Saturday, November 15, 2014

தமிழ்த் திரைப்படங்கள் உறவும் ஊடாட்டமும்


1970 களிலிருந்து தமிழ்த் திரைப்படத்தை பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறேன்.ஞானஒளி நான் பார்த்த முதல் திரைப்படம்.சிவாஜிகணேசன்,சாரதா,மேஜர் சுந்தர்ராஜன் நடித்தப் படம்.பி.மாதவன் இயக்கிய படம்.நான் கேட்ட முதல் திரைப்பாடலும் இந்த படத்தில் இடம் பெற்று டி.எம்.எஸ் பாடிய `தேவனே என்னைப் பாருங்கள் என்பதுதான்.நான் சமீபத்தில் பார்த்தப் படம் பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ்
ஞானஒளிக்கும் மெட்ராஸிற்கும் இடையில் நாற்பது ஆண்டுகள் ஓடிவிட்டன.இந்த நாற்பது ஆண்டுகளில் குத்து மதிப்பாக மூவாயிரம் தமிழ்த் திரைப்படங்கள் வந்திருக்கலாம்.நானும் குத்து மதிப்பாக ஆயிரத்து ஐநூறு படங்கள் பார்த்திருப்பேன்.

தமிழ்த் திரைப்படத்தை தென்னக அளவில் இந்திய அளவில் பிரபலப்படுத்திய கலைஞர்கள்,இயக்குநர்கள்,தயாரிப்பாளர்கள் நம்மிடையே உண்டு என்ற பெருமையும்,அவர்களோடு நாம் வாழ்ந்திருக்கிறோம்,பழகியிருக்கிறோம் என்ற கூடுதல் பெருமையும் உண்டு.

இந்தியத் திரைப்படத்திற்கு நூற்றாண்டு கால வரலாறு உண்டு என்பதினுள் தமிழுற்கும் இந்த நூற்றாண்டு பெருமை உண்டு.தமிழ்நாட்டில் திரைப்படம் வந்து நூறாண்டு ஆகி விட்டது.தாதா சாகிப் பால்கே தயாரித்த மவுனப்படமான ஹரிச்சந்திரா வந்த அடுத்த மூன்றாண்டில் சென்னை ஆர்.நடராஜமுதலியார் எடுத்த மவுனப் படம் கீசகவதம்.இது வெளிவந்த ஆண்டு 1916.

இந்த நூற்றாண்டில் தமிழ்த் திரைப்படத்தின் முகமும் மொழியும் வளர்ந்து வந்திருக்கின்றன. உலகெங்குமான திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைப்படங்கள் பங்கு பெறுகின்றன.அடையாளம் பெறுகின்றன.கதை மொழியும் காட்சி மொழியும் உடல்மொழியும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன.உலகப் படங்களோடு,இந்தி,வங்கம் போன்ற இந்திய மொழிப் படங்களோடு தமிழ்த் திரைப்படங்களுக்கான உறவும் ஊடாட்டமும் தொடக்க கால முதலே இருந்து வந்திருக்கின்றது.

கலைவாணர் நடிப்பில்,கருத்தில் சாப்ளினின் பின்புலம் இருக்கும்.பீம்சிங் படங்களில் சாந்தாராம் அணுகுமுறை இருக்கும்.சிவாஜியின் நடிப்பில் மார்லன் பிராண்டோவின் நுட்பம் இருக்கும்.ராஜா ராணி படத்தின் மூலம் ரோமன் ஹிஸ்டரி படமல்லவா?அறுபதில் மறைந்து போன அமெரிக்க இசைஞன் நேட்கிங் கோலின் பாதிப்பு தமிழில் இல்லையா?சத்யஜித் ராய்,ரித்விக் கட்டக் போன்றோர் தமிழ்ப் படங்களுக்கு நெருக்கமான ஆளுமைகள் அல்லவா?ரிதுபர்ன கோஷ் பெயரை தமிழ்த் திரைப்பட ஆர்வலர்களும் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

