Sunday, March 15, 2015

கிளையில் உயிர்த்திருக்கும் கவிதை




கவிஞர் ஆரிசன் ஹைக்கூ வழியாக தன் பார்வையை வண்ணத்துப்பூச்சியின் வண்ணமென வரைந்து தொடர்ந்து கவிதைகள் வழி இயங்கிக் கொண்டிருக்கும் நவீனக் கவிஞர்களுள் ஒருவர். சமுகத்தின் இயங்குதலை ,இயற்கையின் இயங்குதலை புரிந்து கொண்டவர் என்பதால் இவர் கையாளும் சொற்களில் உண்மையின் உண்மை  வந்து உட்கார்ந்து கொள்கிறது.  பூ மலர்வதைப் போல பொழுது புலர்வதைப் போல சன்னஞ்சன்னமாக அது தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது.

ஆரிசன் மொழி நமக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. ஹைக்கூ கவிஞராக முகிழ்ந்தவர் என்பதால் நீர்த்துப் போகாதபடிக்கு சொற்களை கட்டுறுதியாக காட்சிப்படுத்துகிறார்.

ஒரு சோப்பு குறித்துக் கூட சமுக உணர்வோடு எழுத முடியும் என்று ஸ்ரீஸ்ரீ ஒரு தடவை சொன்னது போல ஆரிசனின் கவிதை பாலை , மணல் ,பச்சையம் ,காற்று ,மரம் ,ஒற்றை இலை , பனி , நிலா ,கடலுயிரிகள் ,கிரானைட் ,கந்துவட்டி ,கருப்புப்பணம் , அம்மிக்குளவியில் உருகும் தாய்மை ,நெசவாளியின் கா குழி வரைக்கும் படிமத்தில் பந்தி வைத்திருக்கிறார்.

படைப்பாளி என்பவர் கிடைத்த உணர்ந்த வாழ்வின் தரவுகளை காலத்தின் முன்னும் பின்னும் சென்று தரவுகளின் நீட்சியை உண்மை போலும் புனைவாக்கி பின்னிப் பின்னி காட்டுபவர் மட்டுமல்லர். புனைவில்லாது காட்சிபுலன் வழியாகவும் ரத்தமும் சதையுமான வாழ்பனுபவத்தை நிகழ்காலம் நம்முன் வைக்கிற பொழுது அதை அப்படியே எடுத்து, அனுபவத்தின் கொதிநிலைக்கு ஏற்றது போல,மொழியில் குழைத்துத் தருபவரும் படைப்பாளிதாம்.

வெள்ளிநிலாவை பார்த்திருக்கிறோம். பால்நிலாவை பர்த்திருக்கிறோம்.அது என்ன சிவப்பு நிலா? சிவப்பு நிலா வழியாக வறட்சியின் தவிப்பை , மாசாகிப் போன சூழலின் உயிர் சுவாசத்தை காட்சிபடுத்தியிருக்கிறார்.
மழை முறித்துப் போட்டாலும் மரங்களை எடுத்து நட இயலாதபடிக்கான ம்னங்களின் நெருக்கடி இருக்கிறதே,அது செடியும் கொடியும் மரமும் தளைப்பதற்கான இடம் நிலம் என்பதை உணராமல்,நிலம் என்பது ஃப்ளாட் என்று குறுக்கிப் பார்க்கும் இரும்புக்குதிரையர்களின் பார்வையை பங்கீடு செய்கிறது கவிதை.

`மழை முறித்துப் போட்ட
மரங்களின் சோகத்தை
இன்னும் பார்த்தபடி
சாலையின் பயணம் தொடர்கிறது
இரும்புக் குதிரைகளோடு


`பாலின் நிறம்
கருப்பாகவே தெரிகிறது
உழைக்கும் தெருக்கோடி
மக்களுக்கு

என்று முடிகின்ற ஒரு கவிதை பாலில் தண்ணீர் கலந்து ஊழல் செய்யும் அரசாங்கங்களின் முகத்தை காட்டுகிறது.

கந்துவட்டிக்காரர்களுக்கு காவல்துறை கனகாபிசேகம் செய்யும் உண்மையை உரக்கச் சொல்கிறது நெல்லை கோபி குறித்து எழுதப்பட்ட கவிதை.

கறுப்புப் பணத்தை
கடலில் இருந்து எடுக்க
பூதம் ஒன்று
புறப்பட்டு வந்தது

என்று தொடங்கும் கவிதையின் பகடி வசீகரம்,  புறப்பட்டு வந்த பூதம் யார் என்பதை சொல்லாமல் சொல்லி,
“முந்தானை முடிச்சிலிருந்து
விடுபட முடியாமல் இருக்கிறது
முதலைகளின் தூவானமாக இருக்கும்
முதலாளித்துவம்
என்று ஊழல் முதலைகளுக்கு தூவானமாக இருக்கும் முதலாளித்துவம் சார்ந்து எந்த பூதம் புறப்பட்டு வந்தாலும் கதி இதுதான் என்று சொல்லி,  காவியின் பக்கத்தை காங்கிரஸின் பக்கத்தை பகடி செய்து மீட்சிக்கான தேடுதலைச் செய்கிறது இந்தக் கவிதை.

ஆறு, மலைகளை தூர்த்து எடுக்கப்பட்ட மணல் குவாரிகள், சதுக்கப்பாறைகள் பற்றிய நிகழ்காலத்தின் பாலையை வெம்மையை பதிவு செய்த ஆரிசன் நெடிதுயர்ந்து நிற்கிறார்.


காகங்களின் கரைதலில் பசியின் சுவடுகளைப் பார்த்தவர்
தாவிப் பறக்க முடியாமல்
கா குழிக்குள் அடக்கமாகிப் போகிறது
வாழ்க்கை

என்று நெசவாளிகளின் மீதான கைவினைத் தொழில்கள் மீதான நவீன தாராளமயத்தின் அழிமதியைப் பாடுகிறார் ஆரிசன்.

“ வார்த்தைகளை விட்டு
வெளியில் நின்றே சிரிக்கிறது
கவிதை
ஹைக்கூ எழுதிப் பார்த்த கவிமனசு என்பதால் சொல்லவிழ்ந்து சடை விரிக்காமல் நறுக்கென வந்து விழும் கவிதை வழி , அனுபவத்தின் படிமத்திரட்சியிலிருந்து கவிதை விலகி நிற்பதை கவிதையே கண்டுணர்ந்து சிரிப்பதாக எழுதினாலும்

குடித்த முலைப்பாலின் ஓர்மையில் உதடுசப்பி தூங்கும் தூளிக் குழந்தை போல

“ ஒரு மாலைப் பொழுதில்
மரக்கிளையில் உயிர்த்திருக்கிறது  
பறவை

என்றே பறவை பற்றிய எழுத்தானாலும் கூட , அது எமக்கு கவிதையே என்பதாகப்படுகிறது. வாழ்த்துகள் ஆரிசன்;தொடர்ந்து உயிருக்கு உரமாகட்டும் உங்களின்  சொற்றானியம்.
(படங்கள்:அய்யப்பமாதவன்)

1 comment:

  1. என்னவொரு மொழி !வாழ்த்துகள்

    ReplyDelete