Monday, November 26, 2012

சூடேறி சிவக்கும் களம்


  



சூடேறுகின்றது
வர்க்கப
போர்க்களம்

தேசமே
நீ
எப்புறம்?

கேரள
வங்கத்
திரிபுரம்

மண்ணில்
மலர்ந்த
அற்புதம்

மாற்றம்
விரும்பும்
யாவரின்
புருவம்
உயரும்
முப்புறம்

எப்புறம்
நோக்கினும்
முப்புறம்
அழித்திட
எத்தனம்

வெற்றுப் பெயரோ
கேரள வங்கத்
திரிபுரம்?

புதுமைகள்
புகுந்த
திருத்தலம்


உழைக்கும்
மக்களின்
உயிர்த்தலம்

உழுகுடிக்கென
நிலக்குவியலை
திருத்தி வழங்கிய
திருக்கரம்

காலகாலமான
சாதியம்
வீழச்செய்த
மகத்துவம்

அதிகாரப் பரவலால்
உள்ளாட்சிக்கு
உயிரூட்டிய உன்னதம்

எழுத்தறிவை
ஏற்றி வைத்து
சரிபாதி ஆட்சியை
பெண்மையில் பகிர்ந்த
சமத்துவக்கோலம்

காவல்துறையை
பாட்டாளியின்
கூட்டாளியாய்
பரிணமிக்கச் செய்த
பக்குவம்

சந்தேகத்திற்க்கு அப்பால்
பொதுஜனங்களை
சகஜமாய் வாழச்செய்த
சத்திய இதயம்

இந்திய ஒன்றியத்தில்
தேர்தல் வ்ழியாய்
இடதுமுன்னணி இடதுஜனநாயகம்
சூடிக்கொண்ட
புதிய பரிமாணம்

தடையற்ற வர்த்தகத் தலையீடு
தோற்றுப் போகுமோ
தெற்காசியாவில்?
பெண்டகனில் நடைபெறும்
புதுப்புது ஆய்வுகள்

காவி பயங்கரத்தை
டாலர் ஊட்டியும்
வளர்க்கும்
தீவிரவாதத்
துப்பாக்கிகளுக்கு
மம்தாவை மம்மியாக்கி
பாலூட்டவும் வைக்கும்

துப்பாக்கிகளுக்கு
இலக்குகள் இரண்டு என்று
காங்கிரசுக்கு வகுப்பும் எடுக்கும்

நக்சல்பாரியில் ஒலித்த
வசந்தத்தின் இடிமுழக்கம்
தண்டகாருண்யத்தில்
தனக்கான நாட்களை
எண்ணிக் கொண்டிருகிறது.

ஆண்டைகளுக்கு எதிராக
ஆலை அதிபர்களுக்கு எதிராக
கோட்டை கொத்தளத்திற்கு எதிராக
திருப்ப வேண்டியத் துப்பாக்கியை
மார்க்ஸிஸ்ட்டுகளை நோக்கி திருப்புவதால்
மாவோயிஸ்ட்டுகள் தனக்குத் தானே
எழுதிக் கொள்கிறார்கள்
மரணசாசனம்.

புரட்சி
 சீரழிவின் சீள்வடிதலோ
இறக்குமதி சரக்கோ அன்று
புரட்சி
மக்களின் துடிப்பு
மக்களின் வெடிப்பு.

காலம் அழைக்கிறது வாருங்கள்
வரலாறு அழைக்கிறது கூடுங்கள்
சரித்திர காலந்தொட்டு
நடந்து வரும் சண்டையில்
படைப்பாளியே நீ
எந்த பக்கம் கூறு

ஆரியம் எதிர்த்தப் போரில்
மனுவை வீழ்த்தும் போரில்
நீண்டு வரும் சார்வாகத்தின்
நீட்சி நாம்
தொடர்ந்து வரும் சித்தமரபின்
வாரிசு நாம்

ஆதிக்க வர்க்கத்தின்
அடி வயிற்றில்
ஐஸ்கட்டியைச் செருகிய
சமண பவுத்த மரபின்
சரிவாரிசு நாம்
அம்பேத்கரியத்தின் வாரிசும் நாம்.

புதிய வாரிசு நாம்
கம்யூனிஸ்ட்டுகள் நாம்
வாழுங்காலத்தில்
சூடேறிச் சிவக்கிறது
வர்க்கப் போர்க்களம்

வங்கத்திற்கு
பங்கமெனில்
சிங்கமென சிலிர்த்தெழுவோம்

கேரள திரிபுரம்
பாதுகாக்க
தேவை எனில்
உயிரும் தருவோம்
***
(2010 செப்டம்பரில் நடைபெற்ற இடது முன்னணி,இடது ஜனநாயக முன்னணி அரசுகளைப் பாதுகாப்போம்
இயக்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதை)

No comments:

Post a Comment