ஸ்ரீதர்,எஸ்.பாலசந்தர்,கே.பாலசந்தர்  வழியாக மாறத் துவங்கிய தமிழ்த் திரைப்படம் ஜெயபாரதி,தேவராஜ் மோகன்,பாரதிராஜா,மகேந்திரன்,பாலுமகேந்திரா,அரிகரன்,ஜான் ஆஃப்ரகாம்,சிங்கிதம் சீனிவாசராவ்,துரை போன்றோரின் படங்கள் ஃப்ரான்ஸ் புதிய அலையின் ட்ரூபோ,கோதார்த் பெயரை இவர்களின் படங்களை அறியாமலா மாறி வந்திருக்கும்.எங்க பாட்டன் சொத்து,ரிவால்வர் ரீட்டா போன்ற ஜேம்ஸ்பாண்ட் படங்களின் மூல ஹீரோ சீன் கானரி,ரோஜா மூர் தானே?

இந்த உறவும் ஊடாட்டமும் இயற்கைக்கும் சமூகத்திற்கும் அவசியமானது போலவே இயற்கையின் ஒர் அங்கமான மனிதர்களுக்கும் இவர்களின் கலையாக்கத்திற்கும் அவசியமாகிறது.ஊடாட்டமும் பரிவர்த்தனையும் பண்பாட்டுத் துறையில் ஒன்றை ஒன்று பாதித்து புரிதலையும் வளர்சியையும் சாத்தியமாக்குகிறது.ஏனைய துறைகளைப் போலவே திரைப்படத் துறையிலும் ஊடாட்டம் அவசியமாகிறது.

 பார்க்கத் தவறுகிற அல்லது பார்க்காத ஒரு கோணத்தை ஒரு மொழி படம் சொல்லும் பொழுது,அது இன்னொரு மொழி சார்ந்த படைப்பாளியின் உணர்தலை தொட்டுப் பேசி  விரிவாக்குகிறது.எங்கே நிற்கிறோம்?அடுத்து என்ன?என்பதை படைப்பாளி உணர்ந்த கோணம் தொட்டு துலக்குகிறது.புதிதாய் கிடைக்கும் புரிதல் அசலிலிருந்து இன்னொரு அசலை தம் மண் சார்ந்து,தம் மொழி சார்ந்து தம் சூழல் சார்ந்து உருவாக்குகிறது.  அசலின் சாயல் மூலக் கதையின் கருவாய் இருக்கும். ஆனலும் அது அசல் அல்ல.மூல அசல் தந்த விளைவில் தம் சூழல் சார்ந்து கதையில் வந்திருக்கும் இன்னொரு அசல் என்பதே சரி.

இப்படியான புதிய அசல்களை நம் திரை உலகம் உருவாக்கி வந்திருக்கின்றது.இந்த உருவாக்கம் தமிழின் திரை முகத்தையும் புதியதாய் உருவாக்கி இருக்கிறது.இந்த புரிதல் அல்லாவிடில் விஜய்யின் தெய்வத் திருமகள் ஐ ஆம் சாம் படத்தின் காப்பி என்பார்கள்.மிஷ்கினின் நந்தலாலா கிருசிரொ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்பார்கள்.

வெற்றிகரமாக ஓடிய நலன் குமாரசாமியின் சூது கவ்வும் படம் தமிழில் புது முயற்சி.மேலோட்டமாகப் பார்த்தால் இதில் என்ன புதிது என கேட்கலாம்.கடத்தல் கும்பல் பற்றிய கதை எனலாம்.கடத்தல் பின்னணியில் சமுகத்தை  பகடி செய்கிறது.சமுக இழிவுகளை பாத்திரங்களுக்குள் கொண்டு வந்து, கதைப் போக்கில் அவைகள் சமுகத்தை நையாண்டி செய்யும் பொழுது, வாழ்பனுவத்தின் மீது நையாண்டி  ஊடுருவி அனுபவத்தின் புரிதலை மேம்படுத்தி,அனுபவம் எங்கே இருந்து பெறப்பட்டதோ,அந்த சூழலை அந்த அரசியலை மாற்றம் செய்ய வேண்டும் என்கிற புரிதல் கதைப் போக்கில் நிகழும் பொழுது,மனம் இந்த நையாண்டியை,நக்கலை,பகடியை கை கொட்டி வறவேற்று ஆரவாரிக்கிறது.

