நீ மறைந்ததாய் அறிவிக்கின்றன ஊடகமும் அரசும்
விதவிதமான சொற்களால் புகழ்கின்றனர் உன்னை
தேசத்தின் மகள் என்றும் உண்மை நாயகி என்றும்
உனது வீட்டை அண்டை அயலாரை படம் பிடிக்கின்றனர்
உன்னை எதிர் கொண்டு வறவேற்க வருகின்றனராம் அதிகாரிகள்
நீ பிற்பகலிலோ பின்னிரவிலோ வந்து விடுவதாயும் சொல்கிறார்கள்
முன்னாயத்தமாக கூடுதல் காவலர்கள் நகரெங்கும் வலம் வருகின்றனர்
இந்தியா கேட் ,விஜய் சவுக், நார்த் ப்ளாக் ,சவுத் ப்ளாக்
நுழைய தடை செய்யப்பட்டுள்ளதாய் அறிவிக்கிறார்கள்
துவாரகை செல்லும் பேருந்து என்று ஏறி
அந்த இருண்ட ஒரு மணி நேரம் வாதைப்பட்டது நீ அல்ல மகளே
பிறப்புறுப்பில் செருகப்பட்ட கம்பி உனக்கு மட்டுமானதாய் இல்லை சிதைக்கப்பட்டு தெருவில் வீசப்பட்டது நீ அல்ல மகளே
ஆயிரம் பக்கங்களில் தயாராகிக் கொண்டிருக்கிறதாம் குற்றப்பத்திரிகை
அதிகபட்ச தண்டனைக்கு வாதாடுமாம் அரசாங்கம்
விசாரணைக்கு இரு வேறு குழுக்கள் அமைக்கபட்டுள்ளதாம்
உன் மூளையும் ஈரலும் காயமேறி கிருமி தொற்று ஆகிவிட்டதாம்
உன் இதயம் அதிர்ச்சியில் உறைந்து நின்று போனதாம்
அறிவிக்கிறார்கள் மருத்துவர்கள்
பிடிபட்ட குற்றவாளிகளை விரல் நீட்டி
மறைமுக குற்றவாளிகள் சட்டம் ஒழுங்கு என்று
ஊடகம் முன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்
டெல்லி மாநகரம் அமைதி காக்க வேண்டுமென்றும்
உன் ஆன்மா சாந்தியடைய வேண்டுவதாயும்
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
வன்புணர்விற்கும் வன்கொடுமைக்காளான பெண்களின்
அமைதியுறாத ஆன்மா அரசாங்கத்தின்
வாடிக்கைப் பதிலை கைகொட்டி ஏளனம் செய்து கொண்டிருக்கின்றன
பதின்மூன்று நாள் தொடர்ந்த உன் போராட்டம் மாமூல் பதில் கேட்கவா?
நீதியை காக்க வேண்டுமென்கிற ஆவேசத்தின் அடையாளம்
உன்னில் செருகப்பட்ட இரும்புத்தடியின் கோரத்தை
தனக்கு நேர்ந்ததாய் கருதிக் கொள்கின்றனர்
ஐம்பது கோடி பெண்ணினம்
நீ எமது மகள் நீ எமது சகோதரி என
ஆவேசம் கொள்கிறது புதிய பாரதம்
தூங்காது துடிக்கிறது ஜனநாயகத்தின் ஆன்மா
பெண் பருகப் படவேண்டிய இச்சைப்பால் என்றும்
ஆண் குறியின் துய்ப்பிற்கானது யோனி என்றும்
லிங்கத்தை வழிபடும் மனுசாஸ்திர சட்டங்கள்
பொருட்களை சந்தைப் படுத்த பெண்ணை
நுகர்வுப் பொருளாக்கும் ஊடகங்கள்
நீர்,நிலம்,கடவுளுக்கு பெண்ணின் பெயர் சூட்டி
சிந்தனையை சுதந்திரத்தை பூட்டி வைக்கும்
மத்திய கால மதங்கள்
நியாயம் கோரி எழுந்த யுவபாரத சிவில் சமுகத்தை
ஊரடங்கு 144 என்று
அடக்க நினைக்கும் ராணுவ அரசாங்கம்
பிடிபட்ட குற்றவாளிகள் என்னவோ ஆறுபேர்
பிடிபடாத குற்றவாளிகளால் நிரம்பி வழிகிறது
நாடாளுமன்றத்தோடு நார்த் ப்ளாக் சவுத் ப்ளாக்
ரெளத்திரம் !!!
ReplyDeleteதில்லி பெண் வன்புணர்ச்சிக் குள்ளானதை மட்டும் இப்படி மக்கள் இத்தனை கோபம் கொள்கிரார்களே என்று சிலர் சொல்கிறார்கள், நியாயம்தான். இதன் மூலம் நாட்டின் பெண்களெல்லாம் திரண்டிருக்கிறார்களே இந்த போராட்டத்தின் மூலம்.
இதன் மூலம் ஆங்காங்கே விவாதங்கள் துவங்கியிருகின்றன.
உங்கள் பார்வை சரியானது ஹரிஹரன்;மகிழ்ச்சி..நன்றி
Delete