Wednesday, November 14, 2012

வாழ்க்கை தற்செயலானதா?








புதுசாய் கதைக்க  வந்தவர்கள் முதல்  முன் நாள் கதைத்தவர்கள் வரை வாழ்க்கை  தற்செயலானது என்று எழுதிச் செல்கிறார்கள். இதில் தொனிக்கும் பொருள்  நாம் திட்டமிட்டு எதுவும்  செய்வதில்லை.தானாக வாழ்க்கை நிகழ்கிறது என்பதுதான்

.மேற்கண்ட கதைத்தலில் வெளிப்படும் இன்னொரு பார்வை , வாழ்க்கை நமக்கு வெளியே .ஆன்மீக நோக்கில் சொல்வதானால் இறைப்பொருளால்  இன்னாருக்கு இன்னபடி என்று படி அளக்கப்படுகிறது.செய்து விட்ட செயலை அது சரியான செயலோ தப்பான செயலோ அதற்கு தானோ அல்லது தாமோ பொறுப்பில்லை.அதுவாக நிகழ்ந்து விட்டது என்கிற தப்பித்தல் நோக்கும் இதில் வெளிப்படுகிறது.

ஆன்மீகம் என்கிற பார்வையில் சிக்குண்டு அறிவியல் ரீதியாக பார்க்கப் பழக்கப் படாதவர்களைக் காட்டிலும்,  நவீன காலச் சூழலில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் இந்த கதைத்தலை சொல்வார்களேயானால் அது தப்பித்தல் மட்டுமல்ல.குற்றத்தை  செய்து விட்டு தான் குற்றவாளி அல்ல , சூழல்தான் குற்றவாளி அல்லது தனக்கு கூட்டாளியாக இருக்கிற ,இருந்தவர்களின் குற்றம் என்று நிறுவுவதற்கான   தப்பித்தலின் தததுவ பார்வையாகவும் வெளிப்படுகிறது.

இந்தப் பார்வை ஆன்மீகப் பார்வையை விட மட்டமானது.தன் சுகம்,ன் முன்னேற்றம், தான் என்கிற சுயநலத்திற்கு சூழலை மற்றவர்களை பயன்படுத்திவிட்டு பின் உதறித் தள்ளுகிற வஞ்சகத்தின் வெளிப்பாடு.

எந்த காலத்திலும் வாழ்க்கை தானாய் நிகழ்ந்து விடுவதில்லை.வாழ்க்கை என்பது இயற்கையை  அது சார்ந்த  விடயங்களை மனிதர்கள் பயன்படுத்துகிற கூட்டுச் செயற்பாடுதான்.இந்த கூட்டுச் செயற்பாட்டில் எக்காலத்திற்கும் பொதுவான தன்மை பெறுகின்றவைகள்  வழமையாக ,மரபாக மானுடர்களின் சிறப்பான வெளிப்பாடாக போற்றப்படுகின்றது.

தற்செயல் என்று சொல்வதற்கே  சில மணி நேரம் உட்கார்ந்து யோசித்து எங்கிருந்து ஆரம்பிப்பது என்ன மாதிரி சொல்வது  எங்கே முடிப்பது வரை திட்டமிட வேண்டி இருக்கிறது.எப்போது திட்டமிடல் வந்து விட்டதோ அப்போது எதுவும் தற்செயல் அல்ல என்பது தான் யதார்த்தம்.

மனிதர் தாம் உண்ண ,உறங்க ,உடுத்த,காத்துக் கொள்ள , அனுபவத்தை பரிமாற , பணியை இலகுவாக்க,கேளிக்கையில் ஈடுபட,என்று ஒவ்வொன்றிற்கும் பல்லாண்டு காலம் இயற்கையோடு ,வாழ்க்கை அனுபவத்தோடு,  பிற குழுக்களோடு போராடி  பெற்றதன் வெளிப்பாடுதான் இன்றைய நமது வாழ்க்கை.

இந்த வாழ்வும் வாழ்விற்கான உபகரணங்களும் ,கோரிக்கைகளும், மறுப்புகளும் மானுடர் தம்மோடோ,அல்லது முரண்பாடுகளோடோ மீண்டும் மீண்டும் போராட வேண்டி உள்ளது. முரணோடு நடத்துகின்ற வாதம் ,சம்வாதம் அடுத்த முன்னேற்றத்திற்கான திறப்பாகும்.

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்று போல் இல்லாமல் இருக்கிறது.சமுகத்தின் வளமும் கண்டுபிடிப்புகளும் யாவருக்கும் ஒரே மாதிரியாக கிடைக்காமலும் இருக்கிறது. இந்த ஏற்றமும் இறக்கமும் தற்செயலானது அல்ல;திட்டமிடப்பட்டது.சமூகத்தின் செல்வம் யாரிடம் குவிக்கப்படுகிறதோ ,அந்த நபர் ,அந்த வர்க்கம்,அந்த நாடு அதிகாரம் பெற்று விடுகிறது;வளங்களை முன்னேற்றங்களை சுகிக்க ஆரம்பித்து விடுகின்றது.இது மானுட இனம் வர்க்க ரீதியாக பிளவுப்பட்டதின் பொருளாதார அரசியற் வெளிப்பாடு.

வளங்களை, செல்வங்களை,கலை இலக்கியங்களை யாவருக்கும் நெருக்கமாகக் கொண்டு வருகின்ற செயற்பாடு, வர்க்க ரீதியிலான பொருளாதார அதிகாரத்தை உடைத்து யாவருக்கும் பொதுவாக்குவதுதான்.

இந்த பொதுவாக்குதலிற்கு அரசியற் பெயர் சோசலிசம்,கம்யூனிசம்.பொதுவாக்குதலில் ஈர்க்கப்படும் கலை இலக்கிய மனம் நம்பிக்கையை,அன்பை,தோழமையை ,மாற்றத்தை வெளிப்படுத்துகின்றது.சுயநலத்தில் ஆழ்ந்த மனமோ கலையில் ,இலக்கியத்தில்,அன்பில்,தோழமையில் நம்பிக்கையின்மையை ,பொய்மையை ,வஞ்சகத்தை பரப்புகின்றது.

2 comments:

  1. வணக்கம்தோழரே.. உலகில் பொதுவாக எதுவும் தற்செயல் இல்லை. அடிப்படையில் ஓர் இயக்குவித்தல் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை.அதில் வஞ்சகம், பொய்மை உருவாக்குவது என்பது அயோக்கியத்தனம். இரவு வணக்கம். தோழர்...மோகனா

    ReplyDelete
  2. உங்களோடு உடன்படுகிறேன் அருணன்பாரதி;உங்கள் வாசிப்பு மகிழ்ச்சி தருகிறது

    ReplyDelete