இணைந்த இதயம்

Friday, April 6, 2012

உயிர்த்தெழுந்த மீட்பரிடம் சில விண்ணப்பங்கள்

கல்வாரி மலையில்
உயிர்த்தெழுதலுக்கு முன்பான
உதிரம் தோய்ந்த 
உன் வாழ்க்கையும்
போதனைகளும் 
உதிரம் கலந்து ஓடிக் கொண்டிருக்கின்றன

உனது வருகை சமீபித்து விட்டதாக
நாட்டையர்களும் பங்குத்தந்தைகளும்
பேசியும் போதித்தும் வருகிறார்கள்
உன் போதனைகளை மறந்தபடி

ஒளியே உன் போராட்டம் அனைத்தும்
ஆள்வோருக்கு எதிராகவும்
பேச்சு மறுக்கப்பட்டோர்களின் நாவாகவும்
இருந்ததை வெள்ளை மாளிகையும் வாடிகனும்
பங்கிங்காம் அரண்மனையும் மறைத்தே வருகின்றன

ஏற்பாடுகளில் இருப்பதையோ
இல்லாத ஏற்பாடுகளையோ
ஆக்கவும் மறுக்கவுமான இவர்களின்
அநியாய அத்தியாயங்களை அறிந்து இருக்கிறாயா நீ?

கொலம்பஸ் ,ஒபாமா ,டேவிட் காம்ரூன் வரை
உன் போதனை தொகுப்புகளை புறந்தள்ளிக் கொண்டே

ஆயுத வியாபாரங்களை அசை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்
மாமன்றங்களில் நாவேதனம் செய்து கொண்டிருக்கிறார்கள்

ஊருக்குள் 

சாதிக்கு சாதி
தனித் தனி சர்ச்சுகள்
ஆராதனை,திருப்பலிகளை ஆண்கள் மட்டுமே
நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்
வலுத்தவர் நியதிகள் நீதிகளாக்கப் படுகின்றன

உயிர்த்தெழுந்த எங்கள் மீட்பரே
பரலோக ராஜ்ய விவகாரங்களை
தள்ளி வைத்து விடுங்கள்
பூமியில் நாம் செய்ய வேண்டிய
விவகாரங்கள் அனேகம் உள்ளன

இஸ்ரேல் அநியாயம் முதல்
கூடங்குளம் மணியடிப்பு வரை
நம் பேசுபொருட்கள் நீள்கின்றன

ஆகையினாலே

அப்பம் இழந்தோருக்கு
அப்பமாக இரும்
தெப்பம் விடுவோருக்கு
சிம்மமாக சீறும்.

No comments:

Post a Comment