் தோல்வி ஜனநாயகமற்ற முதலாளித்துவத்தின் அரசியல் தோல்வி என்கிறார்கள்.  

வால்ஸ்டிரீட்  எதிர்ப்பியக்கம் உலக அளவில் ஜனநாயக சிந்தனை கொண்ட பல அறிவாளிகளை யோசிக்க வைத்திருக்கிறது. முதலாளித்துவ சார்பு போக்கை விமர்சிக்க வைத்திருக்கிறது.மாற்று என்ன என்று கேள்வி கேட்க வைத்திருக்கிறது.சந்தையை ஜனநாயகப்படுத்த வேண்டும் என சிந்திக்க வைத்திருக்கிறது.நிலையான,சமத்துவமான ,ஜனநாயக,பொருளாதார வளர்ச்சியை பேச வைத்திருக்கிறது.  

இந்த மாற்று சிந்தனகள் சரி.மாற்றை யார் முன்னெடுப்பார்கள் என்பதே கேள்வி.கார்ப்பரேட்டுகளால் ஆளப்படும் அரசுகள்  கார்ப்பரேட்டுகளின்  இழப்பை சரிசெய்ய மக்களின் வரிகளை,அரசு கஜானாவை ஈடுகட்டல் என்ற பெயரில் எடுத்துக் கொடுக்கும் கொள்ளையை நிகழ்த்தும் அறம் அற்ற முதலாளித்துவ நிறுவன அமைப்புகளிடமா இந்த தார்மீகத்தை எதிர்பார்க்க முடியும்?.ஓபாமாவோ,பிரிட்டனின் டேவிட் காம்ரூவோ,பிரான்சின் நிக்கோலஸ் சார்கோக்ஷியோ,மன்மோகனோ இந்த தலைகீழ் மாறறத்தை செய்ய ஒப்புவார்களா?இந்த 99% மக்களுக்கு எதிரான கொள்கையை வடிவமைத்ததும்,நடைமுறைப்படுத்துவதும் இவர்கள்தானே? முதலாளித்துவத்திற்குள்ளே நபர்கள் மாறுவதோ,கட்சிகள் மாறுவதோ தீர்வல்ல.  

99% மக்களுக்கு  சார்பான கொள்கையும் நோக்கும்  கொண்ட ,இடதுசாரி மற்றும்  மாற்றம் விரும்பும் ஜனநாயக சக்திகளாலேயே ஜனநாயகமிக்க  ஒரு மாற்று சந்தையை வடிவமைக்க இயலும்.நிலையான,சமமான அரசியல்,பொருளாதார வளர்ச்சியை சாத்தியமாக்க இயலும்.இந்த மாற்றம் கொணரும் வேட்கை மிக்க அமைப்பிற்கு துணையாக அமியாகுமார் பக்ஸி,ஜோசப் ஸ்டிகிளிட் போன்ற அறிவாளிகள் நிற்க வேண்டும்.


No comments:

Post a Comment