Thursday, June 1, 2017

தமிழ் அடையாளத்தை தடப்படுத்தும் வேள்பாரி




வீரயுகநாயகன் வேள்பாரி எனும் தொடரை சு.வெங்கடேசன் ஆனந்த விகடனில்  முப்பதியிரண்டு வாரங்களாக , எட்டு மாதங்களாக எழுதி வருகிறார். அவ்வப்பொழுது வாசித்து வருகிறேன். பரபரப்பான இயக்கம் சார் பணிகளில் இருக்கும் எனக்கு, இந்தத் தொடரை , தொடர்ந்து வாசிக்கப்  பயம் தொடர்ந்து கொண்டே வந்தது.

தமிழ் அடையாளம் சார்ந்து திணை , பொழுது சார்ந்து எழுதப்படும் புனைவு , வாசிக்கப் போய், அப்படியே கட்டிப் பிடித்து உள்ளிழுத்துக் கொள்ளும் சதுப்புநிலச் சரிவு புதைகுழி போன்ற ,வாசிப்பு அனுபவம் கிடைப்பதால் தோய்ந்து போய் பொழுதுகள் போகுமோ என்கிற் அச்சத்தில் தொடர்ந்து வாசிப்பதை தவிர்த்து வந்தேன்.

இயலவில்லை. சில வாரங்களாக தொடர்ந்து வாசிக்கிறேன். செந்தாது ஒட்டிக் கொண்ட சூழலை வள்ளி சொல்லும் பொழுது அப்படியே மனம் பரவசமாகி, அந்தக் காட்டிடை வள்ளியின் அருகன் , முருகன் போல நாமும் அவளோடு உடன் செல்கிறோம்.

அன்னமழகியரிசியின் கதிரைக் கசக்கி உண்ட வள்ளிக்கு விக்கலெடுக்க , அவளுக்கு நீர் தேடி, ஓடும் முருகன் , கானவெள்ளெருக்கு விளைந்திருக்கும் நிலம் பர்ர்த்து ஓடி , மண்ணைத் தோண்டி நீரைக் கண்டடையும் பொழுதில் அங்கு முருகன் இல்லை  ; நாம் தான் இருக்க உணர்கிறோம்..

”  நீர் இருக்கும் இடத்தில் தழைக்கும் வேர் அல்ல; வேர் இருக்கும் இடத்தில் சுரக்கும் நீர் “  என்று காதலிற்கு முருகன் சொல்லும் விளக்கம் உண்மை.
தோள் சாயும் காதலைத் ஏந்திப் பிடித்து நிலைக்கச் செய்யும் ஆறுதல் காதல் என்று , அன்பைத் தவிர பிரிதொன்றை தேடாதது காதல் என்று முருகனின் விளக்கத்தில் தொடரோடு நாம் நெருக்கமாகிறோம்.

 குறிஞ்சி, முல்லை, நிலம் சார்ந்த எனக்கு , மழைக் குறித்தப் பகிர்வு,   பதின் பருவ மழை வாசனையைத் மீட்டுத் தருகிறது. தூசி,தும்மல்,கூடல்,முதுநிலை என்ற நாம் அயித்துப் போன விடயத்தை , நம் இலக்கியங்களில் பதிந்து கிடப்பதை, புனைவுச் சித்திரமாக்குகிற பொழுது , அதன் ஈர்ப்பு பெருமகிழ்ச்சித் தருகிறது.

இயற்கையிலிருந்து விலகிப் போன கற்றல்முறை குறித்து கபிலர் விசனப்படும் இடமும் , பாரி கேட்ட கேள்விக்கு , பொருளோடு மொழியைப் பொருத்திய ஆதிகாலம் குறித்ததாக, கார்த்திகை விண்மீன்கூட்டம் குறித்ததாக, பாரியின் கேள்வியை கபிலர் எதிர் கொள்ளும் , மற்றொரு இடமும் , இருபெரும் ஆளுமைகளால் நாம்  வியக்கின்ற இடங்களாகும்.

உதிரன்,நீலன் திசைவேழர் என்று பாத்திரங்களுக்கானப் பெயர்கள் , நம் ஆதி தமிழ் அடையாளத்தை தடப்படுத்தும் , வந்த இடத்தை ருசுப்படுத்தும் சித்திரப்பாடுகள்.

மணியன் செல்வன் கோட்டோவியம் குறிஞ்சி நிலத்தை அதன் மனிதர்களை அற்புதமாக காட்சிபடுத்தித் தருகின்றன.

ஒரு வாரம் முன்பு வாங்கிய விகடனில் இந்த அத்தியாயத்தை ருசித்து, உணர்ந்து முகர்ந்து அனுபவித்து வாசிப்ப்பதற்குள்  , 33 ஆம் அத்தியாயத்தின் விகடன் வந்து விட்டது.
வாழ்த்துகள் சு.வெ !


No comments:

Post a Comment