இணைந்த இதயம்

Saturday, July 14, 2012

கதையாகும் பாம்படம்


இன்றைக்கு காட்சிப் பொருளாக பாம்படத்தை தேட வேண்டி உள்ளது.இன்றைய புரிதலில் பாம்படம் கிழவிகளின் ஆபரணம் என நினைக்கிறோம்.குமரி மாவட்டம் சிதறால் மலைப்பகுதியைச் சேர்ந்த எண்பது வயது முத்தம்மாள 
சொல்கிறார்,
`


எனக்க கல்யாணம் ஆகும் போ பதினெட்டு வயசு.நா இந்த ஊர்ல அறுவது வருசமா இருக்கேங்.எனக்க கல்யாண பிராயத்தில பகாங் தங்கம்(பவுன்) அம்பது ரூவா.அப்போ எனக்க காதில பாம்படம் மட்டும் போடலே.இன்னும் ஒரு நாலு எண்ணம் போட்டிருந்தேங்.அது என்னன்னா தண்டட்டி;முடிச்சு;அரிதளம்பை,தேர்வாளி.அப்புறமா கொண்டைபூ”என்று சொன்னார்.


அவரோடு பேசினதில் சில விசயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது.பாம்படம் அன்றைய இளம்பெண்டுகளின் அணிகலன்களுள் ஒன்று.அப்புறம் காதி இடுவது பாம்படம் மட்டுமல்ல .பாம்படம் என்பது ஒறே ஒரு அணி அல்ல;தண்டட்டி,அரிதளம்பை,தேர்வாளி,கொண்டைப்பூ போன்ற காதணிகளும் அன்றைய பெண்களின் புழக்கத்தில் இருந்தது என்பதை தெரிந்து கொள்கிறோம்.


முடிச்சு என்பது முடிச்சு போல உருண்டையாக இருக்கும்.அரிதளம்பை  இலை போல இருக்கும் ஒன்று .தேர்வாளி காது மடலின் மேல்  பகுதியில் மாட்டப்பட்டு கூந்தலில் இணக்கப்பட்டிருக்கும்(இன்றைய மாட்டி).கொண்டைபூ விதவிதமான அளவில் ,தோற்றத்தில் இருக்கும்.பாம்படத்தை அன்று நாயர் பெண்டுகள் முதல் பிள்ளைமார்,முதலியார் பெண்களும் தேவர்,தலித்,யாதவர் ,நாடார் குலப் பெண்கள் என பொதுவாக பெண்களின் காதணியாக இருந்தது.பாம்படம் போடுவதற்கு சின்னதான காது துளை போதும்.இது இல்லாமல் ஏனையவைகளைவும் அணிவதற்கு நீளமான தொங்கு காதுகள் வேண்டும்.நான் பார்த்த முத்தம்மா காது தொங்கு காது.எங்க ஆத்தா(பாட்டி)வின் காது சிறுங்காது. 


பாம்படம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருவழக்கான அணிகலனாக இருந்தது.இதை ஆதிக்கசாதி பெண்களும் அணிந்தார்கள்.1950களுக்குப் பிறகு இதை ,பெண்கள் அணிய ஆர்வம் காட்ட வில்லை.இதற்கான காது வளர்த்தல் மிகு சிரமமான ஒன்றாகும். கம்மல்,ஜிமிக்கி,வளையம் என புதிய புதிய அணிகலன் வரவினால் பாம்படம் பழைய பெண்களின் அணிகலனாக நின்று விட்டது.


பாம்படம்,தண்டட்டி முழுதும் பொன்னால் செய்வது இல்லை.மேற்பரப்பு பொன்னால் இருக்கும் அதன் உட்பகுதி மெழுகால் நிரப்பப்பட்டிருக்கும்.முழுதும் பொன் என்கிற போது காது தொய்வு அதிகமாகி விடும்.சதுரம்,உருண்டை,முக்கோணம் போன்ற வடிவங்களில் பாம்படத்தின் பாகங்கள் தனித்தனியாகச் செய்யப்பட்டு காதுகளில் அணியப்பட்டிருக்கும்.

2 comments:

  1. முத்து அவர்களே! விமர்சகர் இந்திரன் பாம்படம்பற்றி எழுதியுள்ளார்! பாம்படத்தில்,சதுரம்,உருண்டை, முக்கோணம், வட்டம், என்று பல்வேறு வடிவங்கள் ஒன்றிணைந்து தொங்கும்.இது ஏனென்ரு பல ஆசாரிகளிடம் கேட்டேன். விவரமாகச்சொல்லத் தெர்யவில்லை. ஆனலிது,குறிப்பகபம்படத்தின் வடிவத்தின் மூலம் நம் முணன்னோர்கள் எதையோ விளக்கு கிறார்கள்னமக்க்த்தான் புரிந்துக்ள்ளமுடியவில்லை!---காஸ்யபன்.

    ReplyDelete
  2. மகிழ்ச்சி எழுத்தாளர் காஷ்யபன்.உங்கள் வாசிப்பு மகிழ்ச்சி தருகிறது.
    நீங்கள் சொன்னதை மனதில் கொள்கிறேன்.சரியான விவரம் கேட்டு சொல்கிறேன்

    ReplyDelete