Saturday, December 29, 2012

திருவாதிரை நாளும் தாளகக் களியும்






நேற்று நண்பர், மொழிபெயர்ப்பாளர்,ஏஜிஎஸ் அலுவலகப் பணியாளர் கி.ரமேஷை பார்க்கச் சென்றிருந்தேன்.போகும் போது மணி 12.30 தொட்டு விட,தூறலும் சேர்ந்து கொண்டது.ஆடிட் ஜெனரல் அலுவலக சங்க அறையில் நான் நுழையும் போது,என்னை எதிர் கொண்டு ரமேசும் பிறிதொரு நண்பர் வெங்கடாசலமும் வறவேற்க,மத்திய அரசு ஊழியர்கள் மகாசபையின் பொதுச் செயலாளர் துரைப்பாண்டியனும் எதிர்கொள்ள சினிமா,பட்டிமன்றம்,லியோனி,டெல்லி சமாச்சார் என அவரோடு பேசிவிட்டு,மேலிருந்த உணவுக் கூடத்திற்கு என்னை சாப்பிட வைக்க நண்பரோடு அழைத்துப் போனார் ரமேஷ்

.ரமேஷ் சங்க பொறுப்பாளர் மட்டுமன்று;இலக்கியம்,கவிதை,வட்டார வரலாறு போன்றவைகளில் ஆர்வம் கொண்டவர்.எனக்கு உடன் வந்த வெங்கடாசலம் உப்புமாவும்,பஜ்ஜியும் வாங்கி வர,அதன் முன் தன் சாப்பாட்டு வட்டிலின் மேல்பகுதியை திறந்த ரமேஷ்,அதிலிருந்து கொஞ்சம் எடுத்து தந்து,`சாப்பிடுங்க;இது களி’ என்றார்.களியா? என்றேன்.`ஆமாம் களிதான்.இது அரிசிக் குருணையில் வெல்லம் சேர்த்து செய்தது.இன்று எங்கள் மதுரைப் பக்கம் திருவாதிரை கொண்டாடுகிறார்கள்.

அதனை ஒட்டி இந்த களியும்,தாளகமும் வீட்டுக்கு வீடு செய்து சாப்பிடுவார்கள்’என்று சொல்லி விட்டு தயிர்சாதமும் அதோடு இன்னொரு வட்டிலை திறந்து `இதுதான் தாளகம்.ஒன்பது வகையான காய்கறிகளோடு செய்யும் கூட்டு’ என்றார்.`என்ன திருவாதிரை சொல்லுங்கள் ’என்றேன்.

`பாண்டியன் காலத்தில்,பெருக்கெடுத்த வைகைக் கரையை வலுப்படுத்த வீட்டுக்கு ஒருவர் பணிக்கு வரவேண்டும் என்ற அரசனின் ஆக்ஞையை நிறைவேற்ற,அந்த மூதாட்டி வீட்டில் யாரும் இல்லாததால்,அவளுக்கு பதிலாக ஒருவன் கரையை வலுப்படுத்தும் பனிக்கு வருகிறான்.

அவன் பாண்டியன் வரும் அன்று மண் சுமக்காமல்,படுத்து தூங்கியிருக்க,பாண்டியன் கோபத்தில் அவனை கம்பால் அடிக்க,அந்த அடி பாண்டிய நாட்டிலுள்ள அனைத்து ஜீவராசிகளின் மீது வீழ,திகைத்து பதறிய மன்னன் முன் மண் சுமக்க வந்து தன்னால் அடிக்கப்பட்டவன் , பேருறுவாய் எம்பெருமான் சிவனாய் காட்சிதர,நெடுஞ்சாண் கிடையாய் மன்னன் மன்ணில் வீழ்ந்து தரிசித்த தினம் திருவாதிரை நட்சத்திர நாள்.

இந்த தினத்தை திருவாதிரை நட்சத்திர நாளை பாண்டிய நாட்டு மக்கள் திருவாதிரையாக இப்படிக் கொண்டாடுகிறார்கள்’என்று எனக்கு தந்த களியின் தாளகத்தின் வட்டார வரலாற்றுக் கதையை சொல்லி முடித்தார் ரமேஷ்.

அந்த களி,தாளகம் படமாகவும் இங்கு இருக்கின்றது.வலது வட்டிலில் இருப்பது களி;இடது வட்டிலில் தாளகம்

No comments:

Post a Comment