Sunday, September 4, 2011

பேசாப் பொருளைப் பேசிய பாரதி-2


சிவகங்கையிலிருந்து எழுத்தாளர் ஜனநேசன் போன வாரம் வந்த முதல் பகுதியைப் படித்து விட்டு,மாரியைப் பாடியதால் சோமாறி எனச் சொல்லலாமா? அந்த இடம் மட்டும் நெருடுகிறது என்றார்.அது நான் சொன்னதில்லை.பாரதியை சரியாகப் பயிலாதவர்களின் சொற்பிரயோகம் என்றேன்.
         மதுரையிலிருந்து வெளியான ஞானபானு இதழில் 1904 ல் பாரதியின் முதல் கவிதை வெளியாகிறது.அன்றிலிருந்து கடந்த 100 ஆண்டுகளாக பாரதி பல்வேறு கோணங்களில் ,பல்வேறு சார்பை ஒட்டி,பல்வேறு தரப்பினரால் பயிலப் பட்டும் பழிக்கப்பட்டும் வருகிறான்.
எந்த வாசிப்பின் பாற்பட்டாலும் பிரதி எனப்படுகின்ற text ல் என்ன இருக்கிறது?எதை நோக்கி இந்த எழுத்து கட்டமைக்கப் பட்டுள்ளது?எந்த காலத்தில் எழுதப்பட்டுள்ளது? என்பதை பார்க்காமல் மரபு வாசிப்பு என்றும் நவீன வாசிப்பு என்றும் பின்னப்படுத்தக் கூடாது.அதற்காகப் படைப்பை புனிதத்தில் வைத்து பாருங்கள் என்றும் சொல்லவில்லை;காலத்தில் வைத்து பார்ப்போம் என்கிறேன்.
        இந்த கால உணர்வு பாரதிக்கு இருந்தது.எப்படி எழுத வேண்டும்?எதை எழுத வேண்டும்?எதற்காக எழுத வேண்டும்?என்ற புரிதல் பாரதிக்கு இருந்தது.
அவன் சொல்கிறான்: “கதை சொல்லு என்பார்;கவிதை எழுது என்பார்;காவியம் செய்யென்பார்;எதையும் வேண்டில;அன்னை பராசக்தி இன்பம் ஒன்றினைப் பாடுவேன்என்கிறான்.
       அம்பிகையே ஈசுவரியே எமை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி இந்த ரேஞ்சிலா பாரதி பாடினான்?மசூதியை இடிப்பது மகிழ்ச்சி என்றானா?சிறுபான்மை சோதரரை சின்னாபின்னப் படுத்தல் மகிழ்ச்சி என்றானா?எது மகிழ்ச்சி?பாடுகிறான்: “நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்,நையப் பாடென்று ஒரு தெய்வம் கூறுமே:இதோடு பாரதியின் பராசக்தி வேலை முடிந்து விடவில்லை.கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக் கொண்டுசரி ஒன்றெனக் கொண்டு என்ன செய்ய?
        “வையம் முழுதும் பயனுறப் பாட்டிலே அறங்காட்டெனும் ஒர் தெய்வம்இதுதான் பாரதி காணும் தெய்வம்.தெய்வத்திடம் போய் அஞ்சக் கொடு.பத்தக் கொடு என்பதோ;வறுமானத்திற்க்கு மீறி சொத்து சேர்த்து விட்டேன் காபந்து கொடு என்பதோ பாரதியின் பணி அல்ல.அவன் பணி பெறும் பணி;அவன் ரேஞ்சே தனி.
       பாட்டிலே அறம் காட்டு என்ற வரி ரொம்ப சாதாரண வரியா?இன்றளவுக்கும் படைப்பாளிகளை மிரட்டிக்  கொண்டிருப்பது இந்த அறம்.அரசு அதிகாரம்.அதிகார வர்க்கம்,இவைகளோடு தொடர்பு கொண்டு தன் பெயர் முன்னுக்கு வரும்படி பார்த்துக் கொள்ள்லாமா?வரும்படியும்[சம்திங்]  வரும்படி பார்த்துக் கொள்ளலாமா? என்று ஆசைப் படாத மனம் இந்த தாராளமய சந்தை வணிகக் காலத்தில்இருப்பது அரிதான விசயம்.படைப்பில் தெரியும் முகம்,நிஜத்தில் வேறு மாதிரி தெரிகிறது.இந்தத்  திரிதல், அறம் அற்றுப் போனால் வருவது.அறம் எப்போது அற்றுப் போகும்?எளிய மக்களுக்கான தொண்டூழியம் செய்கிற  படைப்பு மனம் பிசகும் போது அறம் அற்றுப் போகும்.வையம் முழுதும் பயனுற வேண்டும் என்கிற மனம் நசியும் போது அற்றுப் போகும்.
     பாரதியின் வைதீக வாழ்க்கைச் சூழலில் அவனோடு வந்த இறை நம்பிக்கை,நசிவை நோக்கியது அல்ல;வளர்ச்சியை நோக்கியது;நாளையை நோக்கியது. பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும் ஊட்டி எங்கும் உவகை பெருகிட ஒங்கும் இன்கவி ஓது என சொல்வதுதான் அவனின் பராசக்தி;அவனுக்கு கருத்தைச் சொல்ல உதவியஒரு ஊடகம் கடவுள்.
     எங்கும் உவகை பெருகிட சொல்வதுதான் அவன் சக்தி.ஒன்றை மறுக்கிற போது ஒன்றை ஆக்கவும் வேண்டும்.ஆக்கமற்ற மறுப்பு வெறுப்பை வளர்க்கும்.எப்பொழுதும் ஆக்கத்தை,இன்பத்தை,அன்பை,உண்மையை அவன் நம்பிய கடவுள் ஊடாக வைத்தான்.
(2011 செப்தம்பர் 5 /தீக்கதிர் இலக்கியச் சோலையில் பிரசுரமானது)

No comments:

Post a Comment