*பிழைக்க ஆசை எனினும் வேலை கிடைக்காமல் அலாரம் வைத்து எழுந்து குளித்து பேண்ட் சர்ட் அணிந்து  தலை வாரி காலையில் குடிப்பதையே வேலையாக்கிக் கொண்ட ஒரு பாத்திரம்.
*புரிந்து கொள்ளப்படாத அலுவலகத்தை விட்டு வெளியேறும் கணினி பொறியாளர் ஒரு பாத்திரம். 
*நடிகைக்கு கோயில் கட்டி நடு வீதியில் தத்தளிக்கும் இளைஞன் ஒரு பாத்திரம்.
* அன்றாட செலவிற்கு மட்டும் ஆட்களைக் கடத்தி விடுவிக்கும் ,ஐந்து ரூல்ஸ் கடத்தல் குழு தலைவன் ஒரு பாத்திரம்.
*சினிமா எடுப்பதற்கான பணம் சேர்க்க போலி டாக்டரான சிறு கேடி ஒரு பாத்திரம்.
*அரசியலில் நேர்மையான அமைச்சர் ஒரு பாத்திரம்
*அரசியலை பணம் கரக்கும் தொழிலாக்கிக் கொண்ட முதல்வர் ஒரு பாத்திரம்
*குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க அரசியலை தேர்வு செய்யும் அமைச்சரின் மகன் ஒரு பாத்திரம்.
*பிரதிபலன் பாராத என்கவுண்டர் போலீஸ் ஒரு பாத்திரம்

இப்படி பாத்திரங்களை உருவாக்கி,பாத்திரங்களின் நோக்கம்,செயல்பாடுகளை குறிப்பிட்ட சூழலிற்குள் அதன் இயல்புத் தன்மையோடு இயங்க விடப்பபட்டிருக்கிறது.கதைக்கு நாயகர்கள் என்று யாரும் இல்லை.வில்லன் என்றும் யாரும் இல்லை.ஆனால் கதையில் ட்விஸ்ட் உண்டு;முரண் உண்டு.இந்த முரண்கள்தான் பாத்திரங்களோடு மோதி மோதி கதையை, காட்சிகளை நகர்த்திப் போய்க் கொண்டிருக்கிறது.

கதையில் இரு வேறு உலகம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.அன்றாடத் தேவைகளை சரிக்கட்ட சிறு சிறு கடத்தல் வேலையில் ஈடுபடும் ஒர் உலகம்.மக்களின் நம்பிக்கையை மூலதனமாக்கி கோடி கோடியாய் சுருட்டிக் கொண்டு மக்கள் மத்தியில் அம்பலப்படாத ஆளும் கூட்டம் இன்னொரு உலகம்.

சிறு கடத்தலில் ஈடுபடும் கூட்டத்தின் தேவைகள்,வாழ்வாதாரம் பூர்த்தியாகிற  சூழல் வாய்க்கிற பொழுது,  சாப்பாட்டிற்கான சிறிய திருட்டு,கடத்தல் குறையும் வாய்ப்பு உண்டு. மக்களின் நம்பிக்கையை நாசமாக்கி,அரசியலை,ஆட்சியை கொள்ளை அடிக்கும் களமாக மாற்றிக் கொண்ட ஆளும் கூட்டம் அம்பலப்படாமல்  மக்கள் மத்தியில் இருக்கிறது என்கிற உண்மையின் எதார்த்தம்  காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.இந்த இரண்டு பிரிவையும் வேறுபடுத்திப் பார்க்காமல் இரண்டுமே திருட்டுக் கூட்டம் என்ற முடிவிற்கு போவது ஆளும் கூட்டத்திற்கே சாதகக் களமாகிவிடும்.

