Sunday, July 26, 2015

அய்யப்பமாதவன் எனும் கவிஞன் கட்டித் தழுவும் ஒரு சதுக்கப்பூதம்:





அய்யப்ப மாதவன் அழைத்ததை ஒட்டி அவரின் புத்தனின் விரல் பற்றிய நகரம் கவிதை நூல் வெளியீட்டிற்குப் போயிருந்தேன்.இரண்டு காரணம் அவர் அழைத்தார்;அடுத்தது கவிதைப் பற்றி என்ன கருதுகோளை நிலைப்பாட்டை வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள. அவருக்கு நெருக்கமான அவரின் கவிதையோடு பரிட்சயம் கொண்ட ஒரு ஐம்பது பேர் நிகழ்வில் இருந்தோம்.

பேசிய பலரும் கவிதைக்கு இங்கு இடம் என்னவாக இருக்கிறது என்றும் ,காலமும் சமுகமும் கவிஞனை கையேந்த வைத்திருக்கிறது என்று கவலையைப் பதிவு செய்தனர். மாதவன் வெளியைப் பற்றி பசியைப் பற்றி சொந்த அனுபவ மொழியில் எழுதிருப்பதையும் பேசியது மகிழ்ச்சியே. மாதவனின் ஏற்புரை எனக்குப் பிடிக்கவில்லை.

அவர் பேசிய பல விசயங்களால் கவிஞர்கள் இப்படி விசயஞானம் இல்லாமல் இருக்கக் கூடாதே என்று ஆதங்கம் கொள்ள வைத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை என்பதினால் தம்பி பூபதியின் கனிவில் நல்ல தள்ளுபடியில் 454பக்கம் கொண்ட நூலை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டேன்.

வாசித்தக் கவிதையில் சாம்பிளுக்கு இரண்டு.
அய்யப்ப மாதவனின் கவிதையில் படிமஅழகும் சமுகக் கோபமும் இருப்பதிற்கான இரண்டு அது.இருள்,மரம்,காற்று,நிலா, பனி,இலை,உதிர்தல் இப்படியாக வெளியைச் சொல்லும் பொழுது

`விடிவிளக்கென நிலா/பறவைக் கூடுகளில் படிந்திருந்தது’ என்கிறார்.

இந்த வரிகள் விவரணைக்கு அப்பாற்பட்ட புலனால் உணரத்தக்க காட்சியின் உணர் அனுபவத்தை கிளர்த்தி அடடா என பரவசம் கொள்ளச் செய்தது. அடுத்தது பாசிசம் என்கிற கவிதையில் பசியும் வறுமையும் ஒருவரை ஓர் உள்நாட்டுப் போராளியாய் மாற்றிவிடக் கூடும் என அச்சப் படுகிற கவிதையின் இடத்தில்` அரசாங்கப் பணிக்காக கையூட்டு வாங்கும்/அதிகாரிகளின் அமைச்சர்களின் தலைகளைத் துண்டாடும் சமுக சேவகனாய் மாறக்கூடும்’ என்கிற அரசியல் கவிதையின் குறிப்பிட்ட இடத்தின் கவிதாவேசம் அய்யப்பனை முதுகில் தட்டி தொடர்ந்து எழுது மாதவா என்று சொல்லத் தோன்றுகிறது.

ஆனால் இவர் , கலைஞர்களை படைப்பாளிகளை மதிக்கத் தெரியாத சினிமாவின் கரங்களுக்குள் தன்னை சிறைப்படுத்திக் கொள்ளும் குரூர முயற்சியை விவரித்துச் சொல்லி ஏற்புரையில் தன் கவிதை-இது கொண்டாடப்படும் இடம்-இதன் அழகு-இதன் கோபம் என எதுவும் பேசாமல் தேர்ந்தெடுத்த தன் 300 கவிதைகளை சினிமா உலகின் முன் விசிட்டிங் கார்டாய் விரித்து நின்ற பரிதாபத்தை சினிமாவின் வசீகரத்தை என்ன சொல்ல? (சினிமா வெறுப்பு எனக்கில்லை; அழைக்கும் சினிமாவைக் கொண்டாடலாம்)

நிகழ்வில்அய்யப்பமாதவன்,கருணாபிரசாத்,சூர்யதாஸ்,பாரதிகிருஷ்ணகுமார்,அழகியசிங்கர்,பா.கிருஷ்ணன்,ரவிசுப்ரமணியன்,விஜயபத்மா,
அப்பணசாமி, தேவேந்திரபூபதி,யவனிகாஸ்ரீராம், சீனுராமசாமி,தோழமை பூபதி,ஆதிரா முல்லை,சந்திரா, நாச்சியாள் சுகந்தி, வேல்கண்ணன்,கே.என்.சிவராமன்,மதிராஜ்,தம்பி யுவகிருஷ்ணா என தோழர்கள்-நண்பர்களின் சந்திப்பு நேற்றைய மழை பெய்த அந்திப்பொழுதை மேலும் அன்பால் ஈரப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment