Wednesday, April 11, 2012

காதுகளை திறந்து வைத்து அறிவுலகோடு விவாதித்த ஒரு மார்க்சிஸ்ட்





என்.வி என எங்களால் அன்போடு அழைக்கப்பட்ட தோழர் என்.வரதராசன்
அவர்கள் இன்று இல்லை.நேற்று காலை உயர் சர்க்கரை நோய் பாதிப்பால்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,சிகிட்சை பலனின்றி இயற்கை எய்தினார்.வயது 87 என்ற போதும் அவருக்கான இந்த முடிவை தோழர்கள் நாங்கள் எதிர்நோக்கி இருக்கவில்லை.கோழிக்கோட்டி ல் ஏப்ரல் 4 முதல் 9 வரை நடைபெற்று முடிந்த ,மார்க்சிஸ்ட் கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் பங்கு பெற்று ,10 ஆம் தேதி காலை சென்னை வந்தவர் உடல்நலன் சரி இன்றி,இசபெல்லா மருத்துவமனை போனவர் ,சடலமாய் திரும்பி வந்தது அறிந்து அதிர்ந்தது மனம்.

அவரோடு நான் பத்தாண்டு காலம் நெருக்கமாகப் பழகி இருக்கிறேன்.கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்;மாநிலச் செயலாளர் பொறுப்பில் அவர் இருந்த போதும்,எந்த விசயம் என்றாலும்,எனக்குப் பட்ட கருத்தை வெளிப்படையாக அவரிடம் சொல்லி இருக்கிறேன்.என்னிடம் வெளிப்படும் நல்ல கருத்துகளை அவர் ஏற்றுக் கொண்டு,அதனை உரிய முறையில் கட்சி மட்டத்தில் பேசி,நடைமுறை படுத்தி இருக்கிறார்.சரியற்ற கருத்துகள் என்றால் நாசுக்காக ``இரா.தெ உங்க கருத்தை பரிசீலியுங்கள்” என்பார்.ஒரு தடவையேனும் முத்து என அவர் என்னை விளித்ததில்லை.இரா.தெ என்று தான் அழைப்பார்.

கட்சியின் மாநிலச் செயலாளர் என்ற முறையில் அவர் கட்சியின் மாவட்ட்க் குழு கூட்டங்கள்,கட்சின் வழிகாட்டலின் கீழ் இயங்கும் பல வெகுமக்கள் அமைப்புக் குழு கூட்டங்களுக்கு அவர் வருவதுண்டுஅப்பொழுதெல்லாம் தோழர்களின் கருத்துகளை வெகு சிரத்தையாக காது கொடுத்து அவதானிப்பார்.இறுதியாக வந்த கருத்துகள் அடிப்படையில் அவரிடமிருந்து பொருத்தமான முடிவு வெளிவரும்.எதிர்மறையான கருத்துகள் சில தோழர்கள் மத்தியில் எழும்போது ”சரி இது உங்கள் கருத்து;ஆனால் கட்சி கருத்து இது அல்ல” என்று கட்சியின் பார்வையைச் சொல்லுவார்.

ஒரு பஞ்சாலை தொழிலாளி,சாதாரண படிப்பு படித்தவர் என்ற போதும் கலை,இலக்கிய அரங்கம்,ஆசிரியர் அரங்கம்,பத்திரிகையாளர் அரங்கம் போன்ற கூட்டங்களில் கலந்து கொள்ளும் போதோ,கட்சியின் பொதுக்கூட்டங்களின் போதோ அவர் பாரதியின் பொருத்தமான கவிதை வரிகளை கம்பீரமாகப் பயன்படுத்துவார். கட்சி மீதான எதிர் வர்க்கத் தாக்குதலை எதிர் கொண்டு,அவர் பேசும் போது அவர் பேச்சில் அனல் தெரிக்கும்.எந்த கொம்பர்களும் மார்க்சிஸ்ட் கட்சியை ஒன்றும் செய்து விட முடியாது என முழங்குவார்.

கலை,இலக்கியம் பால் அவருக்கு அளவற்ற ஈடுபாடு இருந்தது கலை இலக்கிய ஆளுமைகள் மீதும் அவருக்கு நேசம் இருந்தது.ஆண்டு தோறும் பாரதி பிறந்த நாளின் போது அவர் கட்சி தலைவர்களோடு திருவல்லிக்கேணி பாரதி நினைவில்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செய்வார்.அப்பொழுதெல்லாம் அவர் எனக்கு போன் செய்யச் சொல்லி,என்னையும் கவிஞன் என்ற முறையில் காரில் அழைத்துக் கொண்டு போவார்..கலைப்பட்டறைகளின் போது அடிக்கடி வந்து ஆலோசனைகள் தந்து செல்வார்.

கட்சி மீது அன்பு கொண்ட திரைப்பட இயக்குநர்களின் சிறப்பு திரைப்பட காட்சிகளின் போது,அதற்கென்று நேரம் ஒதுக்கி படம் பார்த்து கருத்துகளை சொல்லுவார்.அரசுக்கு கடிதம் எழுதி,குறிப்பிட்ட திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கக் கேட்டுக் கொள்வார்.அப்படி தங்கர்பச்சானின் பள்ளிக்கூடம் திரைப்படத்திற்கு கலைஞர் முதல்வராக இருந்த 2008 ஆம் ஆண்டில் வரிவிலக்கை கோரினார்.திரை ஆளுமைகளை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சந்திப்பார்.அவர்களின் கருத்துகளை கேட்பார்.அவர்களை பொருத்தமான விழாக்களில் பங்கேற்க கேட்டுக் கொள்வார்.இந்த பொழுதுகள் பலவற்றில் நானும் அவரோடு பங்குபெற்றிருக்கிறேன்

No comments:

Post a Comment