இணைந்த இதயம்

Wednesday, September 21, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி-3இந்து தேசியம்+பத்தினிப் பெண்=பாரதி


எழுத்தாளர்கள் தி.க.சி ,சிகரம் செந்தில்நாதன் ,ச.தமிழ்செல்வன், எஸ்.வி.வேணுகோபாலன் ஆகியோர் தொடர் குறித்து வெளிப்படுத்திய   தங்கள் மகிழ்ச்சியை , பாரதிக்கான மரியாதையாக  எடுத்துக் கொள்ளலாம். வேலூர் காவேரிப்பாக்கம் ஆசிரியர் உமாமகேசுவரி போன வாரத் தொடரை அவர் வகுப்பு மாணவர்களிடத்தில் அறிமுகப்படுத்தி பேசி இருக்கிறார் என்கிற செய்தி மீண்டும் மீண்டும் பாரதி பயிலப்படுகிறான் என்ற மகிழ்வைத் தருகிறது.

இந்த செப்டம்பர் 11 பாரதி திருவல்லிக்கேணியில்  எரியூட்டப்பட்டு வங்கக் கடலில் கரைக்கப்பட்டு  தொண்ணூரு ஆண்டுகள்ஆகிறது. 1980 வரையிலும் 370 தலைப்புகளில் ,150 எழுத்தாளர்கள் ,162 பதிப்பகங்கள் என பாரதி குறித்த ஆய்வு நூல்கள் வெளிவந்திருகின்றன.இன்று நடக்கும் விவாதங்கள் பாரதி ம்காகவியா?அல்லவா?என்பதல்ல.இந்து தேசியத்தை வழி மொழிந்து பாடினான்.காணிநிலம் கேட்டவன் அங்கே ஒரு பத்தினி பெண்னைத்தானே கேட்டுப் பாடினான் என்கிற ரீதியில் பாரதி விவாதிக்கப்படுகிறான்.

இந்து கடவுள்களை  மட்டுமா பாடி இருக்கிறார்.அல்லா.ஏசு  பற்றியும் பாடி இருக்கிறார்.1918 ல் பத்தாண்டு கால புதுச்சேரி தலைமறைவு வாழ்வைத் துறந்து சென்னைக்கு வரும் வழியில் ஆங்கிலேய உளவாளிகளால் மோப்பம் பிடித்து  கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்களில் விடுவிக்கப்பட்ட பாரதி அன்றைய தொழிலாளர் தலைவர் வி.சர்க்கரை செட்டியாரிடத்தில் கிறித்தவ விவிலியத்தை சிறப்பானதொரு தமிழ் மொழி பெயர்ப்பாக கொண்டுவர வேண்டும் என்கிற தன் ஆவலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

                                         

சென்னை வந்த அடுத்த மூன்றாண்டு காலமும் கடும் வறுமை,உடல் நலிவு காரணமாக 1921 ல் அகால மரணம் எய்தாமல் இருந்திருந்தால்
கீதை மொழி பெயர்ப்பை போல நமக்கு ஒரு அழ்கியத்  தமிழ் பைபிள் மொழி பெயர்ப்பை பாரதி தந்திருப்பார். மதம் ,கடவுள் தாண்டி எல்லா உயிரிடத்தும் நேசம் கொண்டிருந்தார்.கடவுள் மீதான பாரதி கொண்ட நம்பிக்கை வேறு.
அதே வேளை மதம் சார்ந்த அறிவுக்கு ஒவ்வாத வேறு சில நம்பிக்கைகளை சாடுகிறார்
.
கீதைக்கு  உரை எழுதியவர் பூர்வ கர்மப் பலன் என்ற இந்து மதம் சார்ந்த ,ஆளும் வர்க்கத்திற்க்கு சாதகமான இந்த கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறார்.பாரதி எழுதுகிறார் “சாதரணமாக ஒருவனுக்கு தலை நோவு வந்தால் கூட ஆராயும் முன்பாகவே அது பூர்வ ஜன்மத்தின் கர்மப்பலன் என்று ஹிந்துக்களில் பாமரர் கருதக்கூடிய நிலைமை வந்து விட்டது”(அ.மார்க்ஸின் சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்)  மனித சமூகத்தின் ஆதாரமான ஐந்து சமூகப் பிரிவினரும் ஒரே நிலன் சார்ந்த மக்கள் திறள் என பாரதியும் கருதியதால் இவர்களை ஹிந்துக்கள் என சொன்னானே அன்றி சிலர் சொல்வது போல் இந்து தேசியத்தை மொழிந்தவன் அல்ல பாரதி. 
இம்மாத உயிர்  எழுத்து இதழில் மறுவினை  பகுதியில் ஒரு விவாதத்திற்க்கு பதில் சொல்ல வந்த கொற்றவை பாரதியை பத்தினிப் பெண்ணும் கேட்டவர் என்று சொல்லி சென்றிருக்கிறார்.பாரதியை இப்படி தடாலடியாக மட்டம் தட்டி விட முடியுமா என்ன?

பறையருக்கும்  இங்கு தீய புலையருக்கும் விடுதலை கேட்டு பாடியவர் பாட்டின் இறுதியில்,”மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்;வைய வாழ்வு தன்னில் எந்த வகையிலும் நமக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே” என்று அழுத்தம் கொடுத்து முடிக்கிறார்.
வீட்டில்,பணியிடங்களில்,அரசியல்  இயக்கங்களில்,படைப்பில்,மத அமைப்புகளில்,உற்பத்தி தளங்களில்,நட்பு  உறவுகளில் என எந்த வகையிலும்  தாதர் என்கிற அடிமை உறவறுத்து  சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று பாடிய்வனைத்தான் பத்தினி பெண் கேட்டவர் என்று சொல்லுகிறார்கள்
.
குறிப்பிட்ட காணிநிலப் பாட்டில் “பாட்டுக்  கலந்திடவே அங்கே ஒரு  பத்தினிப் பெண் வேணும்” என்பது மோனைக்காக பாரதி கையாண்ட சொற்கள்.அடுத்த வரியில் ”எங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தர வேணும்”என்பது கருத்தொருமித்த ஆண் பெண் உறவை சுட்டும் அற்புத சொல்லாகும்.

மீள்வாசிப்பு,பெண்ணிய  வாசிப்பு,மையம் தகர்க்கும் வாசிப்பு என எந்த வாசிப்பும் படைப்பாளியின் கருத்தையும்,சூழலையும் ,காலத்தையும் கணக்கில் கொண்டு வாசிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment