காலையில் நானும் கடைக்குட்டி ரகுவும் சென்னை கொடுங்கையூரிலிருந்து 20கிமி தொலைவு உள்ள கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கம் பார்க்கச் சென்றோம்.போகும் போதே அது பற்றிய பல கேள்விகள் கேட்டுக் கொண்டே என்னொடு டூவீலரில் பயணித்தான் எங்கள் மகன்.அங்கு என்ன இருக்கும்?நாம் அங்கு எவ்வளவு நேரம் இருப்போம்?கொல்கத்தாவை விட இந்த கோளரங்கம் பெரிசா?என்று பின் பக்கம் அமர்ந்து கொண்டு இரு கைகளையும் என் தோள்களில் வைத்து அழுத்தி சந்தேகங்களை கேட்டுக் கொண்டே வந்தான்.அடையார் மேம்பாலம் ஏறி இறங்கி கஸ்தூர்பா நகர் பஸ் ஸ்டாண்ட் அருகே வந்ததும் அப்பா ஜூஸ் வேண்டும் என்றான்.சரி என்று இறங்கி இரண்டு காக்டெய்ல் ஜூஸ் வாங்கி சாப்பிட்டு விட்டு,அடுத்த சில நிமிடங்களில் பிர்லா கோளரங்கம்-பெரியார் அறிவியல் தொழிற்நுட்ப மையம் உள்ள வளாகத்தினுள் நுழைந்தோம். இன்னும் உள்ளே போகணுமா என்று கேட்டான்.கொஞ்சம் நடக்கணும் அவ்வளவுதான் என்றேன்.வண்டியை விட்டு இறங்கியதும் ஹெல்மெட்டை வண்டியில் அவனே பூட்டி உதவி,என் கையை பிடித்துக் கொண்டு டிக்கெட் வாங்க கவுண்டர் பக்கம் வந்தான் .70 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு இடதுபக்கம் திரும்பி,அங்கு டிக்கெட்டை காட்டி,நேராக சென்றோம்.நேர்பார்வையில் பிர்லா கோளரங்கமும்,இடது பக்கம் பெரியார் அறிவியல் தொழிற்நுட்ப மையமும் தெரிந்தன.கையைப் பிடித்துக் கொண்டு படிக்கட்டுகளில் ஏறி வந்தான் .அவனுக்கு பத்து வயது.சாப்பிடுவதற்காக கொஞ்சம் பிஸ்கோத்,முருக்கு,எள்ளுருண்டை,குடிநீர் கொண்ட பேக்கை ஆர்வ மிகுதியால் அவனே வைத்திருந்தான்.முதலில் கோளரங்க வாசல் சென்றோம்;காவலாளி சோ ஆரம்பிக்க இன்னும் கால் மணிநேரம் இருக்கு.இடதுபக்கம் போயி அறிவியல் காட்சி பார்த்துட்டு வாங்க என்றார்.கோளரங்க வாசலிலிருந்த பலகையில் வான்வெளிக் காட்சி;இரு கண்ணாடி துண்டுகள் என்ற அறிவிப்பும் அதன் கீழ் தமிழ் காட்சி காலை 12,மதியம் 2.30 என்றும்;ஆங்கில காட்சி 11,1.30,3.30 என்றும் சொல்லப்பட்டிருந்தது. நாங்கள் சில அடிகள் நடந்து அறிவியல் காட்சி கூடம் பார்க்கச் சென்றோம்.வராண்டாவிலிருந்த முதல் அட்டையில் இருந்த படத்தை பார்த்து மேத்தமிட்டிகல் சயிண்டிஸ்ட் ராமானுஜன் என்றான் மகன்.எனக்கு சந்தோசம் ராமானுஜன் பெயரைச் சொல்கிறானே என்று.
நான் பதிலுக்கு இவர் சென்னை துறைமுகத்தில் வேலை பார்த்தார் என்றேன். அப்படியே உள் கூடத்திற்குச் சென்றோம்.போதுமான வெளிச்சம் இல்லாமல் இருந்தது .முதல் அட்டை விழித்திரையை சோதியுங்கள் என்றது. லென்ஸ் பொருத்தப்பட்ட துவாரத்தில் ஒரு கண்ணை வைத்து லைட்டை ஒளிர விடுங்கள்.பின் மறு கண்ணை வைத்து லைட்டை ஒளிர விடுங்கள் அவ்வாறு செய்யும் போது அதிக ஒளியினால் விழித்திரை சுருங்கியும்,குறைவான ஒளியில் விழித்திரை தானாய் விரிவதை எதிரில் உள்ள கண்ணாடியில் பாருங்கள் என்ற விளக்கத்தைப் பார்த்து பையன் முயற்சி செய்ய லைட் எரிய வில்லை.
சோதித்துப் பார்க்கவும் வழியில்லை.அடுத்து,அடுத்து என்று பல காட்சிகளைப் பார்க்கும் போதும் அந்தந்த காட்சிக்கான பல்புகள் எரிவதில்லை.சக்கர இயக்கத்தை விளக்க லாரி எஞ்சின்,கார் எஞ்சினுக்கு மின் இனைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.அதற்கான பொத்தானை மாற்றி மாற்றி அமுக்க ம்கும் பலனில்லை .பிறகு வெறுமனே அட்டையை பார்த்து விட்டு வரும் போது பயிற்றுநர் விமானம் அவனின் கண்ணில் பட்டதும் என்கையை விடுவித்துக் கொண்டு அதன் படிக்கட்டுகளில் ஏறி பைலட் இருக்கையில் போய் அமர்ந்து சிரித்தான்.இப்படியாவது ஒரு சிறு சந்தோசத்தை கொடுத்தார்களே என்று நானும் அவனைப் பார்த்து சிரித்தேன்.கோளரங்க காட்சிக்கு போகும் போது சொன்னான்,சயின்ஸ் எக்ஸ்பிஷன் சரியில்லைப்பா என்றான்.மதியம் 1.20 ஆகவே கோளரங்கினுள் சென்றோம்.எங்களுக்கு முன்னால் படிக்கிற பசங்க ஜோடி ஜோடியாக நான்கு ஜோடி சென்றது.அங்கிருந்த காவலாளி அவர்களைப் பார்த்து பின்னாடி போங்க ஸ்டார் நல்லா தெரியும் என்றார்.நாங்களும் அந்த ஜோடிங்க பின்னால் சென்றோம்.அதுங்க பார்த்த பார்வையில் அவங்க லீலையில் மண்ணை அள்ளிப் போட வேண்டாம் என நினைத்துக் கொண்டு,மகனை எழுப்பிக் கொண்டு சில இருக்கைகள் முன்னால் வந்து அமர்ந்தோம்.ஸ்லைடு கூரையில் ஒளிர்ந்து வறவேற்றது.அடுத்த ஸ்லைடில் இதன் தலைவர் உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் என்றும் ,செயல் இயக்குநர் அய்யம் பெருமாள் என்றும் இருந்தது.கூரைத்திரையை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.