 படத்தின் காட்சிகளும் பின்னணியும் பார்வையாளர்களுக்கு உணர்த்தும் மறைபொருள் இதுதான்.அரசியலில்  பரிச்சயம் கொண்டவர்கள் காட்சிகளை துலக்கமாகச் சொல்ல வாய்ப்பு உண்டு.அவ்வாறு வாய்ப்பு இல்லாத ஆனால் சமுகப் போக்குகளின் மீது கவனமும் கவலையும் கொண்ட படைப்பாளர்கள் இப்பபடியான மறைபொருளிலேயே சொல்ல இயலும்.இந்த மறைபொருள் கலைக்கு அவசியம்.இதுதான் அழகியலாக இயங்கி, பார்வையாளர்களின் கவனப்படிமத்தை பட்டை தீட்டுகிறது.

பெரும்பாலான நடிகர்கள்,  தொழிற்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர் உட்பட இந்தக் குழுவே புதுமுகக் குழுவாக இருக்கிறது.எனினும் தொழிற்நுட்பத்தில் அணுகுமுறையில் புதிய தொடுதலைப் பெறுகிறோம்.நகைச்சுவையை மிகச்சரியாக பயன்படுத்தி உணர்த்த வேண்டியதை உணர்த்தும் திரைலாவகம் இவர்கள் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கிறது.
 இங்கிலாந்தின் குறும்பட இயக்குநராக இருந்து பின் திரைப்பட இயக்குநரகாக மாறிய கெ ரிட்சி(gue Ritchie) யின்  உத்தி அவரின் கதை சொல்லும் முறைமை நலனிடம் இருப்பது தவறல்ல.

நலனும் நாளைய இயக்குநர் போட்டியில் வெற்றி பெற்ற இயக்குநர்.திரைக்கலைஞர் ரோகிணி இதை சிங்கிதம் சீனிவாசராவின் டச் என்கிறார்கள்.நகைச்சுவை பெரும் உத்தியாக இயங்கி இருக்கிறது.நலன்குமரசாமி மற்றும் ஸ்ரீனிவாசன் கவிநேயன் இருவரின் கதை மாறுபட்ட அணுகுமுறையோடு ஒரு படத்தை தமிழுக்குத் தந்திருக்கிறது.


 நிறைய இளம் இயக்குநர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.தமிழ்

 திரைப்படத்தின் மொழியை முகத்தை மேலும் அழகாக்குவார்கள் என்கிற

 நம்பிக்கை இருக்கிறது.இதற்கான அச்சாரமாக நலனையும் எதிர் நீச்சல்

செந்தில்குமார்,ஹரிதாஸ் குமாரவேலு,,மதுபானக்கடை

கமலக்கண்ணன்,அட்டகத்தி,மெட்ராஸ்

 ரஞ்சித் என சொல்லிக் கொண்டுப் போகலாம்.

1 comment:

  1. திரைப்படம் என்பது தொழில் நுணுக்கப்புரட்சி ! ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும் உள்வாங்கி தானும் ஒருகலையாக மாறிய விஞ்ஞானசாதனை ! 70% சதம் விஞ்ஞானம் ! 30% சதம்தான் கலை ! திரைப்படம் பற்றிய ஆய்வுக்கு திரைப்படத்திற்கு வெளியே உள்ள சமூகபெருளாதார ,அரசியல் காரணிகளை கணக்கில் எடுத்துக்கோள்ள வேண்டும் ! நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள சமீபத்திய படங்களைபார்க்க முடியாததால் அது பற்றி கருத்து கூற முடியவில்லை ! விவாதிப்போம் ---காஸ்யபன்.

    ReplyDelete