இணைந்த இதயம்

Sunday, March 25, 2012

தி.பரமேசுவரியின் ஓசை புதையும் வெளியை முன் வைத்து பெண் வெளியும் பெண் மொழியும்
எனக்கான வெளிச்சத்தைத் தொடர்ந்து தி.பரமேசுவரியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாக வந்திருக்கிறது ஓசை புதையும் வெளி.வெளிவந்து ஓராண்டு ஆகிவிட்டது.இலக்கிய வெளியில்,ஆய்வு வெளியில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற இவரின் இந்தத் தொகுப்பு இதுவரை கவனிக்கப் படாமல் இருப்பது வருத்தத்திற்குரியது என்று மட்டும் சொல்ல முடிகிறது.

ஓசை புதையும் வெளி என்கிற சொற்களின் கவித்துவமும் அது உணர்த்தி நிற்கும் வெளியும் அது சார்ந்த ஆயிரமாயிரம் புரிதலையும்,பெண்  வெளி குறித்த ஆயிரமாயிரம் கேள்விகளையும் கிளர்த்துகிறது.

மானுட சமூகத்தின் வரலாற்று ஓர்மை குறித்தப் பதிவு,பண்பாடு,அரசியல்,பொருளாதாரம் குறித்தப் பதிவு செய்யப்பட்டு ஈராயிரம் ஆண்டு கழிந்த பின்னரும் பெண்ணின் வெளியும் பெண்ணின் மொழியும் ஆண் மைய சட்டகத்தினூடாய் வனையப்படுவதும்,வனைதலின் நிர்ப்பந்தமும் நீடிப்பது தொழிற்நுட்ப ரீதியிலான வளர்ந்து வந்த மானுடத்தின் மேம்படாத அகத்தின் மறுபக்கத்தை காட்டி நிற்கிறது.

தி.பரமேசுவரியின் வெளியெங்கும்  பெண் சுயம்,பெண் விருப்பு,பெண் தேடல் புதைக்கப்படுதலும் சுயத்தை மீட்டுக் கொள்வதற்கான  ஓர்மையும் ஓசையும் காணப்படுகின்றன.பெண் சுயமும்,பெண் விருப்பும் எப்பொழுதும் வெளி சார்ந்தும்,வெளி தொடர்புடைய காலம் சார்ந்துமே காணப்படுகின்றன.

 மரபார்ந்த குடும்ப வெளி அல்லது  உறவு வெளி பெண் மனதை புறக்கணிப்பதையும்,பென் மனதின் விடுதலை கிளைப்புகளை தாண்டிச் செல்வதுமான மனதைக் கொண்டிருக்கிறது.சக பெண் மனதும் கூட உதிரத்தில் விளைந்த பெண் மனதின் அகச்சிக்கல்களையோ அல்லது மலர்ச்சிகளையோ ஏற்றுக் கொள்ளாமல் மரபார்ந்த குடும்ப வெளியில் வதைபட தருதலை தொகுப்பினூடாய் வாசிக்கிற பொழுது  அதிர்கிறது மனம்.

பெண் இருப்பின் பிரக்ஞை புரியாத ஆண் மனம் போகம் பாவிக்கும் இடமென பெண்ணுடலின் மீதான  ஊர்தலை உணர்வற்ற மரவிரல்களெனவும்,நனைவின் புதைமணற்வெளி எனவும் அவதானிக்கிற பெண் சுயம்,வெளியின் புரிதலின் போதாமையையும் உணர்ந்து  சமரசத்தோடு குடும்பச் சட்டத்தினூடாய் பயணம்  செய்ய நினைத்தாலும்  தன்  மீது தொடர்ந்து தொடுக்கப்படுகிற   கற்சலனத்தினால் வாசல் தொடுகிற மனதை மீட்டெடுத்துக் கொள்கிறது.
( வெளியாகவிருக்கும் கட்டுரையின் சிறிய பகுதி)

2 comments:

  1. http://aathmaarthi.wordpress.comMarch 25, 2012 at 12:12 PM

    நல்லதொரு முன் கூறல்.முழுப்பதிவையும் படிக்க ஆவல் எழுகிறது.காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. ஆத்மார்த்தியின் கவனிப்பிற்கு மகிழ்ச்சி.முழுப்பதிவை சில தினங்களில் எழுதிடுவேன்

    ReplyDelete