Monday, August 8, 2011

ஈரம் மேவிய சொற்கள்


எங்கும்
திரிந்து பற
இளைப்பாறுதல் நிமித்த கூடு
என் கிளைகளில்

  அன்பின் பெயரில் வனையப்பட்ட
தந்திரக் கூடல்ல
இது

ஈரமற்ற பட்டினப்பாலை
மருதம்
குறிஞ்சி,முல்லைகளின்
மூர்க்க வெக்கையில்
இறக்கைகளை
பாதுகாக்கும் பரிவு

பரிவின்
மொழிதலில் 
சுயதேவைகள் பொதிந்திருக்குமோ?
என யோசிக்க வேண்டாம்

யோசிப்பை
துறக்க சொல்கிறாயா?
 குறுக்கு வெட்டு
குதர்க்கமும் வேண்டாம்

சுதந்திர இயல்பை
பறத்தலின் எல்லை அற்ற தன்மையின்

ஊடான எல்லையை
புரிந்திருக்கிறேன் என்பதான புரிதல்

தீர்க்க மொழி அன்று
பட்டறிவுச் சொல்

ஆறாத கோடையிலும்
பனி மாதங்களிலும்
சூறாவளி காலங்களிலும்
உன் கூடுகளில்
என்னன்பின் கருணை
பொதி இருக்கும்

எப்போதும் உதிரா
பிதிர்களின் ஈரம் மேவிய
பசுமிலைகள் இருக்கும்

சொல்லும் நான்
மரம் அன்று
 நட்பு,தோழமை

பூவரசு மொழிதானே
என புகல வேண்டாம்
பூவரசுவின் பூவரசி நான்
பூவரசியின் பூவரசு நான்

ஆணில் பெண்
பெண்ணில் ஆண்
ஆண் மறுத்து பெண்
பெண் மறுத்து ஆண்

சமன்பாட்டின் முரண்
முரணின் சமன்பாடு
இயக்கம்,உயிர்,பிரபஞ்சம்

எங்கும் திரிந்து பற
இளைப்பாறுதல் நிமித்தக் கூடு
என் கிளைகளில

No comments:

Post a Comment