கோளத்திரையில் விரிந்தது சென்னையின் ஏரியல் படக்காட்சி.சூப்பர்பா என்றான் மகன்.அடுத்து கூரையில் நட்சத்திரங்கள் மினுங்கியதும் வானம் போலவே இருக்குப்பா என்றான்.சரி பையன் ரசிக்கிறன் போல என நான் மகிழ்ச்சி அடைந்தேன்.அடுத்த பத்தாவது நிமிடத்தில் போலாம்பா போரடிக்குது என்றான்;மெய்யாகவே போரடித்ததுதான்.வான்வெளியின் மாயக் காட்சிகள் இன்னும் அறியப்படாத அதன் மர்மம் என ஆர்வத்தை தூண்டுவது போல வடிவமைக்கப்பட வேண்டும் கோளரங்கக் காட்சிகள்.நாங்கள் போன போது கலிலியோ அவரின் கண்டுபிடிப்பு வீனஸ்,நெப்டியூன் என தெரிந்த சமாச்சாரத்தையே சொன்னதால் சலிக்க வைத்தது நிகழ்வு.அங்கிருந்து எதிரில் இருந்த 3டி திரையரங்கினுள் போனோம்.இதன் வாசலில் 4டி என போட்டிருந்தது.இது குறித்து கேள்விகளை பையன் கேட்க முன்னாடி 4டி காட்டிருப்பாங்க போல;இப்ப இல்லை போல.நாம பெரம்பூரில் புது தியேட்டரில் 5டி படம் பார்க்கப் போகலாம்.இப்ப இதை பார்த்து விட்டு கிளம்புவொம் என்றேன்.பேக்கில் இருந்து அவனுக்கு முறுக்கு எடுத்துக் கொடுத்து விட்டு நான் எள்ளுருண்டைஒன்றை எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன்.3டி காட்சி நன்றாக இருந்தது.பிம்பங்கள் அருகே வரும் போது குழந்தைகள் குதூகலித்தார்கள்.இந்த பத்து நிமிடக் காட்சி முடிந்து வெளியேற்றப்பட்டோம் .படிக்கட்டு இறங்கி அறிவியல் பூங்காவினுள் சென்றோம்.பலகைதான் பூங்கா என சொன்னது.நிஜத்தில் பூவும் இல்லை;காவும் இல்லை.எல்லாம் காய்ந்தும் தீய்ந்தும் போன செடிகள்.மூன்று அடுக்கில் செய்யப்பட்ட தகடுகளை பக்க வாட்டில் பார்க்கும் போது டைனோசர் உருவம் தெரியும்படியான அந்த காட்சி நன்றாக இருந்தது. குழந்தைகள் இல்லாத ஊஞ்சல்கள் தொங்கிக் கொண்டிருந்தன.அதில் ஒன்றில் சில சுற்று ஆடினான் பையன்;நானும் வேறொன்றில் ஏறி ஆடியதைக் கண்ட மகன் சொன்னான்,இந்த ஊஞ்சல் நீளம்,மெதுவாகத்தான் ஆடும் என்று.காற்றாலை விசிறி ஒன்றும் மெதுவாகச் சுழன்று கொண்டிருந்தது;பழைய எண்ணெய் செக்கு ஒன்று வெயிலில் வெளிரிக் கிடந்தது.இந்த பூங்கா 88 ல் தொடங்கப்பட்டதாகச் சொன்ன பலகை சற்று கீழிறங்கி தொங்கிக் கொண்டிருந்தது.3.30 மணிக்கு வெளியே வரும் போது மகன் சொன்னான்,நான் ஈ படம் பார்க்கப் போய் இருக்கலாம் என்று.அவனை ஏற்றிக் கொண்டு அடையார் ,மெரினா கடற்கரை வழியாக கொடுங்கையூர் விரைந்து கொண்டிருந்தேன்
கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதி நீல நிற வலை ஒன்றால் மூடப்பட்டு பல மாதங்களாகப் புதுப்பிக்கப் பட்டு வருகிறது.இன்றைய நாளிதழ்களில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணை இப்படி வெளியாகி இருந்தது;சென்னை கடற்கரை காந்தி சிலை,கன்னியாகுமரி காமராஜர் சிலைகளின் சுற்றுபுறத்தை பராமரிக்க,புதிய சலவைக் கற்கள் பதிக்க,கூடுதல் மின் விளக்கு அமைக்க,வர்ணம் பூச,கைபிடி ஏணி அமைக்க 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.மகிழ்ச்சி.மறைந்த தலைவர்களின் பொம்மைகளை பராமரிக்க வேண்டியது தான்.அதனினும் அவசியம் மாநிலத்தின்,தேசத்தின் நாளைய அறிவு செல்வத்தை பேணிப் பராமரித்து பயிற்றுவிக்கும் திருப்பணி.
No comments:
Post a